Anydesk செயலியைப் பற்றி எச்சரிக்கை விடுத்த ரிசரிவ் வங்கி. காரணம் என்ன?

சென்ற வாரத்தில் ரிசர்வ் வங்கியும், தேசிய கட்டண நிறுவனமும் (NPCI — அரசு மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து நடத்தும் இந்த நிறுவனம் தான் UPI மற்றும் Rupay அட்டைகளை நிர்வகிக்கிறது) தனித்தனியாக ஒரு செயலியைப் பற்றிப் பொது எச்சரிக்கை வெளியிட்டன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓஸ் இரண்டு இயங்குதளங்களிலும் இருக்கும் இந்த Anydesk செயலியை உலகின் பல முண்ணனி நிறுவங்கள் (அவர்களின் கணக்குப்படி 7000க்கும் மேல்) பயன்படுத்தி வருகின்றன. அப்படி இருக்க இதில் என்ன தான் பிரச்சனை?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் Anydesk

இணையப் பாதுகாப்பின் மற்ற பல்வேறு சிக்கல்கள் போலவே இதற்க்கும் காரணம் அறியாமையே. NPCI வெளியிட்ட எச்சரிக்கையில் இந்த மோசடி எப்படி வேலை செய்கிறது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் மோசடியாளர் எதேனும் ஒரு காரணம் கூறி (வைரஸ் போன்று) Anydesk செயலியை தரவிறக்க வைப்பர்.
பின்னர் Anydesk கொடுக்கும் 9 இலக்க எண்ணை பகிரச் சொல்வர்.
மோசடியாளர் தனது செயலியில் அந்த 9 இலக்க எண்ணை உள்ளிட்ட உடன் உங்களது செல்பேசியில் சில அனுமதிகள் கேட்கப்படும். இது பெரும்பாலும் மற்ற செயலிகள் கேட்பது போலவே இருப்பதால் எந்த ஐயமும் வராது.
அனுமதி கொடுக்கப்பட்டவுடன் செல்பேசியின் மொத்த கட்டுப்பாடும் அந்த மோசடி ஆசாமியின் கைகளுக்குச் சென்றுவிடும். இப்போது உங்கள் செல்பேசியில் உள்ள எந்த பணப் பரிவர்த்தனை செயலியை வேண்டுமானாலும் பயன்படுத்தி பணத்தை தன் சொந்த கணக்குக்கு அனுப்ப முடியும்.

இது Anydesk செயலிக்கு மட்டுமல்ல. எந்த ஒரு தொலை திரை பகிர்வு (Remote Screen Sharing) செயலியிலும் இந்த மோசடியைச் செய்ய முடியும். ஆனால் பெரும்பாலான இதுபோன்ற செயலிகளில் முதன்முறை அமைப்புகள் (Initial Setup) எளிதாக இருப்பதில்லை. Anydesk செயலியில் அது மிகவும் எளிதாக இருப்பதால் அதுவே ஏமாற்று வேலைகளுக்கு உகந்ததாக ஆகிவிடுகிறது.

தப்பிப்பது எப்படி?

எத்தகவலையும் எங்கும் பகிரும் முன் புரிந்து கொள்ளுங்கள்!

இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. தொழில் நுட்பம் பற்றி தெரிந்த நம்மால் இதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று செல்பேசி பாரபட்சம் இல்லாமல் அனைவரிடத்தும் உள்ளதே! அதனால் இது போன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்வது நமது கடைமையும் கூட. 
கல்வியே இணையப் பாதுகாப்பின் முதல் படி!