தமிழ் கவிதை

ஏறத்தால இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழின் தற்கால புதுக்கவிதைகள் பற்றி எனக்கு தீராத சந்தேகங்கள் பலவுண்டு. அவற்றில் முதன்மையானது, நிசமாலுமே அவையெல்லாம் கவிதைகள் தானா என்பது.

தாய் தமிழ்னாட்டில், போலி ரேசன்கார்டு நபர்கள், வந்து குடியேறிய பீஹார்காரர்கள் உட்பட ஏறத்தால, ஏழு கோடி பேர் கவிதைகள் எழுதுவதாக ஒரு புள்ளி விபரம் சொல்லுகின்றது. வெளியிடும் ஊடகங்களைப்பொருத்து மூன்று வகையிறாவாக பிரிக்கலாம். ஆனந்த விகடன், குமுதம் மற்றும் தினசரிகளின் ஞாயிறு மலர்கள் போன்ற வெகுஜன ஊடகங்களில் எழுதுபவர்கள். மொத்தமே பத்து பேர் தான் படிக்கும் தடம், உயிர்மை, காலச்சுவடு போன்ற வந்த, வரவிருக்கின்ற, நின்ற, நிற்கவிருக்கின்ற இலக்கிய இதழ்களில் எழுதுபவர்கள். இவர்கள் தவிர்த்து ஓர் ரகசிய இயக்கமும் உண்டு. தானே எழுதி, தன் தாய்க்கும் தாரத்துக்கும் கூடத்தெரியாமல், ரகசியமாய் தானே படித்து ரசிக்கும் ஒரு கூட்டமும் உள்ளது. ரகசிய இயக்கம் குறித்து நாம் அஞ்ச தேவை இல்லை. இலக்கிய பத்திரிக்கைகளில் வரும் கவிதைகளை அவற்றின் ஆசிரியர்களே படிப்பதில்லை என்பதால், அவற்றாலும் சிக்கல் இல்லை. ஆனால், வெகுஜன பத்திரிக்கைகளில் கவிதை எழுதி இலக்கியத்திற்க்கு சேவை செய்யும் சிலரால், தொற்றுநோய் ஒன்று வேகமாக பரவி வருகின்றது. (இவன் எழுதி இருக்கற மாதிரியே நேத்து டாய்லெட்ல இருக்கும் போது நாமக்கும் ஓன்னு தோனுச்சே.. அடுத்த தடவ அத அப்படியே அனுப்பிட வேண்டி தான்!)

சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார், புத்திசாலித்தனமான வரிகளை உடைத்து வைத்தால் அது கவிதை அல்ல என்று. ஆனால் இன்று கவிதை என்று எழுதப்படும், பெரும்பாலானவை வெறும் வார்த்தை விளையாட்டுத்தான். விகடனின் இந்த வார இதழில் வெளிவந்துள்ள (90ம் ஆண்டு சிறப்பிதழ்) கவிதை இது. “திருமண தகவல் மையம் சென்றிருந்தேன். அநேகம் பெண்கள் சீசர் போல் நெப்போலியன் போல் ஒருவன் வேண்டும் என்றிருந்தார்கள். நேற்று ஒரு நெப்போலியனையும் ஒரு சீசரையும் தெருமுனையில் பார்த்தேன். விவாகரத்தான அவர்கள் தனியாகத்தான் இருந்தார்கள்.” படித்து முடித்த உடன், “கவிதையா?? இது கவிதையா??” என நானே கேட்டுக்கொண்டு இரண்டு முறை சுவரில் முட்டிக்கொண்டு (வேறு என்ன செய்வது?) அடுத்த பக்கத்துக்கு சென்றேன். வாசகர் கவிதைகளை பிரசுரிப்பது எப்போது தொடங்கியது எனத்தெரியவில்லை. ஆ.மு.வில் (ஆன்ட்ராயிடுக்கு முன்பு) கவிதை உதித்தால்(!) உடனே ஒரு 25 பைசா போஸ்டுகார்டு வாங்கி எழுதி ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பிவிடுவார்களாம். கவிதை வந்தால் தமிழுக்கு சிறப்பு, வராவிட்டால் வரலாற்றுப்பிழை. ஏதோ தமிழுக்கு என்னால் ஆன சேவையாக 25 பைசா என்பது உள்ளிருக்கும் நீதி.

