செல்வமடி நீ எனக்கு

“உன் கல்யாண நாளாச்சே இன்னிக்கு ..என்னடி ஸ்பெஷல்?

“ஸ்பெஷலா? துக்கம் அனுஷ்டிக்கறேன் டா ..சாப்பாடே ஆக்கலை”

“உனக்கிருக்கற திமிர் இருக்கே.. நான் ரவுண்ட்ஸ் போகணும்.. வைடி போன”..சிரித்தபடி மொபைலை அணைத்தேன்.

அவளும் சத்தமாய் சிரித்திருப்பாள்

நான்-நிர்மல்..அவள்-மனோ..மனோன்மணி.

மூன்றாம் வகுப்பிலிருந்து இருவரும் ஒன்றாய் படித்தோம். முப்பது வருஷ நட்பு. தொடக்கத்தில் ஓலை கொட்டகைகள் நான்கைந்து இருந்ததாய் நினைவு. நாங்கள் பத்தாம் வகுப்பு முடித்து வெளியேறும்போது எங்கள் பள்ளி தலா மூன்று தளங்களும் தளத்திற்கு ஐந்து வகுப்பறைகளும் கொண்ட ஆறு பிளாக்குகளோடு வளர்ந்து நின்றிருந்தது.

ஹிந்து டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் ஸ்கூல் என்பதை HDBM School என்று லேபிளில் எழுதினால் போதும் என்பதுதான் மனோவிடம் நான் முதன்முதலில் பேசியது. ஒன்றிரண்டு வார்த்தைகளில் ஆரம்பித்து சளசளவென்று பேசத்தொடங்கியபோது ஆறாம் வகுப்பிலிருந்தோம்.

இருபாலர் பள்ளியில் பால்யம் வரம். ‘வகுப்பு’ அரசியல், தனிநபர் விரோதம், பிள்ளைக்காதல் எல்லாம் தாண்டி மெல்லிய மின்சாரமொன்று சுழன்றபடி இருக்கும். பால் ஈர்ப்பு கொள்ளுமுன் அன்யோன்யம் பிறந்திருக்கும். அப்படிப்பிறந்த அன்யோன்யம் யாரையும் உறுத்துவதில்லை. அதனாலேயே உலக்கைக்கு அந்தப்பக்கமாய் மனோ உட்கார்ந்திருக்கையில் நான் இந்தப்பக்கம் அமர்ந்து ரம்மி விளையாடியதை அவள் பெற்றோர் அனுமதித்திருக்கக்கூடும்.

தன் பதினைந்தாவது பிறந்தநாளில் ஆகாயவண்ணத் தாவணியும் கருநீல பட்டுப்பாவாடையும் தலை நிறைய மல்லிகையுமாய் அவள் வந்த போது சின்னதாய் வாய் பிளந்து பார்த்த ஞாபகம். உடை கொண்டு அவளை இரசித்தது அப்போதுதான் முதலும் கடைசியும்.

அதன் பின் பிளஸ்டூவில் மார்க் குறைந்து மெடிக்கல் கட் ஆப் வராதது, காலேஜ் ராகிங்கில் எரிச்சலுற்றது, உணவுக்குழாயில் கட்டி வந்து ஆபரேஷன் செய்தது, பிஜி யில் நுழைய இரு வருஷங்கள் போராடியது, ‘லாவண்யா’ போன்ற துன்பங்களில் அதட்டி அடக்கி…இம்ப்ரூவ்மெண்ட் எழுதி மெடிக்கல் ஷீட் கிட்டியது, விஜயின் ‘என்னவளே’ பாட்டுக்கு நடனமாடி அப்ளாஸ் வாங்கியது , பிஜி யில் விரும்பிய துறையான ஆப்தல் கிடைத்தது, ‘கபில் ‘ஆகிய இன்பங்களில் சிரித்து மகிழ்ந்து… என் கூடவே பயணித்த மனோ அண்டப்பேரழகி.

