என்று மாறும் இந்நிலை ?

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கவும் மனம் பின்னோக்கி நகர்ந்து விட்டது..

சம்பவம் 1 : சிறு வயதில் புதுக்கோட்டைக்குப் பெரியம்மா வீட்டுக்குப் போனப்ப அங்கே மதுரை போன்ற கழிப்பறை இல்லை. இரண்டு பக்கம் கால் வைக்க வட்ட வடிவான கல்லும் நடுவே ஓட்டையும் இருக்கும்..விழுந்த மலத்தை அள்ள ஒரு பெண் வருவார்..அவர் இப்படத்தில் வருவது போல இரும்பு முறத்தில் அள்ளுவதைப் பார்த்தே எனக்கு வாந்தி வரும்..அள்ளும் அவருக்குக் கொஞ்சம் கூட முகத்தில் சலனமின்றி அள்ளுவார்..நான் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் பார்ப்பேன்.. எப்படி முடிகிறது இவர்களால் ????

சம்பவம் :2 அப்பா அரசுப் பணி ..அவரின் கீழே வேலை பார்த்தவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட மக்கள் தான்..(இன்றளவும் துப்புரவு பணிக்கு வேறு சாதி மக்கள் பயன்படுத்தப்படுவதாக எனக்குத் தோன்றவில்லை ..அவர்களுக்கும் அதைப்பற்றி கவலை இல்லை கெவுருமென்ட்டு சம்பளமாச்சே என்று ) ஒருமுறை எதற்காகவோ எங்கள் வீட்டுக்கு ஒரு பணியாள் வர , நான் கத்திக் கொண்டே தோட்டி வந்திருக்காங்க என்றே சொல்லிவிட்டுச் சென்றேன்.. அப்பா ஒருமுறை என்னை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு,அந்த நபரைப் பேசி அனுப்பி வைத்துவிட்டு ,என்னை left and right வாங்கினார் பாருங்கள்..(எனக்கு அப்ப அதிகபட்சம் 10 வயது தான் இருக்கும் .) எக்காரணம் கொண்டும் இப்படி அழைக்கவே கூடாது என ஆழமாக பதியவைத்து விட்டார்..அதன் பிறகு எவ்விடத்திலும் இன்றுவரை அவங்கள அப்படி அழைச்சதே இல்ல . ஒருவரை அவர் சாதி சார்ந்த பெயர் , அதுவும் இகழ்ச்சியா அழைக்க அப்பா அனுமதித்ததே இல்லை.

அதனாலேயே வேலையில் கண்டிப்பானவராக இருப்பினும் , என் ஆச்சி மறைவுக்கு ,அப்பா மறைவுக்கு அவர் கீழ் வேலை பார்த்தவர்கள் மிகுந்த மரியாதையோடு கலந்து கொண்டனர்…

சம்பவம் 3 : எங்கள் கிராமத்தில் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் துணி துவைக்க எடுக்க வருவார்கள்..அது போல உணவுக்காகவும் வருவார்கள்..சோ ..று போடுங்கம்மா…ஆஆ என அவர்கள் அழைப்பதே வித்தியாசமா இருக்கும்..எவ்வளவு வயதானவராக இருப்பினும் சிறுபிள்ளை முதற்கொண்டு ஒருமையில் தான் அதுவும் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.. எனக்குத் தெரிந்து அவர்களையும் மனிதர்களாக மதித்து ,இயல்பான நகைச்சுவையுடன் கேலி கிண்டலாகப் பேசி சிரிக்க வைப்பதும்,கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைப்பதும் என் தந்தை தான்.. இன்றும் உங்க அப்பாரு…என அவங்க பேசும் போதே முகத்தில் ஒரு புன்னகை இழையோடும் ..

சாதி மத பேதமின்றி என் அண்ணனின் தோழர்கள் என் அம்மாச்சியின் உணவை ருசித்து இருக்கிறார்கள்..அப்பா அதற்குத் தடை போட்டதே இல்லை .

