ஆமினாட ஊட்டு தேத்தண்ணி- சம்மாந்துறையில் தேனீரின் ஒரு கசப்பான ஆரம்பம்

2013–12–10

வழக்கம் போல அண்றைக்கும் விட்ட விடியல்ல எழும்பிட்டா ஆமினா. வயலுக்கு போற புருஷனுக்கு சோத்து முடிச்சையும் கட்டி கொடுத்துப் போட்டு, வளவு வாசலெல்லாம் கூட்டி துப்பரவாக்கிப்பொட்டு. ஊட்டப் பூட்டி திறப்ப விறாந்தை கூரையில சொருகிவிட்டு , பொழுதெழும்புறதுக்கு முன்னுக்குக்கே புறப்பட்டுட்டா.

ஆமினாவின் பக்கத்து வீட்டுக்காரி சல்மா.

‘சல்மா, சல்மா, …… கா அவரு வந்தா போடியார் பொண்டி நெல்லுக்குத்த விசகிளம் அனுப்பினயாம். போய்வாரன் என்டு சொல்லு’’ என்று கூறிக்கொண்டே நடையை துவக்கினாள்.

இன்றைக்கும் முஸ்லிம் கிராமங்களிலே பெண்கள் எங்காவது செல்லும் போது காவுடன் செல்வது ஒரு தவிர்க்க முடியாத மரபாகிவிட்டது.

ஆமினாவும் தனது வளவில் பறித்த மரக்கறிகளுடன் விரைந்து கொண்டிருந்தாள். செருப்பணியாத கால்கள் என்றாலும் இந்தப் முரட்டுப் பாதை அவளுக்குப் பழக்கமானதுதான். போடியார் வீட்டையும் அடைந்து விட்டாள். ‘லாத்தா லாத்தா’ என்று இரு முறை அழைப்பதற்குள் போடியாரின் மனைவி நாச்சியாவும் வந்துவிட்டார்.

ஆமினாவை கண்டதும் ‘ஆமினா நீ சரியான வேலகாறிதாண்டி விட்ட விடியல்லயே வந்துட்டியே, சரி பாயில இரி வட்டாவ எடுத்துக்கு வாரன்’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்.

நாச்சியா உம்மா போடியாரின் மனைவி என்ற கர்வம் இல்லாதவர். எல்லோருடனும் சகஜமாய் பழகக்கூடியவர். வட்டாவை எடுத்து கொண்டு வந்து வைத்து விட்டு, ‘ஆமினா இண்டைக்கு நெல்லுக் குத்துறல்ல, இப்பதான் போடியாரு கொழும்புக்கு போய்வந்த, கோச்சி பழுதாம் அதால சுணங்கிட்டாம். தம்பி கூட்டு வண்டில் கொண்டு போய்த்தான் சாமான் எல்லாம் எடுத்துக்கு வந்த’ என்று சொன்னதும். ஆமினா ‘அப்ப சரி லாத்தா நாளைக்கு வாரன்’ என்று எழும்ப தொடங்கினாள். ‘கொஞ்சம் பொறு ஒரு சாமான் எடுத்துக்கிட்டு வாரன்” என்று உள்ளே சென்றார் போடியாரின் மனைவி. சற்று தாமதித்தே வெளியே வந்தார்

கையில கொண்டு வந்த குவளையை ஆமினாவிடம் நீட்டி ‘இந்தா ஆமினா இத குடிச்சிப்பாரு’ என்று குவளையை ஆமினாவிடம் கொடுத்தார்;. அதை வாங்கிக் கொண்ட அவள்‘ என்ன லாத்தா இது பன்னுக்கு காய்ச்சின சாயத்தப்போல இருக்கு’ என்றாள். போடியாரின் மனைவி சிரித்துக் கொண்டே‘இல்ல புள்ள இதுதான் தேயிலத்தண்ணியாம், போடியாரு கொழும்புல இருந்து வாங்கிட்டு வந்தது’ என்றதும், சந்தேகம் தீராததவளாய் அது என்ன லாத்தா அது போயில தண்ணின்டா என்றாள்’ ஆமினா.

‘ வெள்ளக்காரனுகள் குடிக்கிறதாம், நம்மட மல்லித்தண்ணிய போலதாண்டி தேயில தூளில காய்ச்சுறது’ என்று சொல்லிக்கொண்டே ஒரு கடதாசியில் ஒரு சுறங்கை தூளை எடுத்து வந்து கொடுத்தார். ‘இத ஊட்ட கொண்டு போய் புள்ளையளுக்கு காய்ச்சிக் கொடு” என்று கூறிவிட்டு எப்படி காய்ச்சுவது என்றும்சொல்லிக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்ட ஆமினா கையில் தேயிலைத்தூளுடன் வேகமாக நடந்து வந்தாள்.