இமெயிலும் வாட்ஸ் அப்பும் வந்த பிறகு, தமிழுக்கான சேவை வரி நின்றது தான் மிச்சம். ஆசிரியர்கள், செயலியிலேயெ முடிவெடுத்து அச்சுக்கு அனுப்பி விடுவதாக பேச்சு. கவிதைகள் அளவுக்கு கட்டுரைகளோ, கதைகளோ, நாவல்களோ எழுதப்பட்டதாக தெரியவில்லை. காரணம் எளிதானது. மற்றவை எழுத கொஞ்சமாவது விசயம் வேண்டும். சிறப்பாய் வேண்டுமெனில் அனுபவம், அறிவு, பொறுமை தேவை. ஆனால், இவை ஏதும் கவிதை எழுத தேவை இல்லை என்பதால் தான், “மொட்டை மாடி நிலா பால்கனியில் கலா

வந்ததே காதல் விழா” என கவிதை செழிக்கின்றது.

தமிழின் ஆகச்சிறந்த கவிதைகள் எழுதி முடிக்கப்பட்டு விட்டன என்பது என் எண்ணம். ஆகவே கவிதை எழுத கை அரித்தால், கம்பராமயணத்தையோ, கபிலரையோ படிக்கலாம். படித்தபின்னும், நமநமப்பு இருப்பின் நிச்சயமாக எழுதலாம். சமீபத்தில், பெண் கவிஞர்கள் குறித்து ஜெயமோகன் தடம் இதழில் (செப்டம்பர், 16) “அவர்களுக்கு (பெண்கள்) தீவிர வாசிப்பு இருப்பதில்லை. அதனால் படைப்பில் ஆழம் இருப்பதில்லை” என்றிருந்தார். ஆண்டாளில் இருந்து இன்றைய தமிழ்நதி, பரமேஸ்வரி போன்றவர்களின் தீவிர ரசிகன் என்ற முறையில் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மாறாக, இதை பொதுவாக வைக்கலாம். நல்ல கவிதை படைக்க நல்ல வாசிப்பு வேண்டும் என்பதாக. 9ம் நூற்றாண்டின் கடுமையான ஆணாதிக்க சட்டகத்துக்குள் இருந்து கொண்டு, பன்னிறு ஆழ்வார்களுள் ஒருவராக உயர்ந்ததற்க்கு, ஆண்டாளின் பக்தி மட்டுமே காரணம் அல்ல. பெரியாழ்வாரின் புதல்வி, அவரைப்போன்றே இலக்கணம் கற்றுச்சிறந்திருந்தது தான் காரணம்.

பி.கு. நல்லா இல்லாத கவிதைகளை சொல்லி விட்டு நல்ல கவிதைகளை சொல்லாமல் விட்டால் எப்படி? சாம்பிளுக்கு மூன்று.

கபிலர் — குறுந்தொகை

சுனைப்பூ குற்று தொடலை தைஇவனக்கிளிகடியும் மாக்கண் பேதைதானறிந்தனளோ இலளெ பள்ளியானையின் உயிர்த்துஎன் உள்ளம்
பின்னும் தான் உழையதுவே…

(வனத்தடாகத்தில் பூப்பறித்து, மாலைகட்டி அணிந்து காட்டில் கிளியோட்டும் இந்த பெரியகண் அழகி அறியமாட்டாள், தூங்கும் யானைபோல பெருமூச்சுவிட்டு என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை…)

தமிழ்நதி — ஆனந்த விகடன்

மாடியை ஒட்டிய புத்தக அறையினுள் எப்படியோ சேர்ந்துவிடுகின்றன சருகுகள்… வாசிப்பினிடை தலைதூக்கினேன் செல்லமாய் சிணுங்கி ஒன்றையொன்று துரத்திச் சரசரத்தன கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில பெருக்க மனதின்றி விட்டுவைக்கிறேன் ஈரமனைத்தும் உறிஞ்ச வெயில் வெறிகொண்ட இக்கொடுங்கோடையில் எந்த வடிவிலேனும் இந்த மாநகர வீட்டினுள் இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்.

தேவதச்சன் -

வெட்ட வெளியில் ஆட்டிடையன் ஒருவன் மேய்த்துக் கொண்டிருக்கிறான் தூரத்து மேகங்களை சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை

Originally published at paprvn.tk.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.