கடல் நீ(ர்)..

காற்றும் கடலும் சங்கமிக்கும் 
இந்த மணற்கரையோரம் ஞாபகமிருக்கிறதா..

முகத்திலறையும் உப்புத்துகழ் நுரையோடு
முத்தங்களால் முகத்தில் கோலமிட்டதும் 
கைகோர்த்து, கரையோடு மறையும் 
சூரியனின் கூரிய வர்ணங்கள் 
உடலெங்கும் நிறந்தீட்ட

புளகாங்கிதத்துடன், 
கனவுபோலொரு தருணத்தில் 
என்னை காற்றில் மிதக்கவிட்ட
காதல்மொழி பேசியதும்!

இன்னும் நூறாண்டுக்கு 
மனம் நீங்கா
மங்காத ஞாபகங்களை தந்த 
இந்தக் கடற்கரையில் தான்

காற்றுப்புகாமல் இறுகத்தழுவியபடி 
இருளில் நடைபோட்டோம்..

இனியொரு நாளில்லையென்னுமாற்போல் 
இருமனம் நிறைந்து
இமை முகிழ்த்து 
இதழ்ருசித்து

கைச்சூட்டில் 
கன்னம் சிவந்து
உடல் நீங்கும் 
உயிர்போலே

யுகங்கள் நீங்கிச் செல்வதைப்போல் 
உள்ளத்தில் யுத்தச்சத்தத்துடன் 
உடைந்த மனசோடு 
மனசுகளை பரிமாற்றிவிட்டு
பரிதாபப் பார்வையோடு 
பிரிந்து சென்றோம்.

நம் கனத்த மூச்சுகளால் 
காயமுற்ற கடலலைகள் 
இன்னும் 
பாரந்தாங்காது 
நுரையென 
சிந்தியழும் ஓசை 
நமக்கு மட்டுமே கேட்கும்

கலங்கியழுவது 
கடல் மட்டுமல்ல
புண்களை மறைத்துக்கொண்டு 
புன்னகை சிந்தும் 
நாமும் தான்..

கடலாய் 
நம் காதல்

எடுத்துப்பருக முடியாத
கடல் நீர் போலே 
நீ!