குரலரசி

என் காதோடு , நீ கிசுகிசுத்த நேரம் .
காற்று , போர்வை கேட்டு வந்தது காரிருளில் .

நீ வைத்து செல்லும் வார்த்தைகளைச் சுற்றி ,
ராணி, மந்திரி என ரீங்காரத் தேனீப்படை .

கொஞ்சம் உறக்கத்தில் நீ பேசிட , நான் கிறக்கத்தில் ரசித்திட ,
மஞ்சம் அது தூளியாய் மாறும் .

கன்னத்தில் வழியும் உன் கண்ணீருக்கு அடியில் ,
மொழி, மௌனமாய் நின்றது .

உன் கோபச்சொற்களைத் தொட்டு,
விரலைச் சுட்டுக்கொண்டது ஏழிசை .

மடியில் துயில்கொள்ளும் சேயாய் .
மாரோடு அணைக்கும் தாயாய் .
முத்தத்தில் என்னை கரைக்கும் காதலியாய் .
எத்தனை குரலில் தந்திடுவாய் ?
உன்னையே எனக்கு !