#OSN -3

எச்சரிக்கை : என் அறிவிற்கு எட்டிய அளவில் இந்தக் கட்டுரை கொஞ்சம் “சவசவ” என்றிருக்கலாம் :)
Caution : As per my knowledge this article may be/should be boring :)

இந்திய குழந்தை வளர்ப்பு.
 — — — — — — — — — — — -

வரைபடத்தின் கோடுகளுக்குள் அடைபட்டிருக்கும் நிலப்பரப்பினை மையமாகக் கொண்டு ஒரு நாட்டினை வரையறுப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாடு என்பதே ஒரு குறிப்பிட்ட கலாச்சார, மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்களில் ஒற்றுமையைக் கொண்ட மக்கள் திரள் எனக் கொள்வது சரியாக இருக்கலாம். அதனால்தான் இந்தியாவை ஒரு நாடு என்பதைக் காட்டிலும் துணைக்கண்டம் என்கிறார்கள். அரசியல் அதிகார நோக்கில் வரைபடத்தின் கோடுகள் அவசியமானவைதான். ஆனால், மேல்தட்டு மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த நாட்டிலும் ஒரே முகத்தைத்தான் பிரதிபலிக்கிறது. அந்த வகையில் வரும் எந்த நாட்டினரும் தன் சொந்த நாட்டின் கலாச்சார முகங்களைப் பிரதிபலிப்பதாகத் தெரியவில்லை. ஆக, நாடு என்பதைக் கலாச்சார, பண்பாடு, பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறுத்தால் அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் பற்றியதாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு நாடு என்பதன் உண்மையான முகம் அதன் நடுத்தரவர்க்க மக்கள்தான்.இந்தக் கட்டுரையிலும் இந்தியக் குழந்தைகள் என்று நான் சொல்லவருவது இந்திய மிடில்கிளாஸ் குழந்தைகளைப் பற்றியதுதான்.

இந்திய மிடில்கிளாஸ் குழந்தைகளில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சதவிகிதத்தை அழையா விருந்தாளிகள் லிஸ்ட்டில் சேர்த்துவிடலாம். ஏனெனில், இங்கே திருமணம் என்பதன் அர்த்தமே செக்ஸ் உறவிற்கான ஒரு லைசென்ஸ் மட்டுமே. பெரும்பான்மையைச் சொல்கிறேன். செக்ஸிற்கெல்லாம் லைசென்ஸ் வாங்க வேண்டிய துரதிர்ஷ்டசாலிகள்தான் இந்தியாவில் பிறக்கமுடியும். நம் சமூகம் அப்படியாகத்தான் இருக்கிறது. இதைத்தான் நாம் மேம்பட்ட கலாச்சாரம் என்று பெருமையடித்துக் கொள்கிறோம். இந்திய மிடில்கிளாஸ் மக்களின் வாழ்நாள் லட்சியங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று கல்யாணம் செய்துகொள்வது.இரண்டாவது தன் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்துவைப்பது. இந்த இரண்டும்தான் ஒரு இந்திய மனிதனின் நிறைவான வாழ்க்கைக்கான அளவீடுகள். மகிழ்ச்சியாக வாழ்ந்தானா, தன் சுய விருப்பங்களை வெளிப்படுத்திக் கொண்டானா, கல்யாணம் — பொருளீட்டல் — குடும்பத்தைப் பராமரித்தல் தாண்டி அல்லது அந்தச் சுழலுக்குள் வராமல் வேறு லட்சியங்கள், விருப்பங்கள், ஆர்வங்கள் கொண்டவர்களைக் காண்பது அபூர்வம்தான். கிட்டத்தட்ட இங்கே குடும்பம்-குழந்தைகள் என்பது சந்தோசத்திற்கான, மகிழ்ச்சிக்கான இடமாக இல்லாமல், அது ஒரு கடமையாக, சமூகத்தின் அங்கமாகக் கொஞ்சகாலம் நீடிப்பதற்கான, சமூக அங்கீகாரத்திற்கான ஒரு லைசென்சாக மட்டுமே இருக்கிறது. அப்படி அதே போல இருப்பவர்களைத்தான் நாமும் நம் சமூக அங்கத்தினராக ஏற்றுக்கொள்கிறோம். அப்படியல்லாமல் சுயவிருப்பத்தின் அடிப்படையில் கல்யாணமே செய்து கொள்ள விரும்பாத ஒரு நபர் கிட்டத்தட்ட விலக்கி வைக்கப்படுகிறார். அப்படி இருப்பதனாலேயே நாம் நமது குழந்தைகளின் மீதும் இதே கடமைகளைத் திக்கிறோம். அவர்களுக்கென்ற தனி விருப்பங்களை விடுத்து பொருளீட்டல் ஒன்று மட்டுமே வாழ்க்கைக்கான லட்சியமாகத் தலையில் ஏற்றுகிறோம். அதையே ஏற்றுக் கொண்ட, அதுதான் வாழ்க்கை என்று பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைகள்தான் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள். அவர்களும் அதையே செய்கிறார்கள்.

