கொஞ்சம் coffee கொஞ்சும் காதல்..
சங்கீதா பாக்கியராஜா..
முற்றுப்புள்ளியெனச்சொல்லி
நெற்றியில்
முத்தமிட்டுச்சென்றாய்
காற்புள்ளியாயிருந்திருக்கலாமென
காதலை வைதேன்..
**
குயிலோசையும்
குழலோசையும்
பிடிப்பதேயில்லை
காதல் குரலோசையாய்
காதுக்குள் கிசுகிசுக்கும்
உன் கானக்குரல்
கேட்ட பின்னே..
**
காலங்கள் கடந்தும்
காகிதத்தில்
உறைந்திருக்கும்
சித்திரமாய் நான்
பாசத்தால்
மெதுவாய்
உதடொற்றி
என்னை
உயிரோவியமாக்கினாய்..
**
ஒரு மழலையின் முத்தம் போல்
மெதுவாய் இதழ் ஒற்றுகிறாய்
எனை மறந்து போய்
உன்னுள்
மறைந்து போகிறேன்..
**
உடைதான் உரசியது
உள்ளம் உடைந்து
உயிர் கசிந்து
தீயாய் மூண்டது காதல்..
**
கடற்கரையோரம்
கரங்கள் பிணைந்திருக்க
தொடுவானில் தொலைந்த
நிலாப்பார்த்து
மௌனத்தை விதைத்து
மனசால் காதல் செய்தோம்..
**
செவியோரம் நெருங்கி வந்து
சுவாசமாய் பேசுகிறாய்
சொர்க்கத்தில் நான்..
**
சத்தமின்றி
மனசுக்குள்
சப்பணமிட்டு
அமர்ந்துவிட்டாய்
சதங்கைகட்டியாடும்
இதயத்தின்
சந்தோஷச்சிதறல்களை
எதைக்கொண்டு
மறைப்பதென்று
மருள்கிறேன்..
**
உள்ளங்கால் வருடிய கணத்தில்
உள்ளத்தை இழந்து தொலைத்தேன்..
**
இறந்து போவது
இதுதானென்று
உணர்ந்து கொண்டேன்
உன்னைக் கண்ட கணத்தில்
உயிர் உறைந்து
உடல் தளர்ந்து
சுவாசம் மறந்து
சொர்க்கத்தில் மிதந்து…
**
இனம்புரியாத இம்சை நீ..
**
சந்தித்த கண்கள்
சிந்திக்க மறுக்க
மனசு
ஸ்தம்பித்த இதயம்
காதலால் நான் காதலானேன்..
**
மறைந்து நின்று
மருண்டு நின்று
மயங்கி நின்று
பார்த்தது போய்
இன்று
கருவிழிக்குள்
எனைத்தொலைக்கும்
தூரத்தில்
உன் கரங்களுக்குள்
கிறங்கி நின்றேன்..
**
சிகைக்குள் கைநுழைத்து
சிக்கலெடுக்கிறாய்
மனசுக்குள்
ஆயிரம்
காதல் முடிச்சுகள்..
**
உன் இதழ்களின் உரசல்களை விட
விரல்களின் உரசல் பிடித்திருக்கிறது..
**
நனைந்த கூந்தலினின்று
விழுந்த நீர்த்துளியாய்
நழுவித்தொலைந்தது
நம் இதயம்..
**
சுடர்விழியில்
சுயம் தொலைத்து
உன் பந்தத்தில்
சொந்தமாகி
பரவசத்தில்
முக்குழித்து
சுதந்திரமே
நீயென்றாக
சுவனத்துள்
அமிழ்ந்து
போனேன்..
**
சுயம்வம்வரமின்றி,
சுற்றத்தார்
பக்கமின்றி
ஏதோ ஒரு கணத்தில்
இருவிழிகள் கலக்க
இணைந்தது
நம் காதல்..
**
கரங்களில்
காதல் தடவி
செம்மையால்
செம் மை ஊற்றி
காகிதத்தில்
கனவுகளை
பொறித்து
கடிதமாய்
கொடுத்தேன்..
**
தோள்வளைவில்
கழுத்தணைப்பில்
காதல் கொண்டு கொடுத்த
முத்தங்களின்
எச்சங்கள் இன்னும் உண்டு
கருத்தரித்த காதல்தான்
கருவறுந்து போச்சு..
**
நீயும் நானும்
நெருங்கி இருக்கையில்
நடுவில்
வரப்பார்த்த காற்று
நாணம் கொண்டு
நகர்ந்து சென்றது..
**

தூது
நீயிருக்கும் இடம் தேடி
ஏங்கும் என் இதயத்தின்
கனத்த துடிப்புகளை
கடிதமாய் வரைந்து
பெருமூச்சில் முடிந்து
காற்றோடு கலந்து விட்டேன்
கசங்கிய காற்று
காரிருளில் பட்டு
மழையாய்
உன் முகத்தில்
முத்தமிட்டுச் செல்லட்டும்..
**
My Tweets..