இனி அக்கரைப்பற்றில் எல்லோரும் ஆக்சிஜனைச் சுவாசிக்கட்டும்!

“அடுத்த ஊராண்ட கால்ல உளுங்கோ! அடுத்த ஊராண்ட கால்ல உளுங்கோ! அடுத்தவனுக்கிட்ட போய் பல்லிளிங்கோ!” என்று பல பதிவுகள் நேற்றிலிருந்து எனது காலக்கோட்டில் காணக்கிடைத்தது. இங்கே காலில் விழுதல், பல்லிளித்தல் என்பதற்கும் அரசாட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது நேற்றிலிருந்து பெரும் கேள்வியாகவே மாறியது என்னுள். எண்பத்தொன்பதாம் வருடம் எங்கள் வீடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அலுவலகமாகப் பாவிக்கப் பட்டதாம். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து தலைவர் அஷ்ரபிற்கும் எனது தந்தையின் குடும்பத்திற்கும் இருந்த நெருக்கமான உறவை நானறிவேன். அரசியல் தவிர்த்து அவரது மதிப்பிற்குரிய ஆசிரியரான எனது பெரிய தந்தையுடன் அவர் கொண்டிருந்த குடும்ப உறவு கண்கூடு. தான் அரசியலில் ஈடுபடவிருப்பதாக அவர் எனது பாட்டனாரிடம் சென்று கேட்ட சம்பவம் சுவாரஸ்யமானது. “அரசியல் ஒரு சாக்கடை மகன் அது உனக்கு வேண்டாம்” என்று எனது பாட்டனார் எச்சரித்து மறுத்தாராம். அதற்குத் தலைவர் அஷ்ரப் “சாக்கடை என்று எல்லோரும் விலகி நின்றால் எப்படி வாப்பா? யாராவது இறங்கி சுத்தம் செய்யத்தானே வேண்டும்” என்று கூறினாராம். தலைவர் அஷ்ரப் மரணித்தது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி கேட்டு தொண்ணூற்று மூன்று வயதான எனது பாட்டனார் சொல்லியழுததை சிறுமியாக அவர்பக்கமிருந்து கேட்டிருக்கிறேன். அந்த உறுதியை, தனது சமூகத்தின் எழுச்சியை மட்டுமே நோக்காகக்கொண்டு தனது அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டதை அவர் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தது! பள்ளிக்காலத்திலிருந்து அன்றுவரை அவரது தேர்ச்சிகளை அடைவுகளை அறிந்திருந்த எனது குடும்பம் அவரால் இது முடியும் அவருக்குள் அதற்கான தகைமையும் தேடலும் உண்டு என்பதறிந்தே அவரது அரசியல் கடமைகளில் அவர்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தனர். அவ்வளவு இருந்தும், எந்தவொரு சுய தேவைக்காகவும், சொந்த அபிவிருத்திக்காகவும் அவரிடம் எதனையும், எந்த வேண்டுகோளையும் எனது தந்தையோ, எனது பாட்டனார் குடும்பமோ முன்வைத்ததை நான் கண்டதுமில்லை கேட்டறிந்ததுமில்லை. நாங்கள் வளர்ந்த, வளர்க்கப்பட்ட அரசியல் சூழல் அவ்வாறானது. எங்களைப்பொறுத்த வரையில் காலில் விழுதல், பல்லிளித்தல் என்பதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை. அரசியல்வாதிகள் அனைவரும் எமது சேவகர்கள். கடமையைச் செய்ததற்காய் யாரும் யாருக்கும் நன்றிக்கடன் படுவதில்லை! அவர்கள் சேவகர்கள் அதற்காகவே அவர்களை நாங்கள் தேர்வுசெய்தோம், அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது! இதுவே அவர்களுக்கும் மக்களுக்குமான தொடர்பு! தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொள்வதும், தங்களுக்கு இறைவன் கொடுத்த அமானிதங்களிப் பேணி இயன்ற அளவு அடுத்தவர்க்குதவியாய் வாழ்வதையே சிறந்த வாழ்க்கை முறையாக கற்று வளர்ந்திருக்கிறோம். அதற்கு மேலதிகமாக காலில் விழவேண்டிய தேவையோ, பல்லிளிக்கவேண்டிய தேவையோ எங்களுக்கிருந்ததில்லை! எனவே எமது பார்வையில் அநீதி இழைப்பது, அரச சொத்தை சூறையாடுவது, பண்பாட்டுவிருத்தியை சீரழித்து எமது சமூகத்துக்கேயான தனித்துவம் மற்றும் கலாசாரத்தை நாசப்படுத்துவது, தனிமனித குரோதங்களுக்காக பொறுப்புள்ள பதவியிலிருக்கின்ற அரச ஊழியர் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்வது, சட்டம் ஒழுங்கை மீறுவது, இயற்கையாக இறைவன் எமக்களித்த தரைத்தோற்ற அமைப்பு, மற்றும் சீதோஷன நிலைமைகள் மூலம் உள்ள பேறுகளை எந்தவொரு அடிப்படையுமின்றி அபிவிருத்தி என்ற பெயரில் தனது குடும்ப அங்கத்தவர்களில் எத்தனை பெயர் இருக்கிறதோ அத்தனை பெயர்களையும் வைப்பதற்காக