இவிங்கல்லாம் நமக்கு தலைவர்கள்

“இவிங்கல்லாம் நமக்கு தலைவர்கள், இவிங்களை வச்சிக்கிட்டுத்தான் நாங்க உரிமைகளைப் பெறப்போகிறோம் “

சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு காட்சி வரும் அதில்பெரிய மனுஷன் தோரணையில் இருக்கும் இரண்டு திருடர்களைப்பார்த்து விவேக் இன் ஒரு வசனம் “இவிங்கல்லாம் நமக்கு ரிலேஷன்சு , இவிங்கள வச்சிக்கிட்டுத்தான் கல்யாணம் பண்ணப்போறம் “ என்ற மாதிரி இருக்கும் . இப்போ ஏன் இதை சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா ?

இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் ஊரில் டெலோ இயக்கத்தின் ஒரு கேம்ப் இருந்தது, இந்தியா அவர்களது தற்பாதுகாப்புக்கு (??) கொடுத்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு தங்களைப் பாதுகாத்தார்களா இல்லையா தெரியாது, அப்பாவி பொதுமக்களை இயன்றவரைக்கும் துன்புறுத்தினார்கள் அதிலே மிகவும் பிரபல்யமானவர் “மாமா” என்று செல்லமாக ?? அழைக்கப்பட்ட ஒருவர் சொந்தப்பெயர் எல்லாம் ஞாபகமில்லை, அவர் ஆடிய ஆட்டத்திற்கு அளவேயில்லை, அவர் பெயரைக்கேட்டால் ஊரே அதிரும் . பனை மட்டை அடிக்கு பெயர்போனவர் , ஒரு குடும்பத்தில் யாராவது புலிகள் இயக்கத்தில் இருந்தால் அந்தக்குடும்பத்தையே கொண்டு போய் வெளுத்துவாங்குவதில் வல்லவர் . அனேகமாக அவருக்கு சாபம் போடாத வீடே இல்லை எனலாம் . இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா என்று சனமெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் பிரேமதாச ஜனாதிபதியாகி இந்திய ராணுவம் வெளியேறியதும், புலிகள் இவர்களை வேட்டையாட ஆரம்பித்ததும் நடந்தது அன்று ஓடியவர்(கள்) தான் இப்போது எங்கே “மாமா” வாக இருக்கிறாரோ தெரியவில்லை.
அது போக அவரது இந்த ஆட்டத்திற்கெல்லாம் மிக முக்கிய காரணமாகவும் பின்புலமாகவும் இருந்தது அவரது அண்ணன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற ஒரு விடயம்தான்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு உள்ள ஒரு பழக்கம் த.வி கூட்டணி , தமிழரசுக்கட்சி இந்த இரண்டு கட்சி சின்னத்தைத் தவிர வேற எதுவுமே கண்ணுக்குப்படாது , எவ்வளவு பெரிய மகான் வந்து வேறு சின்னத்தில் கேட்டாலும் கணக்கிலேயே எடுக்கமாட்டார்கள் , தமிழரசுக்கட்சி / தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு வாக்குப்போட்ட கை வேற எதுக்கும் போடாது என்று பலர் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள் .
மக்களின் இந்த வீக்னெஸ் ஐ பயன்படுத்திக்கொண்டு, மட்டக்களப்பின் புவியியலே தெரியாத மகிந்தவின் அல்லக்கைகள் எல்லாம் எங்க தாத்தா தமிழரசுக்கட்சி , எங்க அப்பன் தமிழரசுக்கட்சி என்று சொல்லிக்கொண்டு மக்களுக்கு சேவை ? செய்ய ஊருக்குள் வருவதும் அவர்களை தமிழரசுக்கட்சியினரே மாலை மரியாதையுடன் வரவேற்பதும் நடக்கும் கூத்துக்கள்தான்.