இந்தியக் குழந்தைகளை அழையா விருந்தாளிகள் என்று சொன்னதின் பொருள் நம் மேம்பட்ட கலாச்சாரத்தின் அடிப்படையில் செக்ஸ் என்பது தவறான செயல். திருமண உறவிற்கும் முன்பாக அதைப் பற்றிப் பேசுவதோ, தெரிந்து கொள்வதோ பஞ்சமகா பாவங்களில் ஒன்று. ஆக, 13 அல்லது 14 வயதுகளில் இயல்பாக உருவெடுக்கிற மிக இயல்பான உணர்வை நாம் அங்கிருந்தே அடக்கவும் மறைக்கவும் அசிங்கமென நினைக்கவும் பழக்கப்படுத்துகிறோம்/பழகிக் கொள்கிறோம். கிட்டத்தட்ட இன்னும் ஒரு நான்கைந்து ஆண்டுகள் அது சரியா, தவறா என்ற குழப்பத்திலும், அடுத்த பத்தாண்டுகள் ஏக்கத்திலும் கழிக்கிறோம். அந்தப் பத்தாண்டுகளில் எதிர்பாலினம் என்பது கிட்டத்தட்ட தெய்வீக அளவீடுகளுக்கு உயர்ந்துவிடுகிறது. எது நமக்குக் கிடைக்கவில்லையோ, எது நம்மை அதிகம் ஈர்க்கிறதோ அது உயர்ந்ததுதான். அது தெய்வீகமானதுதான். அதனால்தான் இங்கே திருமணத்திற்கு முன்பாக ஆண்களுக்குப் பெண்கள் தேவதையாகவும், தெய்வமாகவும் தெரிவது. அப்படிச் சொல்லித்தான் நம் மனங்களை நாம் பழக்கப்படுத்தியிருக்கிறோம். எதிர்பாலினத்தின் தேவதைத் தனங்களும், தெய்வீகமும் ஆசை அறுபது நாள் என்ற கணக்கு முடிந்தவுடன் காணாமல் போய், நாம் மணந்து கொண்டது அதிசயமான ஒரு உயிரெல்லாம் இல்லை, இதே சாதாரண மனித உயிர்தான், அதுவும் நம்மை விடவும் திறமை குறைந்த உயிர்தான் என்று புரிய ஆரம்பிக்கிறது. பின் அங்கிருந்தே நடிக்கப் பழகுகிறோம். அதற்குள்ளாக குழந்தை உருவாகிவிடுகிறது. பத்துப் பதினைந்து வருடக் கற்பனைகள் ஒன்றிரண்டு மாதங்களிலேயே சலித்துவிட, அதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு உறவினை விட்டு விலக முடியாதபடிக்கு நம் சமூகம் நம்மைக் கட்டிப்போட்டு, அன்பு காட்டியே ஆக வேண்டுமென நிர்பந்திக்கிறது. இங்கேதான் அன்பானது பொறுப்பாக உருமாறி, அது கண்டிப்பாக மாற்றம் பெற்று, “எங்க அப்பாவைப் பார்த்தா நான் கால்ல ஒன்னுக்குப் போய்டுவேன், அத்தனை கண்டிப்பு” என்கிற லெவலுக்கு உயர்கிறது. மேலிருக்கும் இரண்டு வாக்கியங்களைப் படித்ததும் “நானெல்லாம் அப்படியில்லை — அதாவது வெறும் செக்ஸிற்காக மட்டுமே கல்யாணம் செய்து கொள்ளவில்லை — என்று கத்தத் தோன்றுவது தவறில்லை.நான் பெரும்பான்மையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். குடும்பம், குழந்தைகுட்டிகளை ஒரு சுமையாக, பொறுப்பாக, சமூக மதிப்பிற்காக, தன் ஆண்மையை/பெண்மையை அடுத்த மனிதருக்குக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் அல்லாமல் மகிழ்ச்சிக்காக, இயல்பான ஒரு வாழ்க்கை நிகழ்வாக அதைப் புரிந்துகொண்டுள்ளுவர்கள் இந்தக் கட்டுரையை ஸ்கிப் செய்துவிடலாம்.