சுயஉணர்வு வந்தபோது இருபதாவது பெட் பேஷண்ட்டின் கண்களில் டார்ச் அடித்துக்கொண்டிருந்தேன். நேற்று செய்த கண்புரை அறுவைசிகிச்சைகள் . இன்னும் பதிமூன்று கேசுகள் பாக்கி இருந்தன. முடித்துக்கொண்டு போனால் OP ஐம்பது டோக்கன் இருக்கும்.

“ கண்ணு உறுத்துது டாக்டர் “ என்றது அந்த பெட்.

“ ம் “

“ நைட்டெல்லாம் ஒரே எரிச்சல் “

“ ம் “

அங்கிருந்து அடுத்த கேள்வி புறப்படுமுன் அடுத்த பெட்டுக்கு நகர்ந்தேன். இந்த ஏழு வருடங்களில் நோயாளிகள் மீதான அக்கறையும் மரியாதையும் படிப்படியாய் குறைந்து இப்போதெல்லாம் ‘பெட்’ ‘டோக்கன்’ தான்.

இதுவரை மூன்று மருத்துவமனைகள் மாறியாயிற்று. மரியாதைக்குறைவென்று ஒன்று , சம்பளம் போதவில்லையென(எண்பதாயிரம் ) லாவண்யா நொடித்தபடி இருந்ததால் அடுத்தது, மற்றொன்றில் அவர்களே வேண்டாம் என்று விட்டார்கள். லாவண்யா தரங்கெட்டுப் பேசியது அப்போதுதான். என் ஆண்மையை , என் பெற்றோரை, என் அக்காவை , என் அக்கா மகளை.. (மதுமிதா என்று மனோ தான் பேர் வைத்தாள் “ மது ன்னு கூப்பிட நல்லாருக்கும் நிர்மல்” ) தன்மானம் சகட்டுமேனிக்கு தாக்கப்பட்டு மணவிலக்கைப் பற்றி பேசியவனை “ கபிலை விட்டு இருப்பியா நிர்மல்? முடியாதில்ல? சிக்கலாக்கிக்காத …விடுடா “ என்று மிரட்டி அடக்கினாள் மனோ.

ரவுண்ட்ஸ் முடித்து கீழிறங்கி என் கன்சல்டிங் அறைக்கு நடந்தேன். அமர்ந்திருந்தவர்களிடையே ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது. மருத்துவ மரியாதை. இருபது பேர் இருப்பார்கள்.இன்னும் கூடும்.

பிளட்பிரஷர், பவர்விஷன், இண்ட்ரா ஆக்யூலர் பிரஷர் இம்மூன்றும் நர்ஸ்களால் பார்த்து முடிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருத்தராய் உள்ளே வர ஆரம்பித்தார்கள். அடுத்தகட்ட பரிசோதனைகளான ஸ்லிட் லேம்ப் எக்ஸாமினெஷன், ரெடினா செக்கப் பார்த்து ப்ரிஸ்க்ரைப் செய்யத் துவங்கினேன்.

இரண்டாவதாய் வந்த நடுத்தர வயது நபரை எங்கோ பார்த்தது போல் இருந்தது. அவரும் என்னை உற்றுப் பார்த்தார். வழக்கமான பரிசோதனைகள் மேற்கொண்டதில் புரை முற்றி கண் ஆபரேஷனுக்கான சகல தகுதிகளுடன் இருந்தது.

“கேட்டராக்ட் முத்தியிருக்கு..உடனே ஆபரேஷன் செஞ்சுக்கறது நல்லது”

“டாக்டர் உங்கள எங்கயோ பாத்திருக்கேன்”

“ மே பி..ட்ராப்ஸ் எழுதியிருக்கேன் “ என்றுவிட்டு பெல்லடித்தேன்.

