கையாலாகாதவள்..
சங்கீதா பாக்கியராஜா..
“உண்மைலயே தேவதைகள் இருக்காக்கா?.. “
கண்களை துருதுருவென உருட்டியபடி என்னைக் கேள்வி கேட்டும் பக்கத்து வீட்டு சிறுமியை கொஞ்சம் திடுக்கிடலுடன் திரும்பிப் பார்த்தேன்..
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல என்ன ஒரு அழகு.. வெறும் பருத்தித் துணியிலான பழைய பாவாடை சட்டை.. இரண்டு பக்கமும் பிரித்து வாரிவிடப்பட்ட குதிரைவால்.. உடம்பில் பொட்டுத் தங்கம் இல்லை.. ஆனாலும் அவளின் பட்டாம்பூச்சிக் கண்களும்.. முன்பல் இல்லாத செப்பு வாயும்..உருவி விட்டாற் போல உடம்பும்..
என்ன சித்துக்குட்டி புதுசாய் கேள்வியெல்லாம் கேட்குது.. யாரு உனக்கு தேவதைகள் பற்றி சொன்னாங்க..
இல்ல.. தேவதைகள் இருக்காம்னு என் அண்ணா சொல்றான்.. அம்மாவும் தான்.. நீங்க பாத்திருக்கீங்களா?
தரையில் அமர்ந்து தியானித்துக்கொண்டிருந்த என்னிடம் மழலைக் குரலில் மீண்டும் கேள்விக் கணைகள்..
என் வீடுதான் அவளின் புதிய சரணாலயம்..வீடு முழுக்க புகைந்தபடி இருக்கும் குங்கிலிய வாசனையும், மெழுகுவர்த்தி ஒளியும், வெண்நிற திரைச்சீலைகளும்..காற்றில் மெதுவாய் ஆடும் மணிச்சத்தங்களும், மெலிதாய் ஒலிக்கும் வீணையின் நாதம் இணைந்த அமைதியும், நேர்த்தியும் அவளுக்கும் பிடிக்கும்..
வீடே கதியாக இருக்கும் எனது ஒரே ஸ்நேகம் அவள்தான்..
இன்றும் ஓடிவந்து சப்பணமிட்டு என்னைப்போல அமர்ந்து இருக்க முயற்சித்தவாறு கணைதொடுக்கும் அவளை நான் கேள்வியுடன் பார்க்க
“தேவதைகள் எல்லாம் சொர்க்கத்தில இருப்பாங்களாம்.. மனுஷங்க கூட பழக மாட்டாங்களாம்.. உங்கள போல தானாம்.. ரொம்ப அழகா இருப்பாங்களாம்.. கவல..யே இருக்காதாம்.. எப்பவும் சிரிச்சிகிட்டே சந்தோஷமா பாட்டுப்பாடிற்று எல்லோருக்கும் உதவி செய்வாங்களாம்.. இன்னொண்ணு தெரியுமா.. அவங்களுக்கு சிறகு இருக்குமாம்..பெரீய்ய்ய வெள்ளை சிறகாம்..”
இரகசியமாய் என்னிடம் தனக்கு தெரிந்ததெல்லாம் ஒப்பித்து கண்களை விரித்தவளை ஆதரவுடன் தடவியபடி..
‘ஏன் உன்னோட தேவதைகள் பூமில இருக்க மாட்டாங்களாமா’ மென்நகையுடன் கேட்டேன்..
இல்லைக்கா.. இருந்திருந்தா எங்களுக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்குமா? பாருங்க.. அப்பாவும் இல்ல அம்மாவோட சேர்ந்து அண்ணாவும் இப்ப வேலைக்கு போறான்.. என்னையும் ஸ்கூல்ல இருந்து நிறுத்திடப்போறாங்களாம்..
எனக்குன்னு ஒரு காவல் தேவதை இருக்காமே.. அவங்கள பார்க்கணும்க்கா.. அவகிட்ட கொஞ்சம் காசு கேட்கணும்.. எங்களுக்கு சந்தோஷம் தா’ன்னு கேக்கணும்.. என்றவள், சுட்டுவிரலை வாய்க்குள் வைத்தவாறே “அது சரிநான் கூப்ட்டா வருவாங்களாக்கா..” என்றாள்
மானுட இளவரசன் ஒருவனைக் காதலித்த குற்றத்திற்காக சக்தியெல்லாம் பறிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் அமைதியாய், யாருங்கும் பங்கம் தராமல் வாழ வேண்டும் என்ற சாபத்துடன் பூமியில் ஓரோர் இடமாய் ஒளிந்து நித்தியகன்னியாய் வாழும் என்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்வியின் வீரியம் தாங்காமல்,
என் சிறகுகளை மேலும் உள்ளிளுத்தவாறு
செய்வதறியாமல் கண்ணீர் உகுத்த என்னை, வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த சின்ன தேவதை..

image courtesy: google