கடமை எது? — கீதையும் திருவள்ளுவரும்
நம் ஒவ்வொருவருக்கும் கடமை எது? அன்றாட வாழ்வில் எதைச் செய்ய வேண்டும்? குடும்பதிற்கு என்ன செய்யவேண்டும், தொழிலில் என்ன செய்ய வேண்டும், சமூகத்திற்க்கு என்ன செய்யவேண்டும், யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கீதையில் கிருஷ்ண பகவானும், திருக்குறளில் திருவள்ளுவரும் விளக்குகிறாா்கள்.
கீதை
பகவான் கிருஷ்ணா் கீதையில் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கடமைகைளை முதலில் இரண்டு வகையாகப் பிரிக்கின்றார். புத்தியின் தூண்டுதலால் செய்யப்படுபவை என்றும், விருப்பு வெறுப்புகளால் உந்தப்படுபவை என்றும் இரண்டு வகைகளாகும். புத்தியினால் தூண்டப்படுபவை கட்டாயம் செய்யப்பட வேண்டியவை. அப்பொழுதுதான் வாழ்க்கை நடக்கும், சிறக்கும். அலுவலகத்திற்கு செல்வது அல்லது தொழில் செய்வது, பொருள் ஈட்டுவது, குடும்பத்தைக்காப்பாற்றுவது போன்றவை அவை. ஆனால் விருப்பு வெறுப்புகளால் தூண்டப்படுபவை கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியவை அல்ல. விரும்பினால் செய்யலாம் இல்லாவிட்டால் தவிா்க்கலாம். இவை பொழுதுபோக்கிற்காகத் திரைப்படம் செல்வதைப் போன்றவை. இவைகளைச் செய்யலாம் தவறில்லை. ஆனால் விருப்பு வெறுப்புக்களால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்களைத் தர்மப்படிதான் செய்யவேண்டும், விருப்பு வெறுப்பிற்காக அதர்மத்தில் ஈடுபடக்கூடாது, மேலும் காலப்போக்கில் இவைகளைக் குறைத்துக் கொண்டு புத்தியினால் தூண்டபடுபவைகளை மட்டும் செய்யவேண்டும் எனவும் கீதை வலியுறுத்துகிறது.
குடும்ப வாழ்வில் ஈடுபடுபவனுக்கு கீதை புத்தியால் தூண்டப்படுபவன என்று ஐந்து முக்கியமான கடமைகளை விதிக்கின்றது. அவைகள் “பஞ்சமகாயக்ஞம்” எனப்படும். அவை
- ஈஸ்வர (தேவ) யக்ஞம் — இறைவனுக்கான சேவை, வழிபாடு
- பிதுா் யக்ஞம் — தம் முன்னோா்களுக்கான சேவை, வழிபாடு
- ரிஷி / பிரம்ம யக்ஞம் — ரிஷிகள் வழங்கிய வேதங்களுக்கு சேவை, வழிபாடு, பாதுகாத்தல், கற்றுக் கொள்ளுதல், அதன்படி நடத்தல் முதலியன
- மனித யக்ஞம் — மனித நேயம், சக மனிதா்களுக்கான சேவை , உதவிகள்
- பூத யக்ஞம் — அனைத்து உயிா்களுக்கும், மரம் செடி கொடிகளுக்கும் சேவை, பாதுகாத்தல், வழிபாடு
இவைகளை ஒவ்வொரு மனிதனும் கட்டாயமாக நாள்தோறும் கடைபிடிக்க வேண்டும் என்று கீதை வலியுறுத்துகிறது.
எது கடமை அல்லது தர்மம் என்பதற்கு பொதுவான அளவுகோலையும் கீதை கூறுகிறது. இந்த உலகத்திடம் நீ என்ன வினையை விரும்புகிறாயோ அல்லது எதிர்பார்க்கின்றாயோ அதனை நீ மற்றவா்களுக்குச் செய்ய வேண்டும். உலகம் உனக்கு எதனைச் செய்யக் கூடாது என விரும்புகிறாயோ அதனை நீ மற்றவர்களுக்கும் செய்யக்கூடாது. இதுதான் உரைகல்.
திருக்குறள்
திருவள்ளுவரின் இரண்டு குறள்கள் கடமையைப் பற்றிக் கூறுவதில் முக்கியமானவை.
“கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு”.
கடமையைச் செய்வது என்றால் அது பிரதிபலனை எதிா்பாா்க்காமல் செய்யப்படுவது ஆகும். எந்த பிரதிபலனையும் எதிா்பாா்க்காமல் பெய்யும் மழைக்கு இந்த உலகம் என்ன பிரதிபலனைச் செய்துவிட முடியும். மேலும் இதில் நுட்பம் என்னவென்றால் யாா் நினைத்தாலும் மழைக்கு நம்மால் எந்த பிரதிபலனையும் செய்ய முடியாது. எதிா்பாா்க்காது என்பது வேறு, விரும்பினாலும் செய்ய முடியாது, இயலாது என்பது வேறு.
மற்றும் திருவள்ளுவா் ஒருபடி மேலே சென்று
“கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு”
என்று கூறுகிறார்.
இந்த உலகத்தில் என்னென்ன நன்மைகள் விளையுமோ அத்தனையும் செய்ய வேண்டியது உன் கடமைகள். அவைகளைச் சிறிய எல்லைக்குள் அடக்க வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறாா். எவ்வளவு உயர்ந்த சிந்தனை.
கீதையும் திருக்குறளும் நமது வாழ்வில் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளை மிகவும் தெளிவாக விளக்குகின்றன. சிந்திப்போம், கடைப்பிடிப்போம். நல்லது செய்வோம். நம் வாழ்க்கை சிறப்பாக அமையும்.