“ நீ மனோ பிரண்டு தானே தம்பி..நான் அவ ஒண்ணுவிட்ட சித்தப்பா.. மனோ கல்யாணத்தில பாத்தது..பதனஞ்சு வருஷம் இருக்கும் “

“ இருபது வருஷம் ஆச்சு அங்கிள் “ என்று சிரித்தேன். எனக்கும் ஞாபகம் வந்திருந்தது.

“ இருக்கும் இருக்கும். நல்லா படிப்பு வந்திச்சி அந்த பொண்ணுக்கு.. கடமைக்குன்னே கட்டிக்குடுத்துட்டாரு எங்கண்ணன் “

“ ம்ம்..கேம்ப்ல வந்துட்டீங்கன்னா ஆபரேஷன் ப்ரியாவே செஞ்சிக்கலாம் அங்கிள்…எல்லாருக்கும் ஒரே கவனிப்பு தான்..உங்க நம்பர தாங்க…எப்ப வரணும்னு சொல்றேன் “ என்று வாங்கிக்கொண்டு அவர் சந்தேகங்களை தீர்த்து அனுப்பி வைத்தேன்.

ப்ளஸ்டூ முடித்த மறு வருஷமே மனோவிற்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது. மெடிக்கல் என்ட்ரன்ஸ் எக்ஸாம் க்காக மெட்ராசில் உறவினர் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தவனுக்கு இன்லெண்ட் லெட்டரில் தகவல் சொன்னாள் மனோ. அதற்குள்ளா என்று அதிர்ச்சியாக இருந்தது. எனக்கும் பத்து மாதம் சிறியவள் . சேலம் திரும்பியதும் முதலில் அவள் வீட்டுக்குத்தான் ஓடினேன். சொந்தம்..நல்ல இடம் என்று ஏதேதோ காரணங்கள் சொன்னார் அவள் அப்பா.

பள்ளி நண்பர்கள் எல்லாருமே விடிய விடிய மண்டபத்தில் தங்கியிருந்து வேலைகளை இழுத்துப்போட்டு செய்தோம். முஹூர்த்தம் முடிந்ததும் ஆளுக்கு ஐம்பது நூறு போட்டு அரைபவுனில் வாங்கிய மோதிரத்தை பெண்ணுக்கு பரிசளித்து போட்டோ எடுத்துக்கொண்டோம். இதுவரை எல்லாம் அழகாகவே நடந்தது. இரண்டுநாட்கள் கழித்து மறுவீட்டு விருந்துக்கு மனோவின் அப்பா அழைத்திருந்தாரென்று போன அன்றுதான் என் குடிமுழுகிப்போனது.

நான் போனபோது பெண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்து கேலியும் கிண்டலுமாய் பேச்சு போய்க்கொண்டிருக்க மனோவின் அம்மா முத்துதிர்த்தார்.

“ மோதிரம் அவ விரலுக்கு ரொம்ப லூசா இருக்கு கண்ணு “

“ இதை அவன்கிட்ட சொல்லியே ஆகணுமா ம்மா? நூல் சுத்தி போட்டுக்கறேனே “ என்றாள் புதுப்பெண்.

சேரில் அமர்ந்திருந்தவன் எழுந்து போய் அவள் இடதுகை பற்றி மோதிரத்தை கழற்றிப்பார்த்து “ஆமா..ரொம்பவே லூசா இருக்கே “ என்றபடி மீண்டும் அவள் விரலில் மாட்டி விட்டேன்.

“ ப்ச்..மாத்திடலாம் ம்மா “ என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்து வீடு திரும்பினேன்.

