செம்மக் காமெடி!

கடந்த வெள்ளிக் கிழமை மே 31 அன்று ஒரு முக்கியமான நாள்…

சம்பள நாள்…

எல்லோரையும் போல் அப்படி தான் நினைத்திருந்தேன் அலுவலகத்திற்கு வரும் வரை…

Break timing-ன் போது ஜூஸ் குடிக்க வழக்கம் போல நம் அலுவலக கேண்டீனுக்கு சென்றேன்… பழச்சாற்றை அருந்திக்கொண்டே கேண்டீன் கூரை முழுவதும் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்த வாசகத்தை மேலாக படித்தேன்… சற்று அதிர்ந்துவிட்டேன்… அப்படி என்ன இருந்தது அந்த வாசகத்தில்…

‘ Say Yes

to Tobacco’

என்று எழுதி இருந்தது…

‘ஒரு வேள இங்கயும் புகையிலை வியாபாரத்த கொண்டுவந்துட்டாங்களோ…, இருக்கக் கூடாது’ என்று மீண்டும் ஒரு முறை கண்ணைத் துடைத்து விட்டு நன்றாக
உற்று நோக்கி படித்தேன்…

‘ Say Yes

to Tobacco

Free World’

இப்போது புரிந்துக் கொண்டேன்… ‘சொல்ல வந்த நல்ல விசயத்த நேரடியா ஒரே வசனமா சொன்னா தான் என்ன?… ஏற்கனவே அடிக்கிற வெயில்ல மூளை சூடாகி போயிருக்கோம், இதுல மடிச்சு எழுதி நம்மல இன்னும் குழப்பிறாய்ங்க…’ என்று சிரித்து கொண்டேன்…

திடீரென்று கேண்டீனுக்கு வெளியே சலசலப்புடன் ஒரு கூட்டம்…

என்னவென்று எட்டிப் பார்த்தேன்… இரு பெண்கள், அவர்களை சுற்றி சில ஆண்கள் கூட்டம்…

‘அவங்களுக்கு எதுவும் பிரச்சினையா இருக்குமோ?’ என்று கண்களை சிவப்பாக வைத்துக் கொண்டு மீசையை முறுக்கி விட்டு, நரம்பு தெறித்த கையில் அணிந்திருந்த காப்பை இறுக்கி ஏற்றிக் கொண்டு, ‘Everybody listen, he is on a mission…’ என்ற சிங்கம் பாடலை மனதில் ஓட்டிக் கொண்டு Slow motion-ல் நடந்து சென்று என்ன நடக்கிறது என்று அருகில் சென்று
பார்த்தேன்…

அது ஒன்னும் இல்ல… அன்னைக்கு வெள்ளி கிழமை, தூரத்தில இருந்து பார்க்கிறப்ப அந்த ரெண்டு பொண்ணுங்களும் கொஞ்சம் நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சாங்க… அதனால பக்கத்தில போய் பார்க்கலாம்-னு கிளாஸ்-ல கொஞ்சம் ஜூஸ் மிச்சம் வச்சிருந்தத கூட கவனிக்காம போனேன்(நான் எப்பவுமே கடைசி சொட்டு கூட மிச்சம் வைக்காமல் குடிப்பவன், Straw-உறிஞ்சி குழலால் முடியவில்லை என்றால் கோப்பையையே கவிழ்த்திவிடுவேன்:)
அங்க போனா…

பக்கத்தில இருந்து பார்க்கும் போதும் அந்த பொண்ணுங்க நல்லா இருந்த மாதிரிதான் தெரிஞ்சாங்க:(… ப்ப்ப்ப்ப்ப்பா…

சரி சுத்தி என்ன நடக்குது-னு பார்த்தா…

புகையிலை எதிர்ப்பு தினத்திற்கு ஒரு விளம்பரம்… அத அவங்க ‘Awareness’-னு தமிழ்-ல சொன்னாங்க…

அப்படி என்ன விளம்பரம்… மன்னிக்கவும் விழிப்புணர்வு முகாம்…

ஒரு Banner — அதில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் எழுதி இருந்தது (இது ஒன்று அதில்
உருப்படியான விஷயம்;)

ஒரு பிரதிநிதி — அவர் professional-ஆக உடை அணிந்து புகையிலைக்கு எதிரான ஒரு துண்டு பிரசுரத்தை(pamphlet) விநியோகித்துக் கொண்டிருந்தார், அதனுடன் கையில் அணிந்து கொள்ள ‘No Tobacco Day’ என்று பொறிக்கப்பட்ட ஒரு காகிதப் பட்டையையும் வழங்கிக் கொண்டிருதார்…

ஒரு உயர் அதிகாரி(டை கட்டிருந்தத வச்சி சொல்றேன்) — அவர் அந்த பிரதிநிதிக்கும் அந்த பெண்களுக்கும் கட்டளையிட்டு ஏதோ ஆத்திக் கொண்டிருந்தார்…

