முடியல…

ரெண்டு வாரத்துக்கு முன்ன சென்னையில் ஒரு நாள்…
சோ-னு மழை வந்தது, அதுக்கு அடுத்த நாள்…
எனக்கு தலை வலி, வயித்து வலி, காய்ச்சல்… இதெல்லாம் ஒன்னு சேர்ந்து வந்தது:(
அன்று நடந்தது என்ன?…

இடை குறிப்பு: இந்த பதிவுல என்னோட வசனங்கள் பெரும்பாலும் மைண்ட் வாயிஸ் தான் …
ஏனா
என்னால (பேச) முடியல…

நடந்தது என்னனா…

அன்றைய காலை பொழுது அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போதே என்றும் இல்லாத அளவுக்கு அதிமாக வியர்த்து கொண்டிருந்தது…

இன்னொரு புறம் உடல் குளிரால் சற்று நடுங்க தொடங்கியது… நானோ நேற்று பெய்த மழையில் நனைந்ததன் விளைவாக இருக்குமோ என்று எண்ணியபடியே ‘இன்னிக்கு ஆபீஸ்க்கு லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கலாமா?’ (இது ஒரு நல்ல ஐடியா-னு எனக்கு அடுத்த நாள் தான் தெரிஞ்சுது)… அப்புறம் நான் நினச்சது தான் என்னை ஒரு மோசமான முடிவு எடுக்க வச்சுது… ‘ரூம்ல இருந்தா நேரத்த எப்டி ஓட்டறது, ஆபிஸ்க்கு போன நோமி-ல நேரம் போறதே தெரியாது:)… எதுவா இருந்தாலும் இருந்தாலும் அங்க போய் பார்த்துக்கலாம், போற வழில ஒரு பாராசிட்டமால் மாத்திரை வாங்கி போட்டா சரியா போய்ட போகுது… காலங்காலமா காய்ச்சல் வந்தா இத தான பண்றோம் ‘

நான் கிளம்பிய நேரத்துக்கு ஒரு மருந்து கடை கூட திறக்கப்படவில்லை:(… ‘சரி ஆபிஸ்க்கு போய் பார்த்துக்கலாம்’ என்று எப்படியோ பேருந்து ஏறி காரப்பாக்கம் ஆபீஸ்க்கு வந்து சேர்ந்துவிட்டேன்… அலுவலகத்தை வந்தடைந்த பிறகு ஒரு விசயத்தை நன்றாக உணர்ந்தேன்… பேருந்தில் பயணச்சீட்டு எடுத்து நான் பயணம் செய்தேன், கூடவே பயணச்சீட்டு இல்லாமல் என் தலையில் ஏறி ஒருவன் பயணம் செய்து என்னை தொடர்ந்து வந்துள்ளான்… அது வேறு
யாரும் இல்லை, ‘தலைவலி’ தான்…

‘டாக்டர்-அ போய் பார்க்கலாம்’ என்று RTSC கேண்டீன் எதிரில் இருந்த மருத்துவ அறைக்கு சென்றேன்,
அங்கு டாக்டர் இருந்தார் ‘Doctor’s Room’ என்ற பலகையில் மட்டும்…
‘ இப்ப சாப்பிட்டுட்டு போவோம், கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பாப்போம்’ என்று எண்ணி கேண்டீனுக்குள் நுழைந்தேன்…
அங்கு மெனு பலகையில் நிறைய சாப்பாடு வகைகள் எழுதியிருந்தார்கள், அதை பார்த்த பிறகு
நன்றாக சாப்பிட ஆசை இருந்தது அனால் என் உடல் ஒத்துழைக்காததால் இட்லியோடு முடித்துக் கொள்ளலாம்
என்று கௌண்டர்(Counter) அருகில் சென்று பில் கொடுப்பவரிடம் இட்லி இருக்கிறதா என்று கேட்டேன், சற்றும் தாமதிக்காமல் அவர் ‘அது இல்லை’ என்று பதிலளித்தார்… நானும் மெனுவை திரும்ப பார்த்துவிட்டு ‘அது இருக்கா?’ கேட்க, அவரும் உடனே ‘அது இல்லை’ என்று பதிலளிக்க, இப்படியே ஒரு ஐந்து நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்து
பதிலளித்தபடியே கடந்தது…
அதுக்கு மேல ‘என்னால முடிய்யல’… பலமாக மூச்சை இழுத்து விட்டு கேட்டேன் ‘என்னதான் இருக்கு’ … ‘இது மட்டும் தான் இருக்கு’ என்று மெனுவில் ஏதோ ஒன்றைக் காட்டினார்… ‘அதையே கொடுங்க’ என்று பில்லை வாங்கிக் கொண்டு அவரை பார்த்தேன் ‘அதான் நான் என்ன சாப்பிடனும்-னு ஏற்கனவே முடிவு பண்ணிட்டீங்களே, அப்புறம் எதுக்கு இவ்வளவு பெரிய மெனு எழுதிப் போட்டிருக்கிங்க’… அடுத்து இன்னொருவர் வந்து முதலில் இருந்து ஆரம்பித்தார் ‘அது இருக்கா?’… ‘மறுபடியும் முதல்ல இருந்தா’ என்று நொந்தபடி நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன்…
எப்படியோ காலை சிற்றுண்டி ஒரு வழி(வலி)யாக முடிந்தது…

இன்றைய பொழுதை எப்படியாவது கடத்தி விட வேண்டும் என்று எண்ணியபடி என் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, வியர்வையில் நனைந்தபடி உள்ளே வந்த அணி உறுப்பினரிடம் கேட்டேன் ‘பாஸ்… இன்னிக்கு குளிர் அதிகமா இருக்கே, இன்னிக்கும் மழை பெய்யுமோ’ அவர் என்னை ஒரு நொடி பார்த்துவிட்டு சொன்னார் ‘கண்ணாடி வழியா கொஞ்சம் வெளில பாருங்க… சித்திரை வெயில் பல்ல காட்டிட்டு இருக்கு, உங்களுக்கு மட்டும் மழை வர மாதிரி இருக்கா?’, சிறிது நேரம் கழித்து… வியர்த்துக் கொண்டிருந்த நண்பரிடம் சென்று மெதுவாக கேட்டேன் ‘ஒரு வேள
இன்னிக்கு நம்ம ஆபிஸ்-ல A/Cய அதிகமா வச்சிருக்காங்களோ?’, அவர் பதிலேதும் கூறாமல்
என்னை கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்ததற்கு அர்த்தம் எனக்கு புரியவில்லை, அனால் என் உடலில் தான் கோளாறு என்று உறுதி செய்து கொண்டேன்… பிறகு அவரும் வேலையில் மூழ்கிவிட்டார்,
நானும் என் வேலையைப் பார்க்க முடிவு செய்தேன்.

‘இன்னிக்கு சீக்கிரம் வேலைய முடிச்ச உடனே போய் டாக்டர்-அ பார்த்து மாத்திரை வாங்கி போட்டுட்டு வீட்டுக்கு போய் படுத்துரனும்’ என் கணினி முன் அமர்ந்து எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்… வேலைக்கு இடையில் நோமி, நோமிக்கு இடையில் வேலை என்பது போல தலைவலியுடன் காய்ச்சல், காய்ச்சலுடன் தலைவலி என்று கொடுமையாக நேரம் கழிந்தது… இதற்கிடையில் என் வயிற்றில் ஏறி ஒருவன் அமர்ந்துக் கொண்டான், அவன் தான் வயிற்று வலி… காரணம் காலையில் சாப்பிட்ட ‘அது’வாக இருக்கலாம் என்று எண்ணினேன்…

இந்த உபாதைகளுக்கு நடுவில் என் அலைபேசி ஒலித்தது, அழைத்தது என் அம்மா…
‘அச்சசோ… இன்னிக்கு காலைல அம்மாகிட்ட பேச மறுந்துட்டேன்’, நான் தினமும் காலை குறிப்பிட்ட நேரத்திற்குள் அம்மாவிடம் பேசவில்லை என்றால் எனக்கு என்னமோ ஏதோ என்று பதறியபடி அம்மாவிடம்
இருந்து அழைப்பு வந்துவிடும்… அன்றும் அப்படி தான் நடந்தது, இரு முறை அலைபேசியை அமைதிபடுத்தி வைத்தேன்… என்னால் பேச முடியவில்லை, அப்படி பேசினாலும் என் குரலை வைத்து என் வேதனையை அம்மா கண்டுபிடித்துவிடுவாள்… மூன்றாவது முறையாக அம்மாவிடம் அழைப்பு வந்தது,
வேறு வழியில்லாமல் அலைபேசியின் தொடுதிரையில் பச்சை பொத்தானை அழுத்தினேன்…
மறுமுனையில் இருந்து ‘என்னப்பா காலையில போன் போட்டு பேசவே இல்ல, அதான் நானே கால் பண்ணிட்டேன்… நல்லா தானப்பா இருக்க… உடம்புக்கு ஒன்னும் இல்லையே’

என் சக்தி அனைத்தையும் திரட்டி வலிகளை மறைத்து சொன்னேன் ‘அதெல்லாம் ஒன்னும் இல்லமா,
நல்லா தான் இருக்கேன்’… அம்மா ‘என்னப்பா உன் குரல் ஒரு மாதிரி இருக்கு,
உண்மைய சொல்லு உடம்புக்கு என்ன செய்யுது’…
சமாளித்துவிடலாம் என்று எனக்குள்ளே தோன்றினாலும் என்னை அறியாமலேயே அந்த குரலுக்கு
உண்மை பதிலாக வந்தது…
‘ஆமாம்மா… ‘,
பதறிப் போன அந்த குரல், ‘ஏன்?… நேத்து பேஞ்ச மழைல நனஞ்சியா?…
குடை எடுத்துட்டு போ-னு எத்தன தடவ சொன்னேன்… உன்ன ஒரு ஆள் எப்போதுமே பக்கத்தில இருந்து கவனிக்கணுமா? உன்ன நீயே கவனிச்சுக்க கூடாதா?
ஏன்பா இப்படி பண்ற?…’

நான் எந்த கேள்விக்கு பதில் சொல்வது என்று நினைப்பதற்குள் அம்மா தொடர்கிறாள்…

‘மாத்திரை சாப்டியா?’
‘இல்லமா… கடை திறக்கல’
‘போன வாரம் வீட்டுக்கு வந்துட்டு போனப்ப மாத்திர கொடுத்து விட்டேனே… அத என்ன பண்ண?’
‘என் ப்ரெண்டுக்கு உடம்பு சரியில்லன்னு கேட்டான்… எல்லாத்தையும் கொடுத்திட்டேன்’
‘சரி… ரொம்ப முடியலனா நீ லீவ் போட்டுட்டு ஒரு டாக்டர்-அ பார்த்து ஊசியப் போட்டு, வீட்ல போய்
மாத்திரை சாப்டுட்டு நல்லா தூங்கு’

‘சரிம்மா’

‘…….’
‘சரிம்மா’

‘…….’
‘சரிம்மா’
.
.
.
‘நான் சொன்னதெல்லாம்
நினவில வச்சிக்கோ, உடம்ப கவனிச்சுக்கோ…’
‘சரிம்மா’
‘நான் ராத்திரி திரும்ப கூப்பிடறேன்… ‘
‘சரிம்மா’

பேசி முடிக்கும் போது மதிய உணவு இடைவேளை வந்துவிட்டது…
இப்போதாவது மருத்துவரை பார்த்துவிடலாம் என்று வேகமாக அவர் அறைக்குச் சென்றால்… அந்த அறையில் அவரைத் தவிர அனைத்தும் உள்ளது… அனால் மருத்துவர் இல்லை:(
‘அவரு எப்ப வருவார்-னு Receptionist அக்கா கிட்ட கேட்போம்’ என்று அவரிடம் சென்று கேட்டால்… அவர் என்ன சொல்கிறார் என ஒரு நொடி எனக்கு புரியவில்லை,

குளிரால் காதுகள் அடைத்துக் கொண்டுவிட்டன, ஆகையால் அவர் சொன்ன பதில் என்ன என்று அவர் உதட்டசைவை பார்த்து புரிந்துக் கொண்டுவிட்டேன்…
‘Doctor’s timing is 12:30 to 1:30 pm’

என் கண்களுக்கு இருட்டிக்கொண்டே வந்தது, எப்படியோ வாயை திறந்து மறுபடியும்
அவரிடம் இந்த கேள்வியை கேட்டேன்…
‘சரி… டாக்டர் இப்ப வருவாங்களா… மாட்டாங்களா?’
‘Now the time is 2 pm, they won’t be available beyond their timing’.

என்ன கொடும சார் இது… ஒரு மனுஷனுக்கு 12.30–1.30 அந்த ஒரு மணி நேரந்துக்குள்ள தான் பிரச்சன வருமா?

