முடிவில்லா வலி..

Sangeetha Packiyarajah..

வெற்றியீட்டியதாக 
வெறிகொண்டலைதலுக்கு
வெட்கப்படுங்கள்

வெட்டுத்துணி போல
குதறிக் குலைத்து 
ஊழிக்கூத்தாடிய 
ஆழியலைகள் போல

ஆள் யாரென்று பார்க்காது
பெண்களையும், 
பெருவயது கிழங்களையும்
மழலைகளையும் 
மனிதம் செத்து 
மிருகங்களாய் வேட்டையாடியதெல்லாம் 
வெற்றியென்றால் 
வெட்கப்பட்டு செத்துப்போங்கள்

எங்கள் உதிரம் நனைத்த 
ஊர்களின் மேல் 
பூட்ஸ் கால்களால் 
மிதித்து சிதைத்தது 
போதாதென

புத்தரையும் உங்கள் 
பொய்மைக்கு சாட்சி சேர்த்து 
ஊருக்கு ஊர் 
பொத்திய கண்களுடன் 
அமர வைத்த உங்களை 
புத்தரே இகழ்ந்து சிரிப்பார்

எலியை எருதேற்றிக் கொல்வது போல
எத்தனை தேசத்தின் துணை சேர்த்து 
எதிரியாய் 
ஏதிலிகளையும் இணைத்து 
எச்சமிச்சமின்றி
எறிகணையும் இரசாயன மழையும் சேர்த்து 
இரக்கமேயின்றி துவம்சம் செய்ததெல்லாம் 
ஜெயித்தலென்றால் 
நீங்கன் ஜனித்ததே தவறுதான்

வெட்டிக்கொன்றது உயிர்களைத்தான் 
எம ்தன்மானமும், வீரமும் 
தரணியுள்ளவரை நிலைத்திருக்கும்

தனித்து வரத்துணியாத உங்களுக்கு 
எங்கள் தமிழின் தாற்பரியம் தெரியாததொன்றும் 
புதிதல்ல..

தலைகுனிந்ததாய் நீங்கள் எண்ணலாம் 
தலைமையற்றிருப்பதாய்
திண்ணம் கொள்ளலாம்
ஒவ்வொரு தலைக்குள்ளும் 
ஓடிக்கொண்டிருக்கும்
எண்ணங்களின் வன்மை தெரியாதவரை
அவ்வாறே எண்ணிக்கொண்டிருங்கள்..

கல்தோன்றாக் காலத்து தமிழின் 
துளிரை வெட்டியதாய் 
கர்வத்துடன் அலையுங்கள்..

அலையலையாய் 
அடக்கமுடியாது 
அகத்தின் ஆங்காரத்தை 
பூட்டுப்போட்டு கதறும் 
எங்களின் அழுகுரல் கேட்காதவரையே 
உங்கள் மூடமதிகள் 
மகிழ்ந்திருக்கும்

முடமாய் போனது 
எம் உரிமைகள் தான்

முடக்க முடியாது 
எம் மதியினையும் 
இளக்காரமாய் எறியமுடியாத 
எம் கர்வத்தையும்..

Like what you read? Give Sangeetha Packiyaraj a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.