இறைவி

வன்கொடுமைகள் தன் தாய்/சகோதரிக்கு நிகழும்போது மட்டும் எட்டிபார்க்கும் பெண்ணுரிமை வசனங்கள்/பாலின விவாதங்கள் தெருவில் நடந்து செல்லும் ஏதோ ஒர் பெண்ணிற்குத் தன்னால் நிகழும்போது வசதியான இடம் தேடி ஒளிந்து கொள்ளும். பெண்களைக் கவர்வதற்காக என்று தொடங்கும் குரங்குச் சேட்டைகள் பெண்கள் மீதான வன்முறையாய் மாறி நிற்கும்போது அதன் இயல்பைக் கூட ஆணின் மூளை அறிந்துகொள்ள முற்படுவதில்லை.

ஒரு திரைப்படத்தினால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சார்ந்த பெண்களுக்கு நன்மை செய்கிறோம் என்றெண்ணி நாம் நிகழ்த்திகொண்டிருக்கும் கருத்து திணிப்புகளும் வன்முறைதான். ஆனால் நம்மால் நிகழ்த்தப்படும்பொழுது வன்முறையாக, அல்ல சிறு தவறாகக்கூட இந்த நிகழ்வுகளை அடையாளம் காணமல் கடந்து சென்றுவிடுகிறோம்.

குடும்பத்தில் தந்தை தாய் மீது நிகழ்த்தும் அனைத்துவிதமான வன்முறைகளும் தந்தையைக் கெட்டவனாக ஆணாதிக்கவாதியாக பிள்ளைகளிடத்தில் அடையாளப் படுத்துகிறது. ஆனால் அதே பிள்ளைகள் வளர்ந்த பின் அந்த வன்முறை மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. சென்ற தலைமுறைத் தந்தைகள் உடல் ரீதியான வன்முறையைப் பயன்படுத்தினார்கள், இந்தத் தலைமுறைத் பிள்ளைகள் மனரீதியான வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான் வேறுபாடு. நான்கு சுவர்களுக்குள் இன்றைக்கும் பெண், சுதந்திரம் அற்றவளாகத்தான் இருக்கிறாள். எதார்த்தம் இவ்வாறு இருக்கக் கார்த்திக் சுப்புராஜின் “இறைவி” பேசும் பொருளும், கோணமும் முற்றிலும் வேறானது.

ஆணிடம் அங்கீகாரம் தேடும், ஆணை நம்பித் தன்னை ஒப்புவித்து பின் வஞ்சிக்கப்படும், ஆணைச்சார்ந்து தன் வாழ்வை அமைத்துக்கொள்ளும் பெண்கள். இவர்கள்தான் இந்தத் திரைப்படத்தில் கேள்விக்குள்ளாகுபவர்கள். உண்மையில் கதை அந்த நான்கு பெண்களைப்பற்றியது, திரையில் தோன்றும் மற்ற அனைவரும் துணைப்பாத்திரங்களே.

ஆண்களின் உலகத்தில் தன்னை வலிந்து திணித்துக்கொண்டு அதுதான் வாழ்க்கை என்று நம்பி பின் ஏமாற்றமடைந்து நிற்கும் பெண்கள். இவர்களின் இந்த நிலைமக்கு யார் காரணம்? ஆணா?

இந்தச் சமுதாயத்தில் ஆணின் கதாபத்திரங்கள் ஆணினால் வரையறுக்கப்பட்டவை, அதுமட்டுமல்ல பெண் ஏற்கும் கதாபத்திரங்களும் ஆணினால்தான் வரையறுக்கப்படுகிறது. பெண்ணின் கதாபத்திரங்களை தங்கள் விருப்பு வெறுப்புகளை தாங்கள் அடைய/கடக்க விரும்பும் எல்லைகளை தாங்கள்தான் வரையறுக்க வேண்டும். இதையெல்லாம் ஆண்களிடம் கொடுத்துவிட்டுப் பின் ஆண் வகுத்துக்கொடுத்த அந்தச் சட்டகத்துக்குள் அடைபட விருப்பமில்லை என்று அழுது புலம்புவதினால் எந்தப்பயனும் இல்லை.

“மனிதன்” -லிருந்து வெளியே வர மனிதிதான்(பெண்தான்) முயல வேண்டும். அதற்கு ஆணின் துணையோ கருணையோ தேவை இல்லை. இன்னும் சொல்லப்போனால் பெண்களின் இந்த நிலைமைக்குக் காரணம் சமுதாயம் காலம் காலமாய் குற்றம் சாட்டும் ஆண்களல்ல, பெண்கள்தான்.

தனக்கான மழையைத் தன் கையை நீட்டித்தான் எட்டிப்பிடிக்க வேண்டும் இறைவி.