
எங்களுக்கு அழிவில்லை
Jul 29, 2017 · 1 min read
எங்கள் உயிர்கள் விதையாக
உடல்கள் உரமாக
குருதி நீராக
விதைத்த எம் பூமியிலிருந்து
உங்கள் வெறுப்புகள்
வெப்பமாக
உங்கள் வன்முறைகள்
வெளிச்சமாக
எங்கள் வளர்ச்சிக்கு வித்திடும்
எங்கள் மார்புகளில் சுட்டாலும்
எங்கள் மரபுகள் என்றும் அழியா
எங்கள் முதுகுகளில் குத்தினாலும்
எங்கள் முன்னேற்றங்கள் என்றும் தீரா
எங்களை புதைத்தால்
எங்கள் மண்ணோடு மண்ணாக
நாங்கள் கலந்திடுவோம்
எங்களை எரித்தால்
எங்கள் காற்றோடு காற்றாக
நாங்கள் கரைந்திடுவோம்
எங்கள் மண்ணிலிருந்தும்
எங்கள் காற்றிலிருந்தும்
எங்களை உம்மால் பிரிக்க முடியுமா?
எங்களுக்கு அழிவில்லை
-டினு
