ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா?

ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் நிற்க முடியுமா?
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வாவின் சர்ச்சைக்குரிய கருத்தும் அதுபற்றிய அவதானிப்புகளும்.

  • என்.கே.அஷோக்பரன்

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படலாம், அரசியலமைப்பின் 18ம் சீர்திருத்தத்தின் விளைவாக மூன்றாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஊகங்கள் அண்மைக்காலமாக பரவலாக எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், அவ்வாறு மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதியை சட்டரீதியாக இழந்துவிட்டார் என்ற கருத்தை சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் வாயிலாகவும், அதன் பின்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு எழுதிய கட்டுரையின் வாயிலாகவும் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா தெரிவித்திருக்கிறார். இது சட்ட, அரசியல் வட்டாரங்களில் புதிய வாதப்பொருளொன்றைத் தோற்றுவித்திருக்கிறது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வாவினது வாதமானது பின்வரும் வகையில் அமைகிறது. இலங்கை அரசியலமைப்பின் 31 (2) பிரிவானது, மக்களால் 2 தடவைகள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நபரும், அதன்பின்னர் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி அற்றவர் என்று கூறுகின்றது. ஆகவே இரண்டாந்தடவையாக மக்களால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினத்தன்றே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகும் தகுதியை இழந்துவிட்டார். ஆனால் இந்த 31 (2) பிரிவானது, அரசியலமைப்பிற்குச் செய்யப்பட்ட 18வது திருத்தத்தின் 2ம் சரத்து மூலம் நீக்கப்பட்டுவிட்டது, ஆனால் சரத் நந்த சில்வாவின் கருத்தின்படி 18வது சீர்திருத்தமானது 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் திகதியே வலுடையதாகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி தெரிவு செய்யப்பட்டார், ஆதலின் 18 சீர்திருத்தம் வலுப்பெற ஏறத்தாழ 7 மாதங்கள் முன்பே அவர் மீண்டும் ஜனாதிபதியாகும் தகுதியை இழந்துவிட்டார். 18ம் சீர்திருத்தம் என்பது 2010 செப்டம்பர் 09ம் திகதிக்கு பின்பே வலிதானதன்றி அதற்கு முந்தையவற்றிற்கு அல்ல என்பதே சரத் நந்த சில்வாவினுடைய வாதத்தின் சுருக்கம்.

சரத் நந்த சில்வாவின் இந்த வாதத்தின் உயிர்நாடி “18ம் சீர்திருதத்தின் இரண்டாவது சரத்து முன்மேவு பலன் கொண்டதா?” என்ற கேவியாகும். அதாவது 18ம் சீர்திருத்தமானது கடந்தகாலத்திலிருந்து செல்லுபடியாகும் விதியா? ஏனெனில் 18ம் சீர்திருத்தமானது கடந்தகாலத்திலிருந்து செல்லுபடியாகும் எனில் ஜனாதிபதி மகிந்த ராஜபஷ மூன்றாவது தடவை போட்டியிடுவதற்கு எந்தத் தடையுமில்லை ஆனால் சரத் நந்த சில்வாவின் வாதத்தின்படி 18ம் சீர்திருத்தம் என்பது முன்மேவு பலனுடையதல்ல என்கிறார். இலங்கை அரசியலமைப்பின் 75ம் சரத்தின்படி முன்மேவிய பலனுடைய சட்டங்களை இயற்றும் அதிகாரம் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு உண்டு எனினும் 80 (1) சரத்தின் படி பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டம், சபாநாயகரால் உறுதிப்படுத்தப்படும் தினத்திலிருந்தே வலிதுடையதாகிறது ஆகவே முன்மேவிய பலனுடைய சட்டமொன்றை இயற்றுவதாயின் அது எந்த முந்திய திகதியிலிருந்து வலிதுடையதாகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டும், அப்படி இல்லையென்றால் அது சபாநாயகர் உறுதிப்படுத்திய திகதியிலிருந்தே வலிதுடையதாகும் என்கிறார் சரத் நந்த சில்வா.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2010ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி இரண்டாந்தடவையாக மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டவுடனேயே அப்போது வலுவிலிருந்த அரசியலமைப்பின் 31 (2) பிரிவின் படி மீண்டும் ஜனாதிபதியாகும் தகுதியை இழந்துவிட்டார். ஒருவேளை 18ம் சீர்திருத்தத்தில் 2010 ஜனவரி 27ம் திகதிக்கு முன்னைய திகதியொன்றிலிருந்து இத்திருத்தம் வலிதுடையதாகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்குமேயாயின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும், ஆனால் 18ம் சீர்திருத்தத்தில் அவ்வாறொரு ஏற்பாடு இல்லை ஆதலால் அது முன்மேவிய பலனற்றதாகிறது ஆகவே அவர் மீண்டும் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டார் என்கிறார் சரத் நந்த சில்வா.

