அது எங்கட காலம் – நூல் அறிமுகம்

இணையத்தில் ஏற்கனவே ஊர் பற்றி எழுதியவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடப்போகிறேன். தலைப்பாக நல்ல பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன். தலைப்பு ஊர்நினைவுகளை ஞாபகப்படுத்துவதாக இருக்க வேண்டும் என சிலகாலங்களுக்கு முன் டிவிட்டரில் கேட்டுக்கொண்டார் கானா பிரபா. பலரும் பலதை பிரேரிக்க கடைசியில் ‘அது எங்கட காலம்’ தலைப்புடன் வந்தார். இது மிகவும் பொருத்தமான தலைப்பென்றே சொல்வேன்.

கானா பிரபாவை 2007 இல் எனக்கு அறிமுகப்படுத்தியது உலாத்தல், மடத்துவாசல், றேடியோஸ்பதி இணையப் பக்கங்கள் தான். இயல்பாகவே பாடல்களிலும் உலாத்தலிலும் அலாதிப் பிரியம் கொண்ட எனக்கு இவரின் பக்கங்கள் உடனே பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை. ஊர் நினைவுகளை வாரி வழங்கும் மடத்துவாசல் பதிவுகளை வெளிநாட்டில் இருந்து வாசிக்கும் போது ஊர் வரை கை பிடித்து அழைத்துச் செல்வது போன்ற உணர்வு எழும்.

இந்தப் புத்தகம் எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இருந்த யுத்த சூழ்நிலையையும் ஆசிரியரது வாழ்வின் மகிழ்ச்சியான குடும்ப நினைவுகள், சேர்ந்து கொண்டாடிய பண்டிகைகள் பற்றிய நினைவுகள், மனதுக்கு நெருக்கமானவர்களின் நினைவுகள் என பலதையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே இந்தப் பதிவுகளை இணையத்தில் வாசித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும் போது பலதை நினைத்து சிரித்து மகிழவும் சோகங்கள் சிலதை நினைத்து கலங்கவும் வைத்துவிடுகிறது.

ஒரு புத்தகம் நல்ல புத்தகமா இல்லையா என்பதை தீர்மானிக்க போவது நீங்களும் உங்களது திறந்த மனதுமே. அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக்கூடியது என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். ஊர் நினைவுகளை மீட்டும் எந்தப்புத்தகத்தையும் வாங்கவும் வாசிக்கவும் விரும்பும் என்னைப்போன்ற பலருக்கு இந்தப்புத்தகம் ஒரு பொக்கிஷம் தான். பண்டிகைகளை, கூட்டுக்குடும்பங்களை மறந்து போகும் அடுத்த தலைமுறைக்கு இது போன்ற புத்தகங்கள் தான் நாம் வாழ்ந்த வாழ்க்கையை, மகிழ்ந்த தருணங்களை, பட்ட துன்பங்களை எடுத்துச் சொல்லும் என நான் நினைக்கிறேன்.

முன்பெல்லாம் பாட்டியிடம் கதை கேட்பது இயல்பாக இடம்பெறும் ஒரு அன்றாட நிகழ்வு. பெரும்பாலும் அவர்கள் காலத்து நிகழ்வுகளை அழகாக தொகுத்துச் சொல்லும் சிறந்த கதைசொல்லிகளாக இருந்தார்கள். இயந்திரத்தனமான வாழ்க்கையில், மூச்சு முட்டும் வீட்டுப்பாடங்களுக்கு மத்தியில் நான் பார்த்தவரை இப்போதெல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு அமைவதில்லை. இவை போன்ற எளிய, ஊர் வழக்கில் எழுதப்படும் புத்தகங்கள் தான் நாளைய சமுதாயம் தம் அடியை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

ஆசிரியரின் குறும்புகளை, விவரிக்கப்படும் சம்பவங்களிலும் வர்ணனைகளிலும் ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் இந்தப் புத்தகம் அன்றைய யாழ்ப்பாணத்தை தரிசிக்க விரும்புகிறவர்கள் தவறாமல் வாசிக்க வேண்டியது.

Like what you read? Give கரிகாலன் a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.