அன்றொரு நாளில்..

‘தலைய தூக்கி பாத்துராதையள் சொல்லிட்டன். அந்தப் பொடியன்ட அழுகைய நிப்பாட்டிட்டு அப்பிடியே அசையாம குப்புறப்படுங்கோ.. இல்லண்டா கொத்தோட குண்டு போட்டு கொண்டுறுவானுகள்’

சோமன் தாத்தா தான் இரைச்சலாக, சத்தமின்றி எல்லாரையும் அதட்டிக்கொண்டிருந்தார். சுற்றிவர வயல்நிலங்கள். புதர்களும் மரங்களுமாய் வரண்ட காடுகள். மரவள்ளிக்கிழங்கு மரத்தோட்டங்கள்.

ஓங்கிச் செழித்துக்கிடந்த மரவள்ளிக்கிழங்கு செடிகளின் கீழே தான் கிட்டத்தட்ட 100 பேர் மலைப்பாம்புகள் போல உயிர்ப்பயத்தில் சுருண்டு படுத்துகிடந்தார்கள். அன்றைக்கென்று காலையிலேயே தூறல். போட்ட சட்டை, இரவு உடைகளுடன் நீண்டு அடர்ந்த அந்த கப்பைக்காட்டுக்குள் இருந்தவர்களின் முகங்களில் மட்டும் தப்பிவிடுவோமாவென்ற ஏக்கங்களும் ஆயாசமும்

_தூரத்தில் குண்டு போட்ட சத்தம் காதைத்துளைக்க இன்னொரு குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. பசியில் கதறிய அந்தப் பிள்ளையின் அம்மா, தோளில் போட்டிருந்த துவாயால் பிள்ளையின் வாயை அடைத்து அழுகையை நிறுத்தியபடி சத்தமின்றி கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தார்.

மரத்திலிருந்து விழுந்த மழைநீரோடு, கண்ணீரும் கலந்து அந்த செம்பாட்டு மண்ணை நனைக்க, சேறுக்குள்ளும் சகதிக்குள்ளும் அலைபாய்ந்து அருவருப்பின் நெடியை அகலத்தள்ளி கும்பிட்டவாறு படுத்துக்கிடந்தது அந்த அகதிக்கூட்டம்

காலையில் தான் அந்த சம்பவம் நடந்தது. கனதியாய் தன் மேல் வளைந்த மீசையை கைகளால் திருகிக் கொடுத்தபடி, நக்கல் பார்வையுடன் ஜீப்பிலேறி போன அந்தக் கேப்டன், பனையோரக் கருக்குக்குள் கிடந்த ஷெல்லடி பட்டு சிதறி சின்னாபின்னமாகி செத்துப்போய்விட்டானாம்.

அறுவானுக்கு காலைல ஆறுமணிக்கு என்ன வேலையென்று நினைத்து முடிக்க முன்னமே ஆர்மர் கார்களும், ட்றக்குகளும் நிறைந்த ஆமிக்காரர்கள் இந்தியில் கெட்டவார்த்தையால் கத்திக்கொண்டே ஊருக்குள் சம்பவம் நடந்த இடத்தை நோக்கி ஓடத்தொடங்கினார்கள்.

அவ்வளவு தான். கல்லெறிபட்ட காக்கைக் கூட்டத்தை போல அத்தனை பேரும் கிடைத்ததை கையில் சுருட்டிக்கொண்டு காடு, குளம், கோயிலென எங்கெல்லாம் ஒளிய முடியுமோ அங்கெல்லாம் போய் அடைந்து கொள்ளத்தொடங்க

எதிர்ப்பட்டவர்களையெல்லாம் எழுந்தமானமாய் ஏ.கே47 ஆல் மண்டையில் போட்டபடி முன்னேறியது போதாதென்று வீடு புகுந்து அங்கிருந்த சாமான்களையெல்லாம் எரித்துக் கொழுத்தி சதிராடியது இன்னொரு குழு

கொட்டி ஊற்றிய மழையும் இடியும் போதாதென்று ஹெலிக்கொப்டரிலிருந்து தாழப்பறந்து சுட்டுக்கொண்டே வந்த சாத்தான்கள், பொம்பர் விமானத்திலிருந்து குண்டுகளை கொட்டி அந்த ஊரையே அதலபாதாளமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

நிமிர்ந்து பார்த்தால் கரும்புகைக்காடாய் ஊர்ப்பக்கத்து வானம். ஏதோ ஊழிக்காலம் போல, இத்தனையும் ஊழ்வினையா என்றபடி கண்ணீர் வழிய அங்கங்கே ஒளிந்து கொண்ட மக்களின் மனதில் இனியென்ன நடக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்க

துவம்சம் செய்தபடி ஊரையே துச்சாதனன் போல துகிலுரித்தபடி முன்னேறிக்கொண்டிருந்த அந்தக் கூட்டம் தேடியவர்கள் கிடைக்கவில்லை என்றதும் கிடைத்தவர்களையெல்லாம் பாடையிலேற்றி தேவலோகம் அனுப்பியபடியே

நவம் டாக்டரின் வீட்டுக்கு போக, அங்கு படுத்த படுக்கையில் எழும்ப முடியாது சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த டாக்டரின் அம்மாவிடம் போய்ச்சேர்ந்து அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க, எதற்கும் பதில் தெரியாமல் பதில் சொல்ல முடியாது பாரிசவாதத்தால் வாய்கோணி நாரைப் போல உள்வீட்டுக் கட்டிலில் படுத்துக்கிடந்த அந்தப் பாட்டியின் மேல் வீட்டுப்பொருட்களையெல்லாம் வீசியெறிந்து, அடுப்பங்கரையிலிருந்த மண்ணெண்ணை கேனை அதன் மேல் கவிழ்த்துக்கொட்டி ஒரு தீக்குச்சி உரசலோடு சுமங்கலியான அந்த பெண்மணியை சகமானம் செய்து போயினர்.

செத்த பிணத்தின் நெடியோடு கொழுந்துவிட்டெரிந்தது அவர்களின் குலக்கொழுந்து.

அன்றைய நாளின் முடிவில் சன்னதமாடி முடிந்தவர்கள் தங்கள் முகாம்களுக்குள் அடைந்த பிறகு, நள்ளிரவில் திருடர்கள் போல ஊர் மக்கள் தங்கள் வீட்டுக்கு மெதுவாய் ஊர்ந்து போனார்கள். எச்சமாய் மிச்சமிருந்த வீடுகளின் கோலத்தை ஏறெடுக்க முடியாது, ஏங்கி அழுவதற்கும் முடியாது ஒவ்வொரு மூலைகளிலும் ஒடுங்கி நடுங்கி கிடக்க

கீழ்வானத்தில் வெள்ளி முளைக்க ஆரம்பித்தது..

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.