பிரியாவிடை

ரூலர் ஸ்கேலின் மீது படுத்திருக்கும் சிராய்ப்புகள், மெல்ல மெல்ல டியுப்லைட் வெளிச்சத்தில் சிரித்தன. அரைதூக்கத்தில் கிடக்கும் கால்குலேட்டர் , கவிழ்ந்து விரிந்த புத்தகம் , அந்த டேபிளுக்கு ஒன்றும் புதிதல்ல. எத்தனை எத்தனை ஆசிரியர்களின் மொழி வண்ணங்களை அது சுமந்துள்ளது ! பாதி மறந்து நிற்கும் கவிதை வாசனைகளை அது எத்தனை லாவகமாக கவ்வி பிடிக்கின்றது. பாதி நின்று போன பேனாக்களால் , அது எத்தனைமுறை நீலம் தெளிக்கப்பட்டது!அத்தனைக்கும் கைம்மாறாக நான் அதை தள்ளுவண்டியில் போட்டுவிட்டேன். என் மனம் மனிதம் என்பதை,
அந்த வண்டிக்காரன் ஒவ்வொரு கால்களாக உடைத்தபோது அதற்கு தெரிந்திருக்க வேண்டும்.

என் கடைசி ஆசை இதுவாக இருக்கக்கூடும் என்று அது எண்ணியிருக்க வாய்ப்பில்லை. என் பணிகளுக்கு நடுவே எட்டிபார்க்கும் தூக்கங்களையும், அக்கர்மாவின் விளைவால் உதட்டின் வழியே டேபிளை வருடும் எச்சிலையும் அட்டேபிள் பொருட்படுத்தவேயில்லை. மாறாக , நான் விழிக்கும்வரை அது சப்தமிடக்கூட இல்லை.

எத்தனையோ முறை ஆபீஸ் கோப்புகளை நான் தொலைத்தபோது, “ அந்த டேபிளின்மீது தான் வைச்சேன்… இப்போ காணல ! “ என்று டேபிளை சாடி இருக்கிறேன். பொய்குற்றம் சுமத்தி இருக்கிறேன். அப்போதும் அது தலைதொங்கி, தான் எடுக்கவில்லை என்றே மௌனமாக பேசியது. என் கபடவேடத்திற்கும் இயைந்து கொடுத்து தான் ஒரு வெகுளி என்று பட்டம் வாங்கியது.

குத்துப்பாடலோ, காதல் பாடலோ எதுவாயினும் நான் போட்ட தாளத்திற்கும் தன் நாபிக்கமலத்தில் இருந்து பாடி நானும் ஒரு இசைக்கலைஞன் என்பதை இவ்வூரார்க்குப் பகட்டாய் சொல்லியதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். என் முதல் காதல் கடிதத்தை அதன் மேல்தான் எழுதி, அதனிடம் படித்துக்காட்டி, “சபாஷ்!” பெற்றுள்ளேன். அதற்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை , காலேஜில் ரேகிங் செய்தனர் என்று தற்கொலை முயற்சிக்கு கடிதம்கூட எழுதினேன். அது கண்ணீர் மல்க , காலில் விழாத குறையாக என் மனதை மாற்றியது.

நான் அதை பரிசாக பெற்றேன் என்பது மட்டுமே, கொஞ்சம் என் நினைவில் உள்ளது. எந்த நிகழ்ச்சிக்காக , ஏன் , எப்பொழுது என்பதெல்லாம் எங்கல் நட்பிற்கு தேவையற்ற விஷயங்கள் என்பதே உண்மை ! இப்பவரையிலும்கூட , நான் அதை ,” நீ எப்போது வந்தாய் ? “ என்று கேட்டது இல்லை. அப்பா டிரான்ஸ்ஃபர் ஆனபோது, புது வீட்டில் முதலில் நுழைந்தது டேபிள்தான். நான் அதை எப்போதுமே சுத்தம் செய்தது இல்லை. என் மனம் ஒன்றியே அதுவும் தனக்கு “ இது வேண்டும் .. வேண்டாம் “ என்று இல்லாமல், ஒரு வானம்பாடியாகவே இருந்தது. நான் அழுதவேளைகளில் மட்டும் வேண்டுமானால் என் கண்ணீர் துளிகள் அதன் மேல்புரத்தில் சிறிது கழுவியிருக்கலாம்.

