கார்க்கிபவா
3 min readApr 29, 2015

--

Whatsapp காதல்

வாட்சப்பில் உலாவரும் ஒலித்துண்டு ஒன்றை கேட்டேன். முக்கோண காதலான அதை வாட்ஸப் இல்லா பெருமகர்களுக்கு கதையாக சொல்லலாம் என்ற நல்லெண்ண அடிப்படையில் இப்பதிவு.

பிரவீன், கல்பனா, ராகவி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) மூவரும் பொறியயல் கல்லூரி மாணவர்கள். பிரவீனை பார்த்தால் ”இவனுக்கா ரெண்டு பொண்ணுங்க” என அதிசயிக்கும் விதமாக இருக்கிறார். பேச்சில் சற்று பான்பூரி வாசனை தூக்கல். ராகவியும் கல்பனாவையும் பார்த்தால்…… இப்படி பார்த்துக்கொண்டே இருக்கலாம். கல்பனா நெகு நெகுவென நல்ல உயரம். ஒல்லியான தேகம். மிரட்சியான கண்கள். வழக்கமாக தமிழ் சினிமாவில் நாயகனை மடக்கும் இரண்டாம் கதாநாயகிக்கு ஏற்ற பெண். ஆங்காங்கே சற்று சதை புஷ்டியாக இருந்தாலும் ராகவி அழகு.. கதைப்படி அவர் கண்ணீர் வடிக்க வேண்டியிருப்பதால் அதற்கு அளவெடுத்து செய்த முகம். கதைக்குள் போவோம்.

ராகவியும் பிரவினும் இளங்காதலர்கள். இவர்களிடையே ஒரு பிரச்சினை எழுகிறது.அதை தீர்க்க நினைக்கும் பிரவின் சம்பந்தப்பட்ட கல்பனாவை அழைத்து மூவரும் குழு அழைப்பில்(conference call) பேசுகிறார்கள். கல்பனாவிற்கும் பிரவினுக்கும் இடையில் ஏற்கனவே காதல் இருந்திருக்கிறது. கல்பனா உண்மையில் ஒரு கே.ஆர்.விஜயா அல்ல, ஒய்.விஜயா என்பது தெரிந்து உறவை உடைத்துவிட்டதாக பிரவின் ராகவியிடம் சொல்லியிருக்கிறான். ஆக, அவர்கள் இடையே காதல் இருந்ததை ராகவி அறிந்தே இருக்கிறாள். ஆனால் உடைந்த உறவை ஃபெவி க்விக் போட்டு கல்பனா மீண்டும் ஒட்டியிருக்கிறாள். பச்சை ப்ளாஸ்டிக் ஆன பிரவினும் ஒட்டியிருக்கிறான். என்னுடன் காதலில் இருக்கும்போது ஏன் பழைய கல்பனா என்பது ராகவியின் நியாயமான கேள்வி. நமக்கும் இதே கேள்வி எழுகிறது.

கல்பனாவிடம் பிரவின் கேள்விகளை தொடுக்கிறான். ராகவி அவற்றை புறந்தள்ளிவிட்டு ஒரே ஒரு கேள்வி கேட்கிறாள். கலாச்சார காவலர்கள் திடுக்கிட்டு போக செய்யும் கேளவி அது “பிரவின். நீ கல்பனாவை slutனு சொன்னியா இல்லையா?” பானிபூரி பிரவினின் பேச்சில் தடுமாற்றம் இல்லை. “ஆமா. கல்பனா நீ பாலஜியோடு சுத்தினியா இல்லையா” என்கிறான். கல்பனாவும் “அது உன் கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தப்ப கிடையாதே” என்கிறாள். ஒரு நேரத்தில் ஒருத்திக்கு ஒருவன் என புது இலக்கணம் படைக்கிறாள் எஞ்சினியர் கல்பனா. பிரவின் விடாமல் தேதியோட சொல்ல, கல்பனா யோசிக்கிறாள். “நீ பிரேக் பண்ணிட்டு போனது ஃபெப்12. ஆனா நான் அவனோடு போனது ஃபிப் 14”. இரண்டு நாளில் பாய் ஃப்ரெண்ட் பிடிப்பது எப்படி என்ற புத்தகத்தை கல்பனா படித்திருக்கிறாள் என்பது ஊர்ஜிதமாகிறது.

