சுமித்ரா..

அண்மையில் ஒரே மூச்சில் படித்து முடிக்கும் படி என்னை உள்ளீர்த்துக் கொண்ட நாவல் — சுமித்ரா

நண்பர் முத்தலிப் படித்தே ஆக வேண்டும் என பரிசளித்த நூல் அது

ஒரு சில நாவல்களால் தான் நம்மை உலுக்கிப்போட முடியும்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் என அத்தனையும் மூல நடை கெடாமல், அதே நேரம் அந்நியப்படாமல் அழகாய் விரிந்த கதை அது. கதை என்பதை விட சம்பவங்களின் கோர்வை என்று சொல்வேன். ‘சுமித்ராவின் வாழ்க்கை’

வயநாட்டுக்கு நிச்சயம் விஜயம் செய்தே ஆக வேண்டும் என்ற வேட்கையை விரியச்செய்து விட்டது இந்த நாவலின் இன்னொரு புண்ணியம்.

இன்னுமொரு வகை பெண்கள், மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் மனசு, இரகசியங்கள் என இறப்போடு சேர்ந்து இணைத்து எழுதமுடியுமாவென வியக்க வைத்தது இந்தப்புத்தகம்.

நாவலின் எழுத்துகளில் மூழ்கிப்போயிருக்க அதனையும் மீறி, யுத்தத்தின் புண்ணியத்தால், என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட சாவுகள் நினைவில் அலையலையாய் எழுந்து வந்ததை மறுதலிக்க முடியவில்லை

செத்த வீடுகளில் கொளுத்தி வைக்கப்படும் ஊதுபத்திகளின் வாசனையையும், சன்னமாய் ஒலிக்கும் முகாரி இசையின் பின்னணியையும் இன்னும் உங்களால் உணர முடிந்தால் நீங்கள் துர்பாக்கியசாலி

சாவு வீடுகளில் சன்னமாய் எங்கோ மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சோகத்தோடு, இறந்தவர்கள் நம்மை புகைபோல் காற்றோடு கலந்து பார்த்துக்கொண்டே இருப்பார்களோ, இல்லை மீண்டும் தங்கள் உடலுக்குள் புகுந்துகொள்ள வழி தேடுவார்களோ என்ற எண்ணம் ஏற்படுவதை நிறுத்த முடிவதில்லை

என்னதான் பேய்கள் ஆவிகள் மீது பயங்கொண்டவராயிருந்தாலும், உற்றாரை இழந்தால் அவர்களின் உயிரற்ற உடல் ஒரு துளியேனும் பயம் தருவதில்லை.

இச்சையின்றிய செயல்களை கூட அடக்கி, அவர்களும் ஒரு பிணம் போலே, பிணத்தின் அருகே, நாற்றத்தையோ, புழுக்கத்தையோ கருத்திற்கொள்ளாமல், ஒரு கணமேனும் பிரிந்து செல்லக்கூடாதென துறவிகளாய் அமர்ந்திருக்கும் ஆத்மாக்களின் துயரங்களுக்கு வாயிருந்தால் இந்த உலகத்தில் சாவே நிகழ்ந்திருக்காது

உயர்திணை அஃறிணையாகும் அந்த நாட்களில், இறந்தவர் பெயர் சொல்லாமல் சவம் என்று பிறர் சொல்லும் சொல்லுக்கே அவர்களை சாகடிக்கலாமா என தோன்றியிருக்கிறதா?

பூக்களின் மணம் நாற்றமாகி, எரியும் விளக்கின் நிழல்கள் எதிர்காலம் போல எதையெதையோ ஞாபகப்படுத்தி..

அலைக்கழிக்கும் சடங்குகளுக்கு மத்தியில் சாப்பிடச்சொல்லி துன்புறுத்தும் சொந்தக்காரர்களின் பிடியிலிருந்து தப்பி, நமக்காய் அழ ஒரு மூலை கிடைக்காதாவென எதிர்பார்த்து ஏங்கி..

வீடு கொள்ளாத சனமிருந்தும், வெறித்தோடிப்போயிருக்கும் உள்ளத்தின் வலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது இன்னொரு முறை எழுந்து வந்து நம்மை இழுத்தணைக்க மாட்டார்களாவென நப்பாசை கொள்ளாதவர்கள் யாருமுண்டா?

நேற்றிருந்தவர் இன்றில்லை என்பது கனவு போலே. சடங்குகள் முடிந்து வெறித்த வீட்டின் சுவர்களில் தெரியும் இறந்தவர்களின் பிம்பங்கள் பார்த்து உடைந்து நொறுங்கி, பெரும் ஓலமெடுத்து கூக்குரலிட்டு அழுபவர்களை பார்த்திருக்கிறீர்களா?

அதுவரைக்கும் அழுதே பார்த்திராத ஆண்கள், துணையிழந்து உடைந்து நொறுங்கி, ஓங்காரமாய் அடிவயிற்றிலிருந்து கேவலுடன் குமுறி அழுவதையும்

அலங்காரம் எல்லாம் ஒதுக்கி, யாரையும் பார்க்காது வெறித்தபடி இறந்திருப்பவர் முகம் பார்த்தபடி தாரை தாரையாய் கண்ணீர் ஒழுக அமர்ந்திருந்து, பெட்டி தூக்கப் போகும் அச்சமயத்தில் பேய் வந்து குடியேறியவர்களை போல, அத்தனை பேரையும் தள்ளிவிட்டு ஆங்காரமாய், பெட்டி மேல் படுத்தழுது, தடுத்து நிற்கும் பெண்மணிகளை?

இத்தனை சோகத்துக்குள்ளும் கடமைக்கென தலைகாட்ட வந்து, வம்பளக்கும் பேர்வழிகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கென்ன.. இது ஒரு சம்பவம். தலை குளித்ததும் மறந்துவிடும் நிகழ்வு. ஆனாலும் இந்த மாக்களை பார்க்கும் வேளையில், கொஞ்சமாவது மனிதத்தன்மை இராதாவென இரைந்து கேட்க வேணும் போல் தோன்றும்..

இன்னொரு விபத்தென்று 
கடந்துபோயிருக்கலாம்
இடிந்த மனங்களின் 
இரைந்த கதறல்களும் 
இறந்தவர் வீட்டில் 
இழந்தது 
எவையென்று
தெரியாதவரை 
தெரிய முயலாதவரை

சாவு போலொரு ஆசான் யாருமில்லை..

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.