மரத்துப் போனாய்..
இந்தக் காப்பிக் கோப்பையினை பறித்து
எச்சில் முத்தமிட்ட நாட்களும்
கருத்த இரவுக்குள் கன்னத்தை
கடித்து வைத்த கணமும்
மாலை மழையினை மந்தகாசத்துடன்
ரசித்துச் சிரித்த பொழுதுகளும்
மரத்தினடியில் கொடுத்த முத்தமும்
மதிலோரமாய் பிணைத்த அணைப்புகளும்
முகர்ந்த கூந்தலும்
முகிழ்ந்த காமமும்
மோகத்தின் பின்னர்
முணுமுணுத்த வார்த்தைகளும்
மறந்து போயிருக்கலாம்
நடக்கப்போவதில்லை
இணையப்போவதில்லை
என நான் சொன்ன
வார்த்தைகள் மறுத்து
இருந்தால் உன்னோடுதானென
இறுமாப்போடு நீ சொன்ன சொற்களையும்
இழப்புகளின் வேதனைகளை
ஏற்றுக்கொள்ள முடியாதென
இரைந்து சொன்ன
இரு விழி துடைத்து
இணையென்றால்
நீயேதானென
எறும்பூரத்தேய்ந்த
கல்லாய் என் இதயத்தில்
இரும்பாய் இயைந்து கொண்டதையும்
கனத்த மனதுடன்
கண்ணீரோடு
கதறியழுது
கெஞ்சிய
என் கேவல்களையும்
ஆட்காட்டிப் பறவையின்
ஆழ்மன அழுகைபோல
அந்தரித்துச் சென்று
சுரத்தின்றி
சுடுமணலில்
செந்தீயில் விழுந்த
சிறுபூ போல
செத்து மடிந்ததையுமா
மறந்து, மரத்துப் போனாய்..