சிலகாலம், நான் அதைவிட்டு பிரிந்தே இருந்தேன். ஆபீஸில் கொடுத்த டேபிள், என்னவனைப் போல் எப்போதுமே இருந்ததில்லை. ஆபீஸ் டேபிள் சரியான வம்பன் எனலாம் .இரண்டு கோப்புகளுக்கு மேல் தாங்காது ; கால் வைக்க வசதியில்லை ; கணினியை அரிசிசாமான்களை போட்டவாறுதான் வைக்கவேண்டும். மற்றுமொரு காரணம், ஆபிஸ் என்னைக் காதலிக்கவில்லை. நானும் அப்படியே.!

நேற்று என் மகன் கோபமாக பேசியதற்கு, “வீட்டைவிட்டு வெளியே போ !” என்று சொல்லிவிட்டான். நான் எவ்வளவு பலமாக அதன் கதவுகளை சாத்தி அடித்தும், வேறு ஏதோ நிகழ்வின் கோபத்தை, கையாலாகாத தனமாக அதன் மீது காட்டியும் அது குமுறவில்லை ; என் மீது குறைகூறவில்லை. மாறாக , சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டது.

நான் அதை தள்ளுவண்டிக்காரனிடம் போட்டதுகூட கையாலாகாத தனமே ! மூட்டைப்பூச்சிகளுக்கு அது வாழ்வாதாரம் கொடுத்தது. மருமகளுக்கு இது பிடிக்கவில்லை. அதன் சீட்டைக்கிழித்துவிட்டாள். நானும் நிராயுதபாணியாக
நின்று வேடிக்கை பார்த்தேன் , அந்த முரடன் என் டேபிளை கூண்டிலிருக்கும் பிராய்லர் கோழியைப்போல் நடத்தியதை……
“சார், 150 ரூபா தேறும் !” என்று அவன் மெல்ல நடந்தான்.. மருமகளின் கண்களில் வெளிச்சம்.!!

மகன் வந்தவுடன் வாக்கிங் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு, பழைய பேப்பர் கடைக்குச் சென்றேன். ஆன்மாவை இழந்த ஷாம்பு பாட்டில்கள் , ஒடுங்கி நிற்கும் பழைய இரும்பு கட்டில் , “ எவன் எக்கேடோ போகிறான் கெட்டுப் போகிறான் ! “ என்று தன்னைப் பார்ப்பவர்க்கு ஒரே செய்தியைச் சொல்லும் நாளிதழ்கள்.

“அந்த டேபிள் “ என்ற கேள்விக்கு அறையின் 4 மூலைகளுள் ஒன்று கைகாட்டப்பட்டது.. ஊண் வாடி, உள்ளம் மெலிந்து , கையற்று கலங்கும் அதனைப் பார்க்க வலிமையில்லாது நான் மெல்ல இருமினேன்… “ பரவாயில்லங்க , உங்க மேல தப்பில்ல …. எனக்கு புரியுது ! “ என்ற தீனக்குரலில் அது பேசியது.. என் காது மடல்கள் எரிந்தன.. கண்களில் மூடுபனி படர்ந்தது… அவசரமாக வேலையிருப்பதுபோல் வெளியேறினேன்.. பதட்டத்தில் கடைப்பையன் காலை மிதித்துவிட்டேன். அவன் கோரமாக திட்டினான்.. முதலாளி தன் ஆள்காட்டி விரலை.. கண்களின் பக்கவாட்டில் , காதுகளுக்கு மேலே சுழற்றி , “ அவங்க கொஞ்சம் அப்படி… கண்டுக்காத..! “ என்றார். என் காதுகள் அவற்றைக் கேட்டன… நான் கொஞ்சம் வேகமாக நடந்தேன்…!