ரியல் எஸ்டேட் தொழிலதிபரும் கிராமத்துப்பையனும்- ஒர் எளிய அறிமுகம்

நீங்க ஒரு பழமையான, அந்தக் காலத்துல தொழில்ல நம்பர் ஒன்னா இருந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்னு வெச்சுக்குவோம், 1970-லருந்து நீங்க பில்டிங் கட்டி வித்துகிட்டு இருக்கீங்க.

இப்ப உங்க முன்கதைச் சுருக்கத்த பாப்போம், ஆரம்பத்துல வீடு கட்டறத விட ரோடு போடறதுலதான் நல்ல பேர் வாங்கறீங்க, ஆனா உங்களுக்கு தொழில் கத்துக்குடுத்தவர் சொன்னதால வீடு கட்ட ஆரம்பிக்கறீங்க, அதுவும் நல்லா வரவே, ரோடு போடறத நிறுத்திட்டு வீடு கட்டறதயே முழுநேரமும் செய்யறீங்க.

ஆரம்பத்துல உறுதியான,பெரிய, அகலமான, அழகான வீடுகளா வித விதமா கட்டி வித்து சீக்கிரமே நல்ல பேர் எடுத்த நீங்க நாளாக நாளாக அளவு , அழகு எல்லாம் குறைச்சு மக்களுக்குப்பிடிச்சிருக்கான்னு பாத்து வீட்டுக்கு பதிலா வீடு மாதிரி ஒன்ன கட்ட ஆரம்பிக்கறீங்க.

கொஞ்சநாள்ல வீட்டுக்கு ஜன்னல் எதுக்குன்னு வெறும் கதவோட வீடு கட்டறீங்க, வீடே இல்லாம திண்டாடிட்டு இருந்தவங்க இதப்பாத்து உங்களப் பாராட்டறாங்க, நீங்களும் இன்னும் நிறைய நிறைய வீடு கட்டி வித்து பெரியாளாயிடறீங்க.

இன்னும் கொஞ்சநாள்ல வீட்டுக்குள்ள இருக்கற ரூமுக்கெல்லாம் கதவெதுக்குன்னு அப்படியே ப்ரீயா விட்டிடறீங்க, எதோ புதுசா இருக்கேன்னு இதையும் நிறையப்பேர் வாங்கறாங்க..

மறுபடியும் கொஞ்சநாள்ல இந்த ஊர்க்காரங்களுக்கு வீட்ல ப்ளோரிங் ,சீலீங்,ப்ளம்பிங்,வயரிங் எதுவுமே தேவையில்ல, அவ்வளவு ஏன் வீடே தேவையில்லன்னு முடிவு பண்ணி வெறும் நாலு சுவர் மட்டும் கட்டி விக்க ஆரம்பிக்கறீங்க.

கொஞ்சநாள்ல மக்கள் உங்க நாலு சுவர வாங்கத் தயக்கம் காட்ட ஆரம்பிக்கறாங்க… அப்பதான் இந்த ஊர் மக்கள் கொஞ்சம் வெளி உலகத்தையும் பாக்க ஆரம்பிச்சிருக்காங்க, அதுவும் இந்த ஊர்ல படிச்சிட்டு வெளிய போய் வேலை பாத்த ஒன்னு ரெண்டுபேரால.

கொஞ்ச கொஞ்சமா இவ்வளவு நாள் நீங்க அவங்களுக்குக் கட்டிக்குடுத்ததெல்லாம் வீடே இல்லன்னு ஊர்க்காரங்களுக்குத் தெரிய ஆரம்பிக்குது.

நீங்களும் வேறமாதிரி புதுசா கட்டறேன்னுட்டு உங்க பொண்ண வச்சே வீடு கட்ட முயற்சி பண்றீங்க, அது வீடுமாதிரி இல்லாம டாய்லெட் மாதிரி இருக்கு.

என்ன பண்ணலாம்னு யோசிச்சு உங்க பழைய மேஸ்திரியக் கூப்பிட்டு வீடு கட்ட சொல்றீங்க அவர் உங்க ஸ்டைல்ல நாலு சுவர் வச்ச வீட்டையே(?!) கட்டித்தர்றாரு.

என்ன பண்றதுன்னு தெரியாம யோசிச்சுட்டிருக்கீங்க, அப்போ இந்த ஊர்ப்பைய்யன் ஒருத்தன் ஏழைகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் அழகான, வலிமையான வீடுகள் கட்டித்தர்றத பாக்கறீங்க.

அப்ப திடீர்னு உங்களுக்கு ஒரு யோசனை தோணுது, இந்தப்பையன வெச்சே நம்ம வீட்ட கட்ட சொல்லலாமேன்னு, அந்தப்பைய்யனும் பெரியவரோட சேர்ந்து புதுசா வீடு கட்ட முயற்சி பண்ணுவோம்னு சம்மதிச்சுடறான், இப்ப ஊரே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன கட்டப்போறீங்கன்னு பாக்க காத்துகிட்டிருக்கு.

1970 லருந்து பாக்கற எங்களுக்கு மட்டுந்தான் தெரியும் நீங்க இதுவரை வீடே கட்டினதில்லைன்னு.

அந்த சின்னப் பைய்யன ஏமாத்தற பாவத்த எங்க போய் கழுவப்போறீங்க பெரியவரே?