12 - அக்டோபர் - 2012 முகநூலில் எழுதியதின் மீள்பதிவு
இவ்விடத்தை விவரித்தால், இத்திரைப்படத்தின் சுவாரஸ்யம் மங்கலாம், இருப்பினும், இப்பதிவு, இத்திரைப்படத்தை நோக்கி அல்ல.
சிம்பத்தி பார் மிஸ்டர் வென்ஜென்ஸ் (Sympathy for Mr Vengeance — 2005) என்னும் கொரிய திரைப்படத்தில், ஒரு சிறிய ஆறு/ஓடையின், ஒழுங்கற்ற மரப் பாலத்தின் மேல் ஓடும் சிறுமி, தவறி தண்ணீரில் விழுந்து இறக்கிறாள்.
ஒரு வாரத்துக்கு முன்னமே, இந்த படத்தை பார்த்த போது, இப்பதிவை எழுதனும்னு நினைத்தேன், அப்படியே கிடப்பில் விட்டுட்டேன், நான் தருமபுரியில் வசித்த போது, 10–12 வயதுடைய சிறுவன் நீச்சல் குளத்தில் உயிரிழந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது, உடன் இந்த பதிவை எழுதுகிறேன்.
தந்தை அரை உறக்கத்தில் நினைவுகளில் ஒடிந்துக் கிடக்கிறான், அவன் முன்னே நனைந்த ஈரத்துடன் தென்படுகிறாள், தந்தை அவளருகில் சென்று, தூக்கி அனைத்துக் கொள்கிறான், அவன் காலில் மேல், சொட்டும் நீர் விழுகிறது. ”அப்பா, எனக்கு ஏன் நீச்சல் பாடம் கொடுக்கவில்லை?”, என அம்மழலையின் சாயலில் கேட்கிறது பிள்ளை. (கொரிய மொழியில் அப்பா என்றே தெளிவாக உச்சரிக்கப்படுகிறது, மற்றவைகள் ஆங்கில் சப் டைட்டில்ஸ் தான்) அழுகையை தவிர பதில் ஏதும் இல்லை, தந்தையிடம்.
2008–2009 வாக்கில், ராஜாஜி (அரசு) நீச்சல் குளத்தில், கோடை விடுமுறையின் போது, 10–12 வயதுடைய சிறுவன் இறந்துவிடுகிறான், 3–4 அடி ஆழ அளவில் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று, சாய்வாக 12 அடி ஆழம் வரை நீண்டு இருந்தது அந்நீச்சல் குளம். நீச்சல் தெரியாதவர்கள் அந்த குறிப்பிட்ட தூரத்தில் குளிப்பார்கள், கற்றுக் கொள்வார்கள், இது பொதுவாக அறிந்த தகவல், ஏன் அவன் காப்பாற்ற படவில்லை / காப்பாற்ற படமுடியவில்லை என்கிற தகவல் முழுமையாக எனக்கு தெரியவில்லை. அவன் ஆழம் குறைவனா இடத்தில் தான் இறந்தான் என சொல்லியாதாக நினைவு, அல்ல ஆழமான இடத்தில் இறந்தானா என்று தெரியாது. ஆழமான இடமாக இருந்திருந்தால் காப்பாற்றுவது சற்று கடினமாக இருக்கும். அதன் பின் அந்த நீச்சள் குளம் சீரமைக்கப்பட்டது (!?) 6 அடி வரை தான் அதிகபட்ச ஆழமாக கொண்டு வரப்பட்டது, உயிர் கவசம் (Life Jacket) எல்லாம் வாங்கி வைத்தார்கள்.