வீடு வந்ததும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு. குழந்தம்மாவின் வீட்டு வாசலிற்கு சென்று விட்டாள் அதுதான் அந்த அல்லசவட்டையிலுள்ள பெண்கள் கூடும் இடம். ஆமினாதான் இன்று புதினம் கொண்டு வந்திருப்பவள். வந்தது முதல் போடியார்ர ஊட்டு தேயிலத்தண்ணியை பற்றியே வர்ணித்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் ஆமினாவையெ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்………..

அஸராகிவிட்டது………………..

இஸ்மாயீலும் வயலிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டான். தனது வீட்டு வாசலில் பெண்கள் கூட்டம். வீட்டுக்குள் சென்றவன் ஆமினாவை கூப்பிட்டு ‘ என்ன புள்ள குழந்தஉம்மாட கூட்டம் இஞ்ச நடக்குதா?’ என்றான். ‘அது இல்ல,…..’ என்று தொடங்கியவள் தேயிலத்தண்ணி குடித்த கதையையும், தேயிலைத்தூள் கொண்டு வந்ததையும் தான் வரும்வரைதான் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினாள். இஸ்மாயீல் சிரித்துக் கொண்டே ‘நான் மேல் கை கழுவிக்கிட்டு வாறன் நீங்க காய்சுங்க” என்று கிணற்றடிக்கு சென்று விட்டான்.

ஆமினாவின் வாசலில் அடுப்பு மூட்டப்பட்டது. எல்லாப் பெண்களும் அடுப்பைச் சுற்றி விட்டனர். சிறுவர்களும் முழங்காலில் முழங்கையை குத்திக்கொண்டு அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பானையில் நீர் கொதித்துக் கொண்டிருந்தது, ஆமினா முழுத் தேயிலைத்தூளையும் பானையினள் கொட்டி விட்டாள். தண்ணீரும் உடனே கறுத்து விட்டது. சிறிது நேரத்தின் பின்னர் அதனை வடித்து சீனியை கலந்து ஆளுக்கொரு கிளாசில் தேயிலத்தண்ணி பரிமாரப்பட்டது.எல்லோரும் வாசனையை முகர்ந்து விட்டு. ஆவலுடன் ஊதிக்கொண்டே வாயை வைத்து உறுஞ்சினர். ஒரு வாயுடனே ஆளுக்காள் முகத்தைப் பார்த்தனர்.

‘என்ன புள்ள இது கச்சிக்கசம் நீ என்னமோ அமிர்தம் மாதிரி சொன்னாய்?” என்று கூறிக்கொண்டே இஸ்மாயீல் கிளாசை கீழே வைத்தான். ஆளுக்காள் பெண்களின் கிசுகிசுப்பும் தொடங்கி விட்டது . அடுத்த வாரம் வரை ஆமினாட ஊட்டு தேத்தண்ணியைப் பற்றிய கதையே பக்கத்து வீடுகளில் எதிரொலித்தது…

ஆமினாவின் வீட்டுத் தேத்தண்ணி ஊரிற்குள் தேனீரின் ஒரு கசப்பான ஆரம்பம்தான்.

1950களின் ஆரம்பத்தில் தான் தேநீர் பல கிராமங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக இலவசமாகவும் வினியோகிக்கப்பட்டது. தேயிலை விளம்பரங்களின் பின்னர் வட்டக்கடைகளில் சுக்குத்தண்ணயின் இடத்தை தேனீர் தட்டிக் கொண்டது. தேத்தண்ணிக் கடைகளும் பிரபல்யமாகின.

“சுக்குத்தண்ணி வித்த கடக்காரனுக்கு தேத்தண்ணி வந்தாப்போல” என்ற உவமான மொழிகளும் பேசப்பட்டன மற்றும்

கூத்தாடி ஆதம்
கொலவடுவம் கட்டிருவான்
தேத்தண்ணிய தந்து — என்ன
தெகிக்க வச்சுப் போட்டாண்டி
அசறப்பா சந்தியில
ஆர்ரப்பா கடையில
போர்ரப்பா தேயிலைய
பூப்போட்ட கிளாசில

போன்ற கிராமிய கவிகளும் புழங்கத் தொடங்கின

ஆமினாட ஊட்டு தேத்தண்ணி சம்மாந்துறையில் தேனீர் அறிமுகமாகிய ஒரு சம்பவத்தை தழுவிய கற்பனைக் கதையாகும். இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் புனையப்படவில்லை.

சாக்கீர்

A single golf clap? Or a long standing ovation?

By clapping more or less, you can signal to us which stories really stand out.