என் தாய்கள்


பெற்ற தாய் 
ஒன்றெனினும் 
மற்ற தாய்கள் 
இன்றுபல எனக்குண்டு


பெரிய உருவங்கள் கொண்ட 
பெரிய-அம்மாக்களும் அத்தைகளும் 
எத்தனை எத்தனை 
பெரிய உருவங்களை விடவும்
பெரிய உள்ளங்கள் படைத்தவர்கள்

கறியும் நெறியும் 
ஊட்டி வளர்த்தவர்கள் 
இந்த தாய்கள்


இரத்த பந்தம் இல்லாவிடினும் 
தங்கள் வயிற்றில் பிறந்தவனாகவே நடத்தும் 
என் நண்பர்களின் தாய்களின் 
அக்கறைக்கும் 
அடைக்கலத்திற்கும் 
தீரா கடமை பட்டிருக்கிறேன்

பரிவும் பாசமும் 
பொங்கும் ஊற்றாய் திகழ்பவர்கள் 
இந்த தாய்கள்


ஆயிரமாயிரம் பிள்ளைகளில் 
ஒருவனாக இருந்த போதும் 
முழுமையாக கவனித்த
ஆசிரியர்கள் 
வாழ்க்கைக்கு வழிகாட்டி 
வளர்ச்சிக்கு காரணமாயிருந்தும் 
வெற்றிகளில் பங்கு கொள்ளாமலேயே 
பூரிப்பும் பெருமையும் கொள்ளும் குணம் 
தாய்மை அன்று வேறேது

அறிவும் ஆற்றலும் 
புகட்டி வளர்த்தவர்கள் 
இந்த தாய்கள்


வரும் காலத்தில் 
என் குழந்தைகளுக்கும் 
(எனக்கும்)
தாயாக அமையப்போகிறவள் 
இத்தனை நாள் 
வளர்த்த தாயிடமிருந்து 
பொறுப்பை ஏற்று 
இதன் பிறகு என்னை 
வளர்க்கபோகிறவள்

அவளும் என் தாயே!


நான் கற்றுக்கொடுப்பதைவிட 
அதிகம் 
எனக்கு கற்றுக்கொடுக்கப்போகிறவள்
அவள் அரவணைப்புகளிலும் 
அன்புமுத்தங்களிலும் 
மீண்டும் 
தாய்மையை புதிதாய் 
உணர்த்த போகிறவள்

என் மகளும் என் தாயே!


ஈன்றெடுத்தவளுக்கோ 
மாய சக்திகளும் பலவுண்டு

என்னாலேயே புரிந்துகொள்ள முடியாத 
என்னை 
புரியும் அருமை

சிறு கல் குத்தினாலும்
கடல் கடந்த தூரத்திலிருந்தும் 
உணர்ந்து துடிக்கும் நெஞ்சம்

கேட்காமலேயே என்
ஆசைகளை 
அறியும் ஆற்றல்

எல்லா பிரச்சனைகளையும் 
மறக்க வைத்துவிடும் 
மடி

எல்லா நினைவுகளிலும் 
ஊடுருவும் 
சேலை வாசம்

இத்தனை தாய்களும் 
எனக்கமைய 
காரணமாய் இருந்த 
முதற் தாய்


எத்தனை எத்தனை 
தாய்கள் 
எனக்கு

என்ன
தவங்கள் செய்தேனோ 
இதற்கு

-டினு