குழந்தை பெற்றுக் கொள்வதென்பதே அந்தக் குழந்தைகளை நம் சமூகம் கட்டமைத்திருக்கும் இதே வழியில் இழுத்து வந்து,” என் பையன் நான் சொன்னதைத் தட்டமாட்டான்,என்னைப் பார்த்தா பயந்து நடுங்குவான்” வகையில் மிரட்டி வளர்த்துப் பெருமிதம் கொள்கிற பெரும்பான்மைதான் நம்மில் பலரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கமுடியாது இல்லையா? அது சரியா தவறா என்றெல்லாம் வாதம் செய்ய வரவில்லை. நாம் வளர்ந்தவிதம் அப்படி. நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட குழந்தை வளர்ப்பு முறை அப்படி. குழந்தைகளை வளர்த்துக் கல்யாணம் செய்துவைத்தால்தான் நம் வாழ்க்கை நிறைவான வாழ்க்கை என்பதாக நம் மனங்களில் ஏற்றப்பட்டிருக்கிறது. பின், அவர்கள் இந்த வழியில் வந்தால்தானே நாம் சரியான பெற்றோரென்று மற்றவர்களின் அங்கீகாரத்தினைப் பெற முடியும்?

சரி, இப்படிப் பொருளீட்டலே முதன்மை என்று பயிற்றுவிக்கப்படும் குழந்தைகளால் ஆன சமூகம் நன்றாகத்தானே இருக்கிறது, இதில் என்ன பிழை என்று கூட தோன்றலாம். நன்றாக வாழ்வதற்கும், நன்றாகத்தானே வாழ்கிறோம் என்று நம்பி வாழ்வதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நம் பெரும்பான்மை நன்றாக இருப்பதாக நம்பி வாழ்வதாகவே இருக்கிறது. அதுதான் பிரச்சினை.