ஆழமான இடத்தில் காப்பாற்றுவது பயிற்ச்சி பெற்றவர்களோ / மூழ்குபவர்கள் ஒத்துழைத்தால் காப்பாற்றலாம், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது, அதை நானே அனுபவித்திருக்கிறேன். 10-ம் வகுப்பு படிக்கும் போது, நாங்க குடியிருந்த பகுதியில் ஒரு கினறு இருந்தது, அந்த பகுதி பசங்க எல்லாம் அங்கு தான் நீச்சல் அடிப்போம், ஒரு முறை மோகன் என்பவன், அப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறான், சுமார் 10 அடி உள்ள தூரத்திற்க்கு மட்டும் அங்கிங்கு அடித்து கற்றுக் கொண்டிருந்தான், மற்றவர்கள் எல்லாம் நீச்சல் அடித்து விட்டு வெளியேறினர், உள்ளே சுமார் 4 பேர் மட்டும் இருந்தோம், அந்த பொழுது, நான் மட்டும் தான் நீரில் இருந்தேன், யாரும் இல்லாதால், மோகன், கிணற்றின் இந்த முனையிலிருந்து, அந்த முனைக்கு போக ஆசை பட்டான், சரி என்றார்கள், நான் தண்ணீரிலே இருந்ததால், அவனுடனே சற்று தள்ளி போக சொன்னார்கள்.
இவனும் பாதி தூரம் சரியாக தான் வந்தான், அதன் பின் கத்த ஆரம்பித்து விட்டான், அவனூடே தான் நானும் சென்றுக் கொண்டிருந்தேன், அவன் இரு கைகளையும் என் கழுத்தில் போட்டு விரல்களை நன்றாக பின்னிக் கொண்டான், மேலிருந்த கால்கள் உள்ளே சென்று விட்டது, என் கால்களையும் அவன் கால்களால் பின்னிக் கொண்டான், காலை அசைக்க முடியவில்லை எடை உள்ளே இழுக்கிறது, இருவரும் மூழ்கிறோம், அவன் தலை உள்ளே சென்று விட்டது, என் தலையும் உள்ளே போகிறது, அவன் தாடையின் அடியில் என் கைகளை வைத்து மேலே தள்ளுகிறேன், மேலே வருகிறோம், அனைவரும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மீண்டும் மூழ்குகிறோம், மீண்டும் அந்த சிறிது நேர போராட்டத்திற்க்கு பிறகு, பக்கத்து பாறையை பிடித்தேன், அவன் என்னை விட்டு விட்டு கல்லை பிடித்துக் கொண்டான், மோகனுக்கு இடது பக்கம் நானிருக்கிறேன், அவனுக்கு வலது பக்கம் வேறொருவன் இருந்தான் (அவன் பெயர் நினைவில்லை) அவன் செய்த அடுத்த முட்டாள் தனம், அப்படியே உடனடியாக அந்த கரைக்கு போயிடுன்னு, மோகனை தள்ளிவிட்டான், இவன் கூடவே என்னையும் இழுத்துக் கொண்டான், அதே போல், கைகளையும் கால்களையும் பின்னிக் கொண்டான், மீண்டும் அந்த நிமிட போராட்டதில், கல்லை பிடித்தோம். எல்லோருக்கும் அப்ப தான் முச்சே வந்தது, ரண்டு பேரும் காலி ஆயிடுவோம்ன்னு நினைச்சிட்டாங்க. அந்த பக்கத்திலேயே கல்லை பிடித்து ஏறி நின்றுக் கொண்டான்.
அப்போதிய மனநிலைக்கு விட்டா போதும்ன்னு இந்த கரைக்கு வந்துட்டேன். அப்பறம் இரண்டு அண்ணன்கள் குதித்து, இரண்டு பக்கமும் அவன் தோள் பக்கத்தில் கைகளை பிடித்து இந்த பக்கம் கொண்டு வந்து சேர்த்தனர். சிறிது காலத்துக்கு யாரும் அந்த கினத்து பக்கம் போகவே இல்ல. இத யாரும் அவங்கவங்க வீட்ல சொல்லல, இதுவரைக்கும் கூட இதை நான் எங்க வீட்ல சொல்லல, ஒரு சில நண்பர்களுக்கு தெரியும். ஒரு வேளை இன்னும் ஆழமாக இழுக்கப்பட்டுருந்தால், அவன் கைகளையும், கால்களையும் பிரித்துவிட்டு நான் மட்டும் மேலே வந்திருப்பேனா, இல்ல நானும் மூழ்கியிருப்பேனா என்று தெரியல, ஆனால் அந்த கனப் பொழுதுகள் இப்ப நினைச்சாலும் நல்லா நினைவிருக்கு, காலப் போக்கில மறந்திடுறோம், ஏதோ ஒரு சூழல்ல அது நினைவுடுத்தப் படுகிறது.
