அன்ரி-நாகரீகம்..

‘அன்ரீ.. அன்ரியேய்.. குப்பக்காரன் வாறான்.. கெதியா சாப்பாட்டுக் குப்பயெல்லாம் கொண்டு வாங்கோஓஓஓஓ’..
மேல் வீட்டுக்காரி தான் படியில இறங்கிட்டே கத்திக்கொண்டு ஓடிப்போறா.. அவ அன்ரீ எண்டு கூப்பிட்டது நடு வீட்ல இருக்கிறவாவ.. நான் கீழ் வீடு. அப்பார்ட்மென்ட் வாசிகள்
அதுக்கெண்டு அந்தப்பிள்ள தொண்டு கிழமெண்டு நினைக்காதியள். அந்தப்பிள்ளைக்கும், மேல் வீட்டுக்காரிக்கும் ஒரு நாலு வருசம் தான் வித்தியாசமிருக்கும். நடுவீட்டுக்கார தங்கச்சிக்கு 50 வயசிருக்குமெண்டு சொல்லுங்கோவன்..
பகிடி என்னண்டா, உந்த அன்ரியெண்டு கூப்பிடுற குழுமாடு மட்டுமில்ல, அவட பிள்ளையளும் நடுவீட்டுக்காரிய அன்ரியெண்டு தான் சொல்லுறவயள்.. உதுல இன்னொரு கூத்தென்னண்டா, அதே மேல்வீட்டுக்காரிட மகள்வயித்துப் பேத்திக்கும் அந்தப்பிள்ள அன்ரி தான்.. மூணு தலைமுறையும், ஒரு நடுவயசுக்காரிய அன்ரியெண்டு சொல்றதப்பாத்து எதால சிரிக்கிறதெண்டு தெரியாம நான் வாய் திறக்கிறதில்ல.
என்னட்ட இந்தப் பேச்சு வைக்க மாட்டினம். ஒரு முறைப்பு முறைச்சனெண்டா, தன்னால மூத்திரம் போயிருவாள் மேல்வீட்டுக்காரி.
உதென்னடா வம்பாயிருக்கெண்டு நீங்க நினைக்கிறது நல்லாக் கேக்குது.. இதான் எங்கட ஊர் பேஷன் இப்ப.. முன்ன பெடியள் இருந்தப்ப இந்த ஆட்டமெல்லாம் இல்ல. மாமி, சித்தி, பெரியம்மா, பெரியக்கா, தங்கச்சி, அண்ணியெண்டு ஒழுங்காத்தான் கதைச்சிட்டிருந்தவயள். போர் தொடங்கிச்செல்லோ, அப்ப ஊரவிட்டு ஓடி வெளிநாடுகளுக்கு பிள்ளயள தப்பியோட வைச்சினம் நிறையப்பேர். அந்தப் பிள்ளையள் வெளிநாடு போய் குளிர்லயும், பனியிலயும் சகதியிலயும், பாச தெரியாம கஸ்டப்பட்டு காசுழைச்சு, தாங்க உயிர்தப்ப காரணமா இருந்த தங்கட அம்மா அப்பா நல்ல வசதியா இருக்கட்டும் எண்டு, கொழும்புக்கு அனுப்பி வச்சவயள்.
அங்க இருந்து தான் தொடங்கிச்சு இந்த நாடகமெல்லாம். பிள்ளயள் அனுப்புற காசுல பம்பலப்பிட்டி, தெகிவள, வெள்ளவத்தையெண்டு ப்ளாட்சில ஒரு மாடி வீடொண்ட வாங்கிக்கொள்றது, சிலவேள இவையின்ட பிள்ளயள் லீவுக்கு இங்க வாறப்ப தஸ்ஸூ புஸ்ஸெண்டு இங்க்லீஷ்ல கதைச்சிட்டே, அவனவய் இந்த புறோக்கர்மார் சொல்ற அறா விலைக்கும் அம்மாமார் விரும்புற வீட்ட வாங்கிக் குடுக்கிறதும் தான். என்ன ஒண்டு இந்த வீடுகள்ல நல்ல செக்குரிட்டி, 24 மணித்தியாலமும் தண்ணி வரும், டைல்ஸ் போட்ட புறாக்கூட்டு அறைகள், சின்னதா பல்கணி விறாந்தை, பிறகு சற்றலைட் டீவி.