இந்தியக் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள்? தொன்னூறு சதவிகிதத்திற்கும் மேலாக இருபது வருடங்கள் வரையிலுமே புற உலகம் பற்றிய தெளிவோ, புரிதலோ, எதிர்காலம் குறித்த பொறுப்புணர்வோ இல்லாமல்தான் வளர்கிறார்கள்/ வளர்க்கப்படுகிறார்கள். அதையே பெற்றோரும் ஆகச் சிறந்த குழந்தை வளர்ப்பெனக் கருதுவதால் இருபது வயதிற்குப் பிறகும் கூட சுய சிந்தனை என்ற வார்த்தையையே கேள்விப்படாமல் ஒழுக்கமானவர்களாக வளர்கிறார்கள். பதினெட்டு வயதில் ஒரு குழந்தை மேஜர் ஆகிவிட்டதென்று சட்டம் கூறுகிறது. உண்மையில் நம் ஊரில் பதினெட்டு வயதான எந்த குழந்தைக்கு/மனிதனுக்கு தான் சார்ந்த சமூகம் குறித்த விழிப்புணர்வோ, குறைந்தபட்சம் தன் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வோ இருக்கிறது? மேஜர் என்பதின் அர்த்தம் வெறும் வயது நிறைவடைவது மட்டும் இல்லை அல்லவா? ஒரு மனிதன் தன் வாழ்க்கையை தன் சுய சிந்தனையின் அடிப்படையில், உழைப்பின் அடிப்படையில் தனியாளாக நிர்வகித்துக் கொள்ளக் கூடிய அறிவு வந்துவிட்டது என்பதுதானே மேஜர் என்பதற்கான பொருள். அப்படியிருக்கையில் நம் குழந்தைகள் மட்டும் ஏன் பதினெட்டு வயதில் ஓட்டுரிமை வந்ததும் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று கேட்கிறார்கள்?அரசியல் அறிவு முப்பதுகளில் கூட பெரும்பான்மைக்கு வருவதில்லை என்பதும் கூட உண்மைதானே. செக்ஸைப் போலவே அரசியலும் பேசத்தகாத கெட்டவார்த்தை என்பதுதானே நம் போதனைகள். இதெல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லிக் கொடுக்காதது யார் தவறு?

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்காலம் தன் பெற்றோரின் மேலேரிச் சவாரி செய்பவர்களைத் திடீரென கீழே இறக்கிவிட்டு “ நீ பெரிய மனிதன் ஆகிவிட்டாய், இனி உன் வாழ்க்கை உன் கையில்” என்று கூறுவது நாம் அவர்கள் மேல் நிகழ்த்து மிகப் பெரிய வன்முறை இல்லையா? அங்கிருந்தேதான் அடுத்த தலைமுறையும் அப்படியே எதுவும் தெரியாமாலேயே தொடர்கிறது. அதாவது தன் பெற்றோரின், தான் பார்த்த மற்ற மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே காப்பியடித்து அதையே வாழ்க்கை முறையாகக் கொள்கிறது. முப்பதில் கல்யாணம் செய்து, குழந்தை பெற்றுக் கொண்டு, அந்தக் குழந்தையையும் தன் பெற்றோர் தன்னைத் தாங்கியதைப் போலவே தாங்கி, மூச்சு முட்டி, அப்படித் தன் வாழ்க்கையையே குழந்தைகளுக்காகத் தியாகம் செய்வதே உண்மையான/நல்ல பெற்றோருக்கான தகுதி என்பதாக நினைத்துக் கொண்டு அடுத்த தலைமுறையையும் அதைப் போலவே உருவாக்குகிறோம். அதனாலேயே இருபது வயதில் அவர்கள் காதலிக்கிறேன் என்று வந்து நிற்கும்போது நமக்குக் கோபம் வருகிறது. அவர்களுக்காக எத்தனையோ சிரமப்பட்டு, தியாகம் செய்து, நம் லட்சியங்களை அவர்கள் வழியில் நிறைவேற்றும் முனைப்பில் இருக்கும்போது காதலிப்பது ஒரு பெருங்குற்றம் என்பதாகத் தோன்றுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் அதன் வாழ்க்கை தன் கண்காணிப்பில், முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நம் குழந்தை வளர்ப்பு முறைகள் நம்மைப் பயிற்றுவித்துள்ளன. இப்படி இருக்கும்போது திடீரென காதலிக்கிறேன் என்றால் நம் கட்டுப்பாடு என்னவாவது என்கிற பயம் வந்துவிடுகிறது. அந்தக் குழந்தைக்கு என்ன தெரியும் என்கிற அக்கறையும் இருக்கத்தான் செய்கிறது. நான் இங்கே பார்க்கும் காதல்களில் பெரும்பான்மை பெற்றோரின் பயத்தினை உறுதிப்படுத்தவே செய்கிறது என்றாலும் இருபது வயது வரைக்கும் எதுவுமே தெரியாமல் ஒரு குழந்தையை வளர்த்தது யார் தவறு?

