நானாகிய நான்..

என் மீது எனக்கே தெரியாத பிம்பம் ஒன்றை உருவாக்கி, அதற்கு கண் காது மூக்கு வைத்து முகமூடியொன்றை உருவாக்கி உங்களுக்கு பிடித்தாற்போல் உருமாற்றாதீர்கள்..

நான் என்பது நான்!

கனவுகளும் நனவுகளும் கலந்து, யதார்த்தத்தின் பிடிக்குள் உழன்று, சில உன்மத்தங்களை உதறித்தள்ள முடியாத உயிருக்குள், என் உணர்வுகளை சிறைவைத்திருக்கும் சிறைப்பறவை நான்

பொய்களுக்குள்ளும், போதை தரும் பேச்சுகளுக்குள்ளும் மாட்டிக்கொண்டு கனமாய் அழுத்தும் கவலைச்சிக்கல்களை கீறலின்றி கழற்றியெறிவதெப்படியென்று கனத்த மனத்துடன் கடினயுத்தம் புரியும் என் ஆத்மாவை உங்களுக்கு தெரியாது

கனவுகளை விதைத்து, கற்பனைகளை பொதிந்து, காற்றில் கோட்டைகட்டி, சட்டென்று அத்தனையும் கலைத்துச் சென்றவர்களின் முகவரிகளை மறக்க பாடுபட்டுக்கொண்டிருக்கும் நடைபிணம்

துரோகங்களின் வலிகளில் இடிந்து போன இதயத்தை இழுத்துப்பிடித்து வலுவிழக்கச் செய்யயும் வலிகளை ஒதுக்க இறுமாப்புடன் இறுக்கமாய் இடிதாங்கியாய் நின்றுகொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா

ஏமாற்றத்தெரியாது, ஏமாற்றங்களின் பிடிக்குள் ஏமாந்து, இறந்தோரை போல இயக்கமற்றுக் கிடக்கும் அத்தனை அணுக்களையும் அடக்கியாண்டு அனைத்தையும் மறைத்து அனைவர் போலவும் உலவும் என்னை அத்தனை சுலபத்தில் கண்டுணர மாட்டீர்கள்

உறவே உயிர் குடிக்கும் விடமாய் மாற, உதறித்தள்ளி, ஒட்டுண்ணி வாழ்வு துறந்து, ஓட்டறை போல் ஒதுக்கப்பட்ட நாட்களை நினைந்து குமைந்து குமுறியழாமல், குன்றென நிமிர்ந்து மலையென வளர்ந்து, மறைக்கவியலாத ஆதவனாய் எழுந்து நிற்க முயலும் வரை நிகழ்ந்தவைகள் நீங்கள் அறியாதது

உயிர் பறிக்கப்படும் கடைசி நொடியில், ஏதோ ஒரு அற்புதத்தின் அழுத்தத்தால், அகற்றப்படாத உயிர் தாங்கி, அகங்காரங்களோ, அலங்காரங்களோ இன்றி அகத்தில் நம்பிக்கை மட்டும் துணையாய் கொண்டு துணிவுடன் துன்பங்களை எதிர்த்து தனியே நடைபோடும் என்னை புரிந்து கொள்வது உங்களுக்கு கடினமே

கரடு முரடான பாதைகளில் கன்னிச் சிவந்த பாதங்களுடன் பந்தமறுத்து, பற்றுக்கோடின்றி பதறாமல் செல்லும் என் பாதை எங்கு செல்லுமென்று எனக்குத் தெரியாது, இருந்தும் எங்கோ தொலைவில் ஏதோவொரு மூலையில் மகிழ்ச்சியின் சிறு பூவை தரும் பூங்காவொன்றுண்டு என்ற நம்பிக்கையை மட்டும் மனதார பற்றிக்கொண்டு பகலிலும் இரவிலும் பரந்த வானில் பறக்கும் பறவை போலே புதைந்து போகாமல் உயரே உயரே, உச்சி நோக்கி பறந்து செல்லும் பயமறியா சிறு பறவை நான்

என் மீது எனக்கே தெரியாத பிம்பம் ஒன்றை உருவாக்கி, அதற்கு கண் காது மூக்கு வைத்து முகமூடியொன்றை உருவாக்கி உங்களுக்கு பிடித்தாற்போல் உருமாற்றாதீர்கள்..