‘முடிய்ய்யல…’

‘இதுக்கு மேல இங்க இருக்க முடியாது, பெர்மிசன் போட்டு கிளம்ப வேண்டியது தான்’ என்று அணித் தலைவியிடம் சென்றேன்… அவரும் தலைவலியால் பாதிக்கப்பட்டவர் போல் நொந்து போய் எதையோ சிந்தித்தவாறு அமர்ந்திருந்தார், நான் அவரிடம் சென்று என் பிரச்சனையை சொல்லும் முன் அவரே பேச ஆரம்பித்தார்…

‘உங்கள தான் தேடிட்டு இருந்தேன்… உங்களுக்கு மட்டும் தான் வொர்க்லோடு கம்மியா இருக்குனு நினைக்கிறன்,
நம்ம டீம்-ல எல்லோரும் கொஞ்சம் பிஸியா இருக்காங்க… நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்’

‘வேல இருக்கானு மாடுல் லீட் கிட்ட கேட்டு…’ நான் சொல்லி முடிப்பதற்குள் அவர்…

‘உங்க மாடுல் லீட் கிட்ட கேட்டேன்… அவரும் உங்கள யூஸ் பண்ண சொல்லிட்டாரு’

‘அவரே சொல்லிட்டாரா…’ மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேன்

‘இன்னிக்கு ஆன்சைட்க்கு ஒரு டெலிவரபில் அனுப்ப வேண்டி இருக்கு, எப்படியாவது நானே முடிச்சிரலாம்-னு பார்த்தேன்,
ஆனா காலைல வந்ததும் மீட்டிங்-னு சொல்லி கூப்பிட்டு போய் இப்ப தான் என்னை ரிலீஸ் பண்ணாங்க’

அவர் பேசிக் கொண்டே ஒரு சில நொடிகள் என்னைப் பார்த்தார்… அவர் அடுத்து என்ன சொல்வார் என்று கணித்து விட்டேன், இருந்தாலும் அதை அவர் சொல்ல காத்திருந்தேன், இதோ சொல்லிவிட்டார் ‘இதுல பாதி வேலைய நான் பார்த்துக்கிறேன், மீதிய நீங்க ஷேர் பண்ணிக்கோங்க… நாலு மணிக்குள்ள முடிச்சிட்டு எனக்கு மெயில் பண்ணிடுங்க, நான் மெர்ஜ் பண்ணிக்கிறேன்… இத ஆன்சைட்-க்கு மெயில் பண்ணிட்டா… வேல முடிஞ்சுது,
இன்னிக்கு வேல அவ்ளோ தான்’…

கணினி திரையைப் பார்த்தபடி என்ன வேலை செய்ய வேண்டும் என்ற மின்னஞ்சலை எனக்கு அனுப்பி வைத்து விட்டு மறுபடியும் என்னைப் பார்த்து கேட்டார் ‘என்ன… ஸ்டார்ட் பண்ணலாமா?’…

என் மனதில் ‘இன்னிக்கு வேல அவ்ளோ தான்’ என்ற அந்த கடைசி வாக்கியம் நிம்மதியை தந்தது… அவருடைய நிலைமையைப் பார்த்த பிறகு எனக்கும் மறுப்பு சொல்ல மனமில்லை (தல வலி வந்தவங்களோட வேதனை இன்னொரு தல வலி வந்தவங்களுக்கு தான் தெரியும்), தலையை மெதுவாக அசைத்து ‘சரி’ என்றேன்.

‘நாலு மணி வரை தானே… தாக்குப் பிடிச்சடலாம் (எவ்வளவோ பண்றோம், இத பண்ணமாட்டோமா:)’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு, நான்கு மணிக்குள் வேலையை முடித்து அவருக்கு அதை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து
விட்டு, அவரிடம் சொல்லக்கூட முடியாமல்(சொல்ல போக வேற வேல கொடுத்துடுவாங்க-னு ஒரு பயம் தான்) வேகமாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பேருந்திற்காக காத்துக் கிடந்தேன்…

சென்னை மாநகராட்சி பேருந்துகளைப் பற்றி சொல்ல தேவையில்லை, உங்களுக்கே தெரியும்… இருந்தாலும் சொல்கிறேன் ‘ஒரே இடத்தை நோக்கி போகும் பேருந்துகள் சற்றும் இடைவெளிஇல்லாமல் தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து செல்லும், இதில் கடைசி இரு வண்டி காலியாக செல்லும்… அதன் பிறகு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு
அந்த வழித்தடத்திற்கு பேருந்தே இருக்காது:(‘. அந்த ஒரு மணி நேரத்திற்குள் தான் நான் வந்து மாட்டிக்கொண்டேன்…

உயிர் போகும் வேதனையில் நிற்க முடியாமல் அருகில் இருந்த ஒரு தேநீர் விடுதிக்குள் சென்று பேருந்து வரும் என்று சாலையைப் பார்த்தபடி அமர்ந்துக் கொண்டேன், என் உடலில் வலு இல்லை ஏனென்றால் அன்று சரியாக உணவு அருந்த(முடிய)வில்லை… ‘ஒரு டீ குடிச்சா வீட்டுக்கு போற வரைக்கும் சமாளிக்கலாம்’ என்ற யோசனையுடன் டீ மாஸ்டரின் உதவியாளரிடம் சென்று ‘அண்ணா… பால் இல்லாம ஒரு டீ போடுங்க’(வயிற்றில் உபாதை என்றால் பால் சேர்க்ககூடாது
என்று அம்மா சொன்னது மனதில் இருந்தது)… உதவியாளர், ‘மாஸ்டர்… அவரு என்ன சொல்றாரு-னு புரியல, நீங்களே என்ன வேணும்-னு கேளுங்க’…

உடனே மாஸ்டர் டீ ஆற்றிக் கொண்டே என்னைப் பார்த்து கேட்டார், ‘சொல்லுங்க சார்… என்ன வேணும்’… மாஸ்டரைப் பார்த்து மறுபடியும் சொன்னேன், ‘பால் இல்லாம ஒரு டீ’… ‘என்னது’, அவரும் ஒன்றும் புரியாதது போல் விழித்தார்…
கடையில் கூட்ட நெரிசலால் அவர்களுக்கு கேட்கவில்லையா, இல்லை என் குரலில் வலுவில்லையா என்று புரியாமல் சத்தமாக ‘Black Tea’ என்று கத்தினேன்… மாஸ்டரும் ‘ஓ Black Tea-ஆ, அப்டி புரியிற மாதிரி சொல்லுங்க…’
என்றார். ‘யோவ்… உங்கள எல்லாம் சமாளிக்கிறதுக்கு… நான் வயித்து வலியோடவே இருந்திடுவேன்யா’…

தேநீர் அருந்திய பின் தலைவலி மற்றும் வயிற்றுவலி சற்று தணிந்ததை போல் தோன்றியது, அனால் காய்ச்சல் குறைந்ததாக தெரியவில்லை… கடந்த 15 நிமிடங்களில் நான் செல்லும் வழித்தடத்திற்கு ஒரு பேருந்து கூட வரவில்லை:(

இனியும் பொறுக்க முடியாத நான் சோழிங்கநல்லூர் இன்போசிஸ்-ல் பணிபுரியும் என் நண்பனை அலைபேசியில் அழைத்தேன்…

நண்பன், ‘சொல்லுடா’

‘டேய்… எனக்கு காய்ச்சலடிக்குது, அதனால சீக்கிரம் கிளம்பிட்டேன்…’

‘ஹாஸ்பிடல் போறியா?’

‘ஆமா… பஸ்-க்கு ரொம்ப நேரமா வெயிட் பண்றேன், ஒரு பஸ் கூட வரல… உன் பைக் எடுத்துட்டு வாடா’

‘சாரி டா… எனக்கு இப்ப மீட்டிங் இருக்கு, என்னால வெளிய வர முடியாது’

‘சரி, நான் பார்த்துகிறேன்… நம்ம ஏரியா பக்கத்துல ஒரு நல்ல கிளினிக் சொல்லு’

‘அடையாறு-ல பத்மபிரியா ஹாஸ்பிடல் போ’

‘நீ சொல்றது பெரிய இடமா தெரியுது, அங்க போன ரொம்ப செலவு ஆகுமோ…’

‘கொஞ்சம் தான் அதிமா இருக்கும்…
போன வாரம் எனக்கு உடம்பு சரி இல்லன்னு அங்க தான் போனேன்… கொஞ்ச நேரத்தில சரியா போச்சு’

‘என்ன?… நீ வச்சிருந்த பணம் சரியா போச்சா?’

‘இல்லடா… காய்ச்சல்’

‘சரி… நான் அங்கேயே போறேன்’

‘சரி டா’

எப்போதுமே இது போன்ற சமயங்களில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நான், எதற்க்காக அன்று நண்பனிடம் யோசனை கேட்டேன்… ஒரு வேளை தலைவலி மிகுதியால்… என் மூளை இயங்கவில்லையா?, இல்லை… என் மூளையின் சிந்தனை என் மூளைக்கே எட்டவில்லையா?… யோசிப்பதற்குள் அடையாறு செல்லும் பேருந்து வந்தது…
முதலில் பேருந்தில் ஏறி பிறகு சிந்திக்கலாம் என்று பேருந்தில் ஏறி அடையாறு டிப்போவிற்கு பயணச்சீட்டு எடுத்து இடம் பிடித்து அமர்ந்து விட்டேன்…

அடையாறு டிப்போவிலிருந்து பத்மபிரியா மருத்துவமனை நடக்கும் தூரம் தான்(நடக்க முடியுமா என்பது அங்கு போன பின் தான் தெரியும்)…

பேருந்து பயணம் தொடங்கியதும்… இது வரை என்னிடம் இருந்த ஒன்று என்னை விட்டுச் சென்றது போல் ஒரு உணர்வு, ‘ஆஹா… என்ன இது வயிற்றில் சுகமான ஒரு வானிலை மாற்றம்… ஓ வலி போய்விட்டது… போகட்டும், போகட்டும்’… வயிற்று வலி இருந்த வரை வயிற்றுப் பகுதியை மட்டும் தனியாக கழற்றி வைத்து விடலாம் என்று நினைக்கத் தோன்றியது, இப்போது ஒரு பெருங்கொடும் பாரத்தை என் உடலிலிருந்து இறக்கி வைத்ததைப் போல் உணர்ந்தேன்:)…
வயிற்று வலிக்கு விடைக்கொடுத்துவிட்டதால் உடல் சற்று லேசாக இருந்தது…

இருந்தாலும்… முடிய்ய்ய்யல…

பேருந்தில் பயணம் தொடர்கிறது…

அந்த பேருந்து முதலில் வேகமாக தான் சென்றது,

பெருங்குடியை கடந்து முன்னோக்கி செல்ல செல்ல வேகம் குறைந்து… பின்னோக்கி செல்கிறோமோ என்று நினைக்க தோன்றியது, நான் டீ கடையில் இறக்கி வைத்து விட்டு வந்த அந்த தலைவலி மறுபடியும் என் தலை மேல் ஏறி அமர்ந்து கொண்டது… பேருந்து யாரோ ஒருவர் பின்னாலிருந்து கையால் தள்ளுவது போல் தவழ்ந்தபடி சென்று கொண்டிருந்தது, ரணத்தை மறக்க ஜன்னல் வழியே எழில் கொஞ்சும் சென்னையின் அழகை ரசிக்கலாம் என்று வெளியே நோக்கினேன்…

ஆஹா எத்தனை அழகு… கண்ணுக்கேட்டிய தூரம் வரை புகைமண்டலங்களுக்கு நடுவே வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன, அங்கு வெளிவரும் வெப்பக் காற்றில் பச்சை மரமும் பற்றிக்கொள்ளும் போலிருந்தது, இருச்சக்கர வாகனங்களோ நடை பாதையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது… வாய்ப்பு(கேப்பு) கிடைத்தால் பேருந்து மேலே எறியும், பேருந்துக்குள்ளும் வாகனம் ஓட்டத் தயார் என்ற படி புகுந்துப் போய் கொண்டிருக்கிறார்கள்(‘பாவம் அவர்களுக்கு என்ன உயிர் போகும் அவசரமோ!:()… இவர்களுக்கு எத்தனை மேம்பாலம் கட்டினாலும் இடம் பத்தாது… வெகு நேரம் கூட்ட நெரிசலில் நின்று என்ன செய்வதென்றறியாமல் ஒலிப்பான்களை ஒலிக்க தொண்டங்கினார்கள்… 30 நிமிடங்களில் பேருந்து கடந்த தொலைவு 30 அடிக்கும் குறைவு:( ‘அதுக்கு தல வலி எவ்ளவோ பரவா இல்ல’

இந்த நகர(நரக) கொடுமைகளிலிருந்து விடுபட கனவு உலகத்திற்கு செல்ல முடிவு செய்தேன்… எனக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையில் எனக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் அமர்ந்திருப்பது போல் தெரிந்தது… அந்த உருவம் ஒரு வயதான பெண்மணி, அவர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்… அந்த குரல் எனக்கு மிகவும் பரிட்சயமான குரல்… கேமரா, கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்பம் இல்லாமல் பல கற்பனை கதைகளை நிஜம் என்று என்னை நம்ப வைத்த குரல்… ஆம் அது என் பாட்டியின் குரல்… கனவில், ஐந்து வருடத்திற்கு முன் மறைந்து போன என் பாட்டி…

கனவில் ஒரு உரையாடல்…

‘என்ன பாட்டி எப்டி இந்த பஸ்-ல ஏறுன… டிக்கெட் எடுத்தியா?’