கட்டிடக்கலையின் பௌதீகவியலுக்கு விரோதமாக சுய மூடநம்பிக்கைகளைப் பின்பற்றி தான் வகுத்த திகதிகளில் கட்டிடங்களை நிர்மாணித்துத் திறப்பது, அதன்மூலம் நீண்டகால நடைமுறையில் சூழல் சமநிலைக்கு அநீதமிழைப்பது, தமது சுகமண்டலத்துக்கு (Comfort Zone) அப்பாற்பட்ட விடையங்களில் முடிவெடுக்கும்போது குறித்த துறையில் பாண்டித்தியம்பெற்றவர்களின் உள்ளீடுகளை பொருட்படுத்தாது, கல்வி, மருத்துவம், உள்ளூராட்சி, கலாசாரம், சமயம் என பல துறைகளைச் சீர்கெடுப்பது, சமூகத்தின் எதிர்காலம் என்பது இன்றைய இளையவர்களின் எழுச்சி என்பதை மறந்து அவர்களுக்கு பணம், ஆயுதம் மற்றும் போத்தல் கலாச்சாரத்தைப் போதித்து சமூகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவது போன்றன பெரும் பாவம் மற்றும் மடமையே! இத்தனை சீர்கேடுகளுக்கு மத்தியில் கட்டி எழுப்பப்படுகின்ற பௌதீக அபிவிருத்தி எனப்படுவது நிலையற்றது என்பது இங்கு வாழுகின்ற சில திடீர் அரசியல் ஞானிகளுக்குப் புரிய வாய்ப்பில்லைதான். அக்கரைப்பற்றுக்குள் காலில் விழுந்து, பல்லிளித்து அதாவின் அடிவருடிப் பிழைப்பு நடத்தியவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்தல் முடிவு கசப்பானதாக இருந்திருக்கும்! அக்கரைப்பற்றிலும் அதாவின் பிரதேசவாத மற்றும் காலில்விழுந்து பல்லிளித்து நடத்தும் அரசியல் கண்கூடாகிப்போனது! பிரதான வீதியிலிருந்து கடற்கரை வரையான, அவரது வாசஸ்தலமும் சொந்த பந்தங்களும் நிறைந்துவாழும் பகுதியை உள்ளடக்கிய அதாவது பொத்துவில் தொகுதியில் தலைவருக்கு பதினையாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன! அதே சமயம் பிரதான வீதிக்கு மேற்கே உள்ள அக்கரையூரின் பகுதியில் அதாவது சம்மாந்துறை தொகுதியில் தலைவர் ஏறத்தாழ நான்காயிரம் தொடக்கம் ஐந்தாயிரம் வாக்குகளையே பெற்றிருக்கிறார்! ஆக அக்கரைப்பற்று மக்களுக்குள்ளேயே சேர் பிரதேசவாதம் நடத்தியிருக்கிறார். இருக்கட்டும் அது அவரது அறிவுக்கெட்டிய அரசியல் சாணக்கியம் அல்லது அவர்களது பாஷையில் அரசியல் ஞானம். எனவே இக்கசப்பான தேர்தல் முடிவு என்பது அக்கரைப்பற்றின் புத்திஜீவிகளையோ, கசடறக் கற்ற மக்களையோ, சுயதிறமையில் நம்பிக்கையுள்ள மாணவர்களையோ, நேர்மையாகக் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களையோ, முயட்சியாளர்களையோ எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. ஊருக்குப் பிரதிநிதித்துவம் வேண்டிநிற்பது சிறுபிள்ளைத்தனம், அறிவார்த்தமற்ற செயல், இருப்பினும் ஊருக்குள் ஒரு பிரதிநிதித்துவம் இருப்பது பலமே தவிர பலவீனமல்ல. அவ்வாறான ஒரு பிரதிநித்துவம் இல்லாதுபோவதை விரும்புபவர்கலள்ளர் அக்கரைப்பற்று மக்கள் எனவேதான், தலைவர் அஷ்ராபினால் இரண்டாயிரமாம் வருடம் வேட்பாளர் பட்டியலில் அதாஉல்லாஹ் நிறுத்தப்பட்டபோது அவரை ஒரு பொருட்டாக நம்பி ஊருக்கு பிரதிநிதித்துவம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அப்பிரதிநிதித்துவம் அக்கரைப்பற்று மக்களால் மட்டும் பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல! 1, 3, 5 என தலைவர் அஷ்ரப் காட்டிய இலக்கை நோக்கி முழு திகாமடுல்ல மக்களும் இணைந்து பெற்ற வற்றி! ஆனால் அக்கரைப்பற்று மக்களின் பிரதிநிதித்துவம் இன்று சொல்கின்ற நம்பிக்கை துரோகத்தைக் கடந்த பதினைந்து வருடமாக அக்கரைப்பற்றுத் தவிர்ந்த முழு திகாமடுல்லைக்கும் இழைத்தது! நமக்கு, நமது ஊருக்கு இருந்த பலமே நமது பலவீனமாக மாறியது! நமது மக்களின் சிந்தனை செயல் நடவடிக்கைகள் அனைத்திலும் அந்த அரசியல் அதிகாரம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கை துரோகத்தின் பிரதிபலிப்பும் நல்லாட்சிக்கு நம் தங்கத் தலைவர் விடுத்த அச்சுறுத்தலுமே இந்த தேர்தல் முடிவின் வழிகோலி! ஆக தலைவர் தனது புதை குழியைத் தானே தேடிக்கொண்டார்! நாட்டுவழக்கில் சொல்லப்போனால் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டார்.

