ஜோதி அக்கா..

Jamuna Guru
Aug 27, 2017 · 3 min read

நேரம் நள்ளிரவை தாண்டிக் கொண்டிருக்கிறது..

இன்னும் தூக்கம் வரவில்லை.. நினைவெல்லாம் ஜோதி அக்காவையே சுற்றிக் கொண்டிருக்கிறது.

வளர்மதி அத்தை வீட்டுக்கு பக்கத்து வீடு ஜோதி அக்காவுக்கு.

பட்டுப்புடவை, நகை என அழகாக ஜொலித்த ஜோதி அக்கா மருதாணி வாசம் வீசிய தன் விரல்களால் என் கன்னம் தீண்டி "உன் பேர் என்ன.."னு கேட்டது தான் என்கிட்ட பேசிய முதல் வார்த்தை.

இப்போதும் நினைவில் அந்தக் குரலும் மருதாணி வாசமும் நிறைகிறது.

அத்தை வீட்டுக்கு லீவுக்கு செல்வதே ஜோதி அக்காவை ரசிக்கத்தான் என தோன்றியது கூட உண்டு.

ஒரு பிளாஸ்டிக் தட்டில் பாதிக்கு தூள் இருக்க ஒரு புறம் வெட்டிய இலையும் பக்கவாட்டில் ஒரு ஆணியில் நூல்கட்டையும் இருக்கும்.

ஒவ்வொரு இலையாக எடுத்து தூளை வைத்து உருட்டி.. பின்னால் லேசாக மடக்கி கைகளுக்குள் ஒருமுறை உருட்டி.. கண்களாலே அளவெடுத்து நூலைக் கட்டுவாள்.. பின் பொட்டுக்குச்சியை ஆட்டுவது மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்..

அதையே திரும்ப திரும்ப செய்து பீடிகளாக்கி.. இருபத்தைந்து பீடி சேர்ந்ததும் எண்ணி வைப்பாள்..

"கை விரசு அப்டி.. காலையில தட்டை தூக்கி முப்பது கட்டுக்கு உருட்டிருவா.."என்பாள் அத்தை.

பதினோரு மணிக்கு பீடி போட போகணும்.. பத்தரை ஆனதும் எண்ணி வைத்த பீடியை கட்டி கைகளுக்குள் வைத்து திருப்பியபடி கட்டை பீடிகளை உருவி சைஸ் பார்ப்பாள்.

இத்தனை நேரமும் வாயை மூடாமல் எதையாவது பேசிட்டே இருப்பாள் ஜோதி அக்கா.

"நேத்து அந்த நாடகம் பாத்தியா.."என ஆரம்பிப்பாள்..

"வாணி ராணில.. ஏதோ வெளிநாடுலாம் காட்டுறாங்க.. விளம்பரத்துல பார்த்தேன் நேத்து.."

"தெய்வமகள்ல காயத்திரி சத்யாவை கடத்திட்டா.. பாவம்.. சத்யா.. பிரகாஷ் காப்பாத்திடுவான் எப்டியும்.." என்று நம்பிக்கையாக சொல்லிக் கொள்வாள்.

"இந்த வம்சம்ல மதன் எத்தனை கல்யாணம் தான் பண்ண பாக்கான்.."என சலித்துக் கொள்வாள்.

"இந்த நாடகத்துல வர்ற வீடும் அதில வர்ற வீடும் ஒரே வீடுல்ல.." என கண்டுபிடிப்புகள் சொல்வாள்.

"ஜோதிக்கு சோறு தண்ணி கூட வேண்டாம்.. அந்த டீவி மட்டும் இருந்தா போதும்.."என கல்யாணி அண்ணி சொல்வாள்.

ஜோதி அக்காவுக்கு கல்யாணம் ஆகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.. இன்னும் குழந்தை இல்லை.

ஜோதி அக்கா எல்லாருக்கும் நல்லவள் அவள் மாமியாரைத் தவிர..

வாய் ஓயாமல் பேசும் ஜோதி அக்கா தன் வீட்டு பிரச்சனைகளையோ அடுத்த வீட்டு பிரச்சனைகளையோ பேசி ஒரு போதும் கேட்டதில்லை நான்.

யாராவது பேசினால் கூட அது காதில் விழாதவள் போல அமர்ந்திருப்பாள்.

நைட் பத்து மணி வரைக்கும் அத்தை வீட்டில இருந்து பீடி சுத்திட்டு இருப்பா. பத்து மணிக்கு அவ வீட்டுக்காரர் வண்டி வர்ற சத்தம் கேட்டதும் எழுந்து போயிடுவா.

சில நாட்கள் சண்டை போடுற சத்தம் கூட கேட்கும். ஆனா அடுத்த நாள் எதுவுமே நடக்காத மாதிரி பீடி சுத்திட்டு இருப்பா.

"நேத்து அந்த குட்டை பய பீடி எடுத்தான். நாலு கட்டு அத்துட்டான்.. இன்னைக்கும் அவன் எடுத்தான்னு இனிமே பீடியே சுத்தக் கூடாதுன்னு நினைச்சிருக்கேன்.."என்பாள் ஜோதி அக்கா.

"இப்டி சொல்லிக்க வேண்டியதான்.. தட்டை தூக்காம பொழுது போகுமா நமக்கு.."என்பாள் கல்யாணி அண்ணி.

"அது என்னமோ சரிதான்.. இத விட்டா நமக்கு வேற என்ன பொழப்பு.."என ஒத்துக் கொள்வாள் ஜோதி அக்கா.