பத்து வயதிலேயே தன் வாழ்க்கையை யார் துணையும் இன்றி தன் அன்றாடப் பணிகளைச் செய்துகொள்ள நாம் ஏன் பயிற்றுவிப்பதில்லை? எதற்காக அம்மா வந்தேதான் தன் துணிகளைத் துவைக்க வேண்டும், அம்மாதான் சமைக்க வேண்டும் என்று பழக்கப்படுத்துகிறோம்? இதையெல்லாம் நாம் அவர்கள் மேல் காட்டும் அக்கறை என்று நினைத்துக் கொண்டுதானே செய்கிறோம். தன்னால் செய்ய முடிந்த தனது அன்றாட வேலைகளுக்கும் கூட இன்னொரு மனிதனை எதிர்பார்க்கும் வாழ்க்கை முறையை பயிற்றுவிப்பதற்குப் பெயர்தான் அக்கறை இல்லையா? தன் வாழ்க்கையை யார் சார்பும் இன்றித் தன்னாலேயே வாழ முடியும் என்கிற நம்பிக்கையை நாம் அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தகர்த்தெறிகிறோம். தனது அன்றாட வேலைகளைக் கூடக் கற்றுக்கொள்ளாமல் ஒரு ஆண் குழந்தையை வளர்க்கிறோம். 25–30 வயது வரை அம்மாவையும், அதற்குப் பிறகாக மனைவியையும் சார்ந்தே வாழுமாறு அவனை உருவாக்குகிறோம். சார்ந்து வாழ்தல் என்பது பின்பு அடிமைப்படுத்தல் ஆகிறது. எங்கே பெண் வீட்டைவிட்டு வெளியில் போனால் தன்னை மீறிப் போய்விடுவாளோ என்கிற பயமும், அப்படிப் போய்விட்டால் தன்னால் எப்படிச் சமைக்கவும், துவைக்கவும் முடியும் என்கிற — மிகச் சாதாரண வேலைகள் தான் என்றாலும் — பயமும் சேர்ந்து அவளை எவ்விதத்திலேனும் அடிமையாக மாற்றி தனக்குக் கீழேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும் ஆழ்மனத்தில் உருவாகிறது. அந்த பயமே பின்பு சில சமயங்களில் பெண்களைப் போற்றுவதாகவும், சில சமயங்களில் நேராக மிரட்டுவதாகவும் பரிணமித்து சமூகக் கட்டமைப்பாகவே உருமாறிவிடுகிறது. இதுமட்டும்தான் காரணமா என்றோ, அல்லது இதெல்லாம் ஒரு காரணமா என்றோ சிரிப்பு வரலாம். ஆனால், இது வலுவான காரணம். தன் வேலைகளைத் தன்னால் செய்யமுடியாது என்கிற போது அதனைச் செய்ய யாரையேனும் சார்ந்திருக்கும்போது வருகின்ற பயம் இப்படித்தான் மறுஉருவம் பெறும். நம் குழந்தைகளை இப்படித்தான் தன் வேலைகளுக்காக அடுத்தவரைச் சார்ந்து வாழுமாறு பழக்குகிறோம். வாழ்க்கை என்பதே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல்தான் என்றாலும் தன்னால் செய்யமுடிகிற செயல்களுக்காகக் கூட அடுத்தவரைச் சார்ந்து வாழப் பழக்குதல் எப்பொழுதும் மிக மோசமான சமூகத்தையே உருவாக்கும். அப்படியான சமூகத்தைத்தான் இப்பொழுது உருவாக்கியும் வைத்திருக்கிறோம்.போலவே பெண்களை இதற்கு எதிர்மாறாக ஆண்களைச் சார்ந்து வாழுமாறும் உருவாக்கி வைத்திருக்கிறோம். கிட்டத்தட்ட ஆழ்மனத்தில் யாருக்கும் தெரியாத, வெளிப்படாத ஒரு பயம் இருக்கவே செய்கிறது. உண்மையில் தன் வாழ்க்கையைத் தன்னால் யார் துணையும் இன்றி வாழ முடியும் என்கிற எண்ணம் இருக்கும்போது பயத்திற்கு அவசியமில்லை. அங்கேதானே அடுத்த மனிதனின் சுதந்திரம் பற்றிய சிந்தனைகள் எல்லாம் வரும்? அடுத்த மனிதன் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றோ, அப்படிக் கட்டுப்படுத்தத் தேவையில்லை என்றோ புரிந்துகொள்ளும்போதுதானே நிஜமான மகிழ்ச்சியும், சந்தோசமும் வர முடியும்? உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறோமா?