ஊரின் பலமா? அல்லது ஊரின் இருப்புக்கு உள்ள அச்சுறுத்தலா? என்ற இரு கேள்விகளுக்கிடையில் சிக்கித்தவித்த நாம், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கிற வாக்கில் இந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்! இது ரவூப் ஹக்கீமுக்கு கொடுத்த பச்சைக் கொடியல்ல! அதே நேரம் எமது பிரதிநிதித்துவத்தை இழக்கவேண்டும் என்று கொண்ட ஆசையுமல்ல! இது தற்காலிகமே! மஹிந்தவின் தாக்கமும், பதவி ரசமும், நாற்காலி மோகமும் என்று எமதூரை ஆட்டம்காண வைத்ததோ, அத்தோடு எமது தலைமை சரியில்லை என்றாயிப்போனது இன்று அத்தலைமை தோற்கடிக்கப்பட்டுவிட்டது! நன்று. இனி என்ன செய்யப்போகிறோம்? மேற்கூறிய அக்கரைப்பற்றின் நம்பிக்கைக்குரிய மக்கள் இத்தேர்தல் முடிவினால் பாதிக்கப்படாத நல்லவர்க்கள் அரசியல் என்ற அடையாளம் தவிர்த்து நாம் தொலைத்த எமதூருக்கான அடையாளங்கள் அனைத்தையும் மீளக்கட்டி எழுப்பத் தயாராக வேண்டும்! அக்கரைப்பற்றுக்கே உரிய பெருமையையும் தரத்தையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்! அதிபர்கள் பாடசாலைகளை நடத்தட்டும்! பள்ளித் தலைவர்களும் உலமாக்களும் பள்ளியையும் பள்ளி நிருவாகத்தையும் நடத்தட்டும், அரச அதிகாரிகள் தங்கள் அதிகாரங்களை செவ்வனே நிறைவேற்றட்டும், வைத்தியசாலைகள் வைத்தியர்களால் நடத்தப்படட்டும்! உடையவன் பாரா வேலை ஒருமுழம் கட்டை என்பதுபோலல்லாமல் அது அது நடக்கவேண்டிய முறையில் நன்றே நடக்கட்டும்! அதா அதா முறையிலின்றி! இனி வரும் ஐந்து ஆண்டுகள் நமக்கு ஒரு பரீட்சை நேரம், நமக்கான அடையாளத்தை நாம் தேடிக்கொள்ளவேண்டிய தருணம்! புறப்படுவோம்! உணவு, உடை, உறையுள், கல்வி, கலாசாரம், மானம், சுய பாதுகாப்பு என அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு காண்போம்! சமாதானமும் சகவாழ்க்கையும் சீரழிந்துபோக காரணமாயிருந்த அரசியல் இப்போது இல்லை! நமது தேவையை வென்றெடுக்க அரசியல் பிரதிநிதித்துவம்தான் வேண்டும் என்கின்ற காலம் மலையேறிவிட்டது! இதோ இணையம் எம் கையில், நல்லாட்சி எம்நாட்டில்! நல்லதை நினைப்போம், இறைவனுக்கு வழிப்படுவோம் நல்லதே நடக்கும்! அதாஉல்லாஹ்வும் வேண்டாம், ரவூப் ஹக்கீமும் வேண்டாம், ரிஷாத் பதியுதீனும் வேண்டாம், ஹரீசும் வேண்டாம், கவீந்திரன் கோடீஸ்வரனும் வேண்டாம், மன்சூரும் வேண்டாம், பைசால் காசிமும் வேண்டாம் இவர்களனைவரும் இத்தனைநாள் எமக்களித்த நல்லாட்சியின் சீர் நாமறிந்ததே! இவர்கள் யாருமே எமக்கு உபயோகப்படப்போவதில்லை! அல்லாஹ் ஒருவனே போதுமானவன்! அபிவிருத்திக்காற்று காய்ச்சலாக மாறி இன்று மூச்சுத்திணறலை ஏற்படுத்தியிருக்கின்றது! அது மாரடைப்பாக மாற முன்னர் நாம் விழித்துக்கொண்டதே பெரிய விடயம்! அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய பல்லிளித்து கால்பிடித்து அடிவருடும் அரசியல் இல்லாதொழியட்டும்! ஊரின்மீது அக்கறையிருந்தால் மட்டும் போதாது! கொஞ்சம் அறிவும் வேண்டும்! இனி அக்கரைப்பற்றில் எல்லோரும் ஆக்சிஜனைச் சுவாசிக்கட்டும்!