பாரதி ஒரு தேசபக்தரா, மகாகவியா அல்லது வேதாந்தியா?

பாரதி ஒரு தேசபக்தரா, மகாகவியா அல்லது வேதாந்தியா? இது குறித்து ஒரு விவாதம் 1930 களில் தீவிரமாக இருந்தது. ராஜாஜி அவர்கள் “பாரதி தேசபக்தராகி, கவியாக மலர்ந்து வேதாந்தியாகக் கனிந்தார்” என்று கூற பாரதியுடன் நெருங்கிப் பழகிய வரா (வ.ராமசாமி ஐயங்கார்) இதனை மறுத்து பாரதியை ‘வேதாந்த சிமி’ழுக்குள் அடைக்க வேண்டாம் அது அவரது தேசபக்திக்கு இழுக்கு என்று வாதிட்டார்.

உண்மையில் இவை மூன்றும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை அல்ல. எதனால் இப்படி ஒரு விவாதம் எழுந்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை. பாரதி ஒரு சிறந்த தேசபக்தர் என்பதற்கும் அவர் ஒரு மகாகவி என்பதற்கும் ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் பரவலாக உலகமே அறிந்த ஒன்று. அவர் பாடல்களில் வேதாந்தக் கருத்துக்கள் பரவிக்கிடந்தனவா? ஒரு சிறிய அலசல்.

முதலில் வேதாந்தம் எ்பது என்ன? அது என்ன கூறுகிறது?. வேதத்தின் முதல் பகுதி மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் செயல்களைப்பற்றிக் கூறுகிறது. வேதத்தின் இறுதிப்பகுதி (அந்தம்) அதாவது வேதாந்தம் நிலையான இன்பத்தை எவ்வாறு அடைவது என்பதை விளக்குகின்றது. வேதத்தின் இறுதிப்பகுதிகள் உபநிடதங்களால் ஆனவை. ஒவ்வொரு மனிதனும் தம் நிலைக்கு/ செயல்களுக்கு ஏற்றவாறு துன்பத்தை அனுபவிக்கின்றான். ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும் வேறு வேறு காரணங்கள். ஆனால் இவ்வனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படையான ஒரு காரணம் உள்ளது. இதையறிந்து கொண்டால் துன்பமே இல்லாமல் நிலையான இன்பத்துடன் வாழ்வைவாழமுடியும் என்று வேதாந்தம் கூறுகிறது. “உன்னை நீ அறிந்து கொள். நீயே இறைவன் என்று அறிந்து கொள். நீ அறிவின் உருவம், ஆனந்தத்தின் உருவம். நீ என்றும் நிலையானவன்” என்பதுதான் மையக்கருத்து. “நீ, இந்த உடல், மனம் மற்றும் உலகத்திலிருந்து வேறுபட்டவன். இந்த ஞானம் வந்துவிட்டால் நீ துன்பமற்ற நிலையை அடைவாய்” என்று வேதாந்தம் கூறுகிறது,

பாரதி ஏராளமான பாடல்களில் இவைகளைத் தெளிவாக விளக்குகின்றார்.

அறிவே தெய்வம் என்னும் அருமையான பாடலைக் காணுங்கள். அனைத்து உபநிடதங்களும், நீ அறிவின் சொரூபம், இதனை அறிவாய், இறைவன் என்று இயம்மப்படுவது அறிவையே. நாம் அனைவருமே இறைவனின் பிரதி பிம்பங்கள், நாம ரூபம் தான் வேறு. நிலையான இன்பத்துடன் இங்கு வாழ்வதுதான் வீடுபேறு என்று கூறுகிறார் பாரதி.

“ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி

அலையு மறிவிலிகாள்- பல்

லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுன்

டாமெனல் எனல் கேளிரோ ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயங்கு மதியிலிகாள் — எத

னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்

றோதி யறியீரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்

சுருதிகள் கேளிரோ? — பல

பித்த மதங்களி லேதடு மாறிப்

பெருமை யழிவீரோ?

நாமம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று

நான்மறை கூறிடுமே — ஆங்கோர்

நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்

நான்மறை கண்டிலதே.

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று

காட்டு மறைகளெலாம் — நீவிர்

அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்

கவங்கள் புரிவீரோ?

உள்ளத னைத்திலு முள்ளொளி யாகி

யொளிர்ந்திடு மான்மாவே — இங்குக்

கொள்ளற் கரிய பிரமமென் றேமறை

கூவுதல் கேளீரோ?

ஒன்றுபிரம முளதுண்மை ய்ஃதுன்

உணர்வெனும் வேதமெலாம் — என்றும்

ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்

உணர்வெனக் கொள்வாயே”

இந்தப் பாடல் ஒன்றே, வேதத்தின் சாரத்தை முழுவதுமாக தெள்ளென விளக்குகிறது

மற்றும் ஒரு பாடல்

“எத்தனை கோடி யின்பம் வைத்தாய் — எங்கள்

இறைவா ! இறைவா ! இறைவா ! (ஓ -எத்தனை)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் — அங்கு

சேருமைம் பூதத்து வியனுலக கமைத்தாய்.

அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய

மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்.”

சித்தினை அசித்துடன் இணைத்தாய் என்பது அறிவைப் ஐடப்பொருளுடன் ஒன்று சேர்த்தாய் என்பது வேதாந்தம் வலியுறுத்தும் கருத்து.

அதே போல் காளியைப்பாடும் போதும்

“பூத மைந்து மானாய் — காளி

பொறிக ளைந்து மானாய்

போத மாகி நின்றாய் — காளி

பொறியை விஞ்சி நின்றாய்”

என்று பிரமமே (இறைநிலை) பூதங்களாகவும் பொறிகளாகவும் எல்லாமாக உள்ளது என்று விளக்குகின்றார்.

நவராத்திரிப்பாட்டில் பராசக்தியைப்பாடும் போதும் “காணுகின்ற காட்சியாய், காண்பதெல்லாம் காட்டுவதாய்” என்று பார்க்கப்படுகின்ற தோற்றங்களாகவும் அந்தத் தோற்றங்களையெல்லாம் காணச்செய்கின்ற அறிவாளியாகவும் நீ உள்ளாய் என்று கூறுகின்றார்

பாரதியின் வேதாந்த கருத்துக்கள் ஏராளமான பாடல்களில் பரவிக்கிடக்கின்றன. அவை அனைத்து வழங்க காலமும் இடமும் இல்லை. பாரதி வேதங்களை நன்கு கற்றுணர்ந்து அவற்றின் சாரத்தை எளிய தமிழில் விளக்கியவர். சிறந்த தேசபக்தர் மட்டுமல்ல மிகச்சிறந்த வேதாந்தி என்றுமே கொள்ள வேண்டும்.