ஒரு Cameraman(யோவ்… விழிப்புணர்வு முகாம்க்கு இவரு எதுக்குய்யா?)…

அந்த பிரதிநிதி கொடுக்கும் பிரசுரத்தை காகிதப் பட்டையை அணிந்து கொண்டு அந்த
பெண்கள் பெற்றுக் கொள்வது போல் விழிப்புணர்வு விளம்பர படம் எடுத்துக் கொண்டிருதார்கள்:)

ஒரு உயர் அதிகாரி கேமரா ஏந்தியவரிடம் சொன்னார், ‘எல்லாம் கவர் ஆகுதா… அவங்க கையில இருக்கிற எழுத்து தெரியுதா…’

கேமராமேன், ‘எல்லாம் ஓகே சார்…’

படம் எடுத்து முடிச்சப் பிறகு…

அந்த பெண்கள் அங்கிருந்து கேண்டீனுக்கு உள்ளே சென்றார்கள், அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று பார்த்தேன்…

‘ஓ… அவங்களும் நம்மல போல ஜூஸ் குடிக்க தான் வந்திருக்காங்க…’

சரி என்று இந்த விழிப்புணர்வு முகாம் பக்கம் திரும்பினேன்… அங்கு அந்த பிரதிநிதியை தவிர மற்றவர்கள் Pack-up செய்து விட்டனர்(என்னைய வச்சும் ஒரு போட்டோ எடுத்துக்கலாம்-னு நினச்சேன்:)…

‘ஆனதெல்லாம் ஆகட்டும்… நம்ம பங்குக்கு ஒரு பிரசுரத்த வாங்கிட்டு போய்டலாம்’

என்று கேண்டீன் அருகிலேயே நின்று அந்த பிரதிநிதியை பார்த்துக் கொண்டிருந்தேன்…

அவரும் என்னிடம் அந்த காகிதத்தை தருவதாக தருவதில்லை…

‘ஒரு வேள… புகை பழக்கம் உள்ளவரகளுக்கு மட்டும் தான் இது தருவாங்களா?’ என்று எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன்…

நியாயம் தான்… என்னையப் பார்த்தாலே தெரிஞ்சுடும்… நான் நல்லவன், அந்த மாதிரி கெட்ட பழக்கங்கள் இல்லாதவன்… ஆனா அந்த பொண்ணுங்களப் பார்த்தா புகை பழக்கம் உள்ளவங்க மாதிரி தெரியலையே…

பொறுக்க முடியாமல் நானே அவரிடம் சென்று அந்த காகிகத்தை பெற்றுக் கொண்டேன்:)

அவரிடம் சில கேள்விகள் கேட்க தோன்றியது…

நான் கேட்டேன், ‘சார்… நீங்க எங்க இருந்து வர்றீங்க…’

அவர் பதில் சொன்னார், ‘Sodexo’

‘எதுக்காக இத பண்றீங்க’

‘Awareness’

‘எந்த எந்த இடத்தில இந்த மாதிரி stalls போட்டிருக்கிங்க’

‘இங்க மட்டும் தாங்க’

‘அப்போ… நீங்க இந்த Officeக்கு முன்னாடி, அப்புறம் பின்னாடி இருக்கிற பெட்டிக் கடையில
இந்த விழிப்புணர்வு விசயத்த நடத்தலையா?’

அவர் என்னை பார்த்து வியப்புடன் கேட்டார். ‘அங்க எல்லாம் எதுக்கு சார் இத பண்ணனும்’

நான் பதில் சொன்னேன், ‘அங்க தான் sir முக்கியமா விழிப்புணர்வு தேவை…’

சற்றும் சிந்திக்காமல் சிரித்தார்,’ஹாஹாஹா’

எனக்கு சிரிப்பு வரவில்லை… இருந்தாலும் அவரை தனியாக சிரிக்காவிட்டால் சுற்றி
இருப்பவர்கள் அவரை தவறாக நினைப்பார்கள் என்று நானும் அவர்களை நினைத்து சிரித்தேன்…

செம்மக் காமெடி! இல்ல…

வெளிய போய் சிரிக்கலாம் என்று அலுவலகத்திற்கு வெளியே இருந்த அந்த பெட்டிக் கடைகளில் நிலவரத்தை சென்று பார்த்தேன்…

எப்போதும் போல புகை வண்டிகள் புகைத்துக்கொண்டு தான் இருந்தன…

ஒரு வேளை இவர்கள் கடைகளில் இருக்கும் புகையிலைகளை புகைத்து அழித்து, அந்தக் கடைகளில் அதை ஒழித்து, புகையிலை இல்லாத கடைகளாக மாற்ற நினைக்கிறார்களோ?

அவர்கள் பஞ்சு இருக்கும் கடைசி நுனி வரை முழுமையாக அனுபவித்து புகைப்பதை
பார்த்தவுடன் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது…

‘அய்யய்யோ… ஜூஸ முழுசா குடிக்காம பாதிய வச்சிட்டு வந்திட்டோமே:(‘

ஜூஸ் போச்சே…