சம்பவம் 4 : நாங்கள் முன்பு இருந்த வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையே இடைவெளியில் ஒரு வாய்க்கால் போல் கட்டி அதிலே தண்ணி செல்லும்படி வைத்து இருந்தார்கள்.. எங்களது தனி வீடு..ஆனால் பக்கத்து வீடு கீழே மேலே என இருபக்கம் பல வீடுகளைக் கொண்ட காம்பவுண்டு வீடு..இதிலே பாத்திரம் கழுவுற தண்ணியும் அந்த வாய்க்காலுக்குத் தான் வரும்.குளிக்கற தண்ணியும் அதுலதான்..வீடு கழுவிவிடற தண்ணியும் அதுல தான்..இதுல மாடி,கீழ இருக்கிறவங்க சன்னல் வழியா பல குப்பைகளைப் போட அதுதான் பயன்பட்டது..அங்கே ஒரு பெண்மணி பொதுக் கழிப்பறை கழுவ,இந்த சாக்கடையைக் கழுவ வாரம் ஒருமுறை வருவார்..வந்தால் சும்மா கழுவ மாட்டார்..அங்கே குடியிருக்கும் பெண்களை அந்தப் பேச்சு பேசுவார்..அந்த முண்டை இந்த முண்டை இப்படி குப்பை போடுறாளுங்க அவ இவ என ஏக வசனம் பேசிக் கொண்டே தான் சாக்கடையைக் கழுவிவிடுவார்..ஒருத்தி வாய் திறக்க மாட்டாங்க..எனக்கோ கடுப்பா இருக்கும் ஏன் இந்தம்மா இவ்ளோ ஓவரா பேசுது காசு வாங்கிட்டு தான கழுவறாங்க..பிடிக்காட்டிப் போக வேண்டியது தான என்று..நாங்க அந்தப் பக்கவாட்டு சன்னலையே திறக்க மாட்டோம்..நாத்தம் அப்படி..ஒருநாள் வெளியே வந்து எட்டிப் பார்த்தபின்பே புரிந்தது அந்தம்மா ஏன் அவ்வளவு மானக் கேடா வையுது என்று..குடியிருப்பவர்களின் பொறுப்பற்ற தன்மை, காசு கொடுத்து கழுவ ஆள் இருக்கு என்ற மிதப்பு , இஷ்டத்துக்கு அசிங்கம் செய்து வைப்பார்கள்..அதிலும் ஒரு ஆத்தா மாடியில் இருந்து ,அது புரோட்டா வாங்கிச் சாப்பிட்ட மிச்சக் குழம்பை பாலித்தீன் பையில் போட்டு அங்கிருந்தே வீசும்.அது மிகச் சரியாக எங்கள் வீட்டு வாசலின் ஓரத்தில் அந்தச் சாக்கடைக்கு அருகே வந்து விழும்..எங்களுக்கு அவ்வளவு டென்சன் ஆகும்.எத்தனை முறை சொன்னாலும் கீழ இறங்கி வந்து போடாது .குப்பையில் சேர்த்து வச்சும் குப்பை வண்டியில் போடாது.. சாக்கடை கழுவும் அந்தம்மா ,நானும் மனுஷி தான இப்படியா பண்ணுவீங்க ச்ச என்ன பொம்பளைங்க எனத் திட்டுவார்..அதன் பின்பு எனக்கு அது வேதனைப்புலம்பலாகவே பட ஆரம்பித்தது..(இதுக்கு எவ்ளோ கொடுப்பாங்கன்னு கேட்கறீங்களா..ஒரு வீட்டுக்கு அஞ்சோ பத்தோ..அப்புறம் தீபாவளி பொங்கலுக்கு ஒரு பத்து ரூபா சேர்த்து )

