தம்பி உடையான்…

‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’!

அந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தத்தை விளக்கும் பதிவு இது!!

இந்த பதிவ படிக்கிறதுக்கு முன்ன நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணனும் !!!

இந்த கதைய படிக்கும் போதோ, படிச்ச பிறகோ…

சிரிக்க கூடாது…

அதாவது சோகமான முகத்தோட படிங்க :(

ஏனா இது ஒரு சோக…(கொஞ்சம் இருங்க… கண்ண தொடச்சுக்கிறேன்)….க்கதை:(:(

அண்ணனா பொறந்து அடிமையா வாழ்ந்துட்டிருக்குற ஒரு அப்பாவியின் வாழ்கையின் ஒருEpisode!

அந்த அப்பாவி வேற யாரு நான் தேன்!!

என் குடும்பத்த பத்தி சுருக்கமா சொல்லப் போனா…

தமிழில் இன்னொரு கா(ப்பி)வியமே இயற்றலாம்!

அதனால இன்னும் சுருக்கமா சொல்றேன்…

நாங்க நாலு பேரு(அம்மா, அப்பா, நான், தம்பி)…

எங்களுக்கு சொந்தக்காரங்க மேல நம்பிக்கை கிடையாது (நம்பிக்கைய இழக்க வச்சிட்டாங்க)

எங்க நாலு பேர விட்டா எங்க கூட சந்தோசத்த பகிர்ந்துக்கிரதுக்கும் யாரும் இல்ல, சண்ட போடவும் யாரும் இல்ல…

நல்ல விஷயம் தான… அதான் இல்ல…

எங்களுக்குள்ளயே சண்ட போட்டுக்குவோம்:(

வீட்டில் தினமும் ஒரு சண்டை நடக்கும், காரணம் என்னனு கண்டுபிடிக்க இன்னொரு சண்டை நடக்கும்,

உடலில கொஞ்சம் சக்தி குறைஞ்சதும் அமைதியாகிடுவோம்… திரும்பவும் சாப்பிட்டு சக்தி(கொழுப்பு) கூட சண்டைக்கு பச்சைக் கொடி காட்டி ஆரம்பிப்போம்…

நாங்க நாலு பேரும் ஒரு நாள் ஒன்னா இருந்தா… அன்னைக்கு எங்க வீட்ட சுத்தி இருக்கிறவங்க நிம்மதியா இருக்க முடியாது :(

இருந்தாலும் வெளியில விட்டு கொடுக்க மாட்டோம்:)

‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று கணவன் மீது மரியாதையும், இரு பிள்ளைகளும் இரு கண்கள் என்று பிள்ளைகள் மீது அளவு கடந்த நம்பிக்கை கலந்த பாசம் வைத்திருக்கும் அம்மா தான் வீட்டின் அரசி…!

‘சாமியாரா போக வேண்டியவர்க்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாய்ங்க’-னு தினமும் புலம்பித் தவிக்கும் அப்பா தான் வீட்டின் அரசர்!! (ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்தால் தான் துறவரத்தின் அருமையை உணர முடிகிறது:(

‘நாங்கள் நினைத்ததை தான் செய்வோம், எவன் பேச்சையும் கேட்க மாட்டோம்… பட்டு திருந்திக்குவோம், நீ கொஞ்சம் கிளம்பிரியா’ என்று அறிவுரை செய்ய முன் வருபவர்களை…

கலாய்த்து வந்த வழியில் திருப்பி அனுப்பும் இரண்டு தறுதலைகள் தான் வீட்டின் இளவரசர்கள்!!!

இன்னும் Short Notesல் சொல்ல போனால்…

‘Sentiment’ க்கு அம்மா,

‘Tragedy’ க்கு அப்பா,

அடிதடிக்கு தம்பி,

காமெடிக்கு நான்:)

மொத்தத்தில்…

நல்லதொரு குடுமபம் பல்கலை’கலகம்’!

இனி வருவது…

தம்பிக்கும் எனக்கும் நடக்கும் பாச போராட்டம்!

போன வாரம் ஊருக்கு போயிருந்தேன்…

வீட்டில் எனக்கு முன்னதாகவே ஒரு புயல் வந்து போயிருந்தது போல் உணர்வு!

