கடந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே கொஞ்சம் போல்டாக எதையாவது எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இருந்தாலும், ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். தன்மையில் புனைவு எழுதுவதில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல் இது. நான் என்று எழுதினாலே அதில் வரும் நபர் எழுதுகிற நான் என்று புரிந்து கொண்டு, அதுக்கு அப்புறம் என்னாச்சு என்று கேட்கிறார்கள் என்பதால் வெறும் மொக்கைப் புனைவுகளை மட்டுமே தன்மையில் எழுதிக் கொண்டிருந்தேன். நாம் ஏதோ புரட்சிகரக் கருத்துக்களைக் கொண்ட ஒரு சிறுகதையோ, கதையோ எழுதப் போய், ஃபேஸ்புக்கில் இருக்கும் நம் அங்காளி, பங்காளிகள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, கண்டதையும் கற்பனை செய்து தொலைத்து, அதில் அவர்கள் கற்பனையையும் சேர்த்து அடித்துவிட்டுவிடுவார்கள் என்ற பயமும் துணைக் காரணம். இதற்காக ஃபேக் ஐடி ஓப்பன் செய்து சமூகத்தைச் சவுக்கால் வெளுக்கலாம் என்று தோன்றியது. ஆனால், அதற்கும் முன்பாக மொட்டைக் கடிதங்களை அனுப்பி மகிழக் கூடிய sarahah வில் என் நண்பனைத் கண்டபடிக்கும் திட்டி, கடைசியில் அன்புடன் செல்வு என்று போட்டு அனுப்பித் தொலைத்துவிட்டேன். அதனால், ஃபேக் ஐடியிலும் அப்படி எதுவும் நடந்து ”யோவ், அதே மாதிரி கொண்டை போடாதன்னு சொன்னேன்ல” என்று எல்லோருமே கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால்,ஃபேக் ஐடி உருவாக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு, சொந்தப் பெயரிலேயே புரட்சிகரக் கருத்துக்களைத் தைரியமாகச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, இந்த ஆண்டின் முதல் நாளிலேயே அந்தக் கதையை எழுதவும் தொடங்கிவிட்டேன். அதன் ட்ரெய்லர்…

மாரியம்மன் கோவில் திண்ணையில் நானும் மாரிமுத்துவும் வாயாடிக் கொண்டிருந்தோம். மாலை ஏழு மணிக்கும் மேலாகியிருந்து. கோவிலைச் சுற்றிலும் புதர் மண்டிக் கிடப்பதால் கோவிலுக்குத் தீபம் போட வருகிறவர்கள் மாலை ஐந்து மணிக்கும் முன்பாகவே வந்து சென்றுவிடுவார்கள். பேச்சுவாக்கில், எனக்கும் ஒரு பாப்பா (குழந்தை) இருந்தால் அதை எப்படியெல்லாம் வளர்ப்பேன் என்று மாரிமுத்துவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். கோவிலைச் சுற்றியிருந்த மரங்களும், மாலை நேரமும் ஒன்றாகச் சேர்ந்து சூழலின் வெப்பநிலையைக் குளிராக்கிக் கொண்டிருந்தன.

திண்ணையில் குப்புற வைத்திருந்த என் வலது கையை லேசாகத் தொட்ட மாரிமுத்து, ”என்னால முடியும். நான் வேணா….?” என்றான்.

எனக்கும் குறுகுறுப்பாகத்தான் இருந்தது. எல்லோருக்குமே குழந்தை இருக்கிறது. நமக்கும் ஒன்று இருந்தால் அதனோடு விளையாட, சோறூட்ட என்று என்னென்னமோ கற்பனைகள் எல்லாம் மனதில் தோன்றி மறைந்தன.

“யாராவது வந்து பார்த்துட்டாங்கன்னா?”

“சீக்கிரமா முடிச்சிடலாம்” என்று தைரியப்படுத்தினான்.

பத்து நிமிடங்கள் தாண்டியிருக்கும். பாதித் தூரம் சென்றிருந்தோம். ஏனோ எனக்கு ஒரு பக்கம் பயமாகவும், குழப்பமாகவும் இருந்தது. “வேண்டாம்டா. நிறுத்திடலாம். பயமாருக்கு”.

“இவ்ளோ நெருக்கமா வந்தாச்சு. இனி என்ன பயம். சீக்கிரமா முடிஞ்சிடும்.” என்று மீண்டும் தைரியம் சொல்லி, தொடர்ந்தான்.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.