பாகிஸ்தானும் பக்கத்து வீடும்:

பக்கத்து வீடு என்பது ஆத்திர, அவசரத்துக்கு உதவுற இடம்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. ஆத்திரம் வர்றப்ப சண்டை போடவும், அவசரத்துக்கு உதவவும், உதவி கேட்கவும் அவங்களால முடியும். ஆனா எனக்கு மட்டும் எப்பவும் பக்கத்து வீடுன்றது பாகிஸ்தான் மாதிரிதான்.

2007ல இந்த வீடு கட்டி குடி வந்தோம். அப்ப இருந்து இதுவரைக்கும் 4 குடும்பங்கள் பக்கத்து வீட்டுல வாடகைக்கு வந்திருக்காங்க. ஒவ்வொரு தடவையும் அவங்க கூட நல்லுறவு வச்சிக்கணும்னுதான் ஆசைப்படுறேன்.

ஸ்ரீபெரும்புதூர்ல வேலை செய்றதுக்கு பதிலா டீ எஸ்டேட்க்கே போயிடலாம். காலைல 7.30 மணிக்கு கிளம்பினா நைட்டு 9 மணிக்குதான் வருவேன். அதனால என்னை எங்க தெருல நிறைய பேருக்கு என்னை தெரியாது. ஒரு நாள் அம்மா அவசரமா ஊருக்கு போனதால சாவியை பக்கத்து வீட்டுல கொடுத்து “தம்பி வருவான். கொடுத்துடுங்க” ன்னு சொல்லிட்டு போயிருந்தாங்க. நான் போய் கேட்டா அந்த அக்கா என்னை யாருனே தெரிலைன்னு சொல்லிடுச்சு. எங்க வீட்டுலதான் அக்கா பையன் பப்லு இருந்தான் . அதனால அம்மா சொன்ன தம்பி பப்லுன்னு நினைச்சிட்டாங்களாம். 8 வயசுல அவன் அண்டர்டேக்கர் மாதிரி வளந்தது கடைசில என்னை 2 மணி நேரம் தெருவுல நிக்க வச்சிடுச்சு. அதோட அந்த வீட்டுப்பக்கம் திரும்பனதே இல்லை.

2009ல அந்தக்கா வீட்டகாலி பண்ணதும் இன்னொரு குடும்பம் வந்தாங்க. ஒரு ஆண்ட்டி, ஒரு அங்கிள் ஒரு குட்டிப்பையன்னு சின்ன குடும்பம் சிறப்பான குடும்பமா இருந்தாங்க. ஆண்ட்டியும் அப்பப்ப என்னை பாத்து சிரிக்கும். நல்லா இருக்கீங்களான்னு கேட்கும். நல்லுறவு ஒப்பந்ததுல கையெழுத்து போட்டுடலாம்னு எனக்கும் நம்பிக்கை வந்துச்சு. ஒருநாள் அதே மாதிரி அம்மா அவசரமா ஊருக்கு கிளம்ப, சாவி பக்கத்து வீட்டு கீசெயின் ஸ்டேண்டுக்கு போச்சு. முனைக்கடைல வாட்டர் பாக்கெட்டுலாம் வாங்கி நைட்டு 8.45க்கு முகம் கழுவிட்டு சாவி வாங்க போனேன். “ஆண்ட்டி. அம்மா சாவி தந்தாங்களா”ன்னு கேட்டேன். எப்பவும் ஸ்மைலிங் ஃபேஸ் சினேகாவ இருப்பவங்க அன்னைக்குன்னு லட்சுமி ராமகிருஷ்ணன் மாதிரி உர்ருன்னே இருந்தாங்க. வாட்டர் பாக்கெட் வேஸ்ட்டுடா கார்க்கின்னு எதுவும் பேசாம சாவி வாங்கிட்டு வந்துட்டேன். அடுத்த நாள் அம்மா வந்து “உனக்கு அறிவே இல்லையா. அந்த பொண்ணுக்கு 27 வயசுதான் ஆகுது. நேத்து ஆண்ட்டின்னு சொன்னியாமே..”ன்னு கேட்க எனக்கு பக்குன்னு ஆச்சு. எப்படியும் 33 வயசிருக்கும்னு நினைச்சேன். அதுக்கு மேல அந்த பக்கம் கண்ணு போகுமா?