‘ஒரே அமைதியான நிலவரம்…’

இருள் நிறைந்த அறைகளுக்குள், அங்கங்கே உருவங்களின் நிழல்கள்…

அப்பா வேலைக்கு சென்று விட்டார் என்பது எனக்கு தெரியும்…

அப்படியென்றால் வீட்டில் மீதம் இருப்பது என் தாயும், அவள் பெற்ற இன்னொரு தறுதலையும் தான் என்பதை புரிந்து கொண்டேன்!!

நான் தொடங்கினேன், ‘ஏன் இருட்டில உட்கார்ந்திருக்கிங்க?’

எனக்கு தம்பி என்று சொல்லப்படும் நிழலிலிருந்து பதில் வந்தது, ‘ டேய் லூசு… கரண்ட் இல்லடா, தமிழ் நாட்டில தான இருக்க… என்னமோ வெளி நாட்டில இருந்து வர மாதிரி கேட்கிற’

நான், ‘சரிடா… வெட்டி பயலே’

தம்பி,”சொல்லிட்டாருயா… கலெக்டரு, Officela போய் Cut copy paste பண்ற நீயும் ‘வெட்டி’ பய தான்டா… என்ன உனக்கு சம்பளம் தர்றாய்ங்க”

நான், ‘அம்மா… இவன் ரொம்ப அதிகமா பேசுறான்… சொல்லி வை’

அம்மாவின் நிழல் பேசியது, ‘வந்த உடனே ஆரம்பிச்சிட்டிங்களா?… இப்போ தானடா வந்திருக்கான், அவன் கிட்ட ஏன்டா வம்பு பண்ற’

அம்மா என் அருகில் வந்து,’ கொஞ்சம் சீக்கிரம் வரக் கூடாதா… காலையில வரேன்-னு சொல்லிட்டு மத்யம் வந்திருக்க? உனக்காக நிறைய சாப்பாடு செஞ்சு வச்சிருக்கேன்… பல்லு விளக்காட்டியும் பரவா இல்ல… முதல்ல சாப்பிடு’

நான்,’சரிம்மா…’

என்னை மேலிருந்து கீழாக… தலை முதல் கால் வரை பார்த்து விட்டு சோகமாக கேட்டாள், ‘என்னப்பா போன முறை வீட்டுக்கு வந்தத விட மெலிந்து போயிட்டியே… சரியா சாப்பிடறது இல்லையா?’

நான் வழக்கம் போல் சமாளித்தேன்,’அடப் போமா… நீ போன முறை வந்தப்பையும் இத தான் சொன்ன… உன் பக்கத்தில யார் நின்னாலும் கொஞ்சம் மெலிஞ்ச மாதிரி தான் தெரிவாங்க’

அம்மா,’டேய்… வந்ததும் என்னைய கலாய்க்கிரியா, நான் என்ன அவ்வளவு குண்டாவா இருக்கேன்… நான் அதிகமா சாப்பிடறது இல்லையே… வாரம் ஏழு நாள் விரதம் இருக்கேனே’

என் தம்பி, ‘வாரத்தில இருக்கிறதே ஏழு நாள் தாம்மா… உங்க பாசத்தை எல்லாம் பொழிஞ்சுக்கோங்க, இப்ப எனக்கு சாப்பாடு போடு… உன் மகன் வரான்னு வித விதமா சமைச்சு வச்சிருக்க… இத்தன நாள் வீட்டுல இருக்கிற எனக்கு இதெல்லாம் கண்ணுல காட்டிருப்பியா’

அம்மா,’அவன் எப்பையாவது தானடா ஊருக்கு வரான்’

பத்து நாள் சாப்பிடாதவன் கண்ணுல பல வகை பலகாரங்கள காட்டினா என்ன நடக்கும்?

‘கலவரம் தான்’

தட்டு களம் ஒரு போர்க்களம் ஆனது!

தோற்றது பசி !!

வென்றது அம்மாவின் சமையல்!!!

ஒட்டகத்தை போல எவ்வளவு வயிற்றில் ஏற்றிக்கொள்ள முடியுமோ ஏத்திக்கிட்டாச்சு…

‘கே…ஏப்…’ (ஏப்பம் தான்)

என்ன தான் கழுத்து வரை சாப்பிட்டு காது அடைத்திருந்தாலும் என் தம்பி அம்மாவிடம் எதையோ கிசுகிசுத்தது எனக்கு கேட்டுவிட்டது!

