எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். பெரும் பணக்காரர். நீண்ட நாட்களாகவே அவருக்கு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று பெரும் ஆவல்.

சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் ஏதேனும் கதை இருந்தால் அதைப் படமாக்கலாம் என்று கூறினார். நானும் சம்மதித்து என்னிடம் இருந்த கதையின் ஒன்லைனைச் சொல்லியிருந்தேன்.

கதை ரொம்பவும் சிம்பிள். ”ஒரு கோழியும், ஒரு சேவலும் காதலிக்கின்றன. பின்னர் சில வாரங்களில் கோழி முட்டையிடுகிறது. மேலும் சில வாரங்களுக்குப் பிறகு கோழி முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வருகிறது” இதுதான் கதை.

”கதை ரொம்ப ரொம்ப சிம்பிளா இருக்கே, நாம கொஞ்சம் பெரிய பட்ஜெட்ல பண்ணலாம். வேற ஐடியா ஏதும் இருக்கா?” என்றார்.

அருகிலிருந்த அவரது நண்பர், “ இல்ல இதவே நாம பெரிய பட்ஜெட்ல பண்ணலாம். கோழிக்குப் பதிலா யானைய வச்சுக்கலாம்” என்றார்.

இப்பொழுது கதை இப்படி மாறியிருந்தது. “ இரண்டு யானைகள் காதலிக்கின்றன. சில வாரங்களில் அந்த யானைகளில் பெண் யானை முட்டையிடுகிறது. மேலும் சில வாரங்களில் முட்டையிலிருந்து யானைக்குட்டி வருகிறது”.

எனக்கு குழப்பமாகிவிட்டது. இது லாஜிக் மிஸ்டேக் என்றேன்.

”பெரிய பட்ஜெட்ல பண்ணும்போது சின்னச் சின்ன லாஜிக் மிஸ்டேக் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் கதையோட்டத்துல பெரிசா தெரியாது” என்று ஷூட்டிங் செய்ய ஆரம்பித்தோம்.

படம் பாதிக்கும் மேலாக வளர்ந்துவரும்போது ஃபைனான்ஸ் பிரச்சினை வந்தது. எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் கதையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

இந்த முறையும் அந்த நண்பரே ஒரு தீர்வு சொன்னார். முட்டையிலிருந்து வரும் யானைக் குட்டிக்குப் பதிலாக ஆட்டுக் குட்டியை வைத்துவிட்டால் செலவுகள் கொஞ்சம் குறையும் என்றார்.

இறுதியாக கதை இப்படி மாறியிருந்தது. “ இரண்டு யானைகள் காதலித்து, முட்டையிட்டு, முட்டையிலிருந்து ஆட்டுக்குட்டி வருகிறது”.

அப்படியே படத்தை எடுத்து முடித்து வெளியிட்டோம்.

பெரும்பாலான ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடினார்கள். ஒரு சிலர் கேவலமாகக் காறித் துப்பினார்கள். “எந்த ஊர்லடா யானை முட்டை போட்டுச்சு? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்களா? என்ன எழவு லாஜிக் இது?” என்றெல்லாம் அடிக்க வந்தார்கள்.

சில இணைய விமர்சனங்களில், “ இது 1932 ல வந்த ஒரு கொரியன் படத்தோட அப்பட்டமான காப்பி” என்று எழுதியிருந்தார்கள். அதன் பின்னர்தான் நிம்மதியாக இருந்தது. நான் ஏதோ இல்லாத ஒன்றை எழுதிவிட்டேனோ என்ற கவலையிலிருந்து வெளியே வர அந்த விமர்சனம் உதவியது.

Like what you read? Give செல்வு a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.