
முத்தம்..
முத்தங்களுக்கு முத்தங்களால் சத்தமின்றி பதில் சொல்லலாம்..
முத்தமிடுபவருக்கும், பெறுபவருக்கும் மட்டுமே முத்தம் சொந்தம்
அவசர முத்தங்கள் அழகானவை..
ஆசுவாசமாக கொடுப்பவையும் தான்
எதற்கென்றே தெரியாமல் தரப்படும் முத்தங்களும்
எதிர்பாராமல் தரப்படும் முத்தங்களும்
தித்திப்பால் எம்மை திக்குமுக்காடச் செய்துவிடும்
தின்னக்கூடாதென்று சொல்ல எவருக்கும் அருகதையில்லையோ
இதழ் தின்னக்கூடாதென்பதற்கும் தான்..
சத்தமாய் கூடி தெருவில் நின்று முத்தம் அபத்தம் என்று சொல்லும்
கலாசாரக் காவலர்களும்
தம் வீட்டுக் கட்டிலில் முத்த அபிஷேகம் நடத்தியவர்களே
எத்தர்களும், ஏமாற்றுக்காரர்களும் எதுவித சங்கோஜமுமின்றி
ஏறு நடை போடும் இந்த நாட்டில்
இதழொற்றுபவர்களுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு
அபச்சாரம் அபச்சாரம் என்று அலைகடல் போல் ஆர்ப்பரிக்கும் ஆட்களை
கஜுராகோவுக்கும், அஜந்தாக்குகைகளுக்கும், கோயில் சிலைகளுக்கும்
கூட்டிச்சென்று காட்ட வேண்டும்
உங்கள் முன்னோர்கள் முத்தமிட்டதால் தான்
நீங்கள் மண்ணை முத்தமிட்டீர்கள் என்று
முத்தமிடட்டும்.. இருவரும் இணைந்து,
ஆசைப்பட்டு பாசம் சொல்ல
ஆயிரம் வல்லுறவுகள் நடக்கும் இந்த ஊரில்
ஆபாசத்திற்கும், பாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் கூத்தாடும்
அரைவேக்காடுகளின் அலறல்களுக்கு மத்தியில்
வெட்டி வீம்புக்காய் தெருவில் நின்று சத்தமிட்டு
நம்மை விழுங்கக் காத்திருக்கும் வேங்கைகளின் கண்பார்வைக்கு தெரியாமல்
வெளிச்சத்தில் வெளியில் நாம் விரும்பும் இடத்தில் நின்று
யாருக்கும் தெரியாது இதழ்களை ஆகர்ஷிக்கவிடலாம் வா..