‘அட போடா கிறுக்கா… நான் அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே டிக்கெட் எடுத்திட்டேன்’

‘பாட்டி… வருஷம் போனாலும், உன் குசும்பு உன்ன விட்டு போகல’, சிரித்து கொண்டே சொன்னேன்.

‘எப்டி போகும்… நான் உனக்கு பாட்டிடா’, வெற்றிலை போட்ட நாக்கும், மூக்குப் பொடி போட்ட மூக்குமாய்… குலுங்கி குலுங்கி சிரித்தபடியே சொன்னார்… அது பாட்டியின் ஸ்பெஷல் சிரிப்பு.

‘அதெல்லாம் இருக்கட்டும்… என்ன திடீர்னு வந்திருக்க’

‘அன்னைக்கு… என் கதைய நீ கடைசி வரைக்கும் முழுசா கேட்காமலேயே போயிட்டியேப்பா’, சிரித்த முகம் மெல்ல சோகமாக மாறியபடி என்னிடம் கேட்டார்.

ஏன் பாட்டி என்னிடம் அப்படி கேட்டார் என்பதற்கு விடையறிய ஐந்து வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும், அதனால் கனவை அப்படியே பாஸ் செய்துவிட்டு, ஒரு பிளாஷ்பேக் பார்ப்போம்…

பரபரப்பாக எங்களை பதற வைத்த அந்த நாளில்…

பாட்டிக்கு உடல் சரி இல்லை என்று எங்கள் ஊர்(பெரியகுளம்) அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு நாள் படுக்கையில் இருந்தார்… சிகிச்சை அளித்த மருத்துவர்… பாட்டி குணமாகிவிட்டார், அவருக்கு ஒன்றும் இல்லை… அவரை ஓரிரு நாளில் வீட்டுக்கு அழைத்துச்செல்லலாம் என்று உறுதி கூறி எங்கள் குடும்பத்தினர் வயிறுகளில் பாலை வார்த்தார்… அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினோம்… உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்… அன்றிரவு நான் தான் பாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்தேன்…

உணவு முடித்து, வெகு நேரமாகியும் தூங்காமல் தன் பழைய வாழ்க்கை வரலாறைப் புரட்டிக் கொண்டிருந்தார்… நானும், அருகில் மருத்துவனையில் அனுமதிக்கப்படிருந்த இன்னொரு நோயாளியும் வாய்க்குள் ஈ வந்து போவது கூட தெரியாமல் வாயை திறந்தவாறு கதை கேட்டுக் கொண்டிருந்தோம். அவரது குழந்தை பருவம் முதல்… கணவனை கை பிடிக்கும் கதை வரை வந்து விட்டார், அவர்களுடையதோ சண்டைக்காட்சிகள் நிறைந்த காதல் கதை(அவங்கெல்லாம் அப்பவே அப்படி)… எனக்கோ தூக்கம் கண்ணைத் தழுவிக்கொண்டிருந்தது… ‘பாட்டி.. கதை சொன்னது போதும், நீ தூங்கு… நான் நாளைக்கு வந்து மீதி கதைய கேட்கிறேன்’ என்று பாட்டியை உறங்க வைத்து விட்டு வீட்டுக்கு சென்றேன்…

மறு நாள் காலையில் முதல் செய்தி வந்தது ‘பாட்டி இறந்து விட்டார்’ என்று…

அதற்கு பின் சோகம் தான்:(, அதனால் பிளாஷ்பேக்-ஐ ஸ்டாப் செய்துவிட்டு நிகழ்காலத்துக்கு(கனவுக்குள்) திரும்புவோம்…

பாட்டி கேட்டதற்கு பதிலளித்தேன்…

‘பாட்டி… அடுத்த நாள் கதை கேட்க நான் வந்தேன், நீ தான் போய்ட்ட’, கண்களிலிருந்து என்னை அறியாமல் கண்ணீர்கள் வழிந்தோடியது(கதை எழுதும் போதும்)…

‘என்னடா சோர்ந்து பொய் இருக்க… உடம்பு சரி இல்லையா’, பதற்றத்துடன் பாட்டிக் கேட்டாள்…

‘ஆமாம் பாட்டி… காலைல இருந்து உடம்பு சரியில்ல… உன் சுருக்கு பையில எப்பவுமே கலர் கலரா மாத்திரை வச்சிரிப்பியே, இப்ப இருந்தா எனக்கு ஒன்னு கொடு பாட்டி’

‘நான் எடுத்துட்டு வரல… அது எதுக்குடா உனக்கு, அந்த மாத்திரை எல்லாம் நான் உயிரோட இருக்கும் போதே காலாவதி ஆயிடுச்சு’

‘அப்புறம் எதுக்கு அத எப்பவுமே உன் கூட வச்சிருந்த?’

‘மாத்திரைகளோடவே இருந்து பழகிட்டேன், அதனால தான் தூக்கி போட மனசில்ல…’

‘அப்போ அந்த மாத்திரைய சாப்பிட்டதால தான் மண்டைய போட்டியா?’

‘அட போடா… அன்னைக்கு அந்த மாத்திரைய சாப்பிட்டு இருந்தா கூட புழச்சிருப்பேன், போயும் போயும் கவர்மெண்ட் ஆஸ்பித்திரி-ல போய் சேத்தாங்க பாரு… உங்க அப்பன சொல்லணும், அவன எல்லாம் பிள்ளையா பெத்ததுக்கு…’, என் அப்பாவை ஏதேதோ திட்டி முனுமுனுத்தாள் பாட்டி…

‘என்னால இங்க சமாளிக்க முடியல… கதை சொல்லணும்-னு சொன்னில… கொஞ்சம் இரு பாட்டி, நானும் உன் கூட வந்துடறேன்… மீதி கதைய சொல்லு, நான் கேட்கிறேன்’

கடுப்பான பாட்டி இரத்த நிறத்தில் சிவந்திருந்த நாக்கை காப்பி கரை படிந்த பற்களால் கடித்தபடி என்னை அடிப்பது போல் கையை உயர்த்தி, ‘அடி படவா… என்ன பேச்சு பேசுற, உனக்கு நிறைய கடமை இருக்கு… அத எல்லாம் யாரு முடிக்கிறது, எழுந்திருச்சு நடக்கிற வேலைய பாரு…’ என்று சொல்லியவாறே… பாட்டியின் உருவம் மறைந்துவிட்டது…

நிஜ உலகிற்கு வர வேண்டிய கட்டாயம்… விழித்துப்பார்த்தால் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது, பேருந்து குலுங்கவில்லை, எந்த ஒரு அதிர்வும் இல்லை, ஒலிப்பான்கள் ஒலிக்கவில்லை… பேருந்து ஒரு வேளை கடைசி இலக்கையும் அடைந்துவிட்டதா என்று கண்ணை கசக்கி ஜன்னல் வழியே உற்றுப் பார்த்தேன்… என் கண்கள் போலவே வானமும் இருட்டிவிட்டது. பேருந்துக்கு முன்னும் பின்னும் வாகனங்கள், பிறகு ஏன் ஒரு சத்தமும் இல்லை…

‘அடப்பாவிகளா… வண்டிய ஆப் பண்ணிடிங்களா’, எரிபொருளை விரயம் செய்யாமல் இருக்க ஓட்டுனர் வண்டியை அணைத்து வைத்து விட்டார்…

‘என்ன ஒரு பொறுப்பு உணர்ச்சி, அப்புறம் எப்டி டீசல் விலை நாளுக்கு நாள் ஏறுது’, அது அரிசியல்வாதிகளுக்கு தான் வெளிச்சம்…

‘இப்ப எந்த எடத்தில தான் வண்டி நிக்குது’ என்று ஆர்வத்துடன் வண்டியின் முன் கண்ணாடி வழியாகப் பார்த்தேன், என் முன்னே பல மீட்டர் தூரத்தில் ஒரு சிவப்பு விளக்கு தெரிந்தது, பேருந்திற்கு முன் அணிவகுத்து நிற்கும் வண்டிகளின் வால் விளக்குகள், பேருந்திற்கு பின்னால் திரும்பி பார்த்தால் பின் நிற்கும் வண்டிகளின் தலை விளக்குகள் என் கண்களை கூசச் செய்தது… ‘நான் எங்க இருக்கேன்’, அப்படி கேட்கலாம் என்று எழுந்து நடத்துனர் பக்கம் திரும்பினேன்… அதற்கு முன்னதாகவே அவர் கூவத் தொடங்கினார், ‘டைடல் பார்க் டிக்கெட் இருந்தா இருங்கிடுங்க… டைடல் பார்க்’… வாய் திறந்து பேச முடியாமல் இருந்த என் சக்தியை மிச்சப்படுத்தி விட்டார், நடுத்துனருக்கு மனதிர்க்குள்ளேயே ஒரு நன்றி சொல்லிவிட்டு, ஓட்டுனரை நோக்கி மயக்க நிலையிலேயே தடுமாறியபடி நகர்ந்தேன்… அவரும் சொல்லி வைத்ததைப் போல் என் பக்கம் திரும்பி, ‘இறங்கி நடந்து போய்டுங்க, இன்னும் ஒரு மணி நேரம் ஆயுடும்’. அவருக்கும் ஒரு நன்றி…

‘இதுக்கு பெயர் தான் அனுபவமா?’… பேருந்தை விட்டு இறங்கினேன்.

கனவு களையும் முன், பாட்டி என்னிடம் சொன்னது காதில் எதிரொலித்தது, ‘நடக்கிற வேலைய பாரு…’, பாட்டிக்கும் ஒரு நன்றி சொல்லிவிட்டு… இந்த நாளின் முடிவு என்னவென்று தெரியாமல் அந்த சிவப்பு விளக்கை தற்சமய இலக்காக வைத்து நடை வண்டியை கட்டினேன்…

கால் போன போக்கில் நடந்து… எப்படியோ பேருந்துக்கு முன்னரே நான் அந்த சிக்னலை கடந்து விட்டேன்… சத்தங்களை தவிர்த்து நான் சாலையின் ஒரு ஓரமாக நடந்து வருகையில், தலைவலியை வழியில் எங்கே தவறவிட்டேன் என்று தெரியவில்லை… தலையின் பாரம் குறைந்துவிட்டது, ஆனால் அதற்கும் சேர்த்து காய்ச்சல் இரு மடங்கு வேலை செய்யத் தொடங்கியது:(

இனியும் என்னால் ஒரு அடி கூட நடக்க முடியாத நிலையில், டைடல் பார்க் சிக்னல் அருகில் ஆட்டோக்கள் நிறுத்துமிடத்தை அடைந்தேன்… ‘அண்ணா… பத்மபிரியா ஹாஸ்பிடல் போகணும்’ என்று ஒரு ஆட்டோக் கார அண்ணனிடம் கேட்டேன்… அவர் இன்னொருவரை கை காட்டி ‘அவர கேளுங்க’ என்றார். அப்போது தான் ஒரு சவாரியை முடித்திருந்த அவர் என்னை பார்த்து ‘எங்க சார் போகணும்’ என்று கேட்க, நான் இடத்தை சொல்ல (என்ன செய்றது… இப்ப கொஞ்சம் சக்திய செலவு பண்ணி பேசுனா தான் என் உயிர காப்பாத்திக்க முடியும்)…

அங்கு செல்ல அவர் ‘இவ்வளவு’ ரூபா ஆகும் என்று சொல்ல, நான் ‘அவ்வளவா’ என்று விழிக்க… அவர் என் சோர்ந்த முகத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் குறைப்பது போல் குறைத்தார்…

‘இவ்வளவு தான்… இன்னும் குறைக்க முடியாது’ என்று உறுதியாக சொல்லிவிட்டார்… பேரம் பேச தெம்பில்லை மேலும் நான் கடத்தும் ஒவ்வொரு நிமிடமும் என் உயிருக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து நான் போக வேண்டிய இடத்தை பத்திரமாக சென்றடைய என் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்…

