இருபத்தி நாலு — குறுங்கதை


ஒரு சாக்பீஸும் கரித்துண்டும் இப்படி ஒரு சித்திரமாக மாறி இருப்பதை இந்த நகரத்தில் யாரும் ரசிக்க மாட்டார்கள் போலும். இந்த காலை நேரத்தில் ரோட்டோரத்தில் பிறை, சிலுவை மற்றும் ஓம் இவற்றை வைத்து அழகாகத்தான் வரைந்து கொண்டிருந்தான் அவன் . அவனது தோற்றம் ஒரு பைத்தியகாரனைப் போலவே இருந்தது, அவனை கடக்கிறேன் இப்போது. என்னை பார்த்தவன் ஒரு புன்முருவல் பூக்கிறான். கண்டுகொள்ளாதவனாக, நமக்கு எதற்கு வம்பு என்று நான் ஒதுங்கி நடக்க ஆரம்பித்தேன்.

தினமும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் எனக்கு இதை பார்ப்பதிலோ அல்லது இதைப் பற்றி சிந்திப்பதிலோ எந்தவித இஷ்டமும் இருந்ததில்லை. இன்றுதான் கொஞ்சம் சீக்கிரமாக ஆபிஸ்க்கு செல்கிறேன், இதை பார்க்க கொஞ்சம் ஆவல் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் ஆபிஸ்தானே முக்கியம். இன்னும் 500 மீட்டர்கள் நடக்க வேண்டி இருந்தது. 500 மீட்டர்கள் என்றால் எத்தனை அடிகள் வைத்து நடக்க வேண்டும்? அளந்துகொண்டே செல்லலாமா, சரி அளந்துதான் பார்ப்போமே என்று நடக்க ஆரம்பித்தேன் (அளத்தலுடன்).

ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு , அஞ்சு …

டமால்…

அய்யோ..ஓ ஓஓஓஒ

படாரென திரும்பிப் பார்தேன்..

அவன் நடுரோட்டில் சரிந்து கிடந்தான், தலையில் இருந்து ரத்தம் சிறிது சிறிதாக பீய்ச்சிஅடிப்பது என்னை என்னவோ செய்தது…

எட்டு, ஒன்பது, பத்து…… என் நாவு குளரியது..

அதற்கு மேலும் என்னால் எண்ண முடியவில்லை.. அப்படியே திரும்பிப் பார்க்காமல் போய்விடலாம் எனத்தோன்றியது, மனசு சொன்னதை கேட்டுக்கொண்டேஇன்னும் வேகமாக நடந்தேன்.

என் கால்கள் பின்னிக் கொள்வதைப் போல ஒரு உணர்வு சமாளித்துக்கொண்டேன். அந்த பரபரப்பான சாலையிலும் சில மனிதர்கள் உதவுவதற்கு இருக்கிறார்களே. ஆம் அவனை சுற்றி ஏழெட்டுப் பேர் சூழ்ந்துவிட்டார்கள். “இவனுகளுக்கெல்லாம் வேலையே இருக்காதா? ஆபிஸ்க்கு சீக்கிரம் போகத்தோணாதா?… என்ன பிறவியோ”…

பதினெட்டு, பத்தொம்போது, இருபது, இருபத்திஒன்னு..

அந்த கும்பலில் யாரோ ஒருத்தன் என்னை நோக்கி கை நீட்டுவது தெரிந்தது. எனக்கு ஆபிஸ்தான் இப்போது முக்கியம் , உதவி செய்வதற்கும் நேரம் காலம் எல்லாம் இருக்கு ஆனா என்னால இப்போ முடியாது என நினைத்தவனாய் அவன் கூப்பிடுவதை பாராதவனாக என் தலையை லாவகமாக நேர் நோக்கி திருப்பினேன்… டமால்..

அவன் சொன்னது இப்போது புரிந்தது …

இருபத்திமூணு, இருபத்தி னாலு…..

யாராவது உதவிக்கு வருவார்களா, நப்பாசையில் என் மனம் என்னையறியாமல் மீண்டும் எண்ணத்துவங்கியது என் நினைவு..

இருபத்தினாலு, இருபத்திமூணு,…

ரோட்டோரத்தில் அந்த பைத்தியக்காரன் கரியால் வரைந்த படத்தை நோக்கி…..

-முற்றும்.