மிருதன் திரைவிமர்சனம்

தனி ஒருவன் படம் வெளிவந்தாலும் வந்துச்சு, பக்கத்து வீட்டுல பாவாடை காணாம போச்சுனு நியூஸ் வந்தா கூட 3-வது பக்கத்துக்கும் 7-வது பக்கத்துக்கும் தொடர்பு இருக்குன்னு இன்றைய இளைஞர்கள் செய்தியை அலசி பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அதேபோல் ஜெயம் ரவிக்கும் அந்த படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவி தமிழ்சினிமாவில் தனக்கான இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக தக்கவைக்க துவங்கிவிட்டார்.

மிருதன் திரைவிமர்சனம்

இன்று வெளிவந்துள்ள மிருதன் படமும் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் தான். படம் ஆரம்பிக்கும்போது ட்ராப்பிக் போலீசாக வரும் ஜெயம் ரவி, இந்த படத்திலும் சமூக அக்கறையை விதைக்கப்போகின்றார் என நினைத்தால் படத்தை அப்படியே வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன். இது ஒரு ஜாம்பிஸ் பற்றிய கதை. ஹாலிவுட் படங்கள் பார்த்தவர்களுக்கு ஜாம்பிஸ் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு சுருக்கமாக சொல்லவேண்டுமானால், மனிதன் இறந்தபின்பு உடம்பில் சென்று மிருகம் போல செயல்பட வைக்கும் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தான் ஜாம்பிஸ்.

ஜாம்பிஸ் பற்றிய படம் 1932-ஆம் ஆண்டே ஹாலிவுட்டில் வெளிவந்துவிட்டது. அதன் பிறகு ஏராளமான படங்கள் வெளிவந்துவிட்டது. தமிழ் சினிமாவிற்கு இதுவே முதல் முறை. ஏகச்சக்கமான படங்கள் வந்தாலும் ஒவ்வொரு படத்திலும் ஜாம்பிஸ் பற்றி ஓவ்வொரு விதமாக கூறுவார்கள். ஜாம்பிஸ் போன்றே பல வியாதிகள் பெயரில் நிறைய படங்கள் வசூலைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிருதன் படம் வெறும் ஜாம்பிஸ்-யை மட்டும் வைத்து எடுக்கவில்லை. காதலையும், பாசத்தையும் மையமாக வைத்து எடுத்துள்ளனர். வெறும் ஜாம்பிஸ் மட்டும் வைத்து எடுத்திருந்தால் வழக்கமான ஹாலிவுட் பட பாணி என எண்ண தோன்றி இருக்கும். மிரட்டலாக வரும் ஜாம்பிஸ்-யை மீறி நம்மை சென்டிமென்ட் காட்சிகளில் கண்கலங்க வைத்துள்ளார் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன். இயக்குனரின் படங்கள் ஹாலிவுட் படங்கள் தழுவலாக இருந்தாலும், வித்தியாசமாக முயற்சி செய்யக்கூடியவர். இந்த படத்திலும் அருமையாக திரைக்கதை அமைத்துள்ளார். இருப்பினும் ஜாம்பிஸ்களிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் எதார்த்தத்தை காட்ட முயற்சித்திருக்கலாம்.

படத்தின் கிளைமேக்ஸ் இரண்டாம் பாகம் வெளிவரும் என முடித்திருப்பதால் இதில் விடைகிடைக்காத சில காட்சிகளுக்கு இரண்டாம் பாகத்தில் விடைகிடைக்கும் என நம்புகிறேன்.

மொத்தத்தில் மிருதன் தமிழ் சினிமாவை பிடித்து ஆட்டும் பேய்க்கு பதிலாக கிடைத்த ஆறுதல் மிருகம்..!

Like what you read? Give Sky Riswan a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.