இன்னொரு முக்கியமான, மரணத்தின் அருகே செல்லுதல் (Near death Experience) அனுபவம் இருக்கு, அவினாசி — கோவை சாலை பயணம், இது நிறைய பேருக்கு இருந்திருக்கும், வெகு நாட்களுக்கு முன்னாடி, பஸ்ல பயணம் செஞ்சப்ப, மறக்க முடியாத in(ac)cident இந்த சாலையில இருக்குன்னு, பதிவு போட்டிருக்கேன். மற்றும் சில தகவல்களைச் சார்ந்து வேறொரு பதிவில் Near Death — மனம், பற்றி எழுதுகிறேன். அதுக்கப்பறம் நாங்க வேறொரு பகுதிக்கு குடி போயிட்டோம், அதன் பின் அவனை பார்க்க நேர்ந்த சமயங்கள்ல, அண்ணா, இப்ப நான் ஒழுங்கா நீச்சல் கத்துக்கிட்டே ண்ணா ன்னு சொன்னான், கத்துக்கிட்டிருந்தா சந்தோஷம்பா, அவ்வளவு தான் நம்ம பதில்!
நான் நீச்சல் கத்துக்கிட்டது எல்லாம் கொடுமை, சின்ன வயசிலே ஆரம்பித்தாலும், சுர புருடை பழகினதுனால, அதில்லாம அடிக்கவே மாட்டேன்னு, மூனு வருஷம் அதை வைத்தே அடித்தேன். சுர புருடை — காய்ந்த சுரக்காயை, புருடை என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு, அந்தந்த பகுதிக்கு ஏற்ப வேற பெயர் இருக்கலாம். இந்த காய்ந்த சுரக்காயின் மேல்பகுதி கெட்டியான ஓடு போல் இருக்கும் (Strong Shell), அதனை கயிறுடன் பின்னி, நம் இடுப்பில் கட்டிக் கொண்டால், Life Jacket போன்று மிதக்க வைக்கும், அந்த ஓடு உடைந்தால், காற்று வெளியேறி விடும், பின் நீர் உள்ளே சென்று மூழ்க ஆரம்பிக்கும், கவனமில்லாமல், நிச்சல் தெரியாமல் இருந்தால் நாமும் மூழ்க வேண்டியது தான், பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் உடையாது. அப்பறம் கிட்டதட்ட நாலாவது படிக்கும் போது தான், முழுமையாக எந்த துனையும் இல்லாம கத்துக் கிட்டேன். தீண்டல் விளையாட்டு எல்லாம் விளையாடுவாங்க, அந்தளவுக்கு நாம போகல, சொருகல் (Dive) அடிக்க முயற்ச்சி செய்து, பலமுறை பலத்த அடி வாங்கியது தான் மிச்சம். இந்த கல்லறை தீவு படத்தில் (Pirates of the Caribbean படத்தின் தமிழ் பெயர் :P) நம்ம ஜேக் ஸ்பேரோ, (மன்னிக்கவும் Captain jack Sparrow) அடிக்கிற டைவ் வ பார்த்து, நாமும் என்னைக்காவது ஒரு நாள் இந்த மாதிறி குதிக்கனும்னு ஆச இருக்கு! ஒரு சில பேர் எவ்வளவு உயரத்தில இருந்து குதித்தாலும், உடனடியா மேல வந்திருவாங்க, நான் மேல வருவதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். ஹொகேனக்கல் நீர்விழ்ச்சியில், ஒரு பகுதியில், கீழே பரிசலில் மக்கள் செல்வர், மேலிருந்து சிறுவர்கள் குதிப்பார்கள், பரிசலில் போகும் மக்கள் அவர்களுக்கு பணம் தருவர். அங்கு போகும் போதெல்லாம், நானும் அங்கிருந்து குதிக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு! ராவணன் படத்தில் விக்ரம் குதிக்கும் அந்த இடமே.