நான் நினைத்த மாதிரியே திருவான்மியூர் ஜெயந்தி சிக்னலை தவிர்த்து பிரதான சாலையில் இருந்து ஒரு சந்துக்குள் புகுந்து ஆட்டோவை செலுத்தினார்… இருச்சக்கர வாகனங்களே பயணிக்க தயங்கும் அந்த குறுகிய தெருக்களில் லாவகமாக வண்டியை வளைத்து ஓட்டி ‘8’ எட்டுகள் போட தொடங்கினார். ‘ஆட்டோக் கார அண்ணன்… அடுத்த வாரம் லைசென்ஸ்-அ புதுபிக்க(Renewal) இப்பவே பயிற்சி எடுக்கிறார் போலிருக்கு’, அந்த ரணகளத்திலும் மனதில் சிரித்துக் கொண்டேன்…

நண்பனிடம் மருத்துவமனை பற்றி கேட்ட உடனேயே ஜெயந்தி சிக்னலிலுருந்து அந்த மருத்துவமனைக்கு செல்லும் பாதையை கூகுள் வரைப்படத்தில் பார்த்தேன்… அந்த பாதையோ பார்ப்பதற்கு எண் ‘7’ வடிவில் இருந்தது… ஆட்டோவோ பல எட்டுகளைக் கடந்து போய்க்கொண்டிருந்தது, கொடுக்கப் போகும் காசுக்கு அதிகமாகவே, இதுவரை நான் பார்த்திராத தெருக்களை எல்லாம் சுற்றிக்காட்டி விட்டு… எண்பத்தி எட்டுகளை நிறைவு செய்து பல வழியாக களைத்துப் போய் ஆட்டோ பத்மபிரியா மருத்துவமனை வாசலில் ஓய்வு எடுக்க நின்றது…. ட்ர்ர்ர்ர்ர்… டுப்… டுப்… டுப்…

ஆட்டம் கண்டிருந்த நானும் ஆட்டோவிலுருந்து ஆடியபடியே இறங்கி, அவர் கேட்ட தொகையை கொடுத்தேன்… நான் கொடுத்ததை வாங்கி அவர் சட்டைப் பையில் போட்டுவிட்டு, என்னைப் பார்த்து ஏதோ கேட்டார்… அவர் சொன்னதை சரியாக காதில் வாங்காமல் நானாக ஒரு முடிவுக்கு வந்தேன் ‘அய்யையோ… ஒரு வேல ஊர சுத்தி காமிச்சதுக்கு இன்னும் அதிமா பணம் கேட்கிறாரோ’….

‘அண்ணா… நீங்க அங்க சொன்ன அமௌண்ட் தான் கொடுத்திருக்கேன்’ என்றேன் மெல்லிய குரலில்…

அதற்கு அவர் பதில் சொன்னதை நன்றாக கவனித்தேன்… ‘சார்… நான் மணி என்ன இருக்கும்-னு கேட்டேன்’…

‘நல்ல வேள… யாரும் பார்க்கல’, நடந்ததை யாரும் கவனிக்கவில்லை என்று பார்த்து உறுதி செய்துகொண்டேன்;)

கை கடிகாரம் கட்டும் பழக்கம் இல்லாததால் வழக்கம் போல அலைபேசியை எடுத்து அதன் திரையில் இருக்கும் நேரத்தை பார்த்தேன்…

அதிர்ந்துவிட்டேன்…

நேரம் அப்போது ‘7’ க்கும் ‘8’க்கும் நடுவில்…

நான் சொன்னேன், ‘மணி ……’

என்ன சொல்கிறேன் என புரியாமல் ஆட்டோ காரர் மறுபடியும் என்னிடம் கேட்டார், ‘ என்ன சார்…’

‘மணி… ஏழரை’ (செம டைமிங்-ல:)

நாலு மணிக்கு ஆபிஸ்-ல இருந்து கிளம்பினேன்… நடுவுல கொஞ்சம் நேரத்த காணோம்…

போனதெல்லாம் போகட்டும் என்று மருத்துவமனை பக்கம் திரும்பி, முன்னோக்கி செல்லும்போது என் அலைபேசி அவசரமாக அலறியது…

முடியல…

‘என் நிலைம புரியாம எவன்டா இந்த நேரத்தில கால் பண்றது’, அலைபேசியில் அழைப்பு ஒரு
புது நிலக்கோடு(Landline) எண்ணிலிருந்து வந்தது…

அலைபேசிக்கு உயிர் கொடுத்து, என் காதில் வைத்து ‘ஹலோ’ என்று சொல்ல நான் வாயைத் திறப்பதற்குள்… ஒரு
பெண் குரல் சுவிட்ச் ஆன் செய்யப்பட்ட மின் விசிறி போல் கடகடவென தொடர்ந்து பேச
ஆரம்பித்தது(ஆனா வாய்ஸ் நல்லா தான் இருந்துச்சு)…

‘ஹலோ சார்… நாங்க HDFC பேங்க்ல இருந்து பேசுறோம், நீங்க பெர்சனல் லோன் கேட்டிருந்திங்களா?’

நான் கேட்டிருந்த கடன் தொகை கிடைக்கப் போகிறதோ என்ற ஆவலில்…

‘ஆமா, ஆமா…’ என்றேன் வேகமாக…

‘நீங்க எங்க பேங்க்-ல லோன் வாங்கிறதால… சார் உங்களுக்கு பார்த்திங்கனா… ப்ரீ கிரெடிட் கார்டு அப்ரூவ் ஆகிருக்கு…’

‘சரி… இப்ப அதுக்கு நான் என்ன பண்ணனும்’

‘சார்… இந்த கார்டு வந்து உங்களுக்கு Lifetime வேலிடிட்டியோட வருது சார்’

Lifetime என்ற வார்த்தையை கேட்டவுடன் என் மனதுக்குள் ஒரு ஓட்டம்… ‘நான் உயிரோட இருந்தா தானடா, அந்த கார்டயே வாங்க முடியும்… ஆளாளுக்கு என்ன கொல்றாய்ங்களே, என் Lifetime இன்னையோட முடிஞ்சிரும்
போலிருக்கே…’

அவள் பேசிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்டு…
‘’இருங்க இருங்க… மேடம், நீங்க எனக்கு நாளைக்கு கால் பண்றீங்களா… இப்ப நான் ஒரு
மீட்டிங்க்ல இருக்கேன்’

‘ok சார்… நான் உங்கள நாளைக்கு எந்த டைம்-ல கால் பண்ணலாம் சார்’…

தொடர்ந்து கேள்வி கேட்டதால் நான் சற்று கோபமாகிவிட்டேன்… அனால் அவளைத் திட்ட எனக்கு மனமில்லை ஏனென்றால் அது தானே அவர்கள் வேலை:(… என்ன செய்வது…

‘நாளைக்கு காலைல பத்து மணிக்கு மேல கால் பண்ணுங்க’

‘ok சார்… Thank You சார்’

அவள் பேசிவிட்டு இணைப்பை துண்டித்தப் பிறகு புயல் அடித்து ஓய்ந்தது போல் ஒரு அமைதியான உணர்வு…
‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா முடியல’

இனியும் தொல்லைக் கூடாது என்பதற்காக அலைபேசியை அணைத்து வைத்து விட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தேன்…

மருத்துவமனை உள்ளே நுழைந்ததுமே, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு விநாயகர் என்னை வரவேற்றபடி
அமர்ந்திருந்தார்…

‘பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ எனக்கு முன்னாடியே இங்க வந்திருக்காரு…’

இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பார்க்கையில்…

‘யாராவது தன்னை இங்கிருந்து காப்பாற்றி செல்ல மாட்டார்களா’ என்று வாசலை நோக்கி
இருப்பது போல் இருந்தது…

‘அது சரி… நமக்கே இங்க ஆயிரம் பிரச்னை’

மருத்துவமனை வரவேற்பறையில்…
நோயாளிகள் அனைவரும் தங்கள் பொன்னான பொழுதை கழிக்க, பிடித்த நிகழ்ச்சிகள் கண்டு மகிழ
நவீன தொலைக்காட்சிப் பெட்டி பொருத்தப்பட்டிருந்தது…

நான் உள்ளே இருந்த இருக்கையில் சாய்ந்த நேரம்… அந்த மெகாத் தொடரில் ஒரு கொடுமையானக் காட்சி,
‘ஐயையோ… எங்கள விட்டு போயிட்டிங்களே’ என்று தலையில் அடித்துக் கொண்டு ஆபெரேசன்
திரையரங்கில்(theater) இருந்து வரும் தங்கள் உறவினரை வரவேர்த்துக்
கொண்டிருந்தனர்…

பதறியடித்து ஒருவர் ‘Live telecast’ ஆக இருக்குமோ என்று சேனல்-ஐ மாற்றிப் பார்த்தார்… அது தொலைக்காட்சியில் தான் என்று உறுதி செய்து கொண்டு பின், சேனலை ‘செய்திகள்’ பக்கம் மாற்றினார்…

செய்தியிலோ இன்னும் கொடுமை…
‘மருத்துவமனையில் நோயாளி கவலைக்கிடம்… காய்ச்சலுக்கு தவறான மருந்துக் கொடுத்த போலி டாக்டர் கைது, இனி வருவது… விரிவான செய்திகள்’

‘இதுக்கு மேல என்னத்த விரிவா சொல்லணும்’ என்று கடுப்பாகி நான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு
எழுந்தேன்…

உடனே என்னைப் பார்த்துக்கொண்டிருந்த Receptionist கேட்டாள், ‘சார்… உங்களுக்கு
என்ன வேணும்’…

‘காய்ச்சல்… டாக்டர பார்க்கணும் ‘

‘கொஞ்ச நேரம் உட்க்காருங்க சார்’ என்று என்னிடம் சொல்லிவிட்டு இன்னொரு நர்ஸ்-ஐ
அழைத்தார்…

மூடி இருந்த அந்த அறையிலிருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்தார்…

‘அவுட் பேசென்ட் யாரும் இருக்காங்களா?’ என்று வரவேற்பாளர் கேட்க…

அவர் உள்ளே சென்று பார்த்துவிட்டு மறுமுறை வெளியே வந்து, ‘அவுட் பேசென்ட் யாரும் இல்ல…’ என்றார்.

அவர் சொன்னது என் காதுகளில் இப்படி கேட்டது, ‘டீ கடைல யாரும் இல்ல’

‘இவங்களுக்கு எதுக்கு இந்த வெட்டி சீனு… உள்ள யாரும் இல்ல-னு முதல வெளிய வந்த போதே சொல்லிருக்கலாமே…’

‘உள்ள போங்க சார்… ‘ என்று வரவேர்ப்பாளர் சொல்ல… அதைத் தொடர்ந்து அந்த நுர்சும் ‘உள்ள வாங்க சார்’ என்று சொல்ல… என் நிலைமையை பார்க்க கசாப்பு கடைக்குள் செல்லும் ஆடு போல எனக்கே பரிதாபமாக இருந்தது…

உள்ளே இருந்த நான்கு படுக்கைகளில் கதவோரம் ஒரு படுக்கையில் நான்கு நர்ஸ்கள்
சிரித்தபடி கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்… ‘செம காமெடி-ல… வெளிய போய் சிரிங்க, வெளிய போய் சிரிங்க’ என்று கலாய்த்திருப்பேன் நான் மட்டும் தெளிவாக இருந்திருந்தால்… என் நிலைமையை யாரிடம் சொல்வதென்று அங்கிருந்த ஒவ்வொருவர் முகமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது என்னை உள்ளே அழைத்து வந்த நர்ஸ் என்னிடம் அறையில்
ஒரு மூலையில் இருந்த கட்டிலில் அமரச் சொன்னாள்…

எனக்கு மெத்தையைப் பார்த்ததும் அங்கேயே அப்படியே நன்றாக தூங்க வேண்டும் போல் இருந்தது…

‘சொல்லுங்க…’ என்று கனிவான குரலில் என்னிடம் கேட்டாள் அந்த நர்ஸ்…

நான் ஏற்கனவே என்ன சொல்ல வேண்டும் ஒரு மனதிற்குள் சொல்லிப்பார்த்து வைத்திருந்தேன், அதை அப்படியே சொல்லவும் செய்தேன்…

‘நேத்து மழை பேஞ்சது… நான் மழைல நனைஞ்சிட்டேன்… காலைல இருந்து காய்ச்சலடிக்குது… இடைல தல வலி,
வயித்து வலி…’ என்று சொல்லி முடிப்பதற்குள் என்னை நோக்கி ஒரு ஒளி நடந்து வருவதை உணர்ந்தேன்… அந்த ஒளி பொருந்திய உருவத்திலிருந்து என்னை நோக்கி ஒலியும் வந்தது…

‘உங்களுக்கு… என்ன பிரச்னை’, கேட்டது ஒரு பெண் டாக்டர்…

வெள்ளை அங்கி அணிந்து, என்னை சுற்றி இருந்த எமன்களிடம் இருந்து என் உயிரை மீட்க வந்த தேவதை போல் தெரிந்தார்… அவரைப் பார்த்துவிட்டு அந்த நர்ஸ்-ஐயும் பார்த்தேன்,

‘அப்போ நீங்க… உயர் அதிகாரி இல்லையா?’

