அறிவாளிகள்

இன்று ஒரு சகா’வின் ரின்யூவல் வேலைக்காக பெங்களூரு சிவாஜிநகர் அருகில் உள்ள அமேரிக்கா விசா application & Collection center வரை சென்றிருந்தேன். இரண்டாம் மாடியில் உள்ள அந்த அலுவலகத்தி்ன் லாபியை அடைந்ததும், ஒரு ஓரமாக, எதிர்தரப்பில் அமைந்திருந்த matrix sym/forex cardsன் சேல்ஸ் லவுஞ் நன்றாக தெரியும் இடமாக, ஒரு பொசிசனை அடைந்து, நின்றுகொண்டேன், சகா அவர் வேலையை பார்க்க உள்ளே சென்றுவிட்டார்.

விசா அலுவலகத்தில் பெரும் செக்யூரிட்டி ப்ராசஸ் எல்லாம் வைத்திருப்பார்கள் போல, விசா குத்திய பாஸ்போர்ட்டை வாங்கவந்தவர்கள், கையில்/தோளில் லேப்டாப்போடு உள்ளே வரக்கூடாது என்று சட்டம் வைத்திருக்கிறார்கள். வந்தவர்கள் பலரும் டப்பர்வேர் தூக்குபோசியும் தோளில்மாட்டிய மடிப்பொட்டியுமாகவே இருந்தார்கள். ஜோடியாய் வந்தவர்கள், ஒருவருக்கொருவர் பொட்டிக்கு காவல்முறை வைத்து உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள்.

நான் ஒரு மாதிரி matrix salesக்கார பதுமைக்கு நேர்கோட்டில் செட்டில் ஆகிக்கொண்டிருந்த பொழுது (டக்கின் செய்த டைட்சர்ட்டும், பாண்ட்டும் அருமையான உடைத்தேர்வு), வருசக்கணக்கில் வேலைசெய்தால், வருசத்துக்கு ஏற்றவாரு வண்ணவண்ண கழுத்துபட்டை தருவார்களே, அதில் சிவப்பு பட்டையை அணிந்த ஒருவர் தனக்குதானாக ‘no cloak room also, what to do?’ என புலம்பிக்கொண்டிருந்தார். நான் கொஞ்சம் பிசியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாலும், வாலண்டியராக சென்று உதவி செய்யாதே என்றமாபெரும் படிப்பினையை பலகாலமாக கற்று தெளிந்து இருந்ததாலும், அமைதியாக என் கடன் பதுமைநோக்குதல் மட்டுமே என்று நின்றுவிட்டேன்.

பொட்டிப்பையை தோளில் இருந்து கழட்டி கீழே வைத்தார், என்னைபார்த்தார், ஒன்றும் சொல்லவில்லை, மீண்டும் தோளில்மாட்டிவிட்டு மொபைலை நோண்ட ஆரம்பித்துவிட்டார். கீழே வைத்துவிட்டு கொஞ்சம் நகர்ந்தால் நான் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவேன் என்று தான் நினைத்திருப்பார் ☺ நான் வேறு வழக்கம் போல, சீவாத தலையும், கருப்புமுண்டா பனியனும், கசகச அழுக்கு ஜீன்சும், ஸ்நீக்கருமாக இருந்தேன்.. அந்தகோலத்தில் நான் ’அசல் பிக்பாக்கெட்க்காரன் போல இருப்பதாக’ என் வூட்டம்மிணி வீட்டில் குட்டிபுள்ளைக்கு சொல்லிக்கொடுத்திருப்பது, எனக்கும் சாடைமாடையாக தெரியும் தான்.

ஒரு 10 நிமிடம் கழித்து கொஞ்சம் முன் நெற்றி வழுக்கையுடன், நல்ல செவப்பாக, சாயம்போன கலரில் சட்டையுமாக ஜம்மென்று ஒருவர் வந்தார், பார்த்தாலே செம posh.. அவர் தோளிலும் பொட்டி. அவரையும் அவர்கள் உள்ளே விடவில்லை. வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தவர், நம் டப்பர்வேருடன் நிற்கும் நண்பரை பார்த்ததும், இன்னொருவரும் பொட்டியோடு நிற்பதை கண்டுகொண்டு், என் பொட்டியை பார்த்துக்கோங்க, நான் உள்ளே போயிட்டு வந்துடறேன், அப்புறம் நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்னு ஸேநேகமாக ராஷ்ட்ரபாஷாவில் டீல்பேசி போட்டிப்பையை அவர் பொறுப்பில் வைத்துவிட்டு உள்ளே சென்றார். சென்றவர் ஒரு 15 நிமிடத்தில் வெளியே வந்தார், வந்த வேகத்தில் தன் பொட்டிப்பையை தூக்கிக்கொண்டு, few mins, i have to take a photo copy, i missed to bring என்று சொல்லிவிட்டு படபடப்போடு விறுவிறுவென லிஃப்டை நோக்கி நடந்தார்.

இதற்கு இடையில் அந்த பதுமை என்னை நெருங்கி which country are you going to travel என்று சிம்கார்ட் விற்கும் சாக்கில் என்னை நெருங்கி என்னுடன் பேச முனைந்தது, அதை நான் எண்டெர்டெயின் செய்யாமல் ஸ்ட்ரிக்டாக நிராகரித்தது (மதர் ப்ராமிஸ்!) எல்லாம், இப்பொழுது தேவையில்லை..

இன்னும் ஒரு 5 நிமிடம் போனது, உள்ளே இருந்து வந்த என் சகா, இன்னும் 15நிமிடம் ஆகும் என்று தகவல் தெரிவித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். நம் டப்பர்வேர்போசி நண்பர், அந்த முன்நெற்றி வழுக்கையர் சென்ற வழியை பார்த்தபடியே நின்றிருந்தார்.. matrix counterல் வேறு இப்பொழுது இரட்டை மங்களகரமாக இருந்தது.

நான் அந்த நண்பரை நெருங்கி, are you waiting for him’ என்றேன்.. சந்தேகமாக என்னை பார்த்துவிட்டு ya, he went for a photocopy, once he comes and finishes, i have to go and collect my passport, just 5 mins job, i’m waiting for 1 hr here’ என்றார்.. நான் மையமாக சிரித்து (சுஜாதாவுக்கு அஞ்சலி!!) அதே ப்ளோரில் இருந்த’Photo copy / Photo booth’போர்டை காட்டிவிட்டு ‘i’ll be here, go ahead’ என்றேன்.. ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டு.. பின் அவர் முகம் மாறியவிதம் இருக்கிறதே.. வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவப்பு விளக்கு முகத்தில் அறைய உறுமும் சிவாஜியைவிட உக்கிரம்.. ☺

சென்றவர் சரியாக நான்கே நிமிடங்களில் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து, ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு சென்றார். அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த முன்நெற்றி வழுக்கையார் போல் ’எக்ஸ்ட்ரா அறிவு’டன் பிறப்பவர்கள் எப்படியாவது இந்தியாவை வல்லரசாக்கிவிடும் கனவுடன் இங்கேயே திரியாமல், நல்ல விசா கிடைத்து அமேரிக்க சென்றுவிட எல்லாம் வல்ல சிவாஜிநகர் தர்மராஜா கோவில் இருக்கும் திசை நோக்கி வேண்டிக்கொண்டேன்.

மேட்ரிக்ஸ் கடையும் அதே திசையில் தான் இருந்தது என்பதும் தேவையில்லாத செய்தி தான்.