அப்படித்தான் இப்போது த தே கூட்டமைப்பும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கவனத்திலேயே எடுக்காது , வீட்டுச்சின்னத்தில் எந்தக் கழுதையை நிப்பாட்டுனாலும் வெல்லலாம் என்கிற நினைப்பில், எம் பி என்கிற பதவியை மட்டும் வைத்துக்கொண்டு தங்களை மட்டுமே வளர்த்துக்கொண்டு , ஏதாவது விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் , சில ஏழை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களையும் , கோயில்களுக்கு ஏதாவது சிறு உதவிகளையும் செய்துவிட்டு யாராவது இளிச்சவாயன் கிடைத்தால் (அவர்களின் நினைப்பு எல்லாருமே இளிச்சவாயன் என்றுதான் ) வாய்கிழிய தமிழ்த் தேசியம் பற்றி சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருந்தவர்களையும் இனியும் இருக்கப்போகின்றவர்களையும் தேர்தலில் நிப்பாட்டியிருக்கிறார்கள் , இங்கே மேலே சொன்ன அனைத்தும் ஒரு உள்ளூராட்சி உறுப்பினரோ மாகாணசபை உறுப்பினரோ செய்யவேண்டிய விடயங்கள். இவர்கள் ஒழுங்காக இருந்திருந்தால் வெட்டியாக இருக்கின்ற நேரத்தில் , (முழுநேரமும் ) ஊர் ஊராக சென்று மக்களை, அந்த ஊரிலே இருக்கும் தலைவர்கள், படித்தவர்களைச் சந்தித்து சிறு கருத்தரங்குகள் நடாத்தி தங்களது கொள்கைகளையும் விளக்கங்களையும் கொடுத்திருக்கலாம், மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்று அறிந்திருக்கலாம், அவர்களது ஆலோசனைகளைப் பெற்றிருக்கலாம் அது ஒன்றுமே செய்யாது அந்தச்சின்னமும், புலிகள் தங்களையே கை காட்டியிருக்கிறார்கள் என்ற நினைப்பிலும் இருக்கிறார்கள் , இப்படியே போனால் ஏதாவது ஒரு மாற்றம் ஒன்றை மக்கள் தேடிப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இங்கே இவர்கள் அமைச்சுப்பதவியை எடுத்துக்கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை , பல இளைஞர்கள் அப்படிச்சொன்னாலும் எனக்கு அதில் முற்றாக உடன்பாடில்லை , அப்படியென்றால் இவ்வளவு கஷ்டம் , இவ்வளவு அழிவையும் பார்த்துக்கொண்டு மக்கள் புலிகளை விரும்பமாட்டார்கள் . நீங்கள் சர்வதேச உதவியோடு உரிமைகளை கேட்கப்போகின்றீர்கள் என்றால் அதற்கு உரிய ஆளுமையுடைய ஆட்களை நிறுத்தியிருக்கலாம் சும்மா அப்பாவி மக்களிடம் மட்டும் வீரம் பேசுபவர்களை திரும்பவும் நிறுத்தியிருக்கவேண்டியதில்லை . இது இங்கே நிற்க.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் இந்தியாவோடு ஒட்டிக்கொண்டிருந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியோடு சேர்ந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டி போட்டன , அந்தச்சின்னம் இல்லாவிட்டால் தங்களுக்கு ஒன்றும் கிடைக்காதென்று தெரியும், ஆனாலும் விருப்பு வாக்குகள் தங்களுக்கே போடவேண்டும் என்று மக்களை மிரட்டினார்கள் , அப்படி த வி கூட்டணிக்கு வாக்குப்போட்டார்கள் என்று கொஞ்சப்பேரை கேம்புக்கு கொண்டுபோய் அடி கொடுத்ததிலும் நான் மேலே சொன்ன மாமா அவர்கள்தான் முன்னணியில் இருந்தார், அப்படி மக்களை மிரட்டி உருட்டி, மக்களுக்கு சேவை? செய்ய எம் பி ஆகி , பிறகு மக்களாவது மண்ணாங்கட்டியாவது என்று நாட்டைவிட்டு ஓடி , இப்போது திரும்பி வந்து மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று த தே கூட்டமைப்பில் போட்டிபோடும் ஜனா அவர்கள் தான் அந்த மாமாவின் அண்ணன் .

திரும்ப முதலில் இருந்து படிக்கவும்