மறுபடியும் அந்த பெண் டாக்டரிடம் என் வேதனைகளை முதலில் இருந்து வரிசைப்படுத்தி ஒப்பிக்கத் தொடங்கினேன்…

‘நேத்து மழை பேஞ்சுது…’

அதைக் கேட்ட அந்த நர்ஸ் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்… என்னைப் பார்க்க
அவளுக்கு ‘தெய்வதிருமகள்’ விக்ரம் போல் தெரிந்திருக்குமோ!

நான் நீண்ட நேரம் சொன்னதை சினிமா பாடல் போல நன்றாக தலையை ஆட்டிக் கேட்டுவிட்டு அந்த பெண் டாக்டர்,
‘ok… உங்களுக்கு ஒன்னும் இல்ல, இதெல்லாம் sudden climate changeனால வர பிரச்னை
தான்’ என்று ஆறுதலாக என் கண்ணிற்குள் ஒரு பார்வை வீசினார்…

அந்த பார்வை என்னிடம் சொன்னது, ‘எமன் உன்னை அழைத்து செல்ல இது நேரமல்ல, உனக்கு நிறைய நேரம் இருக்கிறது…’

‘ஒரு Injection போட்டா சரியாகிடும், இந்த மருந்த வாங்கிட்டு வாங்க’ என்றபடி மருந்துச் சீட்டை நீட்டினார் டாக்டர்… மருந்து சீட்டை நான் வாங்கியதும் என்னைப் பார்த்து ஒரு புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து சென்றார்…

இதுவரை இயங்காமல் இருந்த மூளையின் Backup பகுதி என்னை அறியாமல் தன் வேலையைத்
தொடங்கியது… அந்த தேவதை என் முன் நின்ற ஒரு Frame-ஐ ஸ்டில் செய்து அந்த image-ஐ
process செய்யத் தொடங்கியது!

எனக்கு பார்வையால் வலுக்கொடுத்த அந்த கண்களை Zoom செய்து, அதிலிருந்து குறிப்புகள் எடுக்கத் தொடங்கியது…

பெண் குறிப்பு:

வயது — 25 லிருந்து 27 வரை இருக்கும்…

திருமணம் — ஆகவில்லை…

தகுதி — என்னை உட்காரவைத்து அவள் சோறு போடுவாள்…

மருத்துவ செலவு — இலவசம்…

காதலிக்க — ஏற்றவள்…

‘லவ் பண்ணலாமா? வேணாமா??’

இது போன்ற dilemma சமயங்களில் என் மனசாட்சி Split personality உதவியுடன் இரண்டாக பிரிந்து வெள்ளை நிறத்தில் இறக்கைகளுடன் தேவதைப் போல் வலது புறமும், சிவப்பு நிறத்தில் ONIDA கொம்புகள் மற்றும் வாலுடன் அரக்கனைப் போல் இடது புறமும் தோன்றி விவாதிப்பார்கள்…

‘வேணாம்… உன் தகுதிக்கு இது ரொம்ப அதிகம்… தேவையில்லாத வேலை, விட்டுடு’, என்ற குரல் வலது புறத்திலிருந்து…

‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி… Just Give it a try, dude…’, என்ற குரல் இடது புறத்திலிருந்து…

‘இந்த விசயத்த நம்ம அம்மாகிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமா?’, இறக்கை வைத்தவன் கேட்டான்…

‘முதல விளக்கமாத்தாலேயே அடி விழும்’, ONIDA தலையன் பதில் சொன்னான்…

‘அதுக்கப்புறம்…’

‘அதுவே பழகிடும்…’

அப்படியே அவர்களுக்குள் சண்டைப் போட்டுக்கொண்டே புகையுடன் மறைந்து போனார்கள்…
இதெல்லாம் நடந்தது ஒரு சில நொடிகளில்…

மருந்து சீட்டை கையில் பிடித்துக் கொண்டு தேவதை சென்ற திசையை பார்த்துக்கொண்டிருந்தேன்,

‘சார்… வெளில மருந்து கடைல இந்த மருந்து வாங்கிட்டு வாங்க’, என்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தாள் அந்த நர்ஸ்…

‘அதான… உங்களுக்கு ஒரு மனுஷன் சந்தோசமா இருந்தா பொறுக்காதே’, மருந்துக் கடை நோக்கி நகர்ந்தேன்…

மருத்துவமனை வாசலை அணைத்துக் கொண்டிருந்தது அந்த மருந்து கடை…

‘இங்க எவ்ளவு புடுங்க போறானுங்க… தெரியலையே’

மருந்துச் சீட்டை நீட்டினேன், அதை வாங்கி ஊசி மற்றும் மருந்தைக் கொடுத்து ஏதோ சொன்னார்…

நான் எப்போதும் போல, ‘என்ன…’ என்றேன்.

அவர், ‘ இருபத்தி மூணு ரூபா’ என்றார்… ‘அவ்ளோ தானா… ‘ என்று சிரித்தபடி வருங்காலத்தை கணிக்காமல் அவர் கேட்டத் தொகையைக் கொடுத்துவிட்டு ஊசி போட அந்த அறைக்குள் சென்றேன்…

நர்ஸ் நான் கொடுத்த ஊசியையும் மருந்தையும் வாங்கிக் கொண்டு நான் முன்பு அமர்ந்திருந்த அதே கட்டிலில் என்னை அமரச் சொன்னார்… நானும் மாயமான அந்த டாக்டரை தேவதையைத் தேடியவாறு அமர்ந்திருந்தேன்…

மருந்தை எடுத்து அந்த நர்ஸ் பார்த்துக்கொண்டிருக்கும் போது… எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு சகோதரி(இனிமேல் நம்ம கதைல வர பொண்ணுங்க எல்லாம்… சிஸ்டர் தான்;) அந்த நர்சிடம் கேட்டாள், ‘அவருக்கு நான் ஊசிப் போடறேன்’

‘என்னது… நீங்க ஊசிப் போட்டு பழக நான் தான் கெடச்சேனா?’

அதற்கு அந்த நர்ஸ் பதிலளித்தது எனக்கு இன்னும் பயம் கா(கூ)ட்டியது…

‘ஏ… விளையாடாத, கரெக்டா நரம்பிலப் பார்த்து மருந்த inject பண்ணனும்… இல்லாட்டி விடு, இன்னொரு நாள் கூட பார்த்துக்கலாம்’

அந்த சகோதரியோ, ‘கவலைப் படாத நான் பார்த்துக்கிறேன்’ என்றாள்…

என் மனதில், ‘நான் இன்னும் உடல் தானம் பண்றதுக்கு எழுதிக் கொடுக்கலையே, அதுவும் செத்த பிறகு தானே… இவங்க உயிரோட இருக்கும் போதே Pre-mortem பண்ணிடுவாங்க போலிருக்கே…’

அந்த நர்ஸ் ஊசியை சகோதரிக் கையில் ஒப்படைத்து விட்டு அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றாள்…

மருந்து கோப்பையை கையில் எடுத்த சகோதரியிடம் மெதுவாக கேட்டேன், ‘சிஸ்டர்… ஊசி கையில தான போடுவீங்க’

சிஸ்டர் சொன்னாள், ‘ஆமாங்க நான் கையில தான் ஊசி போடுவேன், ஆனா நீங்க இடுப்புல தான் போட்டுக்கணும்’

‘இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்’

தயங்கி தயங்கி மறுபடியும் கேட்டேன், ‘சிஸ்டர்… நான் கையில ஊசி போட்டுக்கிறேன்’

‘சார்… இது Powerful Injection கையில போட்டுகிட்டா ரொம்ப வலிக்கும்… சொன்னா புரிஞ்சிக்கோங்க’, சகோதரி சற்று கடுப்பாகிவிட்டாள்…

‘ஏமா… பட்டர்மாக்ஸ் லைட்-ஏ தான் வேணுமா…’

அவள் கையில் ஊசியை எடுத்ததும் ஒரு பதற்றம்… என்னதான் அருவா கத்தி முதல் Sniper, Automated Nuclear weapon என்று தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களிலும் பார்த்திருந்தாலும் அந்த ஊசியைப் பார்த்தவுடன் ஓடுவதற்கு
கதவு திறந்திருக்கிறதா என்று தான் பார்க்க தோன்றியது அனால் ஓடுவதற்கு வலுவும் இல்லை, என்னை விரட்டி பிடிக்க அம்மாவும் அருகில் இல்லை…

சிஸ்டர் சொல்வதற்கு இடம் கொடுக்காமல் ஊசி போடுவதற்கு ஏற்றவாறு நான் மெத்தையில்
குப்பற கவுந்து படுத்து தலையணையில் முகம் பதித்து படுத்துக்கொண்டேன்… கிடைத்த
வாய்ப்பை பயன்படுத்தி சிறிது நேரம் தூங்கியும் விட்டேன்…

டூயட் பாடாத காதல்… உப்பில்லாத மசால் வடைப் போன்றது…

(நானும் எத்தன நாள் தான் காமெடியனாவே நடிக்கிறது, எனக்கும் ஸ்விட்ஸர்லாண்ட் போய் டூயட் பாட ஆசை இருக்காதா;)

ஆமாங்க… நான் இப்ப அங்க தான் இருக்கேன்… டூயட் லொகேஷன் பார்க்க வந்திருக்கேன்…

அந்த இடம் எப்படி இருந்தது நீங்களும் பாருங்கள்…

அதிகமான சலசலப்பு இல்லாமல் கண்ணாடிப் போல் தண்ணீர் நகர்ந்து கொண்டிருக்கும் கிளை நதி, அந்த தெளிந்த நீருக்குள் விளையாடும் வண்ண மீன்களை கரையிலிருந்தே பார்த்து ரசிக்கலாம்… நதியின் இரு கரைகளிலும் மூன்று அடி வரை வளர்ந்த இளம்பச்சை நிற புற்கள் தென்றலின் தாளத்திற்கு அசைந்தாடிக் கொண்டிருந்தது… சில்லென்றக் காற்று உடலை சிலிர்க்க வைத்தது… தூரத்தில் வெணிலா Cone ice குமிழ் போல் வெள்ளை பனி படர்ந்த மலைச் சிகரங்கள்… வெளிர் நீள வானம் அதில் அங்கங்கே வெண்பஞ்சு போன்ற மேகங்கள் சிகரங்களை முத்தமிட்டு கொண்டிருந்தன…

அழகான கவிதைக்கு உயிர் கொடுத்ததை போல் இருந்த அந்த இடத்தை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று…

என் பின்னால் ‘நறுக்’ என ஏதோ ஒரு உணர்வு…

‘ஆ…’ என்று கத்தியபடி பின்னால் தேய்த்துக்கொண்டே திரும்பி பார்த்தேன்…

நான் நின்றிருந்த இடத்திற்கு அருகில் ஒரு ரோஜாச் செடி மாயமாக முளைத்திருந்தது, அதன் முள் தான் என் பின்னால் பதம் பார்த்திருந்தது…

செடியின் உச்சியில் கிரீடம் வைத்ததை போல ஒற்றை ரோஜா பூத்திருந்தது… அந்த பூ வழக்கம் போல் ஒரே நிறத்தில் இல்லை… மாறாக வானவில்லைக் கரைத்த கரைசலில் சாயம் ஏற்றியதைப் போல் பல வண்ணங்களாலான மலராக இருந்தது…

அந்த மலரை பறித்து கைகளில் வைத்து, இதை என் தேவதைக்கு காதல் பரிசாக கொடுக்கலாமா என்று நினைக்கும் போது அந்த location-ல் ஒரு lighting மாற்றம், அந்த இடம் இன்னும் பிரகாசமானது… ‘ஏன் இந்த மாற்றம்?’

