#LLB - 4

நம்ம கல்யாணத்துக்கு அப்புறமான முதல் சில மாதங்கள் எப்படி இருக்கும்னு அடிக்கடி யோசிச்சுப் பார்ப்பேன்.

புது இடம்ன்றதால உனக்கு அடிக்கடி சளி பிடிக்கலாம்; நம்ம வீட்டுக்குப் புதுசா யாராச்சும் வந்தா அது யார்னு குழப்பமா என்னப் பார்ப்ப; இந்த சூழல், ஊர், மக்கள் உனக்குப் புதுசுங்கிறதால உனக்குனு ஒரு ஃபிரண்ட் புடிக்கிற வரைக்கும் உன் ஒவ்வொரு செயலுக்கும் என் அருகாமையும், கவனிப்பும் வேணும்னு எதிர்பார்க்கலாம்; ஏதோ தவறான புரிதலால சண்டை போட்டுக்கிட்டு பேசாம இருக்கிற பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட இந்த சண்டை பத்தி ஏதும் தெரியாத நீ அன்பா பழகலாம், அதனால மறுபடியும் அவுங்க பழைய கோபத்தை மறந்துட்டு நம்ம வீட்டுக்கு வரலாம்; உள்ளூர்ல என் மேல க்ரஷா சுத்திட்டு இருந்த பொண்ணு உனக்கு க்ளோஸ் ஃப்ரண்ட் ஆகலாம்;

புதுசா வீட்டுக்கு வந்த ஒருத்தர நான் உன் சொந்தக்காரர்னு நினைச்சு வாங்கன்னு சொல்லலாம்,நான் வாங்கன்னு சொன்னதைப் பார்த்து அவர் என் சொந்தக்காரர்னு நினைச்சு நீ அவருக்கு டீ போட்டுக் கொடுக்கலாம், கடைசில அவர் வழி கேக்க வந்தவர்னு தெரிஞ்சு ரண்டு பேரும் வயிறு வலிக்க சிரிக்கலாம்;

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்னு அசந்து தூங்கிட்டு இருக்கும்போது திடீர்ன்னு என் காதைக் கடிச்சு என்னை எழுப்பி, "தூக்கம் வர மாட்டேங்குதுடா, ஏதாச்சும் செய்யலாம்"னு குறும்பா சிரிக்கலாம்;

அடிக்கடி சொடக்குப் போட்டு யோசிக்கிற என்னோட பழக்கம் உனக்குப் பிடிக்காம, "லூஸு, கிறுக்குத் தனமா இருக்கு, மொதல்ல இத விடு"னு சொல்லலாம்; அடிக்கடி டீ குடிக்கிறதப் பார்த்துட்டு "இவ்ளோ டீ குடிப்பியா"ன்னு கேக்கலாம்;

உன் சின்ன வயசுல நீ ரொம்ப விரும்பின ஒன்ன உன் அப்பா அம்மா கிட்ட கேட்டு உனக்கு சர்ப்ரைஸ் தரலாம்னு வாங்கிட்டு வந்தா " ச்சை, சின்ன வயசுலதான் இது எனக்குப் பிடிக்கும், இப்பல்லாம் உவ்வே" என்னைக் கிண்டல் பண்ணலாம்;

நான் என்னதான் கொஞ்சினாலும் கிட்டவே வராத நம்ம வீட்டு நாய், முதல் வாரத்துலயே ரொம்ப நாள் பழகின மாதிரி உன்னைப் பார்த்து வாலாட்டுறதப் பாத்து எனக்கு பொறாமையா இருக்கலாம்;

நீ படிக்க நினைச்சு, ரொம்ப நாள் தேடி, அப்புறம் மறந்து போன ஒரு புத்தகம் நம்ம வீட்டுல என் புக் கலக்சன்ஸ்ல இருந்ததப் பார்த்துட்டு " டாய், நீயும் இத படிப்பியா"ன்னு கேட்டுட்டு முத்தம் கொடுக்கலாம்;

ஒருவேளை இனிப்புனாலே ஆகாதுங்கிற கேரக்டரா நீ இருந்தா, மைசூர்பாக்னா வெறி கொண்டு சாப்பிடுற என்னை ஒரு வினோத பிராணியா பார்க்கலாம்;

உன்னைப் பத்தி நானும், என்னைப் பத்தி நீயும் முழுசா புரிஞ்சுக்கிற வரைக்கும் நடக்குற சின்னச் சின்னக் குழப்பங்கள் அழகா இருக்கும்ல

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.