கொழும்புக்கு வந்தவயள் இங்க கட்டச்சட்டயும், ஜீன்சும், ஸ்கேர்ட்டும், சோர்ட்ஸூம் போட்டுட்டு பெடியள் பெட்டையள் மட்டுமில்லாம, பெரியாக்களும் நடக்கிறத பாத்து, தாமும் அந்த ஸ்டேட்டஸூக்கு வரணுமெண்டு நினைக்கிறது சரிதான். அதுக்கெண்டு வீட்ல போடுற நைட்டியயும், பிஜாமாவையும், சோர்ட்சையும் போட்டுக்கொண்டு உந்த வெள்ளவத்த கடத்தெருவெல்லாம் சுத்தித்திரியிறது எவ்வளவு கறுமமெண்டு பாக்கிற எங்களுக்குத்தானே தெரியும். இப்பல்லாம் இந்த கூட்டம் சாறியெண்டா என்னது எண்டு கேக்கிறளவுக்கு போய்ட்டினமெண்டா பாத்துக்கோங்களேன்.
ஊர்ல காலைல வெளிக்கிளம்பினா இரவைக்கு வந்து உலை வைச்சவயளும், பக்கத்து வீட்டுகள்ல புறணி பேசினவயும், இங்க கதைச்சுப்பேச சனமில்லாம திண்டாடுமெண்டு பிள்ளையள் காசப்பாக்காம வாங்கிக் குடுக்கிற இந்த டீவியால வந்தது தான் உந்த நாசம். உவனவை இந்தியாவுல போடுற இந்தி டப்பிங் சீரியல்களயும், தமிழ் நாடகங்களையும் பாத்துட்டு, தாங்களும் இங்கிலீஸ்ல பேசுறம், நாகரீகமா இருக்கம் எண்டு காட்டுறதுக்கு தொடங்கினம் இந்த அன்ரி பிசினஸ்ஸ. சில்லிக்கூட்டம்

வெள்ளவத்தையில தான் உந்தக்கூத்தாட்டம் கூட பாருங்க.. அவனவன் காசு பாக்கிறதுக்கெண்டு அப்பார்ட்மென்ட்களா கட்டிப்போட்டிருக்கான்கள், அதுல ஒரு கிராமமே வாழலாம். இதுல பக்கத்து வீட்டுக்காரிய விட தாங்கள் பெரியவையெண்டு காட்ட, போடாத வேசமெல்லாம் போடுறதும், தெரிஞ்ச நாலு இங்கிலிச வச்சு வெட்டிப்பிளக்குறதுமெண்டு.
நான் சொல்றது பொய்யெண்டா, அப்படியே ஒரு நட, வெள்ளவத்த பொலிஸ் ஸ்ஷேஷனுக்கு முன்னால இருக்கிற ரோட்டோரக் கடையள் பக்கம் போயிட்டு வாங்க.. இல்ல அப்படியே சபயர் ஹோட்டலுக்கு முன்னால ஒரு அஞ்சர மணி வாக்கில, பேமென்ட்ல கூடிக்கூடி போற வாற பெட்டயள நக்கலடிச்சிட்டு, அந்தக்காலத்துல எண்டு தொடங்கி ராமாயணம் படிக்கிற கொஞ்சம் வயசான அங்கிள்மார் கூட்டத்த ஒட்டுக்கேளுங்க, இல்லண்டா, அப்படியே தமிழ்ச்சங்கம் பக்கம் கால வீசி போய்ப்பாருங்க.. இல்ல மரைன் ட்ரைவ் பக்கம் போய் கடலப்பாத்து கடல போட்டுட்டிருக்கிறவள உத்துப்பாருங்க நான் சொல்றது பொய்யெண்டா என்ட செருப்பக்கழட்டி நானே அடிக்கிறேன்.