"அவன் குடுக்கிற சம்பளத்துக்கு இலையும் தூளும் வாங்கிப் போடவே சரியா இருக்கு.. அந்த அழகுல அவன் ஆயிரெத்தெட்டு குறை சொல்றான்.."என சலித்துக் கொள்வாள். ஆனாலும் அதே கடை.. இலை.. தூள்.. பீடி.. இதுதான் வாழ்க்கை.

"நேத்து புளிக்கறி வச்சேன்.. அதுவே இன்னும் காலியாகலை.. இன்னைக்கு அத சாப்பிட மாட்டாக.. முந்தா நாள் தான் சாம்பார் வச்சேன்.. வேற என்ன கறி வக்கவோ.. தெரியலை.." என புலம்புவாள் சில நேரங்களில்..

எப்போது என்னைக் கண்டாலும் அவள் சொல்வது.. "என்ன பிள்ள.. போன தடவை பாத்ததுக்கு இப்ப மெலிஞ்சுட்ட.. நல்லா சாப்பிடு.."

"நான் மெலிஞ்சுட்டேனா.. நீ கண்ணாடி போடு முதல்ல.."என்பேன்.

சிரித்துக்கொண்டே.. "சும்மா ஸ்டைலுக்கு லாம் கண்ணாடி போடுவாங்களா பிள்ள.. எனக்கு போட்டா எப்டி இருக்கும்.."என ஆசையுடன் கேட்பாள்.

"உனக்கென்ன சூப்பரா இருக்கும்.. நானே வாங்கித் தாரேன்.."என்பேன்.

குழந்தை போல சிரிப்பாள் அதற்கு.

இந்த முறை லீவுக்கு வராமலே இருந்திருக்கலாம் என தோன்றியது ஜோதி அக்காவின் சோகமான முகத்தை பார்த்த போது.

பீடி சுத்தக் கூட வரவில்லை இரண்டு நாளாக.

"ஜோதி புருஷன் குடிச்சிட்டு வந்து தினம் சண்டை தான் போடுறான்.. பாவம் அந்த புள்ள.."என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள் அத்தை.

நைட் பதினோரு மணி இருக்கும்.. ஜோதி அக்கா வீட்டில் சண்டை போடுற சத்தம் தெருவுக்கே கேட்டது.

மாமா வீட்டு வாசல்ல நின்னு சத்தம் போட்டாரு. அத்தை போய் ஜோதி அக்காள கூட்டிட்டு வந்தா.

அழுதுட்டே இருந்தா ஜோதி அக்கா. அத்தை ஒரு தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்து நீட்டினாள்.

ஜோதி அக்கா மறுத்து விட்டாள். அத்தையும் மாமாவும் இங்கே படுனு சொல்லியும் கேட்காமல் திரும்ப அவள் வீட்டுக்கு போய்விட்டாள்.

அவள் நினைப்பு என்னை தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.

அத்தையும் மாமாவும் கூட ஜோதி அக்காளை பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள் நெடுநேரம்.

அப்போது தான் கண்ணயர்ந்தது போல் இருந்தது. யாரோ கதவை தட்டிக் கொண்டிருந்தார்கள். மாமா எழுந்து போய் பார்த்தார்.

ஜோதி அக்காவோட மாமியார் அழுதபடி நின்று கொண்டிருந்தாள்.

ஜோதி அக்கா தூக்கு போட்டுக் கொண்டதாக சொன்னாள். அத்தையும் மாமாவும் பதறிக் கொண்டு ஓடினர்.

நான் போய் பார்க்கையில் கட்டிலில் படுத்திருந்தாள் ஜோதி அக்கா. மேலே அவள் தூக்கு போட்டுக் கொண்ட அவள் சேலை ஆடிக் கொண்டிருந்தது.

ஜோதி அக்கா புருஷன் ஒரு மூலையில் வெறித்தபடி இருந்தான்.

ஊர் பெரியவங்க லாம் வந்தாங்க. போலிஸ் கேஸாகிடும்.. சீக்கிரம் தூக்கிடலாம்னு சொன்னாங்க.

விஷயம் கேள்விபட்டவங்கலாம் துக்கம் விசாரிக்க வந்துட்டு இருந்தாங்க.

தன்னிடம் வந்து விசாரித்தவர்களிடம்.. "நேத்து நைட்ல ஏதோ சண்டை அதான் இப்டி பண்ணிட்டா.."என மட்டும் சொன்னாள் அத்தை.

ஜோதி அக்காவ கொண்டு போய் எரிச்சிட்டு வந்துட்டாங்க. கொஞ்ச நேரத்தில நடத்து முடிஞ்சிடுச்சு எல்லாம்.

"மாமியாக்காரியும்.. அவ புருஷனுந்தான் ஏதோ பண்ணிட்டாங்களோ என்னமோ.."

"நல்ல பிள்ளை.. இப்டி பண்ணிட்டாளே.."என பல குரல்கள் காதில் விழுந்தன.

“நேத்து இங்கனயே படுத்திருக்கலாம்.. பாவி புள்ள இப்டி பண்ணிட்டாளே..”என புலம்பிக் கொண்டிருந்தாள் அத்தை.

அந்த பீடித்தட்டு தூக்க ஆளில்லாமல் கிடக்கிறது..

)

Jamuna Guru

Written by

கிழித்தெறியப்படாத சில கிறுக்கல்களுக்கான இடமிது..

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade