கிளிஞ்சல்கள்..

‘அக்கா..சிப்பி பாருங்க.. எவ்ளோ அழகா இருக்கில்ல’

பக்கத்து வீட்டு குட்டிப்பெண் தான்.. நேற்று இரவு தான் விடுமுறை முடிந்து வீட்டுக்கு வந்திருந்தாங்க. இன்றைக்கு காலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி, சிப்பிக் கை நிறைய கிளிஞ்சல்களை சேர்த்துக் கொண்டு வந்து தூக்க முகத்துக்கு நேரே பிடித்துக் காட்டிவிட்டு போகிறது.

கடற்கரை எங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட இடம். எங்கள் என்றால் அவனும் நானும்..

வாரத்தில் ஒரு நாளாவது நானும் அவனும் கடற்கரைக்கு போகாமல் இருந்ததில்லை

கடற்கரையில் குறுகுறுக்கும் மனதுடன் கைகோர்த்து தோளுரசி விழுவது போல் சரிய, என்னவன் என்னைத் தாங்கிப்பிடிக்க நடப்பதும்..

காற்றில் கூந்தல் பறந்தோட, திரும்பி நின்று, காதுக்குள் கட்டவிழ்ந்த குழல்களை சேர்த்தொகுக்கியபடி, காதில் முத்தம் வைத்து என்னைக் கூச வைப்பதும்

மாலைக்கருக்கலின் மங்கல் ஒளியில் மந்தகாசமாய் செல்லச் சிரிப்போடு, செக்கர் வானச் சிவப்பை விட என் கன்னச் சிவப்புத்தான் சிறப்பென்று பெருசாய் ஏதோ கவிஞர் போல கிணுகிணுத்து, கன்னங்களை கடித்து வைப்பதும்

ஏனோ அந்த ஞாபகங்களை எல்லாம் திரும்ப ஒரு முறை மனசால் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பு அழுத்த காப்பியை சிப்பியபடியே பழைய பொருட்களை கட்டி வைத்திருந்த சூட்கேசை திறந்தேன்.

பழைய காகிதங்கள், கடிதங்கள், ஆட்டோகிராப் ஞாபகங்கள் தாண்டி, வெல்வெட் சுருக்குப்பைக்குள் என் ஞாபகக் கிளிஞ்சல்கள், இன்னும் பத்திரமாய்..

ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையும் கடற்கரைக்கும் போகும் போது ‘இதையெல்லாம் சேர்த்து வைத்து என்ன செய்யப்போகிறாய்’ என்ற கேலிக்கும் கேள்விக்கும் மத்தியில் பொறுக்கி வந்தது

சிலவற்றில் தீட்டிய வர்ணம் கூட இன்னும் அழியவில்லை..

நேற்றுப்போலிருக்கின்றது..

இன்று அவனில்லை.. அவனளித்த ஞாபகங்கள் மட்டுமே என்னுடன்..

அது இதுவென்று ஆயிரம் காரணம் சொல்லி, அத்தனை தளைகளையும் கிள்ளி அறுத்தெறிந்து குள்ள மனதோடு தனியே என்னை தவிக்க விட்டு சென்றவனின் ஞாபகங்கள் அநியாயத்துக்கு வர

குமுறி வாய்விட்டழ முடியாது குலுக்கிய நெஞ்சின் சோகம் கண்ணீராய் அவிழ்ந்து விழ, அத்தனை கிழிஞ்சல்களையும் கையில் கொட்டி கையில் வைத்தபடி, இறந்த காலத்தின் இழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது உடைந்தழ ஆரம்பித்தேன்..

நானும், யாராலும் சீந்துவாரற்று கடற்கரையில் கிடக்கும் கிளிஞ்சல் தான்..

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.