முகாம் வாழ்க்கையும் பெண்களுக்கு நேரிடும் சங்கடங்களும்..

முகாம் வாழ்க்கையின் சிரமங்கள் அதில் வசித்தவர்களுக்குத்தான் தெரியும்..

மழை வெள்ளத்தின் கொடுமை ஒருபக்கம், வீடு வாசல்களை இழந்து நிர்க்கதியாக உணவு, உடையின்றி தத்தளிப்பது ஒருபுறம் என கஷ்டங்கள் சொல்லில் அடங்காது

பெண்களுக்கு இன்னும் சில சிரமங்கள்..

சானிடரி துவாலைகளுக்கான தேவைகளை வாய்விட்டுக்கேட்க கூச்சப்படும் பெண்கள், கொடுக்கத்தயங்கும் ஆண்கள் இப்போது இணையத்தளத்தில் வெளிப்படையாக கேட்க ஆரம்பித்திருப்பதே சந்தோஷமாயிருக்கிறது

அடுத்த முக்கியமான விஷயம் சானிடரி துவாலை கழிவுகளை அகற்றுவது. மழையினால், நிலத்தில் புதைக்க முடியாது, வீசி எறிந்தால் தெருவோர மிருகங்கள் அதனை இழுத்துச்சென்று சுகாதாரச் சீர்கேட்டை உண்டாக்கலாம், குப்பை அள்ளும் பொறிமுறையும் இல்லை

முடிந்தால் ஒரு இரும்பு அல்லது தகர வாளி அல்லது சிறிய பேரலும் கெரசின் ஆயிலும் முகாமுக்கு ஒன்று எனக் கொடுக்க எத்தனியுங்கள். யாருமறியாது அதனுள் இட்டு எரித்துவிடுவது தான் இப்போதைக்கு நல்லது மற்றும் இலகுவான ஒழிப்பு வழிமுறை

ஆண்களால் திறந்த வெளியிலும் சிறுநீர் கழிக்க முடியும், குளிக்க முடியும். பெண்களால் அது சிரமம். முடிந்தால் சிறு தட்டிகளைக் கொண்டு மறைவிடங்கள் அமைத்துக் கொடுங்கள். பக்கட்கள் ஒரு முகாமுக்கு அங்குள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொடுத்தால் உடைமாற்ற, குளிக்க அவர்களுக்கு உதவியாக இருக்கும்

பெண்களுக்கு ஏற்படும் இன்னொரு சங்கடம் தான் அழுக்கு உள்ளாடைகளினால் ஏற்படும் ஈஸ்ட் எனப்படும் சிறுநீரக வாயில் தொற்று நோய். ஈரலிப்பு, அழுக்கு உள்ளாடைகளால் இது அதிகம் நேரிடும். அந்தரங்கப்பகுதியில் அசௌகர்யத்தை ஏற்படுத்துவதோடு, அன்றாட வாழ்க்கையையே முடக்கிப் போடும். அதனால் தான், புதிய உள்ளாடைகளை வழங்குங்கள் என்று நாங்கள் பெண்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கின்றோம்

இதுகாலம் வரை இல்லாதவாறு திடீரென அதிகரிக்கும் வெள்ளைபடுதல்
அதன் நிறத்தில் மாற்றம்
அதன் மணத்தில் திடீரென ஏற்படும் மாற்றம்.
பெண் உறுப்பிலும் அதனைச் சுற்றியும் எரிவு, அரிப்பு போன்றவை தோன்றுதல்.
மாதவிடாய் இல்லாத தருணங்களில் வெள்ளையில் இரத்தக் கறையும் தென்படல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக முகாமுக்கு வரும் வைத்தியரிடம் உங்கள் பிரச்சனையை சொல்லி தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

முகாமில் மாதவிடாய் ஏற்படுவதென்பது நரகத்தை ஒத்தது. மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்ட உடல் சங்கடங்கள் நேரிடும். ஏதாயினும் கிருமித்தொற்று காரணமாக அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
சாதாரண வயிற்றுவலியாயின், ஒன்று அல்லது இரண்டு .Dicyclo.அல்லது பரால்கன்மாத்திரைகள் கைகொடுக்கும்.