என் தேவதை location-க்குள் வந்துவிட்டாள், அனால் நான் இருக்கும் இடத்திலிருந்து பலஅடி அடி தூரத்தில் அந்த புற்களுக்கு நடுவில் தேவதை நிற்கிறாள்…

அவள் அணிந்திருந்த உடை என்னை உற்று நோக்க வைத்தது…

அவள் டாக்டர் உடையிலேயே அங்கு வந்திருந்தாள், Stethescope கூட இன்னும் கழுத்தில் தான் இருக்கிறது… என் மூளை scan செய்த imageஐ edit செய்ய நேர அவகாசம் இல்லாததால் அப்படியே பயன்படுத்திகொண்டது:(

எந்த உடையில் இருந்தால் என்ன… தேவதை அழகாக இருந்தாள்…

‘அவளருகில் இந்த ஒற்றை ரோஜாவின் அழகு எடுபடாமல் போய்விடுமே’ என்று என் கையில் வைத்திருந்த ரோஜாவை பார்த்தேன்… அது அப்படியே ஒரு கனமான ரோஜாப்பூங்கோதாக மாறிப் போனது… அதை அவளிடம் கொடுத்து காதலை சொல்லி பாடலை ஆரம்பிக்கலாம் என்று அவளை நோக்கி நகர்ந்தேன்…

நான் பூங்கொத்தை தூக்கி நடந்துக் கொண்டிருக்கும் போதே யாரோ பாடலை போட்டுவிட்டார்கள், தேவதையும் பாட்டிற்கு வாயசைக்க தொண்டங்கிவிட்டாள்…

இருவருக்கும் இடையேயான தொலைவு அதிகமாக இருந்ததால் அது என்ன பாடல் என்று சரியாக கேட்கவில்லை…

‘டேய்… இருங்கடா, ரெண்டு பேரும் சேர்ந்து பாடுனா தான் அதுக்கு பெயர் டூயட்டு’, வேகமாக நடந்தேன்…

யாரோ என் முதுகில் தட்டினார்கள்…

‘யாரு…’, திரும்பி பார்த்தேன், எவரும் இல்லை…

மீண்டும் தேவதை இருக்கும் திசை நோக்கி நடந்தேன்… மீண்டும் யாரோ என் முதுகில் தட்டினார்கள், இந்த முறை அடி பலமாக இருந்தது…

கனவு களைந்தது…

சகோதரி என்னை தட்டி எழுப்பி கொண்டிருந்தாள், சிரிப்புடன்…

‘என் சொந்த கனவில கூட டூயட் பாட விட மாட்டிங்களா’

‘எழுந்திருங்க…’

‘முடிஞ்சுச்சா…’ என்று தெளிந்து கொண்டே கேட்டேன்…

‘ஊசி தாங்க போட்டேன், ஆபெரேசன் பண்ணல… முடிஞ்சுசானு கேட்கிறிங்க’

‘என்னது ஆபெரேசனா… ‘ என்று அலறியடித்து எழுந்து என்னை அறியாமல் என் இடுப்பில் கை வைத்து தையல் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன், அப்படி ஏதும் இல்லை…

நல்ல வேளையாக இதை கவனிக்காமல் சகோதரி இன்னொரு பக்கம் திரும்பியிருந்தார்:D

அப்போது அருகில் இருந்த மேசையில் அந்த தேவதை அமர்ந்திருந்தாள்,

இருவரும் ஒருவரை ஒருவர் சொல்லிவைதத்ததை போல் பார்த்துக்கொண்டோம்… நான் கைகளை அசைத்து மௌன மொழியில் கேட்டேன்,

‘அவ்வளவு தானா’

மௌன மொழியைப் புரிந்து கொண்டு தலை அசைத்தாள், ‘அவ்வளவு தான்’.

சரி… இங்கு தங்கி உபசரிப்பு பெற இன்னொரு நாள் வருவோம் என்று அந்த இடத்தை விட்டு சில அடி தூரம் நடந்தேன்…

என்னைத் துரத்திக் கொண்டு சகோதரியும் ஓடி வந்தாள்…

‘சார்… நில்லுங்க, டாக்டர் உங்ககிட்ட இத கொடுக்க சொன்னாங்க’ என்று ஒரு காகிகத்தை என் கையில் திணித்தாள்…

அந்த காகிகத்தை பார்த்தவுடன் ஒரு சந்தோசம், ‘ஒரு வேள நமக்கு வந்த feeling தேவதைக்கும் வந்திருக்குமோ, இது லவ் லெட்டெர்-ஆ இருக்குமோ… லெட்டெர், கடிதாசி-ன்னு வச்சிக்கலாமா… ம்ச்சு மடல், இல்ல கடிதம்-னே இருக்கட்டும்… எங்க படிங்க…’.

‘இதுல இருக்கிற மாத்திரை எல்லாம் வாங்கிக்கோங்க… இந்த மாத்திரை எல்லாம் ஒரு வேளைக்குனு ஒரு வாரம் சாப்பிடுங்க’,

படித்தாள் சகோதரி…

நான் அவள் சொன்னதை சோகமாக கேட்டுக்கொண்டிருக்கும் போதே தொடர்ந்தாள்…

‘ஒரு வாரத்திற்கு பிறகும் சரியாகலனா, இதுல சொல்லிருக்கிற test, scanning எல்லாம் எடுக்கணும்’

‘மருந்து சாப்ட்டா ஒரு வாரத்தில குணமாயிடும், சாப்டலேனா ஏழு நாள்-ல குணமாயிடும்’ — சந்திரமுகியில் ரஜினி வசனம் என் நினைவில் ஓடியது…

அந்த மருந்து சீட்டில் சின்ன இடம் கூட காலியாக இல்லாத அளவுக்கு ஏதேதோ கிறுக்கி இருந்தது… அதை படித்து தெரிந்துகொள்ள நான் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் போலிருந்தது, சரி… எப்படியும் மருந்து கடைக்காரர் படித்துவிடுவார்…

அந்த இடத்தை விட்டு செல்ல மனமில்லை, தேவதையின் குரலை மறுபடியும் கேட்க என் மனதில் ஆசை… தேவதையை பார்த்துக்கொண்டே அவளை நோக்கி கால் தானாக நடந்தது…

இதற்கிடையில் என்ன பேசுவது என்று எனக்குள் ஒரு போராட்டம்…

அருகில் சென்று கேட்டேன்…

‘இன்னைக்கு நைட் என்னங்க சாப்பிடறது…’ (மனதின் காதலை வயிற்றின் பசி வென்றுவிட்டது)

‘Heavy-ah சாப்பிடாதிங்க, Light-ah சாப்பிடுங்க… Oil items வேணாம்… மறந்துடாமா இந்த மாத்திரை எல்லாம் சாப்பிடுங்க, Take care:)…’, மறுபடியும் அவள் வீசிய மந்திர புன்னகை என் நரம்பில் Glucose ஏற்றியதுப் போலிருந்தது:)… அடடடா… அவளுக்கு தான் என் மீது எவ்வளவு பாசம்…

‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்…’, என் மனதிற்குள் முணுமுணுத்தபடி வெளியே வந்தேன்… ஏதோ நினைவில் மருத்துவமனை வாயில் வரை நடந்து வந்து விட்டேன்… பின்னாலிருந்து ஒரு குரல் குறுக்கிட்டது…

‘நில்லுங்க…’

‘டூயட் க்கும் எனக்கும் தான் ஆகாது-னு சோலோ பாடுனா அதுக்குமா… யாருமா அது…’

‘சார்… Consulting fees கட்டிட்டு போங்க’, Receptionist கேட்டாள்…

‘அவங்க கடமைய தான செய்யிறாங்க…’

உடனே பணப் பையை எடுத்துப் பார்த்தேன்… அதில் ஒரு ஐம்பது ருபாய் நோட்டு, ஒரு ஐநூறு ருபாய் நோட்டு மற்றும் பண அட்டை(ATM) இருந்தது… தயவு செய்து ATM-ல எவ்வளவு பணம் இருந்தது-னு கேட்காதிங்க, நான் அழுதிடுவேன்…

‘இவங்க Setup எல்லாம் பார்த்தா ஐம்பது ரூபாய்க்கு குறைவா கேட்க மாட்டாங்க…’

ஐநூறு ரூபாயை மனதிற்குள் அழுதுகொண்டே, வெளியே எடுத்து கேட்டேன்…’Consulting fees எவ்வளவு?’

‘300…’

‘இது அந்த Glucose-க்கும் சேர்த்தா… சரி, அந்த 200 ரூபாயாவது மிச்சம் கிடைக்குதே… ‘

‘வெளில மெடிக்கல் ஷாப் இருக்கும்… அங்கேயே மருந்து வாங்கிகோங்க…’

‘சரிங்க…’

மருந்துக்கு ஆன செலவு 200… வாங்கிய மருந்துகளை வெறுப்புடன் என் கால் சட்டைப் பைக்குள் திணித்தேன்…

‘கொடுக்கிற மாதிரி குடுத்து மிச்சத்தையும் புடிங்கிட்டான்க… என்ன கொடும சார் இது…’

நல்ல வேளையாக, என்னிடம் இன்னும் ஐம்பது ருபாய் இருப்பது அவர்களுக்கு தெரியாது, அப்படியே என் பணப்பையை இறுக்கிப் பிடித்தபடி அங்கிருந்து நகர்ந்தேன், ‘ஆள விடுங்கடா சாமி ‘:):):) …

‘தேவதையை தரிசிக்க தட்சணை! ருபாய் ஐநூறு…’ என்று மனதை சாந்தம் செய்ய முயன்று தோற்றுப் போனேன்…

நெஞ்சு பொறுக்காமல் என் அலைபேசியை எடுத்து எனக்கு இந்த மருத்துவமனையை பரிந்துரைத்த அந்த Infosys நண்பனை அழைத்தேன்…

‘டேய்… உன்ன சும்மா விடமாட்டேன் டா…’

நான் ஏற்கனவே…

ஒரு வாரத்திற்கு ஆகும் செலவுக்கான பணத்தை அரை மணி நேரத்தில் இழந்த சோகத்தில் இருந்தேன்…

என் நண்பன் வைத்திருந்த Caller Tune பாடல் என்னை மேலும் கடுப்பேத்தியது, அந்த பாடல்…

‘செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழந்தாயடா கர்ணா…’

பாடல் ஒலிப்பது நின்றது…

நண்பன், ‘சொல்லுடா… ஹாஸ்பிடல் போனியா…’

நான், ‘டேய்… நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்…’

‘ஏன் டா… என்னடா ஆச்சு?’

‘அவன்க… என் கிட்ட இருந்த கடைசி ஐநூறு ரூபாயயும் புடிங்கிட்டான்கடா’

‘ஒஹ்… உன் கிட்டயும் ஐநூறு தான் புடுங்கினான்களா’

‘என்னடா சொல்ற’

‘போன வாரம் உடம்பு சரியில்லன்னு அங்க போனப்ப என் கிட்டயும் ஐநூறு தான் புடுங்கினான்க’

‘செலவு அதிகம் ஆகும்-னு தெரியும்ல… அப்புறம் ஏன் டா என்ன இங்க போக சொன்ன’

‘இல்ல… என் கிட்ட மட்டும் தான் ஐநூறு வாங்கினாங்களா,
இல்ல அங்க போற எல்லார் கிட்டயும் அதே காசு வாங்கிரான்களா-னு தெரிஞ்சுக்கலாம் தான்’

‘தெரிஞ்சுகிட்டியா?’

‘ம்ம்’

‘என்னத்த தெரிஞ்சுகிட்ட?’