இருவரின் பேச்சையும் காதால் கேட்கமுடியாத ராகவி, “Stop stop. கல்பனா. நீ பிரவினோடு ரிலேஷன்ஷிப்ல இருந்தப்ப எத்தனை பசங்கள டேட் பண்ண” என நேரிடையாக விஷயத்துக்கு வருகிறாள். “I swear on my god. swear on my entire life. நான் யாரையும் டேட் பண்ணல” என பெண்களும் ஆயுதமாம் சத்தியத்தை ஃபோனில் எடுக்கிறாள் கல்பனா. ராகவியின் இளகிய மனம் இப்போது பிரவினை சந்தேகிக்கிறது. பானிபூரி பாய்முதல் சாட்சியை காட்சிக்குள் கொண்டு வருகிறார். சீனியர் ஒருவனை அழைக்கிறார். பாவம். அவர் மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இதை பெண்கள் இருவரும் நம்பவில்லை. “நம்பர் தறேன். நீயே டிரை செய்” என்கிறார் பிரவின்.. ம்ஹூம். விஷயம் என்னவென்றால் ராகவியும் கல்பனாவும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். எப்போது, எங்கெல்லாம் கல்பணாவும் பிரவினும் காதல் வானில் சிறகடித்தார்கள் என்ற பட்டியலை கல்பனா வாசித்து விட்டாள். அதை பிரவின் ஒத்துக் கொள்கிறானா என்ற ஆசிட் தேர்வைத்தான் தற்போது ராகவி நடத்திக்கொண்டிருக்கிறாள். வழக்கம் போல் அரியர் வைக்கிறான் பிரவீன்.

ஒரு கட்டத்தில் கல்பனாவின் காதலர்கள் லிஸ்ட் நீண்டுக்கொண்டே செல்ல அவள் கழண்டு கொள்கிறாள். ராகவியின் அனல் வீசும் கேள்விகளை எதிர்கொள்ள தயாராகிறான் பிரவீன். ஆனால் ராகவி கண்ணீர் சிந்த தொடங்குகிறாள். “உன்னை எப்படிலாம் லவ் பண்ணன் தெரியுமா” என அழத் தொடங்க, பிரவின் பதட்டமம் அடைகிறான். ராகவி உண்மையான கே.ஆர்.விஜயா. இவளை விட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் அவன் பேச்சில் தெரிகிறது. ஆனால் காண்டமும் கையுமாக மாட்டிக் கொண்ட பின் என்ன செய்வான் அவனும்? கல்பனா மீது பழியை போடுகிறான். “அவ என்னை ப்ளாக்மெய்ல் செய்தா” என்கிறான் பிரவீன். புதிதாக ஒரு விஷயம் கேள்விப்பட ராகவி ஆச்சரியமடைகிறாள்.

“திசம்பர் மாசம் நாங்க செக்ஸ் வச்சுக்கிட்டோம். அதனால அவளுக்கு பீரியட்ஸ் வரலன்னு சொன்னா. எனக்கு என்ன செய்றதுன்னே தெரில. அதனால அவ சொன்ன மாதிரிலாம் செஞ்சேன்” என்கிறார் பிரவீன். அவ சொன்ன மாதிரிலாம் என்பதும் செக்ஸ்தான் என்பதுதான் உச்சவெளிச்சம். எப்போ அவளுக்கு சரியாச்சு என்கிறாள் ராகவி. ஃபெஃப் 4 என்கிறான் பிரவீன். ஆனால் ஃபெஃப் 20 அன்று பிரவீன் கல்பனா வீட்டிற்கே சென்று அவள் ப்ளாக்மெயிலுக்கு பயந்து கலவி கொண்டிருக்கிறான். இதை கேட்கிறாள் ராகவி. பிரவீன் “நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு கேளு” என 20 நிமிஷமாக கேட்கிறான். “நீ அதத்தாண்டா சொல்ற. ஆனா ஸ்டார்ட்டே பண்ண மாட்ற” என யார்க்கர் வீசுகிறாள் ராகவி. தனியாளாக சமாளிக்க முடியாத நிலை பிரவினுக்கு. அப்போதுதான் பை ரன்னராக , பிரவினின் நண்பன் மனோஜ் காலுக்குள் வருகிறார்.