சம்பவம் 5 : இதைப் பொதுவில் சொல்லவே மிகுந்த தயக்கமாக இருக்கிறது..ஆனாலும் மலம் அள்ளுபவரின் மனிதாபிமானத்தைப் பறை சாற்றத்தான் ஒரு பெருந்தயக்கத்துக்குப் பிறகு எழுதறேன். ஒருமுறை திருப்பதி சென்றுவிட்டு ,நேரடி மதுரை பேருந்து கிடைக்காமல் , வேலூர்,காஞ்சிபுரம் ,அங்கிருந்து திருச்சி பேருந்து பிடித்து திருச்சியில் இருந்து மதுரை வந்தோம்..இதிலே காஞ்சிபுரம் சென்ற பொழுது அனைவர்க்கும் காஞ்சி காமாட்சி பார்க்க ஆசை..ஆனால் எங்களுடன் வந்த உறவினர் பெண் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை..அவரைத் தனியே விட்டுட்டு போகவும் மனசில்லை.மேலும் எல்லாருக்கும் பேருந்து களைப்பு. சரி இன்னொரு நாள் பார்த்துக்குவோம் என்று பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துக்காக காத்திருந்தோம்.. கல்கியின் சிவகாமியின் சபதத்தில் காஞ்சிபுரம் பற்றி அவ்வளவு விவரித்து எழுதி இருப்பார்..ஒரு காலத்தில் அது கலைக்கூடம்..மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும், கற்றறிந்த அறிஞர்களும் கொண்ட ஊர்..மாமல்லன் ஊர்..அதைச் சமீபமாகப் படித்து விட்டுச் சென்றதால் பேருந்தில் இருந்து இறங்கிய கணத்தில் ,எவருக்கும் தெரியாமல் இது “என் மனம் கொண்ட மாமல்லன் நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தி வாழ்ந்த மண் ” என்று மெதுவாக அங்கே கிடந்த மண்ணைத் தொட்டு வணங்கிக் கொண்டேன்..சுற்று முற்றும் பார்த்தேன்..இதை விடக் கேவலமாக ஒரு பேருந்து நிலையம் இருக்க முடியாது என்பதற்குச் சாட்சியாக இருந்தது அது.ஒரு வசதியும் இன்றி..கல்கி சொன்ன காஞ்சிபுரம் நினைவுக்கு வந்து நொந்து கொண்ட அதே வேளையில் காமாட்சி தரிசனம் இன்றிச் செல்கின்ற மனக் குறை வேறு. சிறிது நேரத்திற்கு எல்லாம் அடி வயிற்றைக் கலக்கியது..எப்பொழுதுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அளவுக்குத்தான் இருக்கும்..ஆனால் அன்று என்னால் முடியவில்லை..வேகமாக ஒரு கழிப்பறை தேடி அலைந்தேன்.. வெறுமனே நடந்து அலையவில்லை.சற்று ஓட்டம் எனத் தெரியாத அளவுக்கு வேகமான நடை.. எங்கேயுமே இல்லை..பயமும் கலக்கமும் வந்துவிட்டது..மனம் வெகுவாகச் சங்கடப்பட்டுப் போனது(அவமானப்பட்டு விடுவோமோ என்று அழுகை வராத குறை )..எங்கெங்கோ சுற்றி விட்டு வந்தால் , பேருந்து நிலையத்திலேயே கழிப்பறை..ஆனால் சுற்றுச் சுவர் இருப்பினும் உள்ளே சென்றால் வெட்ட வெளி.. சற்றே மேடை தான் இருக்கிறது அதன் கீழே பள்ளமாக இருக்கிறது.. ஒன்றோ ,இரண்டோ அதிலே தான்..தனியே கதவோடு ஒன்றுமில்லை..கிராமம் எனில் ஒன்றும் தெரியாது..ஆனா இங்க..? நொந்து போய் நின்று கொண்டிருந்தேன் ..அங்கே ஒரு 40+ பெண்மணி வேலை செய்து கொண்டிருந்தார்..பொதுவாக துப்புரவு செய்யும் பெண்கள் சற்று கோபக் காரர்களாக இருப்பார்கள்..ஏனெனில் செஞ்சு செஞ்சு சலிப்பு இருக்கும்..அதனால் அவர் எதுவும் பட்டெனப் பேசிடுவாரோ ,எப்படி இவங்க முன்னியிலையில் .. என்ற தவிப்போடு நின்றேன்..அருகே வந்து விஷயம் கேட்டு , நீ போம்மா நான் அள்ளிக்கறேன் என்றார்..கண்கள் குளமாகிவிட்டது..ஒரு பேரதிர்ச்சியில் எனக்கு எப்பவுமே பேச்சே வராது…நன்றி கூடச் சொல்லத் தோன்றாமல் அப்படியே பிரம்மைபிடித்து வெளியே வந்தேன்..

நிச்சயம் இப்படிச் செய்பவள் நம் தாய் மட்டுமே..அன்று அப்பெண்மணியிடம் காஞ்சி காமாட்சியைக் கண்டேன்..காமாட்சி தரிசனம் கிட்டிய மன நிறைவு இன்று வரை எனக்கு..சூலாயுதம் தான் அம்மன் ஏந்தி நிற்பாளா ..கருணையோடு என்னிடம் நடந்து கொண்ட அப்பெண்மணியிடம் இருந்தவை மலம் அள்ளும் இந்த முறங்கள் தாம்..(திருவேற்காட்டில் , முகமலர உபசரித்த ஒரு பெண்மணியிடம் அம்மனைக் கண்டேன் என்று கானாபிரபா சொன்னபோது எனக்கு இந்தம்மாவே நினைவுக்கு வந்தார்..)

கடந்த சென்னை பேரிடரின் போது தமிழச்சி ஒரு பதிவு எழுதி இருந்தார். அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

இட ஒதுக்கீடு வேண்டாமா ..

வா வந்து நீயே பீ அள்ளு என்றொரு சுளீர்க் கவிதை முன்பு படித்தேன்..அதன் முழுவடிவம்

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இதே போல கையால், மலம் அள்ளுபவர்களைப் பார்க்க நேருகையில் வேதனையே மிஞ்சுகிறது..இவங்களுக்கு ஒரு மாற்று வேலை கொடுக்கப்பட வேண்டும்..மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நிலை மாற்றப்பட வேண்டும்..தீண்டாமை குறித்து ஆயிரம் சட்டம் வந்தென்ன பயன்..எல்லாமே கண் துடைப்பாக இருக்கிறது..சாமியைத் தொட ஒரு குறிப்பிட்ட சாதி,துப்புரவு செய்ய ஒரு குறிப்பிட்ட சாதி என அரசே இப்படித் தேர்வு செய்தால் எப்படி விளங்கும்? என்று மாறும் இந்நிலை ?

thanks and regards

by

umakrishh…