பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவிட்ட பெற்றோர் மீது வழக்கு போட்ட இளம்பெண்!!

உலக அளவில் மக்களிடையே பெரும் வரவேற்பையும் முதன்மையான சமூக வலைத்தளமாகவும் பேஸ்புக் திகழ்ந்து வருகிறது.

இதில், பெரும்பாலான மக்கள் தங்களது கணக்கில் அவர்களுடைய மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் புகைப்படங்களையும் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சில பெற்றோர்கள் தங்களின் செல்லக் குழந்தைகளின் சிறுவயது புகைப்படங்களையும் பதிவேற்றி மகிழ்கின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் தனது புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட பெற்றோர் மீது வழக்குத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுளளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், ‘என்னுடைய அனுமதியின்றி சுமார் 500 புகைப்படங்களை பேஸ்புக்கில் எனது பெற்றோர் பதிவிட்டுள்ளனர். சிறுவயதிலிருந்து நான் செய்த ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்துள்ளனர்.

இந்த பதிவு எனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் பாதித்துவிட்டது. ஆனால் என்னுடைய பெற்றோர்கள் இதை அலட்சியமாக கருதுகிறார்கள். இதனால்தான் நான் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், அந்த பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பு வருமேயானால் அவரது பெற்றோர் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.