மனோஜ் கொங்கு மண்டல பையன். பேச்சிலே கவுண்ட மணம் பொங்குகிறது. ராகவியும் வாய் நிறைய “மனோஜ் அண்ணா.. மனோஜ் அண்ணா” என்கிறாள். மனோஜின் பேச்சில் உண்மை இருக்கிறது. நேர்மை இருக்கிறது. ராகவியின் கேள்விகளுக்கு புல்லட் பாயிண்ட்ஸ் போட்டு விடை சொல்கிறார். பிரவின் தவறு செய்த இடங்களில் எல்லாம் அடிக்கோடிட்டு காட்டுவதுடன் காலர் இல்லா பிரவினின் டீ சட்டையை கொத்தாக பிடித்து வினவுகிறார். அதே சமயம் நண்பன் தெரியாமல் செய்துவிட்டதாகவும் சொல்கிறார். “மேட்டர் பண்றது தெரியாம செய்றதாண்ணா” என அப்பாவி தங்கை கேட்கும்போது மனோஜின் மனமும் லேசாக கலங்குறது. உடனே கல்பனா பக்கம் கோவத்தை திருப்பி ”நாளைக்கு டிபார்மெண்ட்ல அவள என்ன பண்றேன் பாரு? சஸ்பெண்ட் ஆனாலும் பரால்ல” என கோவப்படுகிறார் நண்பணான மனோஜ் அண்ணா.

கிளைக்கதையாக மனோஜ் அண்ணாவின் காதலும் வருகிறது. அவள் பெயர் காயத்ரி. காயத்ரி எப்படி இருந்தால் என்ன? கதை கேளுங்கள். ”பிரவின் ஃப்ரெண்டுதான நீ? அவன் ராகவிய ஏமாத்தி கல்பனாவுடனும் ஜாய்ண்ட் அடிக்கிற மாதிரி நீ செய்ய மாட்டன்னு என்ன நிச்சயம்” என கேட்டு விலகி சென்றிருக்கிறாள். அந்த வலியை மனதில் வைத்துக் கொண்டு நண்பன் தான் முக்கியமென வாழ்கிறான் மனோஜ் அண்ணா. இதை ராகவியிடம் சொல்லும் போது “நான் அவள உண்மையா லவ் பண்ணேன் ராகவி” என்கிறான். இந்த காட்சியில் மனோஜ் பிரவினை பார்ப்பதும், பிரவின் தலைகவிழ்வதும் நம்மால் உணரமுடிகிறது. மனோஜின் அண்ணாவின் வார்த்தைகளில் அவ்வளவு உணர்ச்சிகள்.

“நான் அவன லவ்வரா பாக்கலண்ணா.. புருஷனா பாத்தேன்” என்கிறாள் ராகவி. “ஒரு நாள் கோவில்ல பொட்டு வச்சான். அப்ப இருந்து அவன் என் புருஷந்தானே” என்கிறாள் அப்பாவிப்பெண். நல்லவேளை. பொட்டு வைத்தாலே கர்ப்பம் ஆகாது என்பதை பிரவின் ”பிராக்டிக்கலாக” விளக்கியிருந்ததால் பிரச்சினை இல்லை.

இறுதியில் எந்த முடிவும் எட்டாமலே அந்த ஒலித்துண்டு முடிகிறது. 90 நிமிடங்கள் ஓடும் இந்த ஒலித்துண்டை கேட்டு முடிக்கும்போது “நாம ஏன் திரும்ப கல்லூரி சென்று டாக்டரோ எஞ்சனியரோ ஆக கூடாது” என தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணம் மறைந்த அடுத்த நொடி கல்பனாவும் பிரவினும் சுவாசிக்கும் அதே காற்றைத்தான் மனோஜ் அண்ணாவும் சுவாசிக்க வேண்டியிருப்பது இந்த உலகின் போதாமையை காட்டுகிறது என்பது புலப்படுகிறது. வாழ்க்கை நம்மை பிரவீன் ஆக்க தேவையில்லை.மனோஜ் அண்ணா ஆக்காமல் இருந்தால் போதும்.

ராகவிக்கு என் அன்பு. கல்பனாவுக்கு என் முத்தம். பிரவினுக்கு என் வாழ்த்துகள். மனோஜ் அண்ணாக்கு என் அனுதாபங்கள்.

--

--

கார்க்கிபவா

32 | Chennaivasi | Lyricist | Script writer | Anushka Adorer | C/O Chennai -600024 Listen my first song here https://www.youtube.com/watch?v=J3LrchocXyU