‘அவங்க கிட்ட நான் மட்டும் ஏமாறல-னு’

‘டேய்…’

‘ஹஹஹஹ’

அதன் பிறகு என்னை பேச விடாமல் என் நண்பன் பழைய படத்தில் வரும் வில்லன் மாதிரி(இல்ல வில்லனே தான்) ஒரு நிமிடம் வரை சிரித்து கொண்டிருந்தான்…

Phone பில் எகிருவதை தவிர்க்க அழைப்பை துண்டித்தேன்… ‘டேய்… உன்ன ரூம்-ல வந்து பார்த்துக்கிறேன்டா’

எப்படியோ தடுமாறி ஒரு பேருந்தை பிடித்து நான் தங்கியிருக்கும் அறை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்… சகோதரி போட்டிருந்த ஊசியும் தேவதையவள் ஏற்றிய Glucose-உம் சற்று மனதிற்கும் உடலுக்கும் தெம்பாக இருந்தது,
இருந்தாலும் தூங்கி எழுந்தால் தான் என் பிரச்சினைக்கு விடிவு…

அறைக்கு செல்லும் வழியில் ஒரு வட்ட பன் பாக்கெட் வாங்கிக்கொண்டேன் (அந்த நாள் முழுக்க நொந்து நூடுல்ஸாகி, அந்து அவுளாகி, பிய்ந்து கொத்து புரோட்டவாகி இருந்த நான் பன்-னை தவிர வேறு எதை வாங்குவது)…

அறைக்குள் சென்றதும் அந்த Infosys நண்பனை வலை வீசித் தேடினேன்… சிக்கினான், அடிக்க செல்வதற்குள்
அவனே வாயை திறந்தான்…

‘அந்த டாக்டர் எப்படி இருந்தாங்க…’

தேவதையைப் பற்றி நினைவுப்படுத்தியதும் என் கோபம் தணிந்தது, வெட்கம் தலை காட்டியது…
என்னைப் பார்த்து நண்பன் தொடர்ந்தான்…

‘உனக்கு அவங்கள பார்த்த உடனே பிடிக்கும்-னு தான் உன்ன அங்க போக சொன்னேன்,
என்ன போய் அடிக்க வர்ரியேடா…’

என் மனதிற்குள் ஒரு பாட்டு, ‘என் friend-ah போல யாரு மச்சான்…’

அவன் தொடர்ந்தான், ‘ அவங்கள பார்த்த உடனே பாதி காய்ச்சல் சரியா போயிருக்குமே?…’

‘ஆமா… அது எப்படி உனக்கு தெரியும்…’, வெட்கத்துடன் கேட்டேன்…

‘எனக்கும் அதே மாதிரி தான் இருந்துச்சு…’

‘டேய்…’

சிறிது நேர வாய் தகராறுக்கு பிறகு நான் வாங்கி வந்த பன்-னை சாப்பிட அமர்ந்தேன்… அந்த பன் பாக்கெட்டில் மொத்தம் ஐந்து வட்ட பன்கள் இருந்தன, அதில் ஒன்றை எடுத்து சுடு நீரில் நனைத்து சாப்பிட தொண்டங்கினேன்:(
(காய்ச்சலால் சுவைக்கும் திறனை இழந்திருந்த என் நாவிற்கு தெரியவா போகிறது,
வயிற்றின் வெற்றிடத்தை நிரப்ப எதுவாக இருந்தால் என்ன)…

நான் ஒரு பன்னை வெற்றிகரமாக வயிற்றுக்குள் திணித்துவிட்டிருந்தேன்… நான் அறையின் மூடியிருந்த கதவை நோக்கியவாறு அமர்ந்திருந்தேன், அந்த கதவு திறக்கப்பட்டது… வேகமாக ஒரு உருவம் உள்ளே வந்தது,
அறைக்குள் வந்தது என் உயிர் நண்பன் ‘தேவா’…

இவன பத்தி நிறைய சொல்லணும், கொஞ்சம் தனியா வாங்க…

நான் ‘தேவா’ னு சொல்றத வச்சு…
இவன் பேரு ‘தேவ ராஜ்’னு நினச்சிடாதிங்க, இவன் உண்மையான பேரு ‘பாஸ்கர்’…

ஏதோ இவன் உயரமாவும் வெள்ளையாவும் இருக்கிறதால இவன ‘மம்மூட்டி’னும்,
நான் இவன விட உயரம் கம்மியாவும் கருப்பாவும் இருக்கிறதால என்னை ‘ரஜினி’னும் கற்பனை பண்ணிக்கிட்டு…
நான் இவன ‘தேவா’-னு தான் கூப்பிடனும்-னு சொல்லிவசிருக்கான், அவனும் என்னை
‘தளபதி’னு தான் கூப்பிடுவான்… எப்போதாவது நான் இவன் சொன்னத கேட்கலனா…

‘சூர்யா… உன் உயிர் எனக்காக தான், எடுத்துக்கோனு சொல்லிட்டு… இப்ப என் பேச்ச கேட்க மாட்டிங்கிற’னு மம்மூட்டி மாதிரியே டயலாக் பேசி என்னை கடுப்பேத்துவான்…

இவனுக்கும் எனக்கும் ஒற்றுமையான விஷயம் சாப்பாடு மட்டும் தான்…
நைட் தூங்கிறதுக்கு முன்ன “Andhra Mess” போய் சுத்தி இருக்கிறவங்கள பத்தி கொஞ்சம் கூட கவலை படாம அஞ்சு “Unlimited meals” சாப்பிட்டா தான் எங்களுக்கு தூக்கம் வரும்…
அதிலயும் ரெண்டு பேரும் ஒரே அளவு தான் சாப்பிடனும்-னு சொல்லுவான்…
எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் நான் என்ன அளவு சாப்பிடறேனோ அதே அளவு தான் அவனும் சாப்பிடுவான்… கூடவும் இருக்காது, குறையாவும் இருக்கவே இருக்காது:):):)

சுருக்கமா சொல்லணும்னா… தளபதி படத்தில சூர்யாவுக்காக ‘தேவா’ உயிர கொடுத்தான்… ஆனா இவன் என் கூடவே இருந்து என் உயிர எடுக்கிறான்…

அப்புறம் இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும், அவன இப்படி சொல்றேன்-னு தெரிஞ்சா இதுக்கும்
சேத்து வச்சு என்னை கழுத்தறுப்பான்:(

நான் பன் சாப்பிடுவதை பார்த்து தேவா சில நொடிகள் உறைந்துவிட்டான்…

எனக்குள் ஒரு பதட்டம், ‘இருக்கிற இம்சை எல்லாம் போதாதுன்னு, இவன் வேற என்ன பண்ண போறான்னு தெரியலையே…’

நான் பன் சாப்பிடுவதை பார்த்து என்னை கலாய்ப்பது போல் கேட்டான், ‘டேய் தளபதி… புலி கூட ரொம்ப பசிச்சா புல்ல தின்னுடும், ஆனா நீ எப்டிடா இந்த காய்ஞ்ச ரொட்டிய திங்கிற…’

அவன் சொன்னதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அன்று என் புத்தி கூர்மையாக இல்லை, அதனால் அதற்கு பதிலேதும் கூறாமல் இருந்தேன்…

என் முன்னால் சில அடி தொலைவில் இருந்த தொலைக்காட்சி பெட்டிக்கு உயிர்க்கொடுத்து விட்டு, என் அருகில் வந்து அமர்ந்து என் சோர்ந்த கண்களை பார்த்து எனக்கு அன்று நேர்ந்திருக்கும் என்பதை கண்டு கொண்டான்…

எல்லோரும் தளபதி படத்தில கடைசி சீன்ல ரஜினியும் மம்மூட்டியும் பேசுறத நினைவுப் படுத்திக்கோங்க…

‘டேய் சூர்யா… என்னாச்சு’, மம்மூட்டியாக மாறி கேட்டான்…

‘காய்ச்சல்…’, ரஜினியாக மாறி நானும் பதில் சொன்னேன்…

‘ஹாஸ்பிட்டல் போனியா’

‘போனேன்’

‘டாக்டர பார்த்தியா…’

‘பார்த்தேன்…’

‘என்ன சொன்னாங்க…’

‘light-ah சாப்பிட சொன்னாங்க…’

‘அப்ப இன்னைக்கு என் கூட சாப்பிட வர மாட்டியா…’

‘ஆமா…’

‘ஏன்…’

‘என்னால முடியல…’

‘அதான் ஏன்…’

‘டேய் லூசு… அதான் உடம்புக்கு முடியல-னு சொல்லிட்டேன்-ல, அப்புறம் ஏன் டா என்ன கொல்ற…’

‘எதுக்காக சூர்யா கோபப்படற… உன் பன்-ல நான் பங்கு கேட்டிடுவேன்-னா…’

அவன் அந்த பன்-க்காக தான் இவ்வளவு நேரம் என்னை வாட்டி எடுத்தான் என்பதை புரிந்து கொண்டேன்…

‘இதோ பார்… உனக்கு பன் தானே வேணும், எடுத்துக்கோ…
எல்லாத்தையும் எடுத்துக்கோ… ஆனா என்னைய இப்டி பேசி பேசி கொல்லாத’, என்றேன் கடுப்பாகி…

‘இந்த பன்-னுக்காக நம்ம ஏன் சண்ட போடணும்… நாலு இருக்கு… ரெண்டு எனக்கு,
ரெண்டு உனக்கு… இன்னைக்கு சூர்யா என்ன சாப்பிட்றானோ, அதே தான் எனக்கும்…

எனக்கு உன்ன விட்டா யாருடா இருக்கா…’, என்றான் சோகமான முகத்துடன்…

அந்த நேரத்திற்கு பொருந்துவது போல் ஒரு பாடல் தொலைக்காட்சியில் ஒலித்தது…

‘நண்பன் போட்ட சோறு, தினமும் தின்னேன் பாரு…
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்…’

நானும் அவனும் அந்த பாடலைக் கேட்டு கொண்டே ஆளுக்கு இரு பன்களை சாப்பிட்டோம்… பிறகு அவன் தூங்க சென்றுவிட்டான்…

எனக்காக அவனும் சரியாக சாப்பிடாமல் இருந்துவிட்டானே என்று என் மனதிற்குள்,

‘என் மேல உனக்கு இவ்வளவு பாசமா… இத்தன நாள் உன்ன புரிஞ்சிக்காம இருந்துட்டேனேடா… தேவா நீ என் நண்பேன்டா…’

நான் நினைத்தது தவறு என்று அறையில் தங்கியிருந்த இன்னொரு நண்பன் சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது… அவன் அறைக்கு வருவதற்கு முன்னதாகவே அந்த Unlimited Meals-ஐ முடித்துவிட்டு, அது போதாதென்று நான் எனக்காக வாங்கி வந்ததையும் முடித்துவிட்டு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்…

‘ஊருக்குள்ள பத்து பதினஞ்சு பிரெண்டு வச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா இருக்கான்… இவன்கள மாதிரி ரெண்டு மூணு ப்ரெண்ட வச்சுக்கிட்டு நான் படுற அவஸ்த இருக்கே, ஐயுயுயுயுயுயு…’

ஒரே நாளில் நரகத்தின் அனைத்து வேதனைகளை அனுபவித்த எனக்கு…

தூக்கம் ஒன்று மட்டுமே சொர்கத்திற்குள் செல்லும் நுழைவாயிலின் கதவாக தெரிந்தது…

மெதுவாக அந்த கதவை நோக்கி நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தேன்…
திடீரென்று யாரோ Calling Bell அடித்தாற்போல் ஓர் உணர்வு… அது Calling Bell அல்ல,
என் அலைபேசியின் மணியோசை தான்…

‘இந்த நேரத்தில நமக்கு யாரு கால் பண்றது…’

அலைபேசியின் திரையில் தாத்தா(அம்மாவின் அப்பா)… ‘இவரு எதுக்கு இந்த நேரத்தில…’

தாத்தா சத்தமாக ஆரம்பித்தார், ‘ஐயா ராசா… என்னையா உடம்பு சரி இல்லையா…’

நான், ‘ஆமா தாத்தா… உங்களுக்கு எப்படி தெரியும்’

‘அம்மா தான் சொல்லுச்சு… நான் பதறி போய்டேன், நீ மதியம் ரெஸ்ட் எடுத்திட்டுருப்ப-னு… நைட் கால் பண்ணி கேட்க சொல்லுச்சு, நல்லா ஓய்வெடுத்தியாப்பா…’

‘ம், ம்… இன்னைக்கு முழுக்க நல்லா rest எடுத்தேன்…’

‘இப்ப எப்படி இருக்கு…’

‘பரவா இல்ல தாத்தா…’

‘சரிப்பா தூங்கு, நான் நாளைக்கு கூப்பிடுறேன்… உடம்ப பார்த்துக்கோ ராசா…’

‘சரிங்க தாத்தா…’

இன்னும் ஊரிலிருந்து நலம் விசாரிக்க எத்தனை அழைப்புகள் வர போகிறதோ என்று அலைபேசியின் திரையை பார்த்துக்கொண்டிருந்தேன்…

அடுத்த அழைப்பு வந்தது அம்மாவிடம் இருந்து…

‘சொல்லும்மா…’

‘என்னப்பா டாக்டர்-அ போய் பார்த்தியா, ஊசி போட்டியா…’

‘ம் டாக்டர பார்த்தேன்… ஆனா ஊசி அவங்க தான் போட்டுவிட்டாங்க…’

‘சரியாகிடும்-னு சொன்னாங்களா…’

‘நிறைய சொன்னாங்க…’

‘என்னது…’

‘ஒன்னும் இல்லம்மா… ஆமா நீ ஏன் தாத்தாகிட்ட இந்த விசயத்த சொன்ன?… அவரே பாவம் ஒரு டென்ஷன் பார்ட்டி… இதுக்கு தான் நான் உன் கிட்ட எதுவுமே சொல்றது இல்ல…’

‘அவரு என்னை பார்க்க மதியம் வந்தாரு… நான் மூஞ்சிய சோகமா வச்சிருந்தேனா, அத வச்சே கண்டுபிடிச்சிட்டாரு… அப்புறம் நானே எல்லாத்தையும் சொல்லிட்டேன்’

‘என்னமோ போங்க…’

‘சரிப்பா… நீ நல்லா தூங்கு, நான் நாளைக்கு காலைல கூப்பிடறேன்… phone-அ எடுத்து அம்மா உடம்பு நல்லாகிடுச்சு-னு தெம்பா சொல்லணும்… புரியுதா?’