நான்,’ என்னம்மா அங்க சத்தம் ‘

தம்பி,’அம்மா… அவன்ட்ட நீயே சொல்லும்மா’

அம்மா,”ஒன்னும் இல்லப்பா… தம்பி ஏதோ ஆந்த்ரால போய் ப்ராஜெக்ட் பண்ண போறானாம்’

கடுப்பான தம்பி பல்லை கடித்து கொண்டு,’அம்மா… அது Android projectம்மா’

நான்,’சரி… அதுக்கு நான் என்ன பண்ணனும்’

அம்மா,’தம்பிக்கு நீ ஒரு ஆந்த்ரா phone வாங்கி கொடுத்திருப்பா’

தம்பி அதே முகபாவனையுடன்,’Android’

அம்மா,’எதுவா இருந்தா என்ன… அண்ணன் வாங்கி கொடுப்பான்’

நான்,’ஏன் அதுக்கு புது Phone தான் வேணுமா? நான் என்னோட Phone தரேன்… Project முடியிற வரைக்கும் நான் அவனோட Cell phone-ah வச்சிக்கிறேன்’

தம்பி,’என்னம்மா… உங்களுக்கு என்னைய பார்த்தா கேனை பய மாதிரி தெரியுதா?… மரியாதையா எனக்கு புது phone வாங்கி கொடுக்க சொல்லு… இல்லேன்னா எப்படி வாங்கனும்னு எனக்கு தெரியும்… கடன் கொடுக்க எனக்கும் நிறைய Friends இருக்காய்ங்க… ஆனா அத நீங்க தான் திருப்பி கொடுக்கணும்’

நான்,’இத அப்பா கிட்ட கேட்க வேண்டிய தானே’

அம்மா,”உன் அப்பாவ பத்தி உனக்கு தெரியாதா… ‘வெட்டி பயலுக்கு இவ்வளவு செலவு பண்ணி வாங்கி கொடுக்க முடியாது’-னு சொல்லிட்டாரு”

நான்,’அப்பாவே சொல்லிட்டாரா… அப்ப நான் அவரு கூட சேர்ந்துக்கிறேன்’

தம்பி,’இப்ப என்ன… Phone வாங்கி கொடுக்க முடியுமா முடியாதா’

நான்,’முடியாது டா… என்னடா பண்ணுவ’

தம்பி,’ம்ம்மா…’

அம்மா,’ஐயா ராசா… எனக்காக அவனுக்கு phone வாங்கிக் கொடு, அவன் ப்ராஜெக்ட் விஷயம்… விளையாடதப்பா, வேலைக்கு போயிட்டானா அவனுக்கு பொறுப்பு வந்துடும்… அவன் வேலைய அவன் பார்த்துப்பான்’

என்ன செய்வது… அம்மாவின் அன்புக்கு நான் அடிமை, அம்மாவின் முகத்தில் சிரிப்பை வர செய்ய அந்த பதிலை சொன்னேன்…

‘சரி… வாங்கி கொடுத்து தொலையிறேன்…’

என்ன ஒரு மந்திர புன்னகை என் அன்னையுடையது!

அதை பார்த்த உடனேயே நானாக கிளம்பி, உடன் என் தம்பியை கடைக்கு அழைத்துச் சென்றேன்…

எங்கு சென்றோம், என்ன அலைபேசி வாங்கினோம், எவ்வளவு செலவானது…. இதை சொல்ல இன்னொரு Episode போடணும் :(

அவன் எதிர்ப்பார்த்ததை விட நல்ல அலைபேசியை வாங்கி கொடுத்து விட்டு தம்பியின் முகத்தை பார்த்தேன்…

என் தம்பி மனதில் எந்த பாடலும் ஓடுவதாக தெரியவில்லை:(… எனக்கு நானே ஒரு பாட்டை போட்டுக்கொண்டேன்…

‘அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே…

பனித் துளியப் போல குணம் படச்ச தென்னவனே…

கடையில் இருந்து வீட்டுக்கு வரும் முன்பே இருவரும்… வேறு வேறு பாதையில் பிரிந்து விட்டோம்!

நான் வீட்டுக்கு வந்தேன், தம்பி நண்பர்களை பார்க்க சென்றுவிட்டான்…

அன்று இரவு…

நான் வீட்டின் மாடியில் இருந்த அறையில் இருந்த என் மடிக்கணினியில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்…

அப்போது…

என் அலைபேசியில் குறுந்தகவல் வந்த தகவல் ஒலித்தது…

‘யாரு…’ என்று குறுந்தகவலை திறந்து படித்தேன்…

‘சாப்பிட்டாச்சா…’ என்றிருந்தது!

