ஊடகங்கள் – அறியாமையும் ஆணவப்போக்கும்…

‘அவனை நிறுத்தச்சொல் நான் நிறுத்துறன்…’ எல்லோருக்கும் பழகிப்போன பிரபலமான தமிழ் சினிமா வசனம் இது. இன்றைய காலகட்டத்தில் இந்தப்படம் வந்திருந்தால் இந்த வசனம் ‘அவனை நிறுத்தச்சொல்’ என்பதாக பாதியாகியிருக்குமென ஊகிக்கிறேன்.

அடுத்தவன் பிழையை தேடிக்கண்டுபிடிப்பதில் இருக்கிற ஆர்வம் தன்பிழையை திருத்துவதிலோ ஏற்றுக்கொள்வதிலோ காணக்கிடைப்பதில்லை. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல் இப்போதெல்லாம் ஒலிவாங்கியை/ பேனாவை தூக்கியவனெல்லாம் ஊடகவியலாளன் என்றான பின் தொடரும் பெரும் அவலநிலை இது.

படம்: இணையம்

எதுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, எதை புறக்கணிப்பது என முடிவெடுத்து சமூகக் கண்ணோட்டத்துடன் செயல்படும் ஊடகவியலாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஊடக நிறுவனங்கள் அரசையும் பெருநிறுவனங்களையும் சார்ந்து இலாபநோக்கில் இயங்கும் நிறுவனங்களான பின், சமூகப்பொறுப்பு என்பது வெறும் கண்துடைப்பே. செய்திகளை முந்திக்கொண்டு தருவது மட்டுமல்ல, உண்மைச்செய்திகளை, சமூகத்துக்கு தேவையான செய்திகளை தருவதும் கடமையாய் இருக்கவேண்டும் என்பதை பெரும்பாலும் மறந்தேவிடுகிறார்கள்.

இப்போதெல்லாம் அடிக்கடி அச்சு ஊடக தலைப்புச்செய்திகளோ இலத்திரனியல் ஊடக தலைப்புச்செய்திகளோ முகத்தில் புன்முறுவலையும் கவலையும் ஒருசேர வரவழைக்க தவறுவதில்லை. ஊடகநிறுவனத்தை சந்தைப்படுத்த, மக்களை தம் பக்கம் இழுக்கவென, என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய தயாராகிவிட்டார்கள். அரை அவியல்தனமாக, தொ(ல்)லைக்காட்சி விவாதங்கள் என்கிற பெயரில் நடக்கும் நேரலை கூத்துகள் ஒருபக்கமெண்டால் அவற்றை வைத்து சமூகவலைத்தளங்களில் நடக்கும் குத்துவெட்டுகள் இன்னொருபக்கம்.

ஆங்காங்கே முளைக்கும் புல்லுருவிகளையும் காளான்களையும் இலவசமாக சந்தைப்படுத்தி அவர்களை வளர்த்துவிட்டு ‘குத்துதே குடையுதே’ நிலைக்கு கொண்டுவருவதையே வேலையாக வைத்திருக்கும் ஊடக நிறுவனங்கள் சாபக்கேடு. எதிர்மறை பிரபல்யம் விரும்புபவர்களையும் வளர்த்து விட்டு அவர்களுக்குரிய ஊடகவெளியை ஏற்படுத்தி மக்களுக்கு சந்தைப்படுத்துவதன் மூலம் தேவையான முக்கியமான விசயங்கள் அளவுக்கதிகமான தேவையற்ற தகவல் வழங்கல் மூலம் அடிபட்டுப் போய்விடுகின்றன. இதை உணரும் நிலையில் யாரும் இல்லை. இங்கு எல்லாமே இலாப நோக்கில் தான் இயங்குகின்றன. இதையெல்லாம் மறந்து யாராவது பெரும் ஊடகநிறுவனங்கள் மக்களுக்காக இயங்குகின்றன என கூறினால் சிரித்துவிட்டு கடந்து செல்வதைத் தவிர வேறுவழியில்லை.

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு அரசியல் கோட்பாடு இருக்கும். அதை மறுப்பதற்கில்லை. அதை தாண்டி எவ்வளவு தூரம் நியாயமாக செயற்பட முடிகிறதென்பதிலேயே அவ்வூடக நிறுவனத்தின் நன்மதிப்பு எடை போடப்படுகிறது.

Like what you read? Give கரிகாலன் a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.