முன்னாள் பிரதம நீதியரசருடைய வாதம் ஏற்புடையதாக இருப்பினும், அவரது வாதத்தின் உயிர்நாடி சட்டப் பொருள்கோடலிலேயே தங்கியிருக்கிறது. 18ம் சீர்திருத்தம் அல்லது 18ம் சீர்திருத்தத்தின் இரண்டாவது சரத்து முன்மேவிய பலனுடையது எனது உயர் நீதிமன்றினால் பொருள்கொள்ளப்படுமாயின் சரத் நந்த சில்வாவினுடைய வாதம் உயிரிழந்துவிடும். ஒருவேளை சரத் நந்த சில்வாவினுடைய வாததத்தின்படியே 18ம் சீர்திருத்தம் முன்மேவிய பலனற்றது என உயர் நீதிமன்றம் பொருள் கொள்ளுமாயின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுடன் 2016 நவம்பர் மாதம் வரை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவும் முடியாது.

சரத் நந்த சில்வாவினுடைய இந்தக் கருத்து அரசியல், சட்ட வட்டாரங்களில் புதிய வாதப்பொருளொன்றை தோற்றுவித்திருக்கிறது. இதுபற்றி பலரும் பலவிதக் கருத்துக்களையும் தெரிவித்துவருகிறார்கள். சட்டப் பொருள்கோடல் என்பது மிகச் சிக்கலானதும், சவாலானதுமான ஒரு விடயமாகும். இலங்கைப் பொருள்கோடல் அரசகட்டளைச் சட்டத்தின் 6(3)(b) பிரிவானது சட்டமொன்று திருத்தப்படும்போதோ, நீக்கப்படும்போதோ, அது வௌிப்படையாகக் குறிப்பிட்டாலன்றி, முன்பிருந்த சட்டத்தின் விளைவாக உருவாகிய குற்றம், ஏற்பட்ட உரிமை அல்லது சுதந்திரம், விதிக்கப்பட்ட தண்டம் என்பவற்றைப் பாதிக்காது என்கிறது. இதன்படி 18ம் சீர்திருத்தமானது (அது வௌிப்படையாக முன்மேவு பலனை வழங்காததால்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தகுதியிழப்பைப் பாதிக்காது என வாதிடலாம். ஆனால் சந்திரப்பிரேம, ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதிய வாதமும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். ஒருவர் இருதடவை ஜனாதிபதியானதும், மூன்றாவது முறை ஜனாதிபதியாகும் தகுதியை இழக்கிறார் என்பதை ஒரு தண்டமாகப் பொருள் கொள்ள முடியாது என்பதே அவரது வாதம் (நிச்சயமாக இது ஒரு குற்றமோ, உரிமையோ, சுதந்திரமோ அல்ல). ஆக பொருள் கோடலின் அடிப்படையிலமையும் இந்த வாதங்கள் சிக்கலானவை என்பதுடன் சர்வநிச்சயமற்றவையுங்கூட. இது ஒரு சிக்கலான பிரச்சினை என்றே இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுபற்றி ஆங்கிலப்பத்திரிகையொன்றில் எழுதியுள்ள சோமபால குணதீர, இது பொருள்கோடல் பற்றிய பிரச்சினை ஆகவே இதனுடைய வாதப்பிரதிவாதங்கள் எல்லையற்று சென்றுகொண்டேயிருக்கக்கூடியவை. இவற்றில் இருதரப்புக்கும் ஏற்ற காத்திரமான வாதங்கள் இருக்கிறது என்கிறார்.