என் கிராமத்தில், அப்பா வயதுடைய உறவினர் ஒருவர், திருமணமாகி ஒரு குழந்தை, தவறி கிணற்றில் விழுந்து, நீச்சல் தெரியாதல் இறந்துவிட்டார், அக்காலத்தில் நீச்சல் கற்காமல் இருந்தார்கள் என்பது மிக சொற்பம். இதை தட்டச்சு அடிக்கும் இப்பொழுதில் உதிரிப் பூக்கள் படம் நினைவுக்கு வருகிறது. தவறி விழுந்தவர்களை, மயிறை பிடித்து தான் இழுத்து வர வேண்டும் என்றும், அரைஞான் கயிறை பிடித்தும் இழுத்து வருவார்கள் என்று அப்பா சொல்லியிருக்கிறார். அவர்கள் பயத்தில் நம் கைகளை, காலை, உடம்பை பிடிக்க முயல்வர், அது தான் எனக்கு நிகழ்ந்தது. இது போன்ற சூழல்களில் எவ்வாறு கையாள்வது போன்றவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நானே எனக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாம் நீச்சல் போட்டிகளுக்கு எல்லாம் போக தேவையில்லை, தவறி விழுந்தால், கரை சேர்ந்தால் போதும். நீச்சல் அடிப்படை உயிர்காப்பு தேவை. இவ்விடத்தில் தான் முக்கியமான ஒரு தகவல் இருக்கிறது. எந்த உயிரினத்திற்க்கும் யாரும் நிச்சல் கற்றுக் கொடுக்கவில்லை, அது அடிப்படை இயல்பு, வெகு நாட்களுக்கு முன் டிஸ்கவரி / நேஷ்னல் ஜியாகரபி சேனனில் பார்த்திருப்பதாக நினைவு, ஆனால் அதனை சுத்தமாக மறந்துவிட்டேன். Amelie என்கிற பிரெஞ்ச் படத்தை சில வருடங்களுக்கு முன்னமே, சில முறை பார்த்திருக்கிறேன், மீண்டும் சமீபத்தில் பார்த்த போது தான், இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து, அதையும் கிடப்பில் போட்டிருந்தேன். அதாவது, அதில் ஒரு காட்சிக் கோர்வை வரும், பிறந்த / பிறந்து சில நாட்கள்/ மாதங்கள் ஆன குழந்தைகளை நீரில் விட்டால், அது தானாக நீந்திச் செல்கிறது. அச்சமயத்தில் அது இயல்பாகவே (Instinct) நிகழ்கிறது, புலன்கள் விரிவடைந்து ஆறாம் அறிவிற்க்கு வரும் போது, பயம் தொற்றிக் கொள்கிறது. நீச்சல் கத்துக்கனும்னா முதல்ல பயத்த விட்டிரு, அப்படின்னு அப்பா சொல்லுவார், பள்ளி காலத்தில் வேறொரு நண்பன், எடுத்த எடுப்பிலேயே, சொல்வதை வாங்கிக் கொண்டு நீச்சல் அடிக்க அரம்பித்துவிட்டான், பொதுவாகவே அவனுக்கு பல விஷயங்களில் பயம் கிடையாது. கல்லூரி படிக்கும் காலத்தில், தருமபுரி நீச்சல் குளத்திற்க்கு சென்ற போது, ஒன்பதாம் வகுப்பில் வேதியல் பாடம் எடுத்த ஆசிரியர் வந்திருந்தார், அவர் அக்கோடை விடுமுறையில் தான் கற்றுக் கொண்டுடார்.
ஆகைவே நண்பர்களே/உறவுகளே, யாருக்கேனும் நீச்சல் தெரியவில்லை எனில், வயதை பார்க்காமல், தயங்காமல், சரியான தகவலோடு / உதவியோடு கற்றுக் கொள்ளவும், எக்காரணத்திற்க்கு கொண்டும் தள்ளிப் போட வேண்டாம். இங்கு பெரும்பான்மையான பெண்கள் கற்றுக் கொள்வதில்லை, பெண்களுக்கும் என் தாழ்மையான கருத்து, குழந்தைகளுக்கும் மறவாமல் கற்றுக் கொடுக்கவும். யூடியூபை தட்டினால் பல அடிப்படை தகவல்கள் கிடைக்கும், இருப்பினும் யாரேனும் உதவியோடு கற்றுக் கொள்ளவும். அந்த அடிப்படை முறைகள், விரைவாக, சுலபமாக கற்றுக் கொள்ள உதவிப் புரியலாம். நன்றி!