மக்கள் பிரதிநிதிகள்!
மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் என்பன மத்திய ஆட்சியின் தொடர்ச்சியாக மாகாண, பிரதேச ரீதியாக அதிகாரங்களை சிறு அளவில் பகிர்ந்து கொண்டுள்ளன. இலங்கை முழுவதும் இச்சொற்ப அதிகாரங்களை வைத்து வினைத்திறனாக கடமையாற்றும் சபைகளை இலகுவில் கணக்கெடுத்துவிடலாம்.
வட-கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் சபைகள் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் போருக்கு பின்னரான மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள். அதிலும் வடக்கு மாகாண சபை மீது மக்கள் கொண்ட நம்பிக்கைக்கு காரணம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதல்வராக நிறுத்தப்பட்டமை ஆகும்.
கடந்த மூன்றாண்டுகளில் மாகாண சபையில் இனப்படுகொலை உட்பட பல அரசியல் தீர்மானங்களும் சில நியதிச்சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவையெல்லாவற்றுக்கும் மேலாக மாகாண சபையில் ஆளுங்கட்சிக்குள் குழிபறிப்புகளும், குழுக்களும் வேறெங்கும் காணாத வகையில் நீறுபூத்த நெருப்பாக இன்றுவரை இருக்கிறது. கடந்த சில அமர்வுகளை உற்றுநோக்கினால் இது மீளவே திரும்ப முடியாத ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவே எண்ணத்தோன்றுகிறது.
இந்த விடயத்தில் முதலாவதாக முதலமைச்சர் ஆளுங்கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டார் அல்லது இணைக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் கூட்டமைப்பின் பெரிய கட்சியான தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் தமது உறுப்பினர்களுக்கு கடிவாளம் இட தவறியமையும் முக்கியமாக சுட்டிக்காட்டத்தக்கது.
இவையெல்லாவற்றையும் விட சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சில மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து தனித்தனி குழுக்களாக இயங்குவதை காணக்கிடைக்கிறது. அபிவிருத்தி சார்ந்து இதுவொரு நல்ல விடயம் தான் என்றாலும் நடக்கும் விடயங்கள் ஆக்கபூர்வமானதாக இல்லாமல் பிரச்சினைகளை வளர்ப்பதாக இருப்பது கவலையளிக்கிறது.
சுய இலாப இருப்புக்காக சொல்லணா துயரங்களுக்கு முகம்கொடுத்த மக்களின் வாக்குகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது இழிச் செயல். மக்கள் பிரதிநிதிகள் என தம்மை அடையாளப்படுத்தும் இவர்களை கட்சி சார்பின்றி அடுத்துவரும் தேர்தல்களில் ஜனநாயக ரீதியாக தூக்கியெறிய வேண்டும். மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடிய விதத்தில் மக்கள் பிரதிநிதிகள் கடமையாற்றவேண்டியது காலத்தின் தேவையல்லவா?!