அவளும் நானும்
இப்படியாக அவளை காதல் செய்ய வேண்டும்...
சரிபாதி நிலையில் அமர்த்திய சிவனை விட..,
சில அடி அகலம் இணையரை உயர்த்தி அமரச்செய்து.!
சிவனை விட..,
காதலில்..,
சிறார்களே பெரியவர்கள் என நிரூபிக்க வேண்டும்!

இப்படியாக அவளுடன் வாழ்ந்திட வேண்டும்…

அறுபதாம் திருமணமொன்று நடத்தி..,
அன்று அறுபதாம் முதலிரவு கொண்டாட வேண்டும்..,
முத்தப்போட்டியொன்று நடத்தி அவளே வென்றிட வேண்டும்..!
அவளை வென்றிடச் செய்ய வேண்டும்..!
இப்படியாக அவளை இரசித்திட வேண்டும்!

அவளுக்கு
மீசை வரைந்து,
கோவணம் உடுத்தி வேட்டி கட்டி..,
சட்டைப் பையில் சில்லறையிட்டு..,
என்னைப்போல்..,
பேசச்சொல்லி..,
நடக்கச்சொல்லி..,
இருமச்சொல்லி..,
தனியறையில் அழகு பார்த்திட அவள் வேண்டும்..!
இப்படியாக பிள்ளை பத்து வளர்த்திட வேண்டும்!
ஏழு கண்டங்களையும் ஆள..,
என்னவளே ஏழு பிள்ளைகள் வேண்டும்!
உனக்கு செல்லமாய் அறிவும்..,
எனக்கு செல்லமாய் செல்வியும்..,
நமக்கு செல்லமாய் பாண்டியனும்..,
ஆக பத்து பிள்ளைகள் பெற்றிட வேண்டும்..!
சொத்துகளுக்கு.., அடித்துகொள்ளாத பிள்ளைகளை வளர்க்க வேண்டும்..!
முறைக்காதே!
பரணியாளும் சிறுவர்களுக்கு சண்டை வராதுதான்..!

இப்படியாக அவளுடன் வாழ்ந்திட வேண்டும்..!
அவளுக்கு!
காய்ச்சலொன்று வந்தால் கடுங்கொட்டை தேநீர் ஊற்றி..,
ஊதி ஊதி ஊட்டிவிட வேண்டும்!
ஊரார் மத்தியில்..,
ஒரு முறையாவது..,
என்னை பெயர் சொல்லி அழைத்திடடி என்று மிரட்டிட வேண்டும்!
இப்படியாக அவளுயிர் பிரிதல் வேண்டும்..,

சங்கடமில்லாமல்,
சத்தமில்லாமல்,
தொன்னூறு வயதில்..,
என்னை தொட்டு அனைத்தவாறு..,
முத்தம் பொதித்த தருணத்தில்..,
அவளை விட்டு உயிர் பிரிய வேண்டும்!
அங்கனமே அவள் மடியில்..,
நானும் மாண்டிட வேண்டும்..!