படித்தவுடன் அதிர்ந்து போனேன்… ஏனென்றால் குறுந்தகவல் வந்திருப்பது என் தம்பியின் எண்ணில் இருந்து!!

(‘என் மேல இவனுக்கு இவ்வளவு பாசமா?… இவன போய் தப்பா பேசிட்டோமே’)

‘இன்னும் சாப்பிடல’ என்று பதில் அனுப்பினேன்…

‘சீக்கிரம் சாப்பிடு… உடம்பு என்னத்துக்கு ஆகிறது’ என்று குறுந்தகவல் மின்னல் வேகத்தில் வந்தது…

‘என்ன இது திடீர் பாசம்’ என்று கலாய்த்து ஒரு செய்தி அனுப்பினேன்…

‘பாசம் புதுசு இல்ல… என் செல்போன் தான் புதுசு’ என்றான்

‘அது எனக்கு தெரியுமே’ என்றேன்

‘எப்படி உனக்கு தெரியும்?’ என்று வினவினான்

‘என்னடா லூசுத்தனமா கேட்கிற… நான் தானடா வாங்கிக் கொடுத்தேன்’ தட்டினேன்

அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை…

என்னிடம் ஏன் இப்படி பேசினான் என்று சிந்தித்துப்பார்த்தும் புரியவில்லை, அவனிடமே கேட்டு விடலாம் என்று அலைபேசியில் அழைத்தேன்…

அவனும் அலைபேசியை எடுத்து பேசினான்…

நான்,’டேய்… எங்கடா இருக்க?’

தம்பி,’வீட்டுல தான்டா இருக்கேன்… கீழ டிவி பார்த்திட்டு இருக்கேன்’

அப்படியே தொடர்ந்தேன்…

நான்,’வீட்டுல இருந்துக்கிட்டே ஏன்டா மெசேஜ் அனுப்பி விளையாடுற… லந்தா?’

தம்பி, ‘Free-ya விடுடா அண்ணா’

நான்,’சரி… ஏன்டா குழப்பிற மாதிரி மெசேஜ் அனுப்பிற’

தம்பி,’ அத உனக்கு தப்பா அனுப்பிட்டேண்டா’

‘என்னடா சொல்ற…’

‘என் ஆள் பெயரும் சூர்யா தான், உன் பேரும் அவ பேரும் Contact list-ல பக்கத்தில இருந்தது… டிவி பார்த்திட்டே தப்பா உன் நம்பருக்கு அனுப்பிட்டேன்… தப்பா எடுத்துக்காத, நீ போய் ஒன் வேலைய பாரு…’

எனக்குள் நிறைய கேள்விகள் இருந்தாலும் வாயடைத்து நின்றேன்… அதையும் மீறி என் மூளையின் தவறான செயல்பாட்டால் ஒரு கேள்வி கேட்டேன்.

‘சரி… பொண்ணு பேரு சூர்யா, இத்தன நாள் எப்படி அவளுக்கு Correct-ஆ மெசேஜ் அனுப்பின?’(என்னோட Intellegent கேள்விக்கு… மாட்டினான் தம்பி என்று எனக்குள்ள ஒரு சந்தோசம் வேற…)

அதற்கு அவன் சற்றும் யோசிக்கும் இடைவெளி இல்லாமல் சொன்ன பதில் என்

காதுகளில் இன்னும் எதிரோலித்துக் கொண்டிருக்கிறது… து… து…

அந்த பதில் என்னனா…

‘இத்தன நாள் உன் நம்பர் என் கிட்ட இல்லடா… இப்ப தான் அம்மாகிட்ட வாங்கி சேவ் பண்ணிருக்கேன்…

ரொம்ப மொக்க போடாம போன வைடா… என் லவ்வர் இப்போ கால் பண்ணுவா, அவ கிட்ட பேசணும்’

அழைப்பைத் துண்டிக்கும் முன் அலைபேசி என் கையிலிருந்து நான் அமர்ந்திருந்த மெத்தையில் விழுந்தது…

அன்றிலிருந்து என் அலைபேசியில் ஒலிக்கும் ரிங் டோன்(Ringtone) பாடல்…

‘ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி…

ஞானம் பொறந்திரிச்சு, நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி…’

‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’!

அவன் இருக்கும் போது இன்னொரு படை எதற்கு !!