வயிற்றுவலியின் கொடுமை அதிகமானால் அல்லது உதிரப்பெருக்கு அதிகமானால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்
நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் ஒரே சானிடரி நாப்கினை அணிந்திருக்க வேண்டாம்.
முறையாக அதனை கழிவகற்றி, புதிய நாப்கின்களையும், உள்ளாடைகளையும் அணியுங்கள்
சாதாரண நாட்களை விட, மாதவிடாய் நாட்களில் மிகுந்த சுத்தமாக இருப்பது அவசியம்.

சிறுநீர்த்தொற்று இன்னுமொரு முக்கிய சங்கடம். பெண்களின் உடலமைப்பு அவர்களின் சிறுநீர் பழக்கவழக்கத்திற்கு சிரமம் தரும். அதனால், முடிந்தளவு மலசலகூட சுத்தம்செய்யும் திரவங்களை அளித்து, அவற்றை சுத்தமாக வைத்திருக்க கோருங்கள். பெண்களுக்கு தனியான மலசலகூடம் ஒன்றை ஒதுக்குங்கள். அதிகளவு தண்ணீர் அருந்தச் சொல்லுங்கள்

நீர்க்கடுப்பு ( “Dysuria / pain during urination”) இன்னொன்று. மழை, சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதால் பல பெண்கள் நீர் அருந்துவதில்லை. சுகாதாரமான மலசலகூடங்கள் இல்லாத நிலையிலும்சிறுநீரை அடக்கி வைப்பதால், இறுதியில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் அசௌகரியமான உணர்வு ஏற்படும். சிறுநீர் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யாவிட்டாலும் இந்த நிலை ஏற்படலாம். அதிகளவு தண்ணீர் அருந்தச் சொல்லுங்கள், அந்தரங்க இடத்தை சுத்தமாக வைத்திருங்கள்,
{கவனம், இது ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட வரலாம், எனவே அவர்களையும் சுத்தமாக இருப்பதோடு, போதிய நீர் அருந்தச் சொல்லுங்கள்}

சரி இதற்கு தீர்வு என்ன?

  • சுத்தமாக இருங்கள்
  • அந்தரங்கப்பகுதியை ஈரலிப்பற்று வைத்திருங்கள்
  • பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள், நன்கொடையாளர்கள் முடியுமானவரை பருத்தி உள்ளாடைகளையே வழங்குங்கள்.
  • எக்காரணம் கொண்டும் மாதவிடாய் காலத்தில் பழந்துணிகளை உபயோகிக்க வேண்டாம்,குறிப்பாக அவற்றை கழுவி உபயோகிக்க வேண்டவே வேண்டாம்.
  • நீரிழிவு நோய் இருந்தால் அதனைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். உடலில் சர்க்கரையளவு மாற்றங்களை உணர்ந்தால் தயங்காமல் தன்னார்வலர்களிடம் மருத்துவ உதவி வேண்டும் என்று சொல்லுங்கள்
  • அந்தரங்க உறுப்புகளை கழுவும் விசேட திரவங்களையும் feminine wash/டெட்டால் சோப் இனி நன்கொடையாக அளியுங்கள்
  • மருத்துவ உதவிகள் வழங்குபவர்கள் பெண் வைத்தியரின் ஆலோசனையுடன் mild ஆன vaginal க்றீம்களையும் மருத்துவ முகாமுக்கான மருந்து நன்கொடைகளில் உள்ளடக்கலாம். ஆனாலும் அதனை மருத்துவரின் ஆலோசனையின்றி நேரடியாக வழங்க வேண்டாம்
  • அந்தரங்க இடங்களை ஈரலிப்பில்லாமல் பாதுகாக்க Candid dusting powder களை மருத்துவ ஆலோசனையுடன் பெற்றுக்கொள்ளலாம். கொடையாளர்கள் மருத்துவ நன்கொடைகளை அளிக்கும் போது இதனையும் வழங்குங்கள்

இதனை எழுதுவதில் ஆலோசனைகளை அளித்து, தவறுகளை திருத்தி, மருத்துவ பெயர்களை தந்து ஊக்கப்படுத்தி எனக்கு உதவிய மருத்துவர்களான Dr. @poopoonga Dr. @Vandhana1810 Dr. @scanmanஆகியோருக்கும் மருத்துவ மாணவி @euphoriche க்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள்.