‘சரியாகலனாலும்… சரியாகிடுச்சுனே சொல்றேன்மா’

‘என்னப்பா சொன்ன… சரியா கேட்கல’

‘சரி-ன்னு சொன்னனேம்மா…’

ஒரு வழியாக தூக்க நிலையை அடைந்துவிட்டேன்…

நள்ளிரவு கடந்து இரண்டு மணிக்கு மேல் தூங்கிக்கொண்டிருந்த எனக்கு ஒரு எரிச்சலான உணர்வு… என்னை எண்ணெய் சட்டியில் வருதேடுப்பதுப்போல்…

‘ஒரு வேள… நான் நரகத்துக்கு வந்துட்டனா… அது எப்படி, இதுவரைக்கும் அங்க தான இருந்தேன்’

மயக்க நிலையில் பாதி கண்களை துறந்துப் பார்த்தேன்… எனக்கு அதிகமாக வியர்த்துக்கொண்டிருந்தது, என்னை சுற்றி இருந்த அந்த வியர்வை நீரோடையில் நான் மிதந்துக் கொண்டிருந்தேன்:(

மறுபடியும் நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன்…

சிறிது நேரம் சென்ற பிறகு இன்னும் ஒரு வினோதமான உணர்வு… என் விரல்களின் நுனி வழியாக ஏதோ ஒன்று என்னை விட்டு பிரிந்து செல்கிறது, என்னை விட்டுச் செல்வது

உயிரா? இல்லை என்னை பிடித்திருந்த பிணியா?…

இந்த கேள்விக்கான விடை விடிந்த பிறகு தான் தெரிய வரும்…

இதோ விடியலும் வந்துவிட்டது…

காலை சூரிய கதிரின் குழந்தைகள் சன்னல் வழியாக பறந்து வந்து என் கண் இமைகளை முத்தமிட்டு சொன்னது,

‘நீ எங்கும் போகவில்லை… என்னோடு இங்கு தான் இருக்கிறாய்…
இன்னொரு அழகான நாளை ரசிப்பதற்கு:)’

விடிந்து வெகு நேரமாகியும் எழுந்திருக்க மனமில்லாமல் கால்களை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன்…

அப்படி என்றால் என் உடல் நிலை சரியாகிவிட்டது என்று அர்த்தம்:)

மூன்றாவது முறையாக என் அலைபேசியில் அலாரம் ஒலித்தது…

‘அடிக்கிற அலாரத்த Off பண்ணிட்டு தூங்கிற சுகமே தனி தான்’

அலைபேசியை கையில் எடுத்து திரையைப் பார்த்தேன்… ஒலித்தது அலாரம் இல்லை, அம்மாவின் அழைப்பு மூன்றாவது முறையாக…

‘அடப்பாவி… ஒரு நாள்-ல அலாரதுக்கும் Ringtoneக்கும் வித்யாசம் தெரியாம போச்சா…’

‘சொல்லும்மா ‘

‘என்னப்பா… இப்ப உடம்பு எப்படி இருக்கு’

‘நல்லா இருக்கும்மா’

‘நிசமா தான் சொல்றியா… இல்ல அம்மாக்காக சொல்றியா’

‘உண்மையா தான்ம்மா சொல்றேன்’

‘சரி… இனிமேலாவது ஒழுங்கா உடம்ப பார்த்துக்கோ ‘

‘சரிம்மா’

‘…….’

‘சரிம்மா’

‘…….’

‘சரிம்மா’

நான் சகஜ வாழ்க்கை முறைக்கு திரும்பிவிட்டேன்… வழக்கம் போல் அடித்து பிடித்து அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டேன், அறையை விட்டு வெளியேறும் முன் சிறிது நேரம் நின்று யோசித்தேன்… வழக்கம் போல் ஏதோ முக்கியமான ஒன்றை
மறந்துவிட்டேன்…

அது என் அலுவலக அடையாள அட்டை…

‘நல்ல வேள Office போன பிறகு யோசிக்காம… இப்பவாவது நியாபகம் வந்துச்சே…’

முதல் நாள் அணிந்திருந்த கால் சட்டை பையில் அடையாள அட்டையை தேடினேன், அப்போது
அடையாள அட்டையுடன் சேர்த்து ஏதோ பெரிய காகிதப் பை சிக்கியது…

அது தான் நேற்று வாங்கிய மாத்திரைகள், நான் அதை வெளியே எடுக்கவே இல்லை… நேற்று மாத்திரைகள் சாப்பிட மறந்துவிட்டேன்:D

‘வாழ்க்கையில் சொதப்புவது எப்படி-னு என் கிட்ட தான் கேட்கணும்’ என்று தலையில் அடித்துக் கொண்டு கண்ணாடியில் என்னை நானே கழுவி ஊற்றி, துடைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினேன்…

முடியல… கருத்தும் இருக்கு!

அலுவலகத்துக்கு செல்லும் பேருந்தை பிடிக்க நடந்து செல்லும் போது…

‘நேற்று நடந்தது என்ன?’ என்று மனதிற்குள், அன்றைய முதல் நாள் நடந்ததை ரீவைண்ட் செய்து பார்த்த பிறகு சிரிப்பை
தவிர வேறு எந்த உணர்வும் இல்லை:):):)… அதிமாக சிரித்தால் வயிறு வலிக்கும் என்று
எச்சரிக்கை உணர்வோடு சிந்தித்தேன்…

‘நேத்து நடந்தத ஒரு கதையாவே எழுதலாம் போலிருக்கே…
ஆனா என்ன கருத்து சொல்றது?’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு அழைப்பு வந்தது…

பகல் வெளிச்சத்தினால் அலறிக்கொண்டிருக்கும் அலைபேசியின் திரையிலிருந்த எண் சரியாக தெரியவில்லை… பொத்தானை அழுத்தி நான் பேசத் தொடங்கும் முன் பேச தொடங்கியது அந்த குயிலின் குரல்…
சாரி புயலின் குரல்…

‘ஹலோ சார்… நாங்க HDFC பேங்க்ல இருந்து பேசுறோம், Lifetime கிரெடிட் கார்டு பத்தி உங்க கிட்ட பேசணும்’

‘ம்… சொல்லுங்க’

‘நேத்து நைட் கால் பண்ணிருந்தேன்…
நீங்க தான் காலைல பத்து மணிக்கு கால் பண்ண சொன்னிங்க’

சிரித்துக் கொண்டே மனதில், ‘உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா’

‘ஆமாங்க… இப்ப நான் ஆபிஸ்க்கு பஸ்-ல போய்க்கிட்டு இருக்கேன்,
கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடிருங்களா’

‘ok சார்… நான் Evening கால் பண்றேன் சார்’

பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டம் நிரம்பி வழிந்தபடி, தொடர்ச்சியாக இரண்டு 19B பேருந்துகள் என்னைக் கடந்து சென்றது, கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்து பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றது…
உடனே அங்கிருந்த சிலர் அந்த ஓட்டுனரை வசை பாடத் தொடங்கினார்கள்,
நானோ இன்னும் நேற்றைய நிகழ்வுகளை அசைப்போட்டு சிரித்துக் கொண்டிருந்தேன்…

ஒரு நிமிட இடைவெளியில் இன்னொரு 19B பேருந்தும் வந்தது,
அதுவோ இரண்டு பேருந்துகளில் ஏற்ற வேண்டிய பயணிகளை தாங்கிக் கொண்டு ஒரு புறம் பாரம் தாங்காமல் 45
டிகிரி சாய்ந்தவாறு மெதுவாக நகர்ந்து நான் நிற்கும் இடத்திற்கு அருகில் நின்றது…
பேருந்தின் பரிதாப நிலையைக் கண்டு நான் அடுத்த வண்டியில் போகலாம் என்று முடிவெடுத்துவிட்டேன், மிகவும் நல்ல முடிவு தான்…

முன் பின் இரு படிகளிலும் தலா இருபது பேர் ஒற்றை விரலில் Fevikwik தடவி பேருந்தோடு ஓட்ட வைத்ததை போல தொற்றியபடி ஊசலாடிக் கொண்டிருந்தார்கள், யாரும் இறங்கியதாக தெரியவில்லை அனால்
பேருந்துக்கு உள்ளே செல்ல வெளியே உள்ள கூட்டம் அலை மோதுகிறது…

வெளியில் இருந்து ஒருவர் கூவுகிறார், ‘ படியில் நிக்காதிங்க, உள்ள போங்கப்பா… நாங்க எப்டி உள்ள போறது’

படியில் நின்றிருந்த ஒருவர் பதில் கூவுகிறார், ‘ஆ… உள்ள வந்து பாருங்க, போறதுக்கு எங்க எடம் இருக்கு…’

கடுப்பான கண் டாக்டர் (அதாங்க நடத்துனர்) கதறுகிறார், ‘ அடுத்த வண்டி சும்மா தான் வருது, அதுல ஏறி வாங்க…’

இந்த கூவல்கள் மற்றும் கதறல்களுக்கு நடுவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்மணிகளில் இருவர் பேருந்திற்குள் கூட்டத்திற்கு இடையில் புகுந்து எப்படியோ நீந்தி உள்ளே சென்றுவிட்டார்கள்… இருவர் படியில் போராடிக்கொண்டிருக்க…

வண்டியை கிளப்பத் துடிக்கும் ஓட்டுனர் கதறுகிறார், ‘ம்மா… எறிட்டிங்களா இல்லையா, சீக்கிரம் ஏறுங்கம்மா’

படியில் தவிக்கும் இரு பெண்மணிகள், ‘அட இருப்பா… படியில நிக்கிறோம், உள்ள வந்திடறோம்’ என்று அவர்களும் மற்றவர்களோடு படியில் தொற்றிக் கொள்ள…

விசிலடித்து வண்டியை கிளப்பிவிட்டார் நம்ம கண் டாக்டர்…

ஓட்டுனர் பொறுமையிழந்து பேருந்தை நகர்த்தினார், எப்படியோ படியில் தடுமாறி நின்றபடி அந்த பெண்களும், உள்ளே நின்றிருந்த மற்ற இரு பெண்களும்… ஓட்டுனர், நடத்துனர் மற்றும் சுற்றி இருக்கும் பயணிகள் அனைவரையும் திட்டிக்கொண்டே பயணித்தனர்…

இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே இன்னொரு 19B பேருந்து என் முன்னே வந்து நின்றது…

இந்த வண்டியில் ஓட்டுனர், நடத்துனர் தவிர்த்து யாரும் இல்லை:)…
என்ன ஒரு அழகான காட்சி!…

நான் காண்பது கனவா இல்லை நனவா என்று ஒரு முறை என் கன்னத்தில் அடித்துப் பார்த்துவிட்டு(எத்தன நாள் தான் கைய கிள்ளிப் பார்க்கிறது),
எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக வண்டியில் ஏறி ஜன்னல் ஓரமாக ஒரு இருக்கையை பிடித்து அலுவலகம் நோக்கி என் பயணத்தைத் தொடங்கினேன்:):):)…
இந்த நாள் இனிய நாளாக அமையும் என்ற நம்பிக்கையுடன்!

என் அலைபேசி அலறுவதற்கு முன்ன நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்… ஆங்…

கருத்து:

நம்மல சுத்தி எப்பவுமே பிரச்சனை இருந்துட்டு தான் இருக்கு, ஆனா நாம அத கண்டுக்கிறது இல்ல…

அதுவே நாம ஒரு பிரச்சனைகுள்ள இருந்து தவிக்கும் போது, நம்ம சுத்தி இருக்கிற சின்ன பிரச்சனையும் பெருசா தெரியும்…

இப்போதெல்லாம் நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்,
‘எல்லாம் கடந்து போகுமடா, இந்த உண்மையை கண்டவன் ஞானியடா…’,

இது எனக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் பொருந்தும் பாடல்.

நாட்குறிப்பு:

‘பிரச்சன இல்லாத மனுஷன் இல்ல,
பிரச்சன இல்லாதவன் மனுஷனே இல்ல’ — சொன்னது யாருன்னு தெரியல…

ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கிட்டேன்…
நான் இன்னும் மனிஷனா தான் இருக்கேன்:):):)

எப்படியோ அடுத்த நாள்-ல இருந்து எனக்கு தலைவலி, வயித்துவலி, காய்ச்சல்… இந்த மூணு பிரச்சனை இல்லை…
மத்தபடி முதல் நாள் இருந்த எல்லா உபாதைகளும் என்னை சுத்தி சுத்தி,
துறத்தி துறத்தி அடிச்சிட்டு தான் இருக்கு:)

ஏத்துக்க முடியல… இருந்தாலும் சமாளிக்க முடியுது:):):)

சூர்யபிரகாஷ் ராஜேந்திரன்

Show your support

Clapping shows how much you appreciated Suryaprakash Rajendran’s story.