ஒரு நாகரீகக் கோமாளியின் ஒப்புதல் வாக்குமூலம் — பகுதி 4

வாழ்வியல் அடிப்படைக் கட்டமைப்பு — நீர் மற்றும் உணவு நிலைக்களன் தொடர்ச்சி

இதன் முந்தைய பதிவு இங்கே

#ஊற்று

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

- திருக்குறள், நாட்டதிகாரம் — குறள் 737

பொருள் — ஊற்றும், மழையுமாகிய இருவகை நீர் வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

மணல் மற்றும் களிமண் பாங்கான பகுதிகளில், ஓரிரண்டு அடிகள் தோண்டியவுடன் நீர் கிடைக்குமிடமே ஊற்று. இது நிலத்தடியிலிருந்து புவியின் மேற்பரப்புக்கு நீர் வெளியேறும் ஒரு இயற்கையான அமைப்பு. ஊற்று நீரானது தனிச் சுவையுடனானது.

கோடைக் காலங்களில் எங்கும் வறட்சி நிலவும் சூழ்நிலையிலும், இவ்வூற்றுக்களே மக்களின் தாகத்தைத் தீர்த்து வைக்கும். ஊற்று நீரின் சுவை அளப்பரியது. நீர் அள்ள அள்ளவே ஊற்றெடுக்கும்.

இருந்த ஊற்றுக்களெல்லாம் இன்று மணல் திருடர்களின் பேராசைக்கும், நவீன வேளாண்மையின் பல்வேறு கூறுகளாலும் பலியாகிவிட்டன. இன்றும் ஒரு சில ஊற்றுக்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. அவற்றையாவது நாம் காக்க முன்வரவேண்டும்.

ப.உ தி இந்து

அடுத்ததாக உணவு நிலைக்கலன்களைப் பற்றிப் பார்ப்போம்

#இட்டரை

சில பகுதிகளில் இது #இட்டேரி என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மாட்டு வண்டி மற்றும் மனிதர்கள் பயணிக்கக் கூடிய பாதையாகும். வெறும் பாதையாக மட்டுமில்லாமல் பல்வேறு உயிரினங்களுக்கும் வாழ்வளிக்கும் உயிர்ச்சூழலாகவே காட்சியளிக்கும். பாதையின் இருமருங்கிலும் உள்ள காடுகளில் வேளாண்மை நடைபெற்றாலும், வேலி ஓரங்களில் மரங்கள் மற்றும் வேலிக்குரிய செடிகளுமாகக் காட்சியளிக்கும். இதில் பெரும்பாலும் முல் செடிகளான பல்வேறு கள்ளிச் செடிகள், கிளுவை. நொச்சி போன்றவை பிரதானமாக இடம்பெற்றிருக்கும். இந்த உயிர் வேலிகளில் உள்ள முட்செடிகள், மரங்கள் மற்றும் செடிகள் பல்வேறு உயிரினங்களுக்கும் வாழ்விடமாக மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் பல்வேறு வாழ்வாதாரங்களைக் கொடுப்பவையாக அமையப் பெற்றிருக்கும். குறிஞ்சான் கீரை, கோவை(கொவ்வா)க் கீரை, கோவைக் காய், களாக்காய், பிரண்டை போன்ற உணவுப் பொருட்களும் கற்றாழை, ஆடாதோடை, தூதுவளை போன்ற மூலிகைகளும், கள்ளிப்பழம், ஈச்சம் பழம், ஆனாம் பழம், சூரைப்பழம், காரைப்பழம் போன்ற பல்வேறு பருவகாலப் பழங்களும் இன்ன பிற எண்ணிலடங்கா பயன் தரும் தாவரங்களுமாய் நிறைந்திருக்கும். இவை அனைத்தும் மக்களுக்கும், விலங்குகள், பறவைகள் போன்ற ‍ அனைத்து உயிரினங்களுக்குமான உணவு நிலைக் கலனாகவே அமைந்து பயனளிக்கின்றன.

#உயிர்வேலி

வேளான் காடுகளை விலங்குகள் மற்றும் மனிதர்களிடமிருந்து காக்கும் பொருட்டும், நீர்வளத்தைத் தக்க வைக்கும் பொருட்டும் அவற்றைச் சுற்றிலும் அமையப் பெற்றிருப்பதே உயிர்வேலி. பலன்களைப் பொருத்தவரை, இட்டரை கொடுக்கும் அனைத்துப் பலன்களையும் இந்த உயிர்வேலியிடமிருந்தும் எதிர்பார்க்கலாம்.

#தரிசுக் காடுகள்

மானாவாரி நிலங்களில் பெரும்பாலும் ஒருபோகம் விவசாயமே செய்யப்படும். அறுவடை முடிந்தவுடன் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறும் இந்த நிலங்களின் பொலிகள் (வேலிக்கும் விளைநிலத்திற்கும் இடையிலான பரப்பு) கரிசலாங்கண்ணி, குமுட்டி, குப்பைமேனி போன்ற பல்வேறு வகையான காட்டுக் கீரைகள், கற்பூரவல்லி, துளசி, வல்லாரை, கீழாநெல்லி போன்ற மூலிகைகள் மற்றும் சில கிழங்குகளும் கிடைக்கும் மூலமாகவும் விளங்குகிறது.

#கோவில் காடுகள்

காப்புக்காடுகள் என்றும் அழைக்கப்படும் இவை பெரும்பாலும் கிராமக் கோவிலின் ஒரு அங்கமாக, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கும். பல்வேறு மரங்கள், மூலிகைகள் மற்றும் செடிகொடிகளுடன் காணப்படும் இக்காடுகள் மழைக்கு ஆதாரமாகவும், மழைநீரைப் பாதுகாத்து, நிலத்தடி நீரை உறுதிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கும். பல்வேறு உயிரினங்களின் உயிராதாராமாக திகழும் இக்காடுகள் பல வகையான பழ மரங்களான நாவல், புளி, விளா மரம் போன்றவற்றையும் கொண்டு அமைந்திருக்கும்