மேலும் இது பற்றி முன்னாள் அமைச்சர் பட்டி வீரக்கோனினுடைய கருத்தும் கவனிக்கத்தக்கது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையிருக்கும் வரை அவரால் வேண்டியதொரு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முடியும். இன்னொரு திருத்தத்தினைக் கொண்டுவருவதனுுடாக அவரால் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவும் முடியும். இப்படிச் செய்வது சரி அல்லது பிழை என்ற விடயம் ஒருபுறமிருக்க, இதனை இந்த ஜனாதிபதியால் செய்யமுடியும் என்பதுதான் நிதர்சனம் என்கிறார் பட்டி வீரக்கோன்.

இந்தச் சர்ச்சையை வெறும் சட்டத்தின் கண்கொண்டு பார்ப்பது மட்டும் பயன்தராது. இது ஒரு அரசியல் பிரச்சினையுங் கூட. “ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” வழக்கிலிருந்து அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை அன்றைய பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா தலைமையிலான உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிதாகவும், வெற்றி பெறக்கூடியதாகவும் இருந்ததற்கு அடிப்படை. மேலும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் பதவிக்காலம் பற்றிய வழக்கில் அன்றைய பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா தலைமையிலான உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே ஜனாதிபதி சந்திரிக்கா எதிர்பார்த்ததைவிட ஒரு வருடம் முன்பு பதவிக்காலம் முடிவடையக் காரணம். இந்தப் பின்புலங்களை வைத்தும், ஜாதிக ஹெல உறுமயவின் ரத்தன தேரர் ஏற்றுக்கொண்டதன்படி இன்று சரத் நந்த சில்வா ஒரு அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை தயாரித்துக்கொண்டிருக்கும் நிதர்சனத்தை வைத்தும் இப்பிரச்சினை பார்க்கப்பட வேண்டியிதாயிருக்கிறது.

இது வெறுமனே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மட்டும் பாதிக்கவில்லை மாறாக அண்மைக்காலத்தில் பொது வேட்பாளராக வரக்கூடியவர் என்று கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவையும் பாதிக்கிறது. சரத் நந்த சில்வாவின் வாதப்படி பார்த்தால் சந்திரிக்காவும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டார். மேலும் சரத் நந்த சில்வா 2016 நவம்பர் வரை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட முடியாது, அப்படிச் செய்தால் தானே நீதிமன்றுக்குச் சென்று அதற்கெதிராக வாதாடுவேன் என்கிறார். அப்படியானால், அடுத்த வருட முற்பகுதியில் வரக்கூடும் என எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தலை 2016 இறுதிக்கு பிற்போடும் நடவடிக்கைக்கான முஸ்தீபா இது எனும் ஐயமும் பலரால் எழுப்பப்பட்டிருக்கிறது.

இதைவெறும் சட்டப்பிரச்சினையாக மட்டும் அணுகாமல், இதன் பின்னனியிலுள்ள அரசியலையும் தேடிப்புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அன்று அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்துவந்த பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா 18 சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும், அதன் பின்பும் இது பற்றி எதுவுமே பேசவில்லை, மாறாக இன்று ஏறத்தாழ நான்கு வருடங்களின் பின்பே இந்தக் கருத்தை முன்வைக்கிறார். மேலும் பாராளுமன்றத் தேர்தல் முதலில் வருவதே உசிதமானது என்றும், அது பாராளுமன்றத்திற்கு பலத்தை அளிக்கும் என்றும் தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.

எதிர்க்கட்சிகள் வெறுமனே இந்தத் வாதத்தின் வலைக்குள் விழுந்து சிக்குறாமல், இதன் பின்னணியை ஆழச் சிந்தித்து நடப்பதே சிறந்தது.

**

இந்தக் கட்டுரை 14–09–2014 ஞாயிற்றுக்கிழமை சுடர்ஒளிப் பத்திரிகையில் பிரசுரமானது.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.