பத்துப் பனிரண்டு வயதில் தன் அன்றாட வேலைகளைத் தானே நிர்வகிக்கப் பழக்கப்படுத்தி, தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளையும், தான் வாழும் இந்தச் சமூகம் குறித்த புரிதல்களையும், பொருளாதாரத் தேவைகள் பற்றிய தெளிவினையும் ஏற்படுத்த வேண்டியதுதானே ஒரு பெற்றோரின் கடமை. அப்படியான தெளிவான வழிநடத்தல் இருந்தால் அவன் இருபது வயதில் காதலில் விழும்போது நாம் பதட்டப்பட வேண்டிய தேவை இருக்காதுதானே? அவன்/அவ வாழ்க்கையை அவன் பார்த்துக் கொள்வான் என்கிற தெளிவு நமக்கு இருந்தால் பயம் எதற்கு வரப்போகிறது? பதினைந்து, பதினாறு வயதிலேயே ஒரு தனி மனிதனாக ஒரு குழந்தையை உருவாக்கிவிட்டால் நாம் சுமந்து திரிய வேண்டியதில்லை அல்லவா? ஆனால், அப்படிச் செய்வது இல்லை. ஏனென்றால் சுமப்பதும், தியாகம் செய்வதும்தான் நல்ல பெற்றோரின் அடையாளம் என்று பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். தன் குழந்தைகள் தன் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது பெரும் முட்டாள்தனம் என்பதை எல்லாம் நாம் புரிந்துகொள்ளவே போவதில்லை. அதைப் பெருமையெனக் கருதுகிறோம்.நாம் தியாகம் செய்தே ஆக வேண்டியிருப்பதாலும், நல்ல பெற்றோர் என்று நாலு பேர் சொல்லக் கேட்டே ஆக வேண்டும் என்பதாலும் அவர்களைச் சுயமாக நடக்கவிடுவதில்லை. தூக்கிக் கொண்டே திரிகிறோம். 25 வயதில் இறக்கிவிடும்போது திக்குத் தெரியாத காட்டில் நின்று கொண்டு “நான் படிச்ச படிப்புக்கு இந்த கவர்மென்ட் வேலை தரலை, நாங்க என்ன பண்றது?” — இப்படி ஒரு கேள்வி கேட்பது மகா அபத்தம் என்பது கூடத் தெரியாமல் — கேள்வி கேட்கிறார்கள். வேறென்னதான் அவர்கள் செய்வார்கள்? படித்து வேலைக்குப் போகிற, சுயமாகச் சம்பாதிக்கிற பெரும்பான்மை நபர்களும் இதே லெவலிதான் இருக்கிறார்கள். என்ன அவர்கள் பொருளீட்டலில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள். அவ்வளவுதான். பின் தன் குழந்தைகளுக்கும் அதே சக்கரம்தான். முதல் இருபத்தைந்து வருடங்கள் பள்ளிகள், தேர்வுகள். பின் கல்யாணம்,குழந்தைகள். ஒரு சராசரி இந்திய மிடில்கிளாஸ் குடும்பங்களில் வேறென்ன இருக்கிறது? ஏன் வேறெதுவுமே இருப்பதில்லை?

தாய்மை என்பது புனிதமல்ல என்பதையும், பேரன்டிங் என்பது தியாகம் செய்வதல்ல என்பதையும் எப்பொழுது புரிந்துகொள்ளப்போகிறோம்?