2011ல, அந்த பொண்ணுக்கும் எனக்கும் 29 வயசு ஆகுறப்ப அவங்க காலி பண்ணி நிஜமாவே ஒரு ஆண்ட்டி வந்தாங்க. என்னைக்கோ ஒரு நாள் அவங்க வீட்டு ரேஷன் கார்டு எங்க வீட்டுல இருந்தப்ப வயசை எல்லாம் செக் பண்ணிட்டேன். ”பார்வதி 42ன்னு போட்டிருந்துச்சு. பேச்சுவார்த்தை பண்ணி பாப்போம்னு நினைச்சா, எப்ப பாரு கதவு மூடியே இருந்துச்சு. ஒரு ஞாயித்துக்கிழமை அன்னைக்கு காலைல 9 மணி இருக்கும். அவங்க வீட்டுல ஏசி ஓடுற சத்ததுக்கு நடுவுல “காவியம் பாடவா தென்றலே”ன்னு பாட்டு கேட்டுச்சு. சிரிச்சிக்கிட்டே அம்மாக்கிட்ட “ஜன்னல கூட மூடி ஏசி போட்டா தென்றல் எப்படி வருமா”ன்னு கேட்டுட்டு நிமிந்து பாக்குறேன் வீட்டுக்கு ஒரு guest வந்திருந்தாங்க. காரணமே இல்லாம அம்மா வேற முறைக்கிறாங்க. அப்புறம்தான் தெரியுது அந்த ரேஷன் கார்டுல ”பார்வதி 42” க்கு மேல இருந்த ரங்கராஜன் 47 அவர்தானாம். நான் அவர பாத்ததே இல்லை. அனேகமா காஞ்சிபுரத்துல வேலை பாத்தார்னு நினைக்கிறேன். ☹

அவங்களும் காலி பண்ணி 2013ல இன்னொரு குடும்பம் வந்தாங்க. பொண்ணுக்கு 18 வயசிருக்கும். அம்மாக்கு 38 வயசிருக்கும்.(ரேஷன் கார்டு கிடைக்கல. ஆனா பொண்ணு first year B.com).சைட் அடிக்க வேண்டியது அம்மாவையா பொண்ணையான்னு நமக்கு சந்தேகம் வந்தா நமக்கு வயசு 30 தாண்டிடுச்சுன்னு அர்த்தம். கொஞ்ச நாள் அமைதி காக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். பப்லு அவன் ஃப்ரெண்ட்ஸ் கூட போர்டிகோல கிரிக்கெட் ஆடுவான். திடீர்னு எனக்கும் ஆசை வந்து , பாகிஸ்தான் டீம்ல இருக்க மிஸ்பா மாதிரி சின்ன பசங்க கூட நானும் சேந்து ஆடினேன். ஒரு flick தான் பண்னேன். கரெக்ட்டா பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடில போய் அடிச்சது. அடுத்த செகண்ட் எல்லா பொடியன்களும் சிட்டா பறந்துட்டாங்க. உள்ள இருந்து கண்னாபின்னான்னு திட்டுற சத்தம் வந்துட்டே இருந்தது. வெளிய வந்த ஆண்ட்டி ஷாக் ஆகி திட்டுறத நிறுத்துவாங்கன்னு பாத்தா “அவனுங்கதான் சின்ன பசங்க. உங்களுக்கு…….” . எல்லா வேர்ல்ட் கப் மேட்ச்சிலும்தோத்துட்டே இருக்கிற பாகிஸ்தானுக்கு எவ்ளோ வலிக்கும்னு அன்னைகுதான் எனக்கு தெரிஞ்சது..

இன்னைக்கு அவங்களும் காலி பண்ணிட்டாங்க. அடுத்து யார் வரப்போறாங்கன்னு ஆர்வத்தோட இருக்கேன். ஸ்டார் ஸ்போர்ட்ஸ்காரான் பட்டாசு ad போடுறப்பலாம் உள்ளுக்குள்ள ஏதோ உறுத்திட்டே இருக்கு.. இந்த தடவ மிஸ் ஆகாது.