அன்றிரவு மனோவிற்கும் அவள் கணவனுக்கும் விடிய விடிய சண்டை நடந்து மறுநாள் பெற்றோர் வீடு வந்தவள் மூன்று மாதங்கள் இருந்தாள். அன்பென்ற பெயரில் அசட்டுத்தனம் செய்து விட்டது புரிந்தது எனக்கு. ஆனால் மனோவோ அவள் பெற்றோரோ என்னைக் கோபிக்கவே இல்லை. மாப்பிள்ளை வீட்டார்க்கு எங்கள் நட்பைப் புரிய வைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிய இனி எங்கள் சந்திப்பு ( தெரிந்து ) நடக்காது என்று வாக்கு தந்து அவளை புருஷன் வீட்டில் கொண்டுபோய் விட்டு வந்தார்கள். கணவனைப் பார்த்ததும் ஓவென்று அழுததாகவும் அவர் நெகிழ்ந்து போனாரென்றும் அது கையாலாகததால் வந்த அழுகையென்றும் பின்னொரு நாள் சொல்லிச் சிரித்தாள் மனோ. பொண்ணுங்களோட சிரிப்புக்கும் அழுகைக்கும் காரணம் நீ நினைக்கறதாதான் இருக்கும்ன்னு இல்ல நிர்மல் என்பாள்.

அவளின் மூத்த மகன் இந்த வருஷம் இஞ்சினியரிங் முதலாண்டு.. சின்னவன் பத்தாவது. என் மகன் கபில் நான்காம் வகுப்பு படிக்கிறான்.

பசித்தது. 44 டோக்கன் பார்த்து முடித்திருந்தேன்.

“ இன்னும் எத்தனை பேர் இருக்காங்க சிஸ்டர்?”

“ எட்டு பேர் இருக்காங்க சார்..சாப்டு வந்துடறீங்களா?”

“ ம்ம் “ என்றபடி எழுந்தபோது மொபைல் ஒளிர்ந்தது. அம்மா.

“ சொல்லுமா “ என்றேன்.

“ அப்பா வீட்டு படி ஏறும்போது வேஷ்டி தடுக்கி விழுந்துட்டாரு டா.. மேல் பாதம் வீங்கினாப்ல இருக்கு “ என்றதும் பகீரென்றது.

“ வேஷ்டிய கொஞ்சம் தூக்கி கட்டினா என்ன? நான் வர்ற வரை உன் கைவைத்தியம் எதுவும் செய்ய வேண்டாம்…காலை அசைக்காம வெச்சிருக்கச் சொல்லு “

பவர்விஷன் பிரச்சனை இருந்தோரை மட்டும் வரச்சொல்லி ஸ்பெக்ஸ்க்கு எழுதித்தந்துவிட்டு மற்றவர்களை முதல் டோக்கனாய் மறுநாள் காலையில் வரச்சொல்லிவிட்டு வெளியே வந்து காரை எடுத்தேன்.

திருச்செங்கோட்டிலிருந்து நாற்பது நிமிஷம் பிடித்தது சேலம் டவுனுக்குள் நுழைய. இடையில் அப்பா ஒருமுறை கால் செய்து ரொம்ப வலிக்குதுப்பா கிளம்பிட்டியா என்று கேட்டார்.

வீடு வந்ததும் காரை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினேன். மேல்பாதம் பொசுபொசுவென்று வீங்கியிருந்தது. அப்பாவின் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்க்க என்னவோபோல் இருந்தது எனக்கு. காரின் கதவைத் திறந்து வைத்துவிட்டு வந்து நானும் அம்மாவும் ஆளுக்கொரு கை பிடித்து மெல்ல அழைத்துவந்து காரில் ஏற்றினோம்.

காரில்போகும்போது என் ஆர்த்தோ நண்பன் சதீஷ்க்கு அலைபேசினேன். வீட்டில் இருப்பதாகவும் உடனே கிளம்பி வருவதாகவும் சொன்னான். அவன் கிளினிக் போனதும் வீல்சேர் கொண்டுவரச்சொல்லி அப்பாவை அமரவைத்து அவன் அறைக்கு கூட்டிச்சென்றேன்.