ஆத்தே.. இந்தக் கூத்த சொல்லல்லண்டா, என்ட மண்ட வெடிச்சிரும். இப்பிடித்தான் என்ட கூட்டாளிப்பிள்ளயொண்டு ஒரு 60 வயசிருக்கும். இப்பதான் ஊர்ல இருந்து வந்தவ, அதால இங்கத்தி நாகரீகம் இன்னும் பிடிபடல்ல, அவள் சாறியோட வெள்ளவத்தைல அந்த மெதடிஸ்ட் சேர்ச் வளவுல நடக்கிற பூக் கண்காட்சிக்கு போயிருக்காள். அவள்ட வயசு பொம்பிளையொண்டாம், முழங்கால் முட்டுறளவு கட்ட டெனிட் ஸ்கேர்ட்டும், முன்னால பிதுங்கிறளவு டைட் ரீசேர்ட் ஒண்டும் போட்டுட்டு, அவளுக்கு கிட்ட வந்து, உந்த ரோஸூக்கு விலை குறைச்சு சொல்லச்சொல்லுங்களேன்.. எனக்கு குறைக்கமாட்டமெண்டினம். நீங்க என்ட அம்மா மாதிரித்தானே.. ஒரு உதவி பண்ணுங்கண்டிருக்கா.. நானாயிருந்தா கால்ல போட்டிருக்கிறத கழட்டி விளாசியிருப்பன். உது பாவம் அப்பாவி, உதவியும் செய்திட்டு இங்க வந்து மூக்கால அழுகுது..
சரி உதயெல்லாம் விடுங்க.. எனக்கு கொஞ்சம் தூரத்துச் சொந்தம். 45 வயசிருக்கும் அந்தப் பெட்டைக்கு. மூத்த மகளுக்கு 25 வயசு. அவளுக்கு கல்யாணமாகப்போற வயசுல உவாட கையில 5 வயசுப் பிள்ளையொண்டு. கேட்டா, ஆறு மாசம் வரைக்கும் பிள்ளயிருக்கிறதே தெரியாதாம், கட்டியெண்டு நினைச்சவயாம், பிறகு ஸ்கேன் பண்ணிப்பாத்தா பிள்ளையாம். டொக்டரே மூக்கு மேல விரல வச்சாராமெண்டு கதையளப்பா. சரி அது நமக்கென்ன. உன்ட பிள்ள, நீ பெத்த, உன்ட விருப்பமெண்டு விட்டுறலாம்.
மகள்க்காரி என்ட புருசனப்பாத்து அங்கிள் எண்டு சொல்லுவாள். இவருக்கும் அந்தப்பிள்ளையோட நல்ல விருப்பம். சொக்ளேட் எல்லாம் வாங்கிக் குடுக்கிறவர். கொஞ்ச நாள் புருசனோட கட்டாருக்கு போயிருந்துட்டு வந்தவயள். வரேக்க தான் பிள்ளயோட. இப்ப என்னண்டா, என்ட அவரப் பாத்து, அந்த சின்னப்பிள்ளைக்கு தாத்தாண்டு சொல்லிக்குடுக்கிறா. இதென்னடா கோதாரி.. மூத்த மகளுக்கு என்டயவர் அங்கிள், கடைசிப்பிள்ளைக்கு தாத்தாவா? ஊர்ல உலகத்துல இல்லாத புதினமா, புதிசா பேர்வைக்கிறாள்.
நான் கேளாக்கேள்வி கேட்டுட்டேன். பின்ன.. இவளவய இப்படி விட்டா துளுத்துப்போயிருவாள்கள். இப்ப சின்னப்பிள்ளையும் அங்கிளெண்டு தான் கூப்பிடுறது.
சத்தியமாச் சொல்றன். உந்த அன்ரி அங்கிளெண்டு, அதக்கூட சரியா உச்சரிக்கத்தெரியாம ஸோக்காட்டுறவயளுக்கு..
பெடியள் இருந்திருக்கணும்!
images courtesy : Google
