திராவிடக் கட்சிகள்-சமூக பொருளாதார கட்டமைப்பு-எந்திரன்

இன்று தமிழில் நேரடியாக கிடைக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதைத் தொடும். பல பன்னாட்டுத் தொலைக்காட்சிகளின் தமிழில் கிடைக்கின்றன. அவை, தமிழகத் தொலைக்காட்சிகள் கனவிலும் எண்ண முடியாத தயாரிப்புத் தரத்துடனும், உள்ளடக்கத்துடனும் வருகின்றன. இவ்வளவுக்கும் காரணம், தமிழ் பேசுவோர் குறிப்பிடத்தக்க மக்கள்தொகையுடன் நாட்டிலேயே கூடுதலாக தொலைக்காட்சிகளைக் கொண்டிருப்பவர்களாக இருப்பதும் ஒரு காரணம். திராவிடக் கட்சிகள் இலவசங்களால் சமூகத்தை சீரழிக்கின்றன என்று தூற்றுவோர் இது போன்ற தொலைநோக்கான விளைவுகளை எண்ணிப் பார்த்தார்களா? இந்த அடிப்படைக் கட்டமைப்பு இல்லாமல் வணிக சாத்தியத்துடன் கூடிய முதலீடுகள் தமிழில் நிகழுமா என்று கேட்டால் , கண்டிப்பாக இல்லை

கிட்டத்தட்ட அனைத்து ஆலிவுட்டுப் படங்களும் இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் தான் வெளியிடப்படுகின்றது . ஆனால் மராத்தி , மலையாளம், கன்னடம், ஒடியா போன்ற மொழிகளில் வருவதில்லை. நம்மை விட மக்கள் தொகை கூடிய மராத்திக்குக் கூட இந்தச் சந்தை இல்லை. இத்தகையோர் நாளடைவில் இந்தி, ஆங்கிலம், தமிழ் என்ற மற்ற மொழி வடிவங்களைப் பார்க்கத் தொடங்குவார்கள். தங்கள் மொழிக்கு இவ்வாறு பன்னாட்டு உள்ளடக்கங்கள் வருவதில்லையே என்று ஏங்குகிறார்கள்.

மகாராஷ்டிரம் ஒரு சிறப்பான உதாரணம் . கிட்டத்தட்ட ஏழேகால் கோடி மக்கள் பேசும் மொழி மராத்தி . ஆனால் அவர்களது அரசியல் இந்திய மையத்துடன் அனுக்கமாக இருப்பதாலும் , ஹிந்தியின் ஆளுமையை பெரிதாய் கேள்வி கேட்கும் இயக்கங்கள் இல்லாததாலும் அம் மொழி சார்ந்த வணிக சாத்தியமுள்ள முதலீடுகள் நடக்க்கவில்லை .நாம் தமிழரை தூக்கி நிறுத்தி பேசுபவர்கள் மகாராஷ்டிரத்தில் சிவ சேனா என்ன நிகழ்த்தி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும் . ஆராய்ந்தால் , அவர்களின் பங்களிப்பு பூஜ்யம் எனலாம் . திராவிட இயக்கத்தால் , சினிமா துறை அரசியல் இயக்கத்துடன் இயைந்து செயல்பட்டதால் இங்கு Monopoly யானது நிலைநாட்டப்பட்டது . தமிழில் மிகப் பெரும் முதலீட்டுடன் படம் எடுக்கத் தயங்காததற்கு அது மிகப்பெரும் காரணம் . மும்பையை சார்ந்த நிறுவனங்கள் இங்கு 100 கோடி முதலீடு செய்து படம் எடுக்க வருவதற்கு காரணம் இங்கு நிலைநாட்டப்பட்ட Monopoly . இது அரசியல் தலையீடு இல்லாமல் கண்டிப்பாய் நிகழ்த்த இயலாத ஒன்று . அந்த Nexus தான் , தமிழ் திரையுலகமும் . தெலுங்கு திரையுலகமும் நிலைபெற்று இருப்பதற்கு காரணம் ..

மகாராஷ்டிரத்தில் , மராத்திய மொழிப் படங்களின் தரம் பொதுவாய் அதல பாதாளத்தில் இருப்பதால் திரை அரங்குகள் பொதுவாய் அவற்றை வெளியிட மறுக்கின்றன ‘சைரத்’ , ‘நடசம்ராட்’ போன்ற நல்ல திரைப்படங்களுக்கு அரங்குகள் கிடைப்பதே ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் . அரசாங்க கட்டுப்பாட்டால் திரையரங்குகள் , குறிப்பிட்ட அளவு காட்சிகளை மராத்திய மொழித் திரைப்படங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று சொல்வதால் தான் அரங்குகள் கிடைக்கிறது என்கிறார்கள் . மராத்திய மக்கள் , அவர்கள் மொழிப் படங்களுக்கு ஏங்குகிறார்கள் . நன்றாய் எடுக்கப்பட்டால் மாபெரும் வெற்றியும் பெறுகிறது . ஆனால் நம்பி முதலீடு செய்ய ஆள் இல்லை. காரணம் , அங்கு முன்னெடுக்கப்பட்ட அரசியல் அதனால் விளைந்த சமூக பொருளாதார கட்டமைப்பு .

தமிழ் மொழியினில் எந்திரன் , இரண்டாம் உலகம் , ஆயிரத்தில் ஒருவன் , ஹே ராம் , விஸ்வரூபம் போன்ற மிகப்பெரும் முதலீட்டுடன் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வணிகசாத்தியம் இருப்பதற்கான முழு முதற்காரணம் , திராவிட கட்சிகளின் அரசியல் நிலைப்பாடும் அதனால் விளைந்த சமூக பொருளாதார கட்டமைப்புமே .