ஊதுபத்தி மணம் இன்னும் மிச்சமிருக்க சுத்தமாக இருந்தது அறை. கன்சல்ட்டிங் ரூம், சிறிய வெயிட்டிங் ஹால், எக்ஸ்ரே ரூம் ,பிஸியோ தெரபிக்கென ஒரு அறை..அவ்வளவே. சர்ஜரிகள் செய்யவேண்டி வந்தால் வேறொரு ஹாஸ்பிடலில் வைத்துக்கொள்கிறான். ஒவ்வொரு சண்டையின் போதும் இவனை இழுக்காமல் லாவண்யா இருந்ததில்லை.( உங்க கூட படிச்சவர் தானே..அவர் சாமர்த்தியம் ஏன் உங்களுக்கு இல்ல? )

அவள் பிடுங்கல் தாளாமல் மாலை நேரங்களில் பார்க்கவென ஒரு அறை வாடகைக்கு எடுத்து…தேவையான மெஷினரீஸ் வாங்கி…வாரத்திற்கு ஒருவர் இருவரென பேஷன்ட்டுகள் வர..இரண்டு மாதங்கள் சும்மா போய்வந்து அதை இழுத்து மூடியாயிற்று. நான்கு இலட்சம் மதிப்பிலான பொருட்கள் அப்பாவின் வீட்டு மேல்தளத்தில் தூசு அண்டக் கிடக்கின்றன.

சதீஷ் வந்ததும் எக்ஸ்ரே பார்த்தான். நான் நினைத்தபடியே மயிரிழை முறிவு. “ பிளாஸ்டர் பேண்டேஜே போட்றலாம்டா..எலாஸ்டிக் ன்னா அப்பா கம்முன்னு இருக்க மாட்டாரு “ என்றுவிட்டு எங்கள் அனுமதிக்கு காத்திருக்காமல் உதவியாளனை அழைத்தான்.

கட்டு போட்டு முடித்து அப்பாவை வீட்டில் படுக்க வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்ததும் கொடூரமாய் பசித்தது. மணி நாலாகி விட்டிருந்தது. இன்னும் பத்து நிமிஷங்களில் கபிலின் ஸ்கூல்பஸ் வந்துவிடும். லாவண்யாவை போய் அழைத்துவா என்றால் ஆயிரம் கேள்வி கேட்பாள். வேலைகளிலேயே சிரமமானது பதில் சொல்வது என்பதால் அம்மாவிடம் மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

பஸ் ஸ்டாப்பில் குழந்தை இறங்கி நின்றிருந்தான். என்னைப் பார்த்ததும் முகம் பிரகாசமாகி கண்கள் சிரிக்க முதுகிலிருந்த ஸ்கூல் பேக்கை கழற்றித் தந்துவிட்டு காருக்கு ஓடினான்.

என்றும் போல் இன்றும் கபில் விழிவிரிய சொன்ன கிளாஸ்ரூம் கதைகளைக் கேட்டுக்கொண்டே வீடடைந்தேன். கபில் இறங்கி கேட்டைத் திறந்துவிட்டு மேலே ஓடினான். ஹவுஸ்ஓனர் எட்டிப்பார்த்து சிரித்தார். காரை நிறுத்திவிட்டு பதிலுக்கு புன்னகைத்து மேலேறினேன்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் கபில் கழற்றி வீசியிருந்த ஷூக்களை ஸ்டாண்டில் வைத்துவிட்டு உள்ளே போனபோது லாவண்யா மொபைலில் கொரியன் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தை உடைமாற்றிக்கொண்டிருந்தான். நானும் பெட்ரூம் நுழைந்து லுங்கிக்கு மாறி சோபாவில் அமர்ந்தேன்.

கபில் குதித்துக்கொண்டு வந்து லாவண்யாவிடம் இருந்து ரிமோட்டை பிடுங்கினான். “ சனியனே..கேட்டால் தரமாட்டேன்? “ என்றபடி எழுந்து கிச்சனுக்குள் போய் ஸ்நாக்ஸ்பாக்சை கொண்டுவந்து டீபாய் மேல் வைத்துவிட்டு மீண்டும் உள்ளே போனாள். டீ கொதிக்கும் வாசம் வயிற்றில் விழுந்தது. உருளைக்கிழங்கு சிப்ஸை கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு பாக்கெட்டோடு கபில் கையில் தந்தேன். கபிலுக்கு பாலும் எங்களுக்கு டீயுமாய் வந்தவள் என்னருகில் அமர்ந்தாள்.

என்னமோ கேட்கத் துடிக்கிறாள் என்று தெரிந்தது. அந்த நிமிஷம் அந்த மௌனம் வழிதவறி வீடு நுழைந்து விட்டத்தின் மூலையில் தலைகீழாய்த் தொங்கும் கருகரு வவ்வால் போல் அசிங்கமாக இருந்தது.

“ இன்னிக்கு சர்ஜரி இருந்ததா?” என்று அம்மௌனம் கலைத்தாள் லாவண்யா.

“ இல்ல..கேம்ப் கேஸ்லாம் நேத்தோட முடிஞ்சுது..இனி மண்டே தான் “ என்றேன்.

கொஞ்ச நேர அமைதிக்குப்பின் “ இந்தவாரம் சண்டே கேம்ப் எங்க?” என்றாள்.

“ ஜலகண்டாபுரம்” என்றுவிட்டு எழப்போனேன்.

“ இருங்க..அப்பா போன் பண்ணிருந்தாரு “

“ அதுக்கென்ன “ என்றுவிட்டு அவள் முகத்தையே பார்த்தேன்.

“ இராசிபுரத்துல அப்பா வீட்டுக்கு பக்கத்தில ரெண்டு செண்ட்ல ஒரு வீடு விலைக்கு வருதாம். மெயினான இடமாம். இப்ப வாங்கிப்போட்டா நாம சொந்தமா இங்க கிளினிக் தொடங்கும் போது அதை வித்துக்கலாம். மூணு மடங்கு விலை ஏறிடும் “ என்றுவிட்டு என் முகபாவனையை கவனித்தாள்.

எனக்கு ஆயாசமாக இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து இலாபம் வரும்தான். ஆனால் இப்போது பணத்திற்கு என்ன செய்ய என்ற அறிவு கூடவா இல்லை இவளுக்கு?

“ ஓட்டு வீடுன்னாலும் ரெண்டு செண்ட் இருபது இலட்சம் ஆகுமேம்மா.. அவ்ளோ பணம் எப்படி புரட்ட?”

“ சேவிங்க்ஸ்ல நாலு இலட்சம் இருக்குமே.. மிச்சம் கொஞ்சம் கடன் வாங்குங்க. எங்கப்பா கிட்டயும் ஹெல்ப் கேக்கலாம்”

“ சேவிங்க்ஸ்ல இருக்கற பணம் உனக்கு தேர்ட் செமஸ்டர் ( DGO ) பீஸ் கட்ட வெச்சிருக்கேன் லாவண்யா “ என்றேன் பரிதாபமாக.

“ இலட்ச இலட்சமா செலவு பண்ணி படிக்க வெக்கறேன்னு சொல்லிக்காட்றீங்களா? “ என்றுவிட்டு மூக்கு உறிஞ்சிய லாவண்யா ஓர் ஆர்ப்பாட்ட அழுகைக்கு ஆயத்தமாக இயர் போனை காதில் சொருகிக்கொண்டு பெட்ரூமிற்கு நடந்தேன்.

மனோ சொல்வது போல் மரபணுவில் மிச்சமிருக்கும் குழந்தைகளுக்கான சகிப்புத்தன்மை, பெற்றோர் மனநிம்மதி, ஊர் ஏச்சுகள் எல்லாம் தாண்டி கடந்துவிட்ட இந்த ஒன்பது வருட மணவாழ்க்கையை இன்னொருத்தியோடு மீண்டும் முதலிலிருந்து வாழ எனக்கு சோம்பலாய் இருந்தது

நாளை இதைச் சொன்னால் அட்டகாசமாய் சிரிப்பாள் மனோ.

’தமிழ்’ சுதந்திர தின மின்னிதழில் வெளியானது.