மகாபாரத்தின் சூத்ரதாரி பகவான் ஸ்ரீ ‪கிருஷ்ணர்‬ தானே?

-ஆனந்தன் அமிர்தன்

கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் கண்ணன் தீட்டிய திட்டம், நெத்தியடி திட்டம் என்ற பாராட்டைப் பெறும்?

1) ‪#‎பீஷ்மர்‬ 2) ‪#‎துரோணர்‬ 3) கர்ணன் 4) ஜயத்ரதன் 5) துரியோதனன் 6) ‪#‎விதுரர்‬ ‪#‎மகாபாரதம்‬ .

********************************************************************************************

மகாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.

இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்? ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் கண்ணனின் ‘வேலை’ இருந்திருக்கிறது. கண்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.

அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் கண்ணன் தீட்டிய திட்டம்பிளான் தான் ‘சிறப்பு வாய்ந்ததாக ’ என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது ’ என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் – இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.

ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான். இது என்ன புதுக் கதை? விதுரர் எங்கே சண்டை போட்டார்? அவரை வீழ்த்தக் கண்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்?

கேள்விக்கு விடை சொல்லும் முன் ஒரு முன்னிகழ்ச்சி.

யார் இந்த விதுரர்?

விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் ஒன்றவிட்ட சகோதரன் என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும்.

மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது பாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது. அவர் மகாவீரர்கூட. அவருடைய வில் அவர் கையில் இருக்கும்வரை அவரை யாரும் வீழ்த்த முடியாது என்பதும் பிரசித்தமான விஷயம்.

இந்த விதுரருடைய பூர்வாசிரமக் கதை என்ன?

மாண்டவ்யர் என்பவர் ஒரு பெரிய ரிஷி. ஒரு நாள், சில திருடர்கள் அவர் முன் அரண்மனையிலிருந்து களவாடிய பொருள்களைப் போட்டுவிட்டு அவருடைய ஆசிரமத்தில் ஒளிந்துகொண்டனர். அரசருடைய ஆட்கள் அங்கு வந்து அவர் சமாதியில் பேசாமல் இருப்பதைப் பார்த்து அவர் பாசாங்கு செய்வதாக நினைத்து அவரையும் மற்ற திருடர்களையும், களவு சாமான்களுடன் அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள்.

அரசனுக்குத் தகவல் சொன்னார்கள். அரசனும் தீர விசாரிக்காமலேயே யாவரையும் கழுமரத்தில் ஏற்றச் சொல்லிவிட்டான். எல்லாத் திருடர்களும் இறந்தனர். ஆனால் மாண்டவ்யரோ தன் யோக பலத்தினால் உயிருடன் இருந்தார். அரசன் இதைக் கேள்விப்பட்டு உடனே அவரை விடுவிக்கச் சொன்னான். காவலாளர்களால் அவரை கழுமரத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை.

அதனால் தலைக்கு மேலேயும் ஆசனத்துக்கு கீழேயும் இருந்த பகுதியை வெட்டி எடுத்தனர். அதனாலேயே அவருக்கு ஆணி மாண்டவ்யர் என்று பெயர் வந்தது.

மாண்டவ்யர் அரசனிடம் கோபப்படாமல் நேரே எமதர்ம ராஜனிடன் சென்று, “எனக்கேன் இப்படி ஒரு தண்டனை? நான் என்ன பாபம் செய்தேன்?” என்று கேட்டார். எமன் சொன்னார், “ரிஷியே, நீர் சின்ன வயதில் ஈக்களைக் கொன்று ஒரு குச்சியில் கோத்து விளையாடுவீர்.

நீர் செய்த ஜீவ இம்சைக்குத்தான் இந்த தண்டனை” என்றார்.

ரிஷிக்கு மகா கோபம் வந்துவிட்டது. “தர்மராஜரே, நீர் தருமத்தின் காவலர். உமக்குத் தெரியாதா? தண்டனை கொடுக்கும் முன் குற்றவாளியின் வயது, அவனுடைய அறிவுத்திறன் அறிந்து குற்றத்திற்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்பது நியதி.

நான் செய்தது அறியாப் பருவத்தில். என் குற்றத்திற்கு நீர் அளித்தது பெரிய தண்டனை. நீர் தருமத்திலிருந்து தவறிவிட்டீர். இதோ நான் உமக்கு ஒரு சாபமிடுகிறேன். நீர் பூலோகத்தில் மானிடனாகப் பிறந்து நான் பட்ட அவமானத்தைவிட நூறு மடங்கு அவமானத்தை அடைவீர்” என்று சாபமிட்டார்.

அந்த சாபத்தின் பாதிப்பு தான், எமதர்மராஜர் விதுரராகப் பிறந்தது.

இப்போது, மறுபடியும் கதைக்கு வருவோம்.

கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் கண்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ‘பலவீனம் ’. பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட முடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம். கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி.

மனு சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும், மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா?

திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள். அதற்கான தண்டனை – யுத்தத்தில் மரணம்.

விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்?

விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும்.

மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை-தர்மராஜர் – சமநிலை சரியாக வராதே?

எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் – பீஷ்மர், துரோணர் – போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா?

விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை. மகாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது. எப்படி தடுப்பது?

கண்ணனின் ‘பெருந்திட்டம் ’ :::: கிருஷ்ணர், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், அதாவது சாதரணமான மனித உளவியலை நன்கு பயன்படுத்தி செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, கிருஷணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான்.

அவன் வருகிறான் என்று தெரிந்து திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார். சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, கிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.

கிருஷ்ணரோ, “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன் இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார்.

விதுரருக்கு மகா சந்தோஷம். தன் பிரியமான கண்ணன் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது – விதுரருக்கும் கிருஷ்ணருக்கும். மறுநாள், அரச சபையில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக தாடினான். துரியோதனன் ஒரு ஊசி குத்தும் நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான்.

கிருஷ்ணனும் ‘யுத்தம் நிச்சயம்’ என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். திரும்பும்முன், கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். “சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான்.

கண்ணன் சொன்னார், “என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.

கண்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கண்ணன் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது. ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு. அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கண்ணனைத் தன் வீட்டில் உபசரணைசெய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக்கொண்டுவந்தது.

என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். (மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்துவிட்டது)

விதுரருக்கு கோபம், வருத்தம் சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.

“எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கிகொண்டிருக்கிறது. என்னை அவமானப்படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார். யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை.

கண்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா?

அவரை வெல்ல, பாண்டவர்கள் கட்சியில் யாராவது இருக்கிறார்களா? பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்குமா?

இதுதான் கண்ணனுடைய பெருந்திட்டம்!! கடைசியில் அந்த திட்டத்தில் வெற்றியும் பெற்றார்.

மகாபாரத்தின் சூத்ரதாரி பகவான் ஸ்ரீ ‪#‎